பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெரியாரைப் பிழையாமை

பெரியாரைப் பிழையாமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கவியல்

பெரியாரைப் பிழையாமை

891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக் கொண்டனயாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண்தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது.

விளக்கம்

(ஆற்றல் என்பது பெருமை, அறிவு, முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும்; அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொது வகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.) ---

892. பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின்; பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவனுக்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.

விளக்கம்

(அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம். அவையெல்லாம் தாமே செய்து கொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.) ---

893. அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க- தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதி நூலைக் கடந்து செய்க.

விளக்கம்

(அப்பெரியாரைக் ''காலனும் காலம் பார்க்கும் பாராது - வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்''

விளக்கம்

(புறநா. 41) என்றார் பிறரும். நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.) --

894 . ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்-மூவகை ஆற்றலும் உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கை காட்டி அழைத்தால் ஒக்கும்.

விளக்கம்

(கையால் விளித்தல் - இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர் முதலிய கோடற்கு உரியாரை அதற்கு முன்னே விரைந்து தம்மேல் வருவித்துக் கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.) ---

895 .வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் - அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார்.

விளக்கம்

(இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின் வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங் கொடுப்பாரில்லை; உளராயின், இவர் இனி ஆகார் என்பது நோக்கி அவனோடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர்; அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச் சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.) ---

896. எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார்.

விளக்கம்

(தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையை உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின்; (குறள் -6) அது கூடாதாகலான், அதற்கு ஏழுவாய பிழை செய்யற்க என்பதாம்.) ---

897. தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்?

விளக்கம்

(உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.) ---

898. குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடுமாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியோடு மாய்வர்.

விளக்கம்

(வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். ''மல்லல் மலையனைய மாதவர்'' [சீவக. முத்தி. 191] என்றார் பிறரும். நிலை பெற்றார் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.)

899. ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்த முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடைய தன் பதம் இழந்து கெடும்.

விளக்கம்

(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற கணிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய், அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.) ---

900. சிறந்தது அமைந்த சீரார் செறின் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார்.

விளக்கம்

(சார்பு -அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உள்ளார் என்பது கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top