பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இறைமாட்சி

இறைமாட்சி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

இறைமாட்சி

381. படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான்-படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன்; அரசருள் ஏறு - அரசருள் ஏறு போல்வான்.

விளக்கம்

(ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை; 'கூழ்' என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்பதே முறையாயினும், ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரச நீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப் பெயர் கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு. இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவை முற்றும் உடைமையே அவன் வெற்றிக்கு ஏது என்பதூஉம் கூறப்பட்டன.) ---

382. வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - தீமையும் கொடையும், அறிவும், ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்.

விளக்கம்

(ஊக்கம்: வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு குரித்து; ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.) ---

383. நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா.

விளக்கம்

(கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின், அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி, ஆறு அங்கத்திற்கும் உரித்து ஏனைய, வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.) ---

384. அறன் இழுக்காது - தனக்கு ஓதிய அறத்தின் வழுவாது ஒழுகி; அல்லவை நீக்கி - அறனல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து; மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன்.

விளக்கம்

(அவ்வறமாவது. ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத் தொழிலினும்; படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத் தொழிலினும் வழுவாது நிற்றல். 'மாண்ட, அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" (புற நா. 65) என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது, "வீறின்மையின் விலங்காம்என மதவேழமும் எறியான் - ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் - மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான் - ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்" (சீவக. மண்மக. 159) எனவும், "அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான்" (பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை; அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.) ---

385. இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும்; ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும்; காத்தலும் - தொகுத்தவற்றை பிறர் கொள்ளாமல் காத்தலும்; காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும்; வல்லது அரசு - வல்லவனே அரசன்.

விளக்கம்

(ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, 'இயற்றல்' என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. (பொருள்களாவன; மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன; பகைவரை அழித்தலும், திறை கோடலும், தன் நாடு தலையளித்தலும் முதலாயின. 'பிறர்' என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினார். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்; யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும்; மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலிய தவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார். இவை நான்கு பாட்டானும் மாட்சியே கூறப்பட்டது.)

386. காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய்; கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ் சொல்லன் அல்லனும் ஆயின்; மன்னன் நிலம் மீக்கூறும் - அம்மன்னனது நிலத்தை எல்லா நிலங்களினும் உயர்த்துக் கூறும் உலகம்.

விளக்கம்

(முறை வேண்டினார்: வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார்: வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்த . கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல், 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.) ---

387. இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு; இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.

விளக்கம்

(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல் காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.) --

388. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்; மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செய்வான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.

விளக்கம்

(முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.) ---

389. சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடைவேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவு நோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது; கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்.

விளக்கம்

('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, 'இடிக்குந் துணையாயினார்' என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை: விசேட உணர்வினனாதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.) ---

390. கொடை வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும்; அளி - யாவர்க்கும் தலையளி செய்தலும்; செங்கோல் முறை செய்தலும்; குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய; நான்கும் உடையான் - இந்நான்கு செயலையும் உடையான்; வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தார்க்கு எல்லாம் விளக்கு ஆம்.

விளக்கம்

(தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல். செவ்விய கோல் போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' என எடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது, ஆறில் ஒன்றாய பொருள்தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல் வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு' என்றார். ஒளி-ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும் பயனும் உடன் கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.84210526316
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top