பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாற்றுக்குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வரலாறு

இராமநாதபுரம் மாவட்டம் கி.பி.1063 ம் ஆண்டில் இராஜேந்திர சோழனால் கைப்பற்றப்பட்டு சோழர்களின் கீழ் இருந்தது. பின்னர், 15 ஆம் நூற்றாண்டில் தற்போதைய இராமநாதபுரம் மாவட்டமானது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி 1520 ல் விஜயநகரத்தை ஆண்ட நாயக்கர்கள் பாண்டியர்களிடமிருந்து கைப்பற்றி இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டனர். 17 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசின் கீழ் மறவ மற்றும் சேதுபதிகளால் இப்பகுதி ஆளப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆட்சியைப்பிடிப்பதில் ஏற்பட்ட குடும்பப்பூசல்களால் இப்பகுதி இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை என இரண்டு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தை பல்லவர்கள் ஆண்டு வந்ததிற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. குன்றக்குடியிலும் பிள்ளையார் பட்டியிலும் பூங்குன்றத்திலும் காணப்படும் பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்கள் இராமநாதபுர மாவட்டத்துடன் பல்லவர்களுக்கிருந்த தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

பல்லவர்களுக்குப் பிறகு சோழர்களின் ஆட்சியின் கீழ் இராமநாதபுர மாவட்டம் இருந்து வந்தது. பிறகு 13 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்கள் வசம் இருந்தது. கி.பி. 1331 இல் மதுரையைத் தலைநகராய்க் கொண்டு முஸ்லீம் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1371 இல் மதுரை சுல்தான்களின் ஆட்சி சரியத் தொடங்கி கி.பி. 1393 இல் முற்றிலும் அழிந்தது. அதன் பிறகு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.

கி.பி. 1605 இல் சேதுபதிகளின் ஆட்சி பொறுப்பில் இராமநாதபுரம் மாவட்டம் இருந்தது. சேதுபதிகளுள் கிழவன் சேதுபதி குறிப்பிடத்தக்கவர். கி.பி. 1674 முதல் கி.பி. 1710 வரை இவர் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில்தான் இராமநாதபுரம் சேதுபதிகளின் தலைநகரமாயிற்று.

தஞ்சாவூர் அரசரின் உதவியோடு கி.பி 1730 ஆம் ஆண்டு பாளையக்காரர் ஒருவர் சேதுபதியிடமிருந்து சிவகங்கையைக்கைப்பற்றி அரசனானார். அப்போது இப்பகுதியை கட்டுப்பாடில் வைத்திருந்த நாயக்கர்களின் பலவீனத்தை அறிந்த பாளையக்காரர்களான சிவகங்கை அரசர் மற்றும் இராமநாதபுரம் சேதுபதி ஆகியோர் தாங்கள் ஆட்சி செய்த பகுதியை நாயக்கர்களிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தார்கள். கி.பி. 1730-ல் கர்நாடகத்தைச்சேர்ந்த சந்த் சாஹிப் இராமநாதபுரத்தைக்கைப்பற்றினார். கி.பி. 1741-ல், மராட்டியர்களாலும் பின்னர் கி.பி. 1744-ல் ஹைதராபாத் நிசாம் வசமும் வந்தது. கி.பி. 1752-ம் ஆண்டில் நவாபின் ஆட்சியை விரும்பாத தலைவர்கள்நாயக்க வம்சத்தின் கடைசி வாரிசை பாண்டிய மண்டலத்தின் அரசராக அறிவித்தார்கள். இராமநாதபுரம் கர்நாடக அரசின் கீழ் இருந்தத நேரத்தில், கர்நாடக அரசிற்கு, சந்த் சாஹிப் மற்றும் முகம்மது அலி ஆகியோர் எதிரிகளாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் சந்த் சாஹிபையும், பிரஞ்சுக்காரர்கள் முகம்மது அலியையும் ஆதரித்தனர். இதனால் தொடர் குழப்பங்கள் நிகழ்ந்தன.

