பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்லாமை

கல்லாமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

கல்லாமை

401. அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும்; நிரம்பிய நூல்இன்றி கோட்டி கோளல்தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.

விளக்கம்

(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை "கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக், கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்" (நற். 3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். "புல்லா எழுத்தின் பொருள்இல் வறுங்கோட்டி" (நாலடி. 155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.) ---

402. கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதவன் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல்; முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.

விளக்கம்

("இனைத்தென அறிந்த சினை" (தொல். சொல். 33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதான் என்பதாம். அவாவியவழிக் கடைப்போகாது; போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.) ---

403. கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதாரும் மிக நல்லராவர்; கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.

விளக்கம்

(உம்மை . இழிவுச் சிறப்பு உம்மை; தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்னும், கூடின் ஆண்டுத் தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனி நல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.) ---

404. கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.

விளக்கம்

(ஒண்மை: அறிவுடைமை. அது நன்றாகாது, ஆயிற்றாயினும், ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற தூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.) ---

405. கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் 'யான் அறிவுடையேன்' எனத் தன்னை மதிக்கும் மதிப்பு; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.

விளக்கம்

('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது, சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.) ---

406. கல்லாதவர் - கல்லாதவர்; உளர் என்னும் மாத்திரையார் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.

விளக்கம்

(களர் தானும் பேணற்பாடு அழிந்து, உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத், தாமும் நன்று மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.) ---

407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்; மண், மாண் புனை பாவை அற்று - சுவையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.

விளக்கம்

(அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும் மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். "உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது'' (சீவக. முத்தி. 154) ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவு இல்வழிச் சிறப்பில் என்பதாம். இதனால் அவர் வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.) --

408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது; கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.

விளக்கம்

(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றி மாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திருகல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.) ---

409. கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும்; கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்துவைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.

விளக்கம்

(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும், உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.) ---

410. விலங்கொடு மக்கள்அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர், இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.

விளக்கம்

(இலங்கு நூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பார் பயன் எய்தாமை கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.08695652174
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
தொடர்புடைய தகவல்கள்
மேலும்...
Back to top