பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெரியாரைத் துணைக்கோடல்

பெரியாரைத் எனும் அதிகாரத்தில் துணைக்கோடல் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

பெரியாரைத் துணைக்கோடல்

441. அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை; தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.

விளக்கம்

(அறநுண்மை நுலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவு உடையார் நீதியையும் உலக இயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.) ---

442. உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி; உறாமை முற்காக்கும் பெற்றியார் . பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக் கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க.

விளக்கம்

(தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று, தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாமபேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறித்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றான் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம்; ஆகவே, புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்ரின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும், அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம், கொள்ளுமாறும் கூறப்பட்டன.) ---

443. பெரியாரைப் பேணித் தமராக் கொளர் - அப்பெரியவர்களை அவர் உவர்ப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்; அறியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.

விளக்கம்

(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது, இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.) ---

444. தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு. எல்லா வலி உடைமையினும் தலை.

விளக்கம்

(பொருள், படை, அரண்களான்ஆய வலியினும் இத் துணைவலி சிறந்தது என்றது, இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.) --

445. சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க.

விளக்கம்

(இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லானாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி, அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் -அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின் சிறப்புக் கூறப்பட்டது.) ---

446. தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை; செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.

விளக்கம்

(தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல். வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக் கிடந்தது இல்' என்றார்.) ---

447. இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை 'இவர் நமக்குச் சிறந்தார்' என்று ஆளும்அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?

விளக்கம்

(தீயன: பாவங்களும் நீதியல்லனவும். துணையாம் தன்மையாவது: தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம். 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.) ---

448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - கழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.

விளக்கம்

('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கொடுப்பார் உளராவார் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.) ---

449. முதல் இலார்க்கு ஊதியம் இல்லை . முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம்; மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அது போலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.

விளக்கம்

(முதலைப் பெற்றே இலாபம் பெற வேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெற வேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)

450. பல்லார் பகை கொள்லின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கை விடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளா தொழிதல். (பலர் பகை ஆயக்கால் "மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல், பேது செய்து பிளந்திடல்"

விளக்கம்

(சீவக. விமலை. 32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும்; நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின்; இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.27272727273
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top