கர்நாடக நவாப்பான முகமது அலி கிழக்கிந்தியக் கம்பெனியாரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதிகளைக் கைப்பற்றினான். இதனால் கி.பி. 1772லிருந்து 1780 வரை இராமநாதபுரம் மீண்டும் முஸ்லீம் ஆட்சியில் இருந்தது. இந்த ஆட்சியில் இராமநாதபுரம் மாவட்டம் கப்பம் கட்டும் அடிமைப் பிரதேசமாயிற்று. பிறகு மதுரை மாவட்டம் அமைவதற்கு முன்பே இராமநாதபுரத்தில் ஆங்கிலேயரின் ஆட்சி ஏற்பட்டு விட்டது.

1795-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முத்துராமலிங்க சேதுபதியிடமிருந்து இராமநாதபுரத்தைப் பறித்துக்கொண்டனர். 1801-ம் ஆண்டு மங்களேஸ்வரி நாச்சியார் சிவகங்கை ஜமீன்தாராக நியமிக்கப்பட்டார். இவரின் மறைவிற்குப்பிறகு மருது சகோதரர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டி சிவகங்கையைக் கைபபற்றினர். 1803-ம் ஆண்டு மருது சகோதரர்கள் பாஞ்சாலங்- குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனோடு சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். அதனால், கர்னல் ஆக்னு மருது சகோதரர்களைத்தூக்கிலிட்டார். பின், கௌரி வல்லப பெரிய உடைய தேவரை சிவகங்கை ஜமீன்தாராக நியமித்தார். திப்பு சுல்தானுக்குப்பிறகு நவாப்பை சிறையிலடைத்த ஆங்கில அரசு ஆட்சியைக் கைப்பற்றி ஜமீன்தார் முறையை ஒழித்தது. ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டார்.

1797 ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தில் ஏற்பட்ட பெரிய கலகத்தை அடக்கும் பொருட்டு, கிழக்கிந்தியக் கம்பெனியார் ஜாக்சன் என்பவனைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தனர். வரி செலுத்த மறுத்து, கலகத்துக்குக் காரணமாய் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கரைப் போரில் தோற்கடித்துத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

சிவகங்கையை ஆண்ட சின்னமருதுவும் பெரிய மருதுவும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையின் சுதந்திரப் போரை நடத்தினார்கள். போரில் 1801 ஆம் ஆண்டு இறுதியில் ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் கைதாகி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டு இறந்தார்கள். திருநெல்வேலி,மதுரை மாவட்டங்களிலிருந்து 1901 இல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் 1985 மார்ச் 15 இல் மூன்றாகப் பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டமும் விருதுநகர் மாவட்டமும் உருவாக்கப்பட்டன.

எல்லைகள்

வடக்கில் சிவகங்கை மாவட்டத்தையும், கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடா வையும் மேற்கில் விருதுநகர் மாவட்டத்தையும் தூத்துக்குடி மாவட்டத்தையும் எல்லைகளாக இம்மாவட்டம் கொண்டுள்ளது.

பொது விவரங்கள்

மழையளவு:

சராசரி 827 மி.மீ. மழையளவாகும்.

மருத்துவமனைகள் - 9

வங்கிகள் - 17

காவல் நிலையங்கள்: 43 (காவலர்கள் - 1,298)

தபால் நிலையங்கள் - 201

தொலைபேசிகள் - 2,087

திரையரங்குகள் - 35

பதிவுப் பெற்ற வாகனங்கள் -11,822

சாலை நீளம்: 1,962 கி.மீ.

வருவாய் நிர்வாகம்

கோட்டங்கள்-2, (இராமநாதபுரம், பரமக்குடி); வட்டங்கள்-7 (இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருவாடனை, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி); வருவாய் கிராமங்கள் 424.

