অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சான்றாண்மை

சான்றாண்மை

ஒழிபியல்

சான்றாண்மை

981. கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர்.

விளக்கம்

(சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும், சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.) ---

982. சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.

விளக்கம்

(அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப்பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள் பொதுவகையான் கூறப்பட்டன.) ---

983. அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு - யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு - எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து.

விளக்கம்

(எண் 'ஓடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.) ---

984. நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம்.

விளக்கம்

(நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.) ---

985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே.

விளக்கம்

(ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன் கூறினார்.) ---

986. சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துரை அல்லார் கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல்.

விளக்கம்

(துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.) ---

987. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? சிறப்பு உம்மை அவர் இன்னா செய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை, வினா, எதிர்மறிப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.) ---

988. சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப் பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது

விளக்கம்

(தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார் சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.) சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். ''பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'' (புறநா. 350) என்றார் பறிரும். ஏகதேச உருவகம்.) ---

989. சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்-சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார்-ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம் திரியார்.

விளக்கம்

(சாண்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும். அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். "பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ" (புறநா. 330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.) ---

990. சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலத்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும்.

விளக்கம்

('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான், அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர் இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate