பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தெரிந்துசெயல்வகை

தெரிந்துசெயல்வகை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

தெரிந்துசெயல்வகை

461. அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும் ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும்; ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும்; சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க.

விளக்கம்

[உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல், அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்]. ---

462. தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்கவல்ல அரசர்க்கு; அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.

விளக்கம்

[ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்துபோந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.] ---

463. ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக் கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை; அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார்.

விளக்கம்

['கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர் எச்ச வினை கொண்டது. எச்ச-உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார், 'செய்வினை' என்றார்.] ---

464. தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார்; இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்,

விளக்கம்

[தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒரு தலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.] ---

465. வகை அறச் சூழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல்; பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.

விளக்கம்

[அத்திறங்களாவன: வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான், முற்றுப் பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும். இழுக்கும் கூறப்பட்டன] ---

466. செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன் வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும்; செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றை செய்யாமை தன்னானும் கெடும். செய்யத்தக்கன அல்லவாவன: பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும், ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை.

விளக்கம்

(செய்யத் தக்கனவாவன; அவற்றின் மறுதலையாயின. இச் செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.] ---

467. கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான்.

விளக்கம்

[துணிவு பற்றி நிகழ்தலின் 'துணிவு' எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'உபாயம்' என்பது அவாய்நிலையான் வந்தது. அது, கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத, தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய, ஏனைய மூவகைய; அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால் விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல் ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு' என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குக என்பதாம்.] ---

468. ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி; பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.

விளக்கம்

[முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும்; இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரோடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும்; வேறுபடுத்தலைத் துணைப்படையாளன், தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர் கண்ணும்; ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும்; செய்து, வெல்லுமாற்றான் முயறல், புரைபடுதல்; கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல், உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.] --

469. நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர் மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம்; அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.

விளக்கம்

[நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மைச் சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதவர்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.] ---

470. தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினை முடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும்; எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.

விளக்கம்

['தம்' என்பது ஆகு பெயர். தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உ ரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.] ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.15789473684
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top