உள்ளாட்சி நிறுவனங்கள்

நகராட்சிகள் - 2, பேரூராட்சிகள் -9, ஊராட்சி ஒன்றியங்கள் - 11, பஞ்சாயத்துக்கள் - 443. சட்டசபைத் தொகுதிகள்: 5 (திருவாடனை, பரமக்குடி, இராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர்). பாராளுமன்றத் தொகுதி: - 1 (இராமநாதபுரம்) கல்வி: பள்ளிகள்: துவக்கநிலை -969; நடுநிலை -142; உயர்நிலை - 57; மேனிலை - 39. கல்லூரிகள்: அரசுக் கலைக் கல்லூரிகள் (இராமநாதபுரம் மற்றும் கமுதி); முகமது சதக் பாலிடெக்னிக், கீழக்கரை; முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை; தஸ்லீன் பீவி அப்துல் காதர் கலைக்கல்லூரி, கீழக்கரை; முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி, கமுதி; மாலைநேரக் கல்லூரி, பரமக்குடி.

வழிபாட்டுத் தலங்கள்

இராமேஸ்வரம், திருபுல்லாணி பெருமாள் கோவில், உத்திரகோச மங்கை, திருவாடானை, ஏர்வாடி தர்ஹா, ஓரியூர் கிறித்துவ தேவாலயம், நயினார் கோவில் முதலியன இம்மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.

இராமேஸ்வரம் கோயில்

12 ஆம் நூற்றாண்டில் கட்டத் தொடங்கி 17 ஆம் நூற்றாண்டில் முடிவடைந்தது என்பர். பல தலைமுறைகளாக இலங்கை அரசர்களாலும் சேதுபதிகளாலும் தனிப்பட்ட பலராலும் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் திராவிடக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. கோவிலிலும் கல்யாண மண்டபத்தின் அருகிலும் இரண்டாம் பிரகாரத்திலும் சேதுபதிகள் பலரின் உருவங்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. ஐந்து அறங்காவலர்கள் அடங்கிய குழுவின் நிர்வாகத்தில் இக்கோயில் சிறப்புற்றுத் திகழ்கிறது. இராமநாதபுரம் சேதுபதி குடும்பத்தாரும், தேவக்கோட்டை ஜமீன் குடும்பத்தாரும் இதில் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருகின்றனர். பழமையான பாண்டியர் காலத்து வேலைப்பாடும், விசயநகர அரசர் காலத்துக்கு பிற்பட்ட வேலைப்பாடுகளும் இக்கோவிலில் காணப்படுகின்றன. நகரின் உயர்ந்த பகுதியில் கோவில் அமைந்துள்ளது.

கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 2 பர்லாங்கு தொலைவும், தெற்கு வடக்காக ஒன்றரை பர்லாங்கு தொலைவும் உடைய மிகப்பெரிய கோவில் இராமேஸ்வரம் கோயில். இங்கு காணவேண்டிய முக்கிய பகுதி சொக்கட்டான் மண்டபம். இராமநாத சுவாமியின் சந்நிதியே மூலஸ்தானம். சீதாதேவி மணலில் பிடித்த லிங்கமான இராமேஸ்வரர் இங்கிருக்கிறது. இதனாலேயே இவ்வூருக்கு இராமேஸ்வரம் என்று பெயர் பெற்றது. இக்கோயில் நந்தி மிகப் பெரியது. இதன் நீளம் 23 அடி, அகலம் 12 அடி, உயரம் 17 1/2 அடி. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று இக்கோயிலில் உள்ளது. அது படிகத்தினால் ஆனது. இராமேஸ்வரம் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வடநாட்டினரும் வெளிநாட்டினரும் இங்கு அதிகமாக வருகின்றனர்.

மாசி மகம், மாசி சிவராத்திரி, வைகாசி, ஆடி அமாவாசை வசந்த உற்சவம் இவை நான்கும் பெரிய விழாக்களாக இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன. இங்குப் பயணிகள் தங்குவதற்கு ஏராளமான சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன. தலைமை அர்ச்சகர், சிருங்கேரி சங்கராச்சாரியார், இராமநாதபுரம் சேதுபதி, நேபாள மன்னர் ஆகிய இந்நால்வருக்கு மட்டுமே இராமநாத சுவாமி கருவறைக்குச் செல்லும் உரிமை உண்டு. காசியாத்திரை செல்பவர்கள் இராமேஸ்வரத்தில் தொடங்கி மீண்டும் இராமேஸ்வரத்துக்கு வந்து முடிப்பார்கள்.

