பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கவியல்

கள்ளுண்ணாமை

921. கள் காதல் கொண்டு ஒழுகுவார்-கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார்-எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர்.

விளக்கம்

(அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார்; தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.) ---

922. கள்ளை உண்ணற்க-அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்-அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்.

விளக்கம்

(பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.) ---

923. ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது-யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றச் சான்றோர் முகத்து என்? -ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்?

விளக்கம்

(மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண் அழியும்;அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று; ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ? என்பதாம்.) ---

924 கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு . கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்-நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள்.

விளக்கம்

(காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும், பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.) ---

925. பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல்-ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம் மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து-அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து.

விளக்கம்

(தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் "பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று" ---

926. துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்-உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார்-அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்பட்டார்; அவர்தாமே யாவர்.

விளக்கம்

(உறங்கினார்க்கும் கள்உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலால் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.) ---

927. கள் ஒற்றிக் கண் சாய்பவர்-கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்: உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர்-உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர்.

விளக்கம்

(உள்ளூர்- ஆகுபெயர். 'உண்டு' என்பது அவாய் நிலையான வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.) ---

928. களித்து அறியேன் என்பது கைவிடுக-மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும்-அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவின் மிக்கு வெளிப்படுதலான்.

விளக்கம்

('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.) ---

929. களித்தானைக் காரணம் காட்டுதல்-கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குறித்தானைத் தீத்துரீஇ அற்று . நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினல் நாடுதலை யொக்கும்.

விளக்கம்

('களித்தானை' என்னும் இரண்டாவது, "அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ" (கலித். மருதம். 7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற் போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.) ---

930. கண் உண்ணாப் போழ்தில் களித்தானை-கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்தபொழுதின் கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல்-காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும்!

விளக்கம்

(சோர்வு-மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.21052631579
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top