பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வலியறிதல்

வலியறிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

வலியறிதல்

471. வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும்; தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும்; மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும்; துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.

விளக்கம்

[இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால், தோற்றல் ஒரு தலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.] ---

472. ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேண்டுவதாய வலியையும் அறிந்து; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன் கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல் - முடியாத பொருள் இல்லை.

விளக்கம்

['ஒல்வது' எனவே வினைவலி முதலாய மூன்றும் அடங்குதலின், ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.] ---

473. உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே: ஊக்கத்தின் ஊக்கி - மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.

விளக்கம்

['உடைய' என்பது அவாய் நின்றமையின், செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.] ---

474. ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது; அளவு அறியான் - தன் வலியளவு அறிவதும் செய்யாது; தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்; விரைந்து கெடும் - விரையக் கெடும்

விளக்கம்

[காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல் வேந்தரோடு செயற்பாலது; இவையன்றித் தான் மெலியனாய் வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்து கெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.] ---

475. பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.

விளக்கம்

[உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான். தான் வலியனே ஆயினும் அவர் தொக்க வழி வலியழியும்; என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும் உளர். ஒருவர் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.] ---

476. கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக் கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.

விளக்கம்

['நுனிக் கொம்பர்' என்பது 'கடைக்கண்' என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின், இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.] ---

477. ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக; அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருகாப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.

விளக்கம்

[ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் ''வகுத்தலும் வல்லதரசு'' (குறள்.385) என்புழி உரைத்தாம். எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி, அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற் பொருட்டு வைப்பாக்கி, நின்ற ஒன்றனை ஈதல், பிறரும், ''வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்'' (திரிகடுகம், 21) என்றார். பேணிக் கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பில்லாத அதனை தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.] -

478. ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்; போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறி அளவு அதனின் பெருகாதாயின்.

விளக்கம்

['இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.] ---

479. அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டாதான் வாழ்க்கைகள்; உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.

விளக்கம்

[அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக் கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி' என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு] -

480. உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்; வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்

விளக்கம்

['ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.] ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.75
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top