இவ்வழக்கம் தென்னாட்டினரால் மேற் கொள்ளப்படுகிறது. துளசிதாஸ் இராமாயணம், சேதுபுராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் இத்தலத்தைச் சிறப்பிக்கின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானவர் போன்றோர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்கள்.


இராமேஸ்வரம்

இராஜராஜேஸ்வரி கோவில்:

இராமநாதபுரம் நகரின் அரண்மனைக்குள் இக்கோவில் அமைந்துள்ளது. சொக்கத் தங்கத்தால் ஆன இராஜராஜேஸ்வரியின் உயரம் ஒன்றரை அடி. சேதுபதி மன்னர்களுக்குத் திருமலை நாயக்கரால் அளிக்கப்பட்டது இந்த அம்மன் உருவம். இங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருப்புல்லானி பெருமாள் கோயில்:

திருப்புல்லாணையில் உள்ள ஜகந்நாதப் பெருமாள் கோவில் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவில் இராமர் விக்ரகத்திற்கு விலையுயர்ந்த காதணிகளை அணிவித்து வழிபடுகின்றனர். தனுஷ்கோடியிலிருந்த ராமர் விக்ரகம் இங்கு வைத்து வழிபடப்படுகிறது. இங்குள்ள இறைவனுக்குத் தென்னகத் தமிழான் என்ற பெயரும் உண்டு. 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இங்குக் காணப்படுகின்றன.

ஏர்வாடி தர்ஹா:

இவ்வூரில் உள்ள தர்ஹா முன்னாளில் சுப்ரமணியர் தலமாக விளங்கியதாம். ஏறுபடி என்னும் பெயரால் இது விளங்கிற்று. முருகன் மீனாக வந்து பரதவர் வலையில் அகப்பட்டுக் கரையேறிய இடம் ஏறுபடி ஆயிற்று. இன்று கத்தோலிக்கராக உள்ள இப்பரதவர் வலையை இழுக்கும்போது 'ஓ, வேலா, காவேலா' என்று வேலன் பெயரைச் சொல்லியே இழுக்கின்றனர். இந்த தர்ஹா தென்னிந்தியாவின் பெரிய பள்ளி வாசல்களில் ஒன்றாகும். வெளிநாட்டு முஸ்லீம்களும் இங்கு வந்து போகிறார்கள். ஏர்வாடி உருஸ் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஒரியூர் தேவாலயம்:

இந்த தேபிரித்தோ தேவாலயத்தை ஒரியூரில் அமைக்க 1734 இல் சேதுபதி மன்னர் 20 ஏக்கர் நிலத்தை வழங்கினார். அருளாநந்தர் என்னும் மேனாட்டு பாதிரியாரின் சேவையால் இத்தேவாலயம் எழுந்தது. 120 அடி உயரத்தில் கோபுரம் அமைந்துள்ளது. பழைய தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும் அங்கு வழிபாடு நடப்பதில்லை. தென்னிந்தியா முழுவதிலுமிருந்து கத்தோலிக்கர் ஒரியூருக்கு வருகின்றனர். பிள்ளை வரம் வேண்டுவோர் இத்தேவாலயத்தைச் சுற்றி தென்னம்பிள்ளை நடுகின்றனர். டி.பிரிட்டோ பாதிரியாரின் நினைவாக பெருவிழா கொண்டாடப்படுகிறது.

