பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குடிசெயல்வகை

குடிசெயல்வகை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஒழிபியல்

குடிசெயல்வகை

1021. கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின்-தன் குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணி கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை.

விளக்கம்

('குடி செயற்கு என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச் செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், பீடுடையது இல்' என்றார். குடி செய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும், உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமையன்மையானும், அவை உரையன்மை அறிக.) ---

1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயலால், குடி நீளும் - ஒருவன் குடி உயரும்.

விளக்கம்

(நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.) -

1023. குடி செய்வல் என்னும் ஒருவற்கு - 'என் குடியினை உயரச் செய்யக் கடவேன்' என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்று தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும்.

விளக்கம்

(முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்பட்டது.) ---

1024. தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழ வேண்டாமல், தானே முடிவெய்தும்.

விளக்கம்

(குடி ஆகு பெயர். தெய்வம் முந்துறு தலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது. ---

1025. குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார்.

விளக்கம்

(குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.) ---

1026. ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல்.

விளக்கம்

(போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினை யாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச் செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.) ---

1027. அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர்மேலதானாற் போல; தமரகத்தும் பொரை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பவராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம்.

விளக்கம்

(பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.) ---

1028. மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச் செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்து கொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை. ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை.

விளக்கம்

(காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - 'இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ?' என்று உட்கோடல். மேல் ''இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது'' (குறள். 481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.) ---

1029. குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற்காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ?

விளக்கம்

(''உறைப்பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே'' (புறநா. 290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என் குடிமுழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமைநோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.) ---

1030. இடுக்கண் கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண் மகன் பிறவாத குடியாகிய மரம்.

விளக்கம்

(முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார்; ''தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன, ஓங்குகுலம் நைய அதனுட்பிறந்த வீரர், தாங்கல் கடன்'' [சீவக. காந்தருவ. 6] என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.94444444444
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top