பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வி

கல்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

கல்வி

391. கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்கத் தக அவை சொல்லுகின்ற நெறிக் கண்ணே நிற்க.

விளக்கம்

('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிறபொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் "கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்" தலினும், (நாலடி. 250) துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும் நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும் இதனாற் கூறப்பட்டன.) ---

392. எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவம் ஆகிய கலைகள் இரண்டினையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப - அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்.

விளக்கம்

(எண் என்பது கணிதம் அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும்; அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும், அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், 'கண்' எனப்பட்டன. அவை கருவியாதல் ''ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி, நீதி வழுவா நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம் வீடு என்று இவற்றின், திறமாமோ எண்ணிறத்தால் செப்பு." "எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து, கட்டறுத்து வீடு பெறும்." இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்று, முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர்; பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.) ---

393. கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே; கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர்; கண்ணிலர்.

விளக்கம்

(தேயம் இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண் உடைமையின், கற்றாரைக் 'கண்ணுடையர்' என்றும், அஃதின்றி நோய் முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊன்கண்ணே உடைமையின், கல்லாதவரைப் 'புண்ணுடையர்' என்றும் கூறினார். மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மை கூறியவாற்றான், பொருள் நூல்களையும் கருவிநூல்களையும் கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக் கூறப்பட்டன.) ---

394. உவப்பத் தலைக்கடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும் அவர் உவக்குமாறு தலைப்பெய்து, 'இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து; புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில். விளக்கம்

(தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது. ---

395. உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா. 183) ஆதலான், செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார்; கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.

விளக்கம்

('உடையார், இல்லார்' என்பன உலகவழக்கு. ஏக்கறுதல்; ஆசையால் தாழ்தல். கடையர்' என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால், கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.) ---

396 மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும்; மாந்தர்க்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.

விளக்கம்

(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின் மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள். 373) என்றதனோடு மலையாமை அறிக.) ---

397 யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னோடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம்; யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி?

விளக்கம்

(உயிரோடு சேறலின், 'சாம் துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை; அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.) ---

398. ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.

விளக்கம்

(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை மேலே கூறப்பட்டது (குறள் 62.) உதவுதல் - நன்னெறிக் கண் உய்த்தல்.) ---

399. தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி; கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.

விளக்கம்

(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும், "யாண்டு பலவாக நரையில் மாயினேம்" (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகையாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.) ---

400. ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி; மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும், முதலாயின செல்வமல்ல.

விளக்கம்

(அழிவின்மையாவது: தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும், வழிப்பட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை: தக்கார்கண்ணே நிற்றல். மணி, பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top