திருவாடனை சிவன் கோவில்:

139 அடி உயரக் கோபுரம் உள்ளது. கோவில் உள்ளப் பகுதிக்கு பிடாரனேந்தல் என்று பெயர். இக்கோவிலில் சொற்கேட்டான்சாரி மண்டபம் உள்ளது. சூரியனுக்குத் தனிச் சந்நிதியும், சூரிய சண்டிகேசுவரர்க்குச் சந்நிதியும் உள்ளன. இது அகத்தியர் வழிபட்ட தலமாக சிறப்பிக்கப்படுகிறது. வைகாசி விசாகத் திருவிழாவும், ஆடியில் திருக்கல்யாண மகோற்சவமும் கொண்டாடப்படுகின்றன.

முக்கிய ஊர்கள்

இம்மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையும் முக்கிய நகர்களையும் பற்றி இங்குக் காண்போம்.

இராமநாதபுரம் நகரம்:

இராமநாதபுரம் நகராட்சி 1959 இல் ஏற்பட்டது. இராமநாதபுரம் வைகை ஆற்றின் முகத்தில் அமைந்த ஊராதலால் இதை 'முகவை' என்று குறிப்பிடுவர். இராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், திருப்புல்லணை, உத்திரகோசமங்கை ஆகிய தலங்களுக்கு, இந்நகர் வழியேதான் செல்ல முடியும். 1772லிருந்து 1792 வரை இது ஆங்கிலேயரின் ராணுவத் தளமாக இருந்தது. 1949 இல் இராமநாதபுரம் ஜமீன் தமிழக அரசின் ஆட்சி பொறுப்புக்கு வந்தது.

சேதுபதியின் அரண்மனையும், அதிலுள்ள கோவிலும், இராமலிங்க விலாசம் என்னும் மாளிகையும் காணத்தக்க இடங்களாகும். இராமலிங்க விலாசம் சேதுபதிகளின் அவைக்களமாகவும், ஆடம்பர மாளிகையாகவும் விளங்கியதால், இதன் உட்புறம் வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சை மன்னருக்கும், சேதுபதிக்கும் நடந்த போரைச் சித்தரிக்கும் ஓவியம், ஆடற்கலையைச் சித்தரிக்கும் அற்புதச் சித்திரங்கள், இராமாயணம், பகவத்கீதை இவற்றை விளக்கும் காட்சிகள், சைவ- வைணவ வரலாற்றுக் காட்சிகள், மன்னரது, பட்டாபிஷேகம், அந்தபுரக் கேளிக்கைகள், திரையளிக்கும் காட்சிகள் போன்ற பல கண்ணைக் கவரும் காட்சிகள் இராமலிங்க விலாசத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

1978 முதல் தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இந்த அரண்மனையைத் தங்கள் பொறுப்பில் ஏற்று பராமரித்து வருகின்றனர். இராமநாதபுரம் மிளகாய் சந்தை தமிழ்நாட்டில் மிகப்பெரிய சந்தையாகும். பங்குனி, சித்திரை மாதங்களில் மிளகாய் சாகுபடி செய்து, தொடர்ந்து ஆறு மாதங்கள் இவ்வியாபாரம் நடைபெறுகிறது. தேங்காய் மொத்த வணிகத்திற்கும் இவ்வூர் பெயர் பெற்றது. புதன்கிழமைகளில் சந்தை கூடுகிறது.

சித்தார்கோட்டை:

இவ்வூரில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்கள் பனையோலையைக் கொண்டு பல அழகுப் பொருட்களைச் செய்து விற்பனை செய்து வாழ்கின்றனர்.

தேவிப்பட்டிணம்:

இது இராமநாதபுரத்திற்கு வடகிழக்கே 15 கி.மீ. தொலைவில் கடற்கரையிலுள்ள சிற்றுர். நவகிரகங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்கள் இவ்வூர் கடலுக்குள் இருப்பதால் இவ்வூரை 'நவபாசனம்' என்று அழைக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தென்னம் பண்ணையும், பழத்தோட்டங்களும் இங்கு உள்ளன. இவ்வூரில் பாதிப்பேர் முஸ்லீம்கள். இது ஒரு சுற்றுலா தலமாகும்.

