பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

செங்கோன்மை

செங்கோன்மை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

செங்கோன்மை

541 ஓர்ந்து-தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது-யாவர் மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து -நடுவு நிலைமையைப் பொருந்தி; தேர்ந்து-அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து; செய்வஃதே முறை- அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.

விளக்கம்

[நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை 'இறை' என்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும் என்பார், 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும், செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.] ---

542 உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.

விளக்கம்

[நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.] ---

543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது; மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.

விளக்கம்

[அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி 'அந்தணர் நூல்' என்றார். ''மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்'' (மணி. 22: 208, 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் - அநாதியாயினும், செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.] ---

544 குடிதழீஇக் கோல் ஒச்சும் மாநில மன்னன் அடி- தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார்.

விளக்கம்

[அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.] ---

545 பெயலும் விளையுளும் தொக்கு-பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி; இயல்புளிக் கோல் ஒச்சும் மன்னவன் நாட்ட-நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம்.

விளக்கம்

['உளி' என்பது மூன்றவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.] ---

546 மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின் கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல்; அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்,

விளக்கம்

[கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார்; ''மாண்ட. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்'' (புறநா 55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க.] ---

547 வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும்; முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின்.

விளக்கம்

[முட்டாமல் செலுத்தியவாறு; மகனை முறை செய்தான் கண்ணும் (சிலப். 20;53 - 55), தன்கை குறைத்தான் கண்ணும் (சிலப். 23: 42 - 53) காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.] ---

548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன்; தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்றுதானே கெடும்.

விளக்கம்

['எண்பதத்தான்' என்னும் முற்று வினை எச்சமும், 'ஓரா' என்னும் வினை எச்சமும், 'செய்யா' என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன. தாழ்ந்த பதம் : பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக் 85) ஆகலின், பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.] ---

549 குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர் மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்; வேந்தன் வடு அன்று தொழில் - வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.

விளக்கம்

[துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் ஈண்டைக்கு எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, ''அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதி தருமம்'' என்றார்.] ---

550 வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்-அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்; பைங்கூழ்களை கட்டதனோடு நேர்-உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.

விளக்கம்

['கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைபடார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை; இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. இப்பெற்றியாரைக் கண்ளோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார் மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.] ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.10526315789
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top