பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றந்தழால்

சுற்றந்தழால் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

சுற்றந்தழால்

521 பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாயவழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள்; சுற்றத்தார்கண்ணே உள-சுற்றத்தார் மாட்டே உள ஆவன.

விளக்கம்

[சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப் படாமை விளக்கி நின்றது. பழைமை: பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின், ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.] ---

522 விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பும் அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும்-அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

விளக்கம்

[உட்பகையின் நீக்குதற்கு 'விருப்பு அறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு 'அருப்பு அறா ஆக்கம்' என்றும் விசேடித்தார். தொடை நோக்கி விகாரமாயிற்று. 'இயையின், என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர், பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேன் கிளைக்கும் என்பது கருத்து.] ---

523 அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதவன் வாழ்க்கை; குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்தற்று - குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும்.

விளக்கம்

[சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகு பெயர். 'வாழ்க்கை' எனறதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை, 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான் செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.] ---

524 செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது; சுற்றத்தால்தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.

விளக்கம்

'பெற்ற' என்பதனுள் அகரமும் 'அதனான்' என்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ்வொழுக்குப் பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப் பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால் செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பது கூறப்பட்டது.] ---

525 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின்; அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும் - தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.

விளக்கம்

[இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது-சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.] ---

526 பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின்; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.

விளக்கம்

மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல், விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று,' என்று அளவிறந்து செய்யாமை.] ---

527 காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணா நிற்கும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.

விளக்கம்

[அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின. எச்ச உம்மையான் அறமும் இன்பமுமே அன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும்.' அப்பெற்றித்தாய இயல்பு' என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.] ---

528 பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின் அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.

விளக்கம்

[உயர்ந்தார் நீக்குதல் நோக்கியபோது நோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார். இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.] ---

529  தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய் வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல்; அமராமைக் காரணம் இன்றி வரும் - அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.

விளக்கம்

['அமராமைக் காரணம் இன்றி' என்றதனான், முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம். அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும்; ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்து கொள்ள வேண்டா; பழைய இயல்பாய் நிற்கும் என்பார், 'வரும்' என்றார்.] ---

530 உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை; வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.

விளக்கம்

[வாளா 'உழைப்பிரிந்து' என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து, போய்ப் பகையோடு கூடும் ஆகலின், 'இழைத்திருந்து' என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், 'எண்ணிக் கொளல்' என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.] ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.16666666667
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top