கீழக்கரை:

இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது இச்சிறு துறைமுகம். இங்கிருந்து அருகிலுள்ள கரையோரப் பட்டினங்களுக்குப் படகுகளில் பொருட்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. இவ்வூரே பாண்டியர்களின் பண்டையத் துறைமுகமான கொற்கை என்று கருதப் படுகிறது. செந்தமிழ் வளர்த்த சீதக்காதி இவ்வூரினர். இவ்வூரில் 32 பள்ளிவாசல்கள் உள்ளன. முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இங்கு வாழ்கின்றனர். சங்குகளை அறுத்து அணிகலன்கள் செய்தல், மீன்பிடித்தல், மண்பாண்டங்கள் செய்தல் போன்ற தொழில்கள் இங்கு மிகுதி.

அழகன்குளம்:

இராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றுர். 1983 இல் இங்கு நடந்த தொல்பொருள் ஆய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ரோமானியர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கு ஆதாரமாக சங்குக் குவியல்கள் கிடைத்துள்ளன. அழகன்குளம் பாண்டிய நாட்டின் துறைமுகமாக விளங்கியது. இங்கு மருதுப்பாண்டியர் கட்டிய கோவிலும், சத்திரமும் உள்ளன. ரோமானியர் பயன்படுத்திய மதுச்சாடிகளும், கி.பி. நான்காம் நூற்றாண்டின் ரோம் நாட்டு மன்னன் தலைப் பொறித்த நாணயமும், அணிகலன்களில் சேர்த்துக்கொள்ளும் மணிகளும் உயர்வகைக் கற்களும் இங்குக் கிடைத்துள்ளன. மெளரியர்களின் தொடர்புக்கு ஆதாரமாக அவர்கள் காலத்து ஓவியங்களும், கருவண்ணப் பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உத்திரகோசமங்கை:

இது இராமநாதபுரத்துக்கு தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது. இது ஒரு காலத்தில் பாண்டியர் தலைநகராய் விளங்கியது. நாயக்க மன்னர் கல்வெட்டுகள் இவ்வூர் கோவில்களில் உள்ளன. மாணிக்கவாசகரால் பாடப்பெற்றத் தலம். இங்கு ரயில் நிலையம் உள்ளது.

திருப்புல்லனை:

இராமநாதபுரத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூர் பெருமாள் கோயில் பிரசித்திப் பெற்றது. இதற்கருகில் உள்ள மோர்க்குளம் என்னும் ஊரில் உப்பளம் இருக்கிறது.

மண்டபம்:

இராமேஸ்வரத்துக்கு நடந்துச் செல்வோர் வசதிக்காக இங்கு சேதுபதிகள் ஒரு கல்மண்டபமும் தெப்பக்குளமும் கட்டினர். அதனால் இவ்வூருக்கு மண்டபம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

வடக்கிழக்குப் பருவக்காற்றால் பெரும் புயல் வீசும். பல சிறு தீவுகள் தென்மேற்குப் பருவக்காற்றால் நேரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்துகின்றன. சுற்றியிருந்த காடுகளை அழித்து குடியேறியவர்கள் வெற்றிலை பயிரிட்டதால் வெற்றிலை மண்டபம் என்ற பெயரும் உண்டு. படகு கட்டும் துறை இங்கிருக்கிறது. இரயில் நிலையமும் உள்ளது. மண்டப முகாம் ஒரு காலத்தில் இலங்கை அரசின் கீழிருந்தது. ஐந்து மைல் நீள சாலையும், பல கட்டிடங்களும், குடியிருப்புகளும் கொண்ட இவ்விடம் தற்போது தமிழக அரசு பொறுப்பில் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகம் காண்பதற்கு அரிய பல உயிரினங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. செயற்கை முத்து தயாரிக்கும் தமிழ்நாடு முத்து நிறுவனம் தமிழக அரசால் இங்கு நடத்தப்படுகிறது.

பாம்பன் கால்வாய்:

1854 இல் பத்தரை அடி ஆழ கால்வாயாகத் தோண்டப்பட்டு, 200 டன் நிறையுள்ள தோணிகள் செல்லத்தக்கவாறு பாம்பன் கால்வாய் அமைக்கப்பட்டது. பிறகு பதினான்கடி ஆழத்திற்கும், 9232 அடி நீளத்திற்கும், 80 அடி அகலத்திற்குமாய் கால்வாய் மாற்றியமைக்கப்பட்டது. 1913இல் இக்கால்வாய் மீது மண்டபத்தையும் பாம்பனையும் இணைத்து ரயில் தொடரும், தொங்கு பாலமும் அமைக்கப்பட்டன. ரயில் தொடருடன் கூடிய பாலத்தை இரு பகுதிகளாக மேலே தூக்கி, சிறிய கப்பல்கள் செல்ல வசதிசெய்யப்பட்டுள்ளது. 1846 இல் கட்டப்பட்டு 1923 இல் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம் இங்குள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

பாம்பன்

இங்கு கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. விவேகானந்தர் நினைவுத் தூண் ஒன்றும் நடப்பட்டிருக்கிறது. மீனவர்களும் நெசவாளர்களும் இங்கு அதிகமாக வாழ்கின்றனர். இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.

தனுஷ்கோடி

இராமபிரான் வில்லின் நுனியை இவ்வூரில் ஊன்றினார் என்ற கருத்திற்கேற்ப தனுஷ்கோடி என்று பெயர் பெற்றுள்ளது. இது இராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு எல்லையில், 20 கி.மீ. தொலைவில் உள்ளது. 1964 இல் ஏற்பட்ட கடல் அரிப்பால் ஊரின் பெரும்பகுதியைக் கடல் கொண்டு விட்டது. இங்கு நீராடுவதைப் புண்ணியமாகக் கருதுகின்றனர். குறிப்பாக ஆடி, தை அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வந்து நீராடுகின்றனர்.

இராமேஸ்வரம் நகர்:

இராமேஸ்வரம் தீவின் நீளம் 15 மைல். இதில் எட்டு மைல் வரைக்கும் இத்தீவு ஆறு மைல் அளவு அகலமாக இருக்கிறது. எஞ்சிய ஏழு மைல் நீளத்திற்கு தீவின் அகலம் ஒரு மைல்தான். மீன்பிடிப்பது முக்கியத் தொழில். சங்கு எடுப்பதும் படகு ஓட்டுவதும் பிற தொழில்கள். இத்தொழில்களில் இங்குப் பெருமளவு வாழும் முஸ்லீம்கள் சிறந்து விளங்குகின்றனர். முத்து வாணிகமும் சிறப்பாக நடைபெறுகிறது. மணல்மேடுகளில் விளையும் வெண்தாழம்பூ மிகுதியாகவும், மலிவாகவும் கிடைக்கிறது. கடலில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகியப் பொருட்களைச் செய்து விற்கின்றனர். இங்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகம். சத்திரங்களும் ஜட்கா வண்டிகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. இராமேஸ்வரம் தீர்த்தம், தேங்காய், புளி, சரளைக்கல், சோழி, சங்கு, மீன் முதலியன இங்குள்ள முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.

கடலாடி:

கடல் அலைகளின் ஓசை எப்போதும் இவ்வூரில் கேட்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இங்கிருந்து முதுகுளத்தூருக்கு 15 கி.மீ. கேழ்வரகு இங்கு நிறைய விளைவிக்கப்படுகிறது. கடல் மீனும் நண்டும் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.

கமுதி

இவ்வூரிலிருந்து முதுகுளத்தூர் 12 மைல் தொலைவு உள்ளது. குண்டாற்றின் கரையில் இது அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள கோட்டையால் புகழ் பெற்ற ஊர். 1801 இல் இக்கோட்டை ஆங்கிலேயர் வசமிருந்தது. பிறகு மருது பாண்டியரால் கைப்பற்றப்பட்டது. வீரபாண்டிய கட்டப் பொம்மனும் இதைப் பயன்படுத்தியுள்ளார். இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது. இங்கு மறவர்களும், நாடார்களும், முஸ்லீம்களும் கிருத்துவர்களும் வாழ்கின்றனர். சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட மீனாட்சியம்மன் கோயில் இங்குள்ளது. பருத்தி நிறைய விளைவிக்கப்படுகிறது. செவ்வாய்கிழமைகளில் சந்தை கூடுகிறது.

