பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குற்றங்கடிதல்

குற்றங்கடிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

குற்றங்கடிதல்

431. செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.

விளக்கம்

(மதம்: செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின், மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.) ---

432. இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின் நீங்கிய மானமும்; மாணா உவகையும் - அளவிறந்த உவகையும்; இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம்.

விளக்கம்

(மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார்; அஃதாவது, ''அந்தணர் சான்றோர் அருந்தவதோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவ"ரை (புறம். வெ.மா. பாடாண்-33) வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம்; பிறரும், "சினனே காமம் கழிகண்ணோட்டம்" என்றிவற்றை "அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது" (பதிற். 22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.) ---

433. பழி நாணுவார் - பழியை அஞ்சுவார்; தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக்' கொள்வர்.

விளக்கம்

('குற்றம்' சாதிப் பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார்; பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அது வாராமல் காப்பர் என்பதாம்.) ---

434. அற்றம் தருஉம் பகை குற்றமே - தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே; குற்றமே பொருளாகக் காக்க - ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.

விளக்கம்

(இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாரா மையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றமே அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது "அரும்பண்பினால் தீமை காக்க," என்பதுபோல நின்றது.) ---

435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்று வைக்குவை போல அழிந்து விடும்.

விளக்கம்

('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி. 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.) ---

436. தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த் தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது?

விளக்கம்

('அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம்; அது கடிந்தவழி முறை செய்தலாம்' என்பார், 'என் குற்றம் ஆகும்' என்றார்; எனவே, தன் குற்றம் கடிந்தவனே முறை செய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.) ---

437. செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளாள் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம்; உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும்.

விளக்கம்

(செயற்பால் ஆவன : அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது; பெருக்குதல்: அது "பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை, தன்னின் ஆகும் தரணி; தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே" (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின், 'கெடும்' என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---

438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை . பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று; மிக்கது.

விளக்கம்

(இவறலது தன்மையாவது: குணங்கள்எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு. ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.) ---

439. எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நான்கு மதியாது ஒழிக; நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக.

விளக்கம்

(தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும், அறனும் பொருளும் இகழப்படுதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும், 'கருதியது முடித்தே விடுவல்' என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.) ---

440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின்; ஏதிலார் நூல் ஏதில - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.

விளக்கம்

(அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.) --

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.94736842105
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top