பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தின் வரலாற்றுக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வரலாறு

சங்க காலத்தில் தர்மபுரியின் பெயர் தகடூர். இவ்வூரை அதியமான் ஆண்டதாக இலக்கியம் கூறுகிறது. பிற்காலத்தில் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையால் அதியமான் மகன் எழினி தோற்கடிக்கப்பட்டான். இதனை 'தகடூர் யாத்திரை' என்ற தமிழிலக்கியம் விரிவாக விளக்குகிறது. சேரரின் ஆட்சிக்குப் பிறகு தர்மபுரி என வழங்கும் தகடூர், நுளம்பர், சோழர், மீண்டும் அதியமான்கள், ஹொய்சாளர், விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் பிஜப்பூர் சுல்தான்களின் ஆளுகையின் கீழ் தருமபுரி இந்தது. 1652 முதல் 1768 வரை மைசூர் மன்னர்களின் மேலாண்மையின் கீழ் இருந்தது. இக்காலத்தில் கன்னடர்கள் பெருமளவில் இம்மாவட்டத்தில் குடியேறினர். இவர்களுக்கு முன்பே விஜயநகர காலத்தில் தெலுங்கர்கள் மாவட்டம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர். 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலத் தளபதி வுட் என்பவன் பிரிட்டீஸ் இந்தியப் பகுதிக்குள் தர்மபுரியை கொண்டு வந்தான். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்துடன் தர்மபுரி இணைந்தே இருந்தது. 1965-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் தமிழகத்தின் எல்லையில் இருப்பதால் கன்னட, தெலுங்கு செல்வாக்கு உண்டு. இங்கு பழங்குடியினரும் அதிகம்.

தர்மபுரி மாவட்டம் 09/02/2004 அன்று தர்மபுரி, கிருஷ்ணகிரி என இரு மாவட்டங்களாக பிரிந்தது.

பொது விபரங்கள்

மழையளவு சராசரி : 895.56 மி.மீ; பரப்பளவு : 4497.77 ச.கி.மீ

மக்கள் தொகை

ஆண்

பெண்

மொத்தம்

கிராமப்புறம்

நகர்ப்புறம்

7,72,490

7,30,410

15,02,900

12,42,519

2,60,381

51.4 %

48.6 %

100 %

82.7 %

17.3 %

மக்கள் அடர்த்தி : 332 ச.கி.மீ.

பாலின விகிதம் : 946

எல்லைகள் :

இம்மாவட்டத்தின் கிழக்கே திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும்; மேற்கே கிருஷ்ணகிரி மாவட்டமும் ; வடபகுதியில் காவேரி ஆறும்; தென் பகுதியில் சேலம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

நிர்வாக பிரிவுகள்

வருவாய் பிரிவுகள்

தர்மபுரி

அரூர்


வருவாய் வட்டங்கள்

அரூர்

பாலக்கோடு

தர்மபுரி

பென்னாகரம்

பாப்பிரெட்டிப்பட்டி

 

புதிய வட்டங்கள் : காரிமங்கலம், நல்லம்பள்ளி


ஊராட்சி ஒன்றியங்கள்

அரூர்

பாலக்கோடு

தர்மபுரி

பென்னாகரம்

பாப்பிரெட்டிப்பட்டி

நல்லம்பள்ளி

காரிமங்கலம்

மொரப்பூர்

 


பேரூராட்சிகள்

மாரண்டஹள்ளி

பாலக்கோடு

பாப்பாரப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி

பென்னாகரம்

மல்லாபுரம்

கம்பைநல்லூர்

அரூர்

கடத்தூர்

காரிமங்கலம்

 

 

கல்வி :

எழுத்தறிவு விகிதம் : 64.71 %  (ஆண் : 69.16, பெண் : 60.03)

புகழ்பெற்ற பெரியோர் :

சங்ககால மன்னர் அதியமான், புலவர் அவ்வையார், சுதந்திர போராட்டவீரர் தீர்த்த கிரிகவுண்டர்; கவனர் ஜென்ரல் ராஜாஜி; விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா.

