பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தெரிந்துதெளிதல்

தெரிந்துதெளிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

தெரிந்துதெளிதல்

501 அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் - அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும்; நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும்.

விளக்கம்

[அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் 'இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது; நின் கருத்து என்னை?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். பொருள் உபதையாவது, சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் 'இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவருக்கும் இயைந்தது; நின் கருத்து என்னை?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, 'அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள்; அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும்' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின் கண் அழைப்பித்து, 'இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார்' என்று தான் காவல் செய்து, 'ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இணைந்தது; நின் கருத்து என்னை?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும் திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம் இதனை 'உயிரெச்சம்' எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.] ---

502 குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து; குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி; வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சா நிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு.

விளக்கம்

[குற்றங்களாவன; மேல் அரசனுக்குச் சொல்லிய பகை ஆறும்; மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்; இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.] ---

503 அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும்-கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்; தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.

விளக்கம்

[வெண்மை: அறியாமை; அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். 'இவ்வளவைகளான இக்குணமும் குற்றமும் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.] ---

504 குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து; குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து; மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக.

விளக்கம்

[மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவை யாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே யுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.] ---

505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது; தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே, பிறிதில்லை.

விளக்கம்

(இஃது ஏகதேச உருவகம், மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக கருவி கூறப்பட்டது.] ---

506  அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர்; பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார்.

விளக்கம்

['பற்று இலர்' என்பதனால் 'சுற்றம் என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.] ---

507  காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல்; பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும்.

விளக்கம்

[தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி, அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும்; கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.] ---

508  பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு; வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

விளக்கம்

[இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன் கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக் கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.] ---

509  யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக; தேர்ந்த பின் தேறும் பொருள் தேறுக- ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக.

விளக்கம்

['தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு, 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை, 'பொருள்' ஆகுபெயர்.] --

510 தேரான் தெளிவும்-அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும்; தெளிந்தான்கண் ஐயுறவும்-ஆராய்ந்து தெளிந்தவன்மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும்; தீரா இடும்பை தரும்-அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

விளக்கம்

[வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்து விடும்; அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.] ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.05263157895
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top