பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தெரிந்துவினையாடல்

தெரிந்துவினையாடல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

தெரிந்துவினையாடல்

511  நன்மையும் தீமையும் நாடி-அரசன் முதற்கண் ஒரு வினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து; நலம் புரிந்த தன்மையான்-அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான்; ஆளப்படும். பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.

விளக்கம்

[தன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்த வழி, அதன் கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.] ---

512  வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச் செய்து; வளம் படுத்து - அப் பொருளால் செல்வங்களை வளர்த்து; உற்றவை ஆராய்வான் - அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும ஆராய்ந்து நீக்கவல்லவன்; வினை செய்க - அரசனுக்கு வினை செய்க.

விளக்கம்

[வாயில்களாவன: மேல் இறைமாட்சியுள் ''இயற்றலும்'' (குறள். 385) என்புழி உரைத்தனவும்; உழவு, பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன; ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செல்வார், சுற்றத்தார், பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.] ---

513 அன்பு - அரசன் மாட்டு அன்பும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும்; தோற்றம்-அவை செய்தற்கண் கலங்காமையும்; அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய; இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.

விளக்கம்

[இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏது ஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.] ---

514 எனை வகையான் தேறியக் கண்ணும்-எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும்; வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.

விளக்கம்

[கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக் குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், 'வேறாகும் மாந்தர் பலர்' என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.] ---

515 அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்ய வல்லானை யல்லது; வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று - வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று.

விளக்கம்

['செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.] ---

516  செய்வானை நாடி-முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி-பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து; காலத்தொடு எய்த உணர்ந்து செயல்-பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.

விளக்கம்

[செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல் பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.] ---

517   இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ் வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து; அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக. [கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.]

விளக்கம்

[கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.] ---

518 வினைக்கு உரிமை நாடிய பின்றை-ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால்;அவனை அதற்கு உரியனாகச் செயல்-பின் அவனை அதற்குரியனாமாறு உயரச் செய்க.  விளக்கம்

[உயரச் செய்தலாவது: அதனைத் தானே செய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.] ---

519  வினைக்கண் வினை உடையான் கேண்மை-எப்பொழுதும் தன் வினையின் கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற் கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு தீங்கும்.

விளக்கம்

[கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாம் நில்லாது கேளிர் செய்யும் உரிமை எல்லாம் செய்தொழுகுதல் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக் கருதுமாயின், பின் ஒருவரும் உட்பட்டு முயல்வார் இல்லையாம். ஆகவே, தன் செல்வம் கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானை ஆளும் திறம் கூறப்பட்டது.] ---

520 வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது; மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை) நாள்தோறும் ஆராய்க.

விளக்கம்

[அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம்; அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.]

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top