வேளாண்மை

1. நெல் பயிரிடப்படும் பகுதி (ஹெக்டேர்)

ஹெக்டேர்

சதவிகிதம்

சொர்ணவாரி / குருவை / கார்

2726

01.60%

சம்பா / தாளடி

5533

03.30%

நவரை / கோடை

1206

00.70%

மொத்தம்

9,465

05.60%

2.  சிறு தானியங்கள் (ராகி)

18,243

10.80%

3.  மற்ற சிறு தானியங்கள்

69,162

40.90%

4.   தானியங்கள்

40,441

23.90%

5.   கரும்பு

11,971

07.10%

6.   மாம்பழம்

6,506

03.80%

7.   தென்னை

7,037

04.20%

8.   புளி

1,197

00.70%

9.   மற்ற பயிர்கள்

5,067

03.00%

மொத்தம் பயிரிடப்படும் பகுதி (A+B)

1,69,089

 

A)    பயிரிடப்பட்டுள்ள நிகர பகுதி

1,53,322

90.70%

B)    ஒரு முறைக்கு மேல் விதைக்கப்பட்ட பகுதி

15,767

09.30%

நிலவளம்

தர்மபுரி மாவட்டம் ஓர் மலைமாவட்டம் ஆகும். இங்கு கனிம வளம் நிறைந்துள்ளது.

அபாடைட் :

அபாடைட் கனிமம், ஓகனக்கல் பக்கத்தில் உள்ள ஊத்தாமலைப்பகுதில் கிடைக்கின்றது. ஓகனக்கல் பகுதியில் 50,000 டன்னும், ஊத்தாமலையில் 3கி.மீ. தொலைவுக்கும், கெம்பகரைக்குத் தெற்கில் 2 கி.மீ. தொலைவுக்கும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பித்தளை :

பித்தளை தாது அரூர் வட்டத்தில் பைர நாயக்கன் பட்டியில் கிடைக்கிறது. இது தவிர ஈயம், சைனைட், கார்பனேட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

இரும்பு :

தீர்த்தாமலையில் மட்ட இரும்பு சுமார் 28 மில்லியன் டன் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது.

சுண்ணாம்பு :

தர்மபுரிமாவட்டத்தில் திப்பம்பட்டியில் சுமார் 50,000 டன் கிடைக்க வாய்ப்புள்ளது.

கருங்கல் :

அஞ்சன ஹள்ளி, பேவனுர், பெண்ணாகரத்தில் 20,00,000 கனமீட்டர் பரப்பளவில் கருங்கல் தென்படுகின்றன. அரூர் வட்டத்தில் 6,00,000 கன மீட்டரிலும், பாலக்கோடு வட்டத்தில் சுமார் 18,000 கன மீட்டரிலும் கிடைக்கிறது.

கிரே கிரானைட் :

தர்மபுரி வட்டங்களில் கிடைக்கிறது. பாலீஷ் செய்யப்பட்ட கற்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

டாமின் (TAMIN) :

தமிழ்நாடு மினரல்ஸ் என்னும் அரசு நிறுவனம் கீழ்கண்ட இடங்களில் பணி செய்து வருகிறது. அரூர் வட்டத்தில் கோபிநாதம்பட்டி; பெண்ணாகரம் வட்டத்தில் அஞ்சனஹள்ளி, பேவனுர், ஜம்னா ஹள்ளி, தொன்ன ஹட்டஹள்ளி மற்றும் பத்ரஹள்ளி முதலிய இடங்களில் டாமின் நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. இங்குத் தயாராகும் கற்கள் குறிப்பாக ஜப்பான், மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

காட்டுவளம்

தர்மபுரி மாவட்டத்தில் கிடைக்கும் முக்கிய காட்டுப் பொருள்களும், பரப்பளவும்:

1. விறகு மரங்கள் 3467 ஹெக்டேர்

2. சாதாமரங்கள் 657 ஹெக்டேர்

3. மூங்கில் 3359 ஹெக்டேர்

4. சந்தனமரம் 574 ஹெக்டேர்

5. யூகலிப்ட்ஸ் 1483 ஹெக்டேர்

6. புல் 2712 ஹெக்டேர்

7. தேக்கு மற்றும் வீடு கட்ட உதவும் மரங்கள் 517 ஹெக்டேர்

8. புளியமரம் 1010 ஹெக்டேர்

பழங்குடிகள்

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களில் குறும்பர், இருளர், பஸ்தர், சிவாச்சாரத்தார் முதலியோர்.

