பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குறிப்பறிதல்

குறிப்பறிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கவியல்

குறிப்பறிதல்

701. குறிப்பு கூறாமை நோக்கி அறிவான்-அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி-எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்

விளக்கம்

(ஒட்பமுடையனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான். 'வையக்கு அணி' என்றார். குறிப்பும் வையமும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.) ---

702. அகத்தது ஐயப்படாது உணர்வானை-ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை தெய்வத்தொடு ஒப்பக்கொளல்-மகனேயாயினும், தெய்வத்தொடு ஒப்ப நன்கு மதிக்க.

விளக்கம்

(உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடு ஒப்ப' என்றார்.) ---

703. குறிப்பின் குறிப்பு உணர்வாரை-தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்-அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க.

விளக்கம்

(உள் நிகழும் நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்பறிதற்குத் தம் குறிப்புக் கருவியாயிற்று. உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்து உறுப்புக்கள். இதற்குப் 'பிறர் முகக் குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் குறிப்பு அறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.) ---

704. குறித்தது கூறாமைக் கொள்வாரொடு - ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர்-மற்று மாட்டாதால் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு-அறிவான் வேறு.

விளக்கம்

('கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.) ---

705. குறிப்பின் குறிப்பு உணரா ஆயின்-குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ-ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன?

விளக்கம்

(முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது; அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.) ---

706. அடுத்தது காட்டும் பளிங்கு போல்-தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்-ஒருவன் நெஞசத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்.

விளக்கம்

('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற்பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.) ---

707. உவப்பினும் காயினும் தான் முந்துறும்-உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ-முகம் போல அறிவு மிக்கது பிறிது உண்டோ? இல்லை.

விளக்கம்

('உயிர்க்கே அறிவுள்ளது; ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருதியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.) ---

708. அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்-குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்-அவர் தன் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும்.

விளக்கம்

('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து சொல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இறல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டன.) ---

709. கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்-வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்-அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும்.

விளக்கம்

(இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன; வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.) ---

710. நுண்ணியம் என்பார் அளக்கும் கோல்-யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை-ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.

விளக்கம்

(அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது 'கண்' என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது சருத்தாக்குவாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.15789473684
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top