பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கண்ணோட்டம்

கண்ணோட்டம் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

கண்ணோட்டம்

571. கண்ணோட்டம் என்னும் கழி பெருங் காரிகை உண்மையான்- கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு-இவ்வுலகம் உண்டாகாநின்றது.

விளக்கம்

('கழிபெருங்காரிகை' என்புழி ஒரு பொருட் பன்மொழி. இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெகு வந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகுண்டு' என்றார்.) ---

572. உலகியல் கண்ணோட்டத்து உள்ளது-உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை-ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாராமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.

விளக்கம்

(உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.) ---

573. பண் என்னால் பாடற்கு இயைபு இன்றேல்-பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்! கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்-அது போலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து.

விளக்கம்

('பண்' 'கண்' என்பன சாதிப்பெயர். பண்களாவன: பாலைவாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: மாழின்கண் வார்தல் முதலிய எட்டும்; பண்ணல் முதலிய எட்டும்; மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும்; பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறு போலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்" (திரிகடுகம் 1) என்புழிப்போலக் கொள்க.) ---

574. முகத்து உளபோல் எவன் செய்யும்-கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்-அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.

விளக்கம்

('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.) ---

575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்-ஒருவன் கண்ணிற்கு அணியும் கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக் கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையாரால் புண் என்று அறியப்படும்.

விளக்கம்

(வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்ற கண்ணின் குற்றம் கூறப்பட்டது.) ---

576. கண்ணொடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணொடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.

விளக்கம்

('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது, மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், "மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய்" (புறத்திரட்டு 1555 முத்தொள்.) என்பதனானும் அறிக. ---

577. கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்-கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்-கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.

விளக்கம்

(கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். 'உம்மை' இறந்தது தழீஇய எச்சஉம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.) ---

578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு-முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; உரிமை உடைத்து இவ்வுலகு- உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.

விளக்கம்

(தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைதல், மேல் "ஓர்ந்து கண்ணோடாது" (குறள் 541) என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ் வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.) ---

579. ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும்- தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை- கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.

விளக்கம்

('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம். 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.) ---

580. நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர்-பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின், அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுமவர்.

விளக்கம்

(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல்" முந்தை இருந்த நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்" (நற். 355) என்பதனானும் அறிக.அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.75
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top