குறும்பர் :

குறும்பரில் எக்கிடி, ஈடிகர் என்ற பிரிவு உண்டு. ஆடுவளர்ப்பையே முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். மற்ற மலைவாழ் மக்களை விட பொருளாதாரத்தில் குறும்பர் சற்று உயர்ந்தே காணப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழியில் தெலுங்கு வாடை வீசுகிறது. இவர்கள் மஞ்சு மலையிலும் பிற இடங்களிலும் வாழ்கின்றனர்.

இருளர் :

இருளர்கள் சித்தாபுரம், கடிநாடு, ஹோபள்ளி முதலிய இடங்களில் பரவி வாழ்கின்றனர். ஏறத்தாழ 300 குடும்பங்கள் இவ்விடங்களில் உள்ளனர். இருளர்களுக்கு சொந்த வீடு குறைவு. காட்டு, மேட்டிலேதான் இன்றும் வாழ்கின்றனர். இவர்களின் முக்கியத்தொழில் தேன் எடுப்பதும், அரக்கு விற்பனையும்தான். மாரண்ட ஹள்ளியின் பல பகுதிகளில் இன்று வாழ்கின்றனர். இவர்களை அச்சுறுத்துவது அம்மை நோயாகும்.

பஸ்தர் :

'பஸ்தர்' என்னும் கன்னடச் சொல்லுக்கு செம்படவர் என்று பொருள். இவர்களை மலைநாட்டு பரதவர் என்று சொல்லலாம். நீர் நிலைகளின் அருகிலேயே இவர்கள் குடியிறுப்புகள் அமைந்துள்ளது. காவிரியை ஒட்டி ஊட்ட மலைப்பகுதி, மேட்டூர் அணைப்பக்கம் உள்ளே கோட்டையூர், பண்ணவாடி, முதலிய இடங்களில் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வந்தாலும் ஒகேனேக்கல் பகுதியில் அதிகம் காணப் படுகின்றனர்.

சிவாச்சாரத்தார் :

சிவாச்சாரத்தார் இன்று பழங்குடிகளைப் போல இருந்தாலும். இவர்கள் பழங்குடிகள் அல்லர். முஸ்லீம் படையெடுப்பின் போது பயந்து தர்மபுரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தவர்கள். சைவ சமயத்தில் உட்பிரிவான 'லிங்காயத்'துக்கள் (கழுத்தில் லிங்கம் கட்டியிருப்பார்கள்). மற்ற மூன்று பழங்குடிகளுக்கும் இவர்களே குருக்களாக இருந்து திருமண சடங்கை நிறைவேற்றுவார்கள். இவர்கள் கன்னடத்தையே தாய்மொழியாகக் கொண்டவர்கள். பழங்குடியினரிடையே இருப்பதால் இவர்கள் வாழ்க்கை முறையும் அவர்களைப் போலவே இருக்கிறது. இருந்த போதிலும் கூட தங்கள் தனித்துவத்தை இழக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்ட திருவிழாக்கள்

பிப்ரவரியில் அரூர் வட்டத்திலுள்ள தீர்த்தமலை தேர்த்திருவிழாவும், சோளமரத்துப்பட்டி சிவராத்திரி பெருவிழாவும் குறிப்பிடத்தக்கவை. மார்ச் மாதத்தில் தர்மபுரி வட்டத்திலுள்ள சூடநாத சுவாமி தேர்திருவிழா காணத்தக்கவை. ஆகஸ்ட் மாதத்தில் அரூர், தர்மபுரி வட்டங்களில், இருளப்பட்டி கன்னியம்மன் கோயில் பெருவிழாவும், ஒகனக்கல் ஆடிப் பெருக்கும் காணத்தக்கவை.

தொழில் வளர்ச்சி

தர்மபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியே காணப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கிலிருந்து சேமியா போன்ற பொருள் தயாரிக்கும் தொழிலகங்கள் அரூர், தர்மபுரி வட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. அரூர் வட்டத்தில் உமியிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

புரூட் ப்ராசசிங் சென்டர் :

பழரசங்கள், ஊறுகாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இங்கிருந்து பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இவற்றை டின்களில் அடைத்து வெளிநாடுகளுக்கும், பாட்டில்களில் அடைத்து உள் நாட்டிலும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். பழங்களை நெடுநாள் பாதுகாத்து வைக்கத்தக்க 'கோல்ட் ஸ்டோரேஜ்' வசதியும் உண்டு.

