பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காலமறிதல்

காலமறிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

காலமறிதல்

481. கூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின் கண் வெல்லாநிற்கும்; இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இல்லை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்னி அமையாது.

விளக்கம்

[எடுத்துக் காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.] ---

482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல்; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.

விளக்கம்

[காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.] ---

483. அருவினை என்ப உளவோ-அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ; கருவியான் காலம் அறிது செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்

விளக்கம்

[கருவிகளாவன: மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய் வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.] ---

484. ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம்; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.

விளக்கம்

['இடத்தான்' என்பதற்கு, மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க; கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.] ---

485. கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர்; காலம் கருதி இருப்பர் - தம் வலி மிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.

விளக்கம்

[தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், 'இருப்பர்' என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.]

486.ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு; பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து.

விளக்கம்

[உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால், 'பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு' என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.] ---

487. ஒள்ளியவர் - அறிவுடைய அரசர்; ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார்; காலம் பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர்.

விளக்கம்

['பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்', 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார்; அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும், வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.] ---

488. செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக; இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - பணியவே, அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர்.

விளக்கம்

['பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும்; அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக் காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும் வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.] ---

489. எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக் கருதும் அரசர், தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால்; அந்நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற் செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.

விளக்கம்

[ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும், அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.] ---

490. கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க; மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க.

விளக்கம்

[மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும் துணையும் முன் அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லது போன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பே விரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்கு உவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அது கூம்புமாறு போலக் கூம்புக'என்றும், 'குத்து ஒக்க' என்றாராயினும் 'அது குத்துமாறு போலக குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம். ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று.] ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.73684210526
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top