தொண்டி:

தொண்டு என்பது நிலத்துக்குள் புகுந்த கடற்பகுதி என்று பொருள்படும். இங்குள்ள கடற்கரையை அலைவாய்க் கரை என்று அழகுத் தமிழில் குறிப்பிடுகிறார்கள். தொண்டி பாண்டியரின் பழம்பெரும் துறைமுகமாக விளங்கியது. இத்துறைமுகத்துக்கும் அரபு நாடுகளுக்கும் பல நூற்றாண்டுகளாக வியாபாரத் தொடர்பு நிலவி வந்துள்ளது. சென்ற நூற்றாண்டு வரை யானைகளும் முத்துக்களும் அரபு நாடுகளுக்கு இத்துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பல காலம் இத்துறைமுகம் இங்கிலாந்து, பர்மா ஆகிய நாடுகளின் தொடர்பால் வளம் பெற்றிருந்தது. முஸ்லீம்கள் பெருந்தொகை யினராக வாழுகின்றனர். மீன் பிடித்தலும் சங்கு எடுத்தலும் இங்கு நடைபெறும் முக்கியத் தொழில்கள். இலங்கையிலிருந்து தேங்காய் இறக்குமதியும், இலங்கைக்கு கடல் ஆமை ஏற்றுமதியும் நடைபெறுகிறது. நெசவாளர்கள் அதிகமாகக் குடியிருக்கின்றனர். இங்குள்ள இஸ்லாமியக் கல்வி நிலையத்தில் அராபிய, பாரசீக மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

திருவாடானை:

இவ்வூர் வழியேதான் தொண்டிக்குச் செல்ல வேண்டும். 1605 முதல் 1650 வரை சேதுபதிகளின் தலைநகராய் திருவாடானை இருந்தது. இவ்வூர் சிறப்புக்குக் காரணமாக விளங்கும் சிவன் கோயில் தேவக்கோட்டை நகரத்தார்களால் திருப்பணி செய்யப்பட்டது. இது சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும்.

பரமக்குடி:

மதுரையிலிருந்து 47 மைல் தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 26 மைல் தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து 23 மைல் தொலைவிலும், முதுகுளத்தூ ரிலிருந்து 16 மைல் தொலைவிலும் பரமக்குடி அமைந்துள்ளது. வைகை ஆற்றின் கரையில் வளமாக விளங்குகிறது; பல அரசு அலுவலகங்கள், வணிக நிலையங்கள் நிறைந்த ஊர். கிருத்துவர்கள் பெரும் தொகையினராய் வாழ்கின்றனர். இவர்கள் வழிபடும் கத்தோலிக்க தேவாலயமும் இந்துக்கள் வழிபடும் சிவாலயமும் நகரைச் சிறப்பிக்கின்றன. வெளியூர்களில் நகை வியாபாரத்தில் சிறந்து விளங்கும் அநேக ஆயிர வைசிய இனத்துப் பெருமக்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. நெசவுத் துறையில் ஈடுபடும் செளராஷ்டிர இனத்தினரும் உள்ளனர். வேளாண்மைப் பள்ளியும், வேளாண்மைப் பண்ணையும் இங்கு அரசினரால் நடத்தப்படுகின்றன. ரயில் நிலையம் உள்ளது. வியாழன்தோறும் சந்தை கூடுகிறது. இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் வட்ட மக்கள் இச்சந்தைக்கு வந்து போகிறார்கள்.

ஆதாரம் : தமிழ்ச்சுரங்கம் இணையதளம்

3.01639344262
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top