ஸ்டார்ச் சர்வ் :

ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகள் 37 இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஸ்டார்ச் சர்வ் என்னும் தொழிற் கூட்டுறவு சங்கம் 1982-ஆம் ஆண்டு பாப்பி ரெட்டிப் பட்டியிலும் இதன் கிளை அலுவலகம் சேலத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் இச்சங்கத்தின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மரவள்ளிக் கிழங்கு பயிரிடும் விவசாயிகள் நன்கு பயனடைந்து வருகின்றனர்

தர்மபுரி :

மாவட்டத்தின் தலைநகர் தர்மபுரி. சிறந்த வணிகத்தளமாகவும் விளங்குகிறது. தர்மபுரியின் உட்பிரிவுகளாக விருபாட்சிபுரம், வெள்ளைக் கவுண்டன் பாளையம், கொமரசன்னஹல்லி, அன்னசாகரம், மட்டி கோணம் பாளையம், பழைய தர்மபுரி முதலியவை அடங்கும். தோல், நெசவு, வெண்ணெய்க்கு சிறப்புற்று விளங்குகிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் இங்கு கல்வி, மருத்துவம், அரசு தலைமை அலுவலகங்கள் முதலியவை அமைந்துள்ளன. மன்றோ என்ற ஆங்கில ஆளுனருக்கு தர்மபுரி பிடித்த இடமாக திகழ்ந்ததை இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. புளியும், பீடியும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வூரில் உள்ள காமாட்சி ஆலயத்தில், மூன்றாம் குலோத்துங்கனின் 10-12-ஆம் ஆண்டு ஆட்சிப் பெருமைகளைச் சிறப்பித்துக் கூறும் கல்வெட்டு இருக்கிறது. தர்மபுரியிலிருந்து 6-வது மைலில் மோடூர் சாமுண்டி அம்மன் மந்து கல்வெட்டில் தகடூரில் திருமணத்திற்கு வரி வசூலித்த செய்தி காணப்படுகிறது.

ஒகனக்கல் :

இம்மாவட்டதில் உள்ள தலைசிறந்த சுற்றுலாத் தலமாகும். தர்மபுரியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜூலை மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை கூட்டம் அலைமோதும். தமிழகத்தில் காவிரி இங்கு தான் எட்டிப் பார்க்கிறது. தோப்பூர் மலைத் தொடரில் 780 அடி கடல்மட்டத்திற்கு மேல் உள்ள பகுதியில் சந்திக்கிறது. பின்னர் இரண்டாகப் பிரியும் காவிரி 86 அடி ஆழத்தில் ஒரு பள்ளத்தில் விழுகிறது. விழும் இடம் தான் 'ஒகனக்கல்' இங்கு காவிரி 36 பிரிவுகளாகப் பிரிந்து அருவியாக விழும் அழகை காண்பது மனதிற்கு பெரும் மகிழ்வைத் தரும். விழும் தண்ணீரின் திவலைகள் புகைபோலப் காணப்படுவதால் தான் இதைக் கன்னடத்தில் 'புகையும் கல்' என்னும் பொருளில் ஒகனக்கல் என்று அழைத்தார்களாம். இங்கு எண்ணெய் தேய்ந்து அருவியில் குளிப்பதே தனி அனுபவம், சமதரையிலிருந்து 6 அடியில் விழும் சிற்றருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு ஏற்ப வசதி செய்யப்பட்டுள்ளது. காவிரியாறு அருவியாக விழும் இடத்திற்கு முன் ஆறாக ஓடும் இடத்திலும், அருவியில் செல்லவும் 'பரிசல்' (வட்டமாக அமைந்துள்ள தட்டுபோல இருக்கும் இதன் கீழ் பகுதி தோலால் மூடப்பட்டிருக்கும்) உண்டு. இங்கு மீன் வறுவல் புகழ்பெற்றது. மலையேறவும் ஏற்ற இடம். சிறு விலங்குகள் காட்சிக் கூடமும், முதலைப்பண்ணையும் உண்டு. தை, ஆடி, அமாவாசைகளில் மக்கள் பெருமளவு கூடுவார்கள்.

அரூர் :

வட்டத் தலைநகர் சேலத்திலிருந்து 35கி.மீ. தொலைவில் உள்ளது வளர்ந்து வரும் வட்டமாகும். அரூர் வட்டம், நல்ல விவசாய மாவட்டமாகும். இங்கு தானிய விளைச்சல் நன்றாக உள்ளது.

பாலக்கோடு :

இவ்வட்டத்தில் 56 ஊராட்சிகளின் மொத்த மக்கள் தொகை 1,72,000 பேர் தர்மபுரியிலிருந்து 14 மைல் தொலைவில் உள்ள ஊர். திங்கட் கிழமைகளில் கூடும் சந்தைகளில் பலாப்பழம், கேழ்வரகு, வெல்லம், எள், தேங்காய், மாங்காய் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன. அம்மணி மல்லாபுரம், ஜர்தாலவ், காரிமங்கலம், மாரண்ட ஹள்ளி, பாலக்கோடு முதலியவை ஊராட்சிகள்.

நல்லாம் பள்ளி :

இவ்வொன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. அவை மனித்த ஹள்ளி, பாஹளஹள்ளி, கம்மம் பள்ளி, தோப்பூர் முதலியன. மக்கள் தொகை : 1,18,0000. தர்மபுரியிலிருந்து 6 மைல் தொலைவில் உள்ளது. ஜமக்காள நெசவுக்கு புகழ் பெற்றது. இங்கிருந்து பெங்களூருக்கு பெருமளவில் செல்கிறது.

பெண்ணாகரம் :

சுமார் 2,00,000 மக்கள் தொகை கொண்ட இவ்வூராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள் அடங்கியுள்ளன. இவ்வூர் தர்மபுரிக்கு 19 மைல் தொலைவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை சந்தை நாள். அஞ்செட்டி காடுகளிலிருந்து மூங்கில் இங்குதான் சேமித்து வைக்கப்படுகின்றன. ஒகனக்கல் - பெரும்பாலை செல்லும் வழியில் உள்ளது இவ்வூர்.

மொரப்பூர் :

45 ஊராட்சிகள் கொண்ட இவ்வொன்றியத்தில் மக்கள் தொகை : 1,50,000. இங்கு இரயில் வசதி உண்டு. இவ்வொன்றியத்தில் ஈச்சம்பாடி, கடத்தூர், கம்பய நல்லுர் முதலானவை முக்கிய ஊராட்சிகளாகும். மொரப்பூருக்கு அருகில் உள்ள தொட்டம்பட்டியில் ஒருகோடி மூலதனத்தில் இரும்பு ஆலை உள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி :

மொத்த ஊராட்சிகள் 21. மக்கள் தொகை 1,00,000; மலைவாழ்மக்கள் 13,000 பேர் உள்ளன. பூதக்காடு, மஞ்சவாடி, மேலாயனுர், பி.பள்ளிப்பட்டி, பட்டுக்கோணாப்பட்டி சித்தேரி முதலிய ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றன.

அதமன் கோட்டை :

தர்மபுரியிலிருந்து 4மைல் தொலைவில் அதமன் கோட்டை இருக்கிறது. தகடூரை ஆண்ட அதியமான் பெயரை மக்கள் அதமனாக்கி விட்டனர். கோட்டை அழிந்து விட்டது. கோட்டையில் சோமேஸ்வரர் கோயில் பெரியது. விஷ்ணு, பைரவர், அங்காளம்மன் கோயில்களும் உள்ளன. பைரவர் கோயிலுக்கு மேற்புறத்தில் சமண சிற்ப வேலை பாடுகளை ஒரு கிராமத்தில் காணலாம். கோயிலில் பல கல்வெட்டுகள் உண்டு.

தோப்பூர் :

தர்மபுரிக்கு 16 மைல் தொலைவில் உள்ளது இவ்வூரில் சத்திரம் ஒன்று உண்டு. கிழக்கில் மனுகொண்ட மலையின் உச்சியில் தோப்பூர் கணவாயை நோக்கி கோட்டை ஒன்று தென்படுகிறது. வாரத்தில் திங்கள் தோறும் சந்தை கூடுகிறது. இங்குள்ள ஏரிக்கு தாமஸ் மன்ரோ ஏரி என்று பெயர். இதை வனத்துறை செடி உற்பத்திக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

தீர்த்தமலை :

அரூருக்கு வடகிழக்கில் சுமார் 10மைல் தொலைவில் தீர்த்தமலை உள்ளது. இம்மலையில் பல தீர்த்தங்கள் இருப்பதால் தீர்த்தங்களின் மலை என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள செங்குத்தான மலைமீது ஏறிச் சென்றால் தீர்த்தகிரீஸ்வரர் என்னும் கோவில் உள்ளது. இங்குள்ள 11 தீர்த்தங்களில் குளிக்கலாம் கோயிலுக்கு மேற்காகச் செல்லும் குறுகிய பாதை வழியாகப் போனால், சில்ல நாயக்கரின் மலைக்கோட்டை காணப்படுகிறது. இக்கோவிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

தென்கரைக் கோட்டை :

அரூர் வட்டத்திலுள்ள மொரப்பூருக்குத் தென் கிழக்கில் சுமார் பத்து மைல் தொலைவில் தென்கரைக்கோட்டை அமைந்துள்ளது. இங்குள்ள திரோபதை அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி விழா சிறப்பாக நடைபெறும். கெட்டி முதலியார்கள் ஆளுகையில் இப்பகுதி இருந்தது. சிதையுற்ற கோட்டையில் சிவன், பெருமாள் கோவில்கள் உள்ளன. அரசியார் குளிப்பதற்கும், தானிய கிடங்கும் இங்கு தற்போது காணப்படுகிறது.

பொம்மிடி :

சேர்வராயன் மலையில் கிடைக்கும் காட்டுப் பொருள்களின் சிறந்த சந்தை கூடும் இடமாக உள்ளது. இங்கு தேன், தேக்கு, மெழுகு போன்ற பொருட்களை வியாழக்கிழமைகளில் கூடும் சந்தையில் வாங்க முடியும். இரயில் நிலையத்திற்கருகில் மேலக்கங்கவம்ச அரசரான ஸ்ரீபுருஷ முத்தரசர் காலக்கல்வெட்டுக்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புட்டிரெட்டிப்பட்டி :

மொரப்பூருக்கு கிழக்கில் எட்டாவது மைலில் உள்ளது. இவ்வூர், ஒரு புகைவண்டி நிலையமாகும். மருக்கொழுந்து பூ இங்கிருந்து பல ஊர்களுக்கும் செல்கிறது. இங்குள்ள அம்மன் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டு ஹரிஹரி புக்கரிடமிருந்து விஜய நகரத்தை மீட்டு தன் மகனுக்குப் பட்டம் கட்டிய சாளுவ நரசிம்மனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.

சோழப்பாடி :

தர்மபுரிவட்டத்தில் காவிரியும், தோப்பூர் ஆறும் கூடும் இடத்திலுள்ள கிராமம். சோழப்பாடி மூன்று பகுதியாக விளங்குகிறது. கோவில் உள்ள இடம் 'கோவில் சோழப்பாடி' இங்கு ஆடிப்பெருக்கின்போது மக்கள் கூடுவார்கள். தோப்பூர் ஆற்றுக்கு எதிர்புறம் கோட்டையுள்ளதால் அப்பகுதி 'கோட்டை சோழப்பாடி' எனப்படுகிறது. சந்தை கூடும் இடத்தை 'சந்தை சோழப்பாடி' என்கின்றனர்.

கம்பை நல்லூர் :

மொரப்பூர் இரயில் நிலையத்திற்கு வடமேற்கில், எட்டு மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. ஊருக்கு வடகிழக்கில் சுமார் 2 மைல் தொலைவில் பெண்ணையாற்றுடன் கம்பையநல்லூர் ஆறு கலக்கிறது. இங்குள்ள கோட்டைக்கு சேர்வராயன் கோட்டை என்று பெயர். தாசிநாதேசுவரர் கோவிலில் நிறைய கல்வெட்டுக்கள் உண்டு. இங்கு சந்தை வெள்ளிக் கிழமைகளில் கூடுகிறது.

காரிமங்கலம் :

தர்மபுரியிலிருந்து காரிமங்கலம் 14-மைல். வள்ளல் காரியின் பெயர் பெற்று விளங்குகிறது. இம்மலையில் அருணேஸ்வரர் கோயில் உள்ளது.

பாப்பாரப்பட்டி :

தர்மபுரிக்கு 10வது மைலில் உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, இங்கு ஆசிரமம் அமைத்து தங்கி இருந்தார். வியாழக்கிழமை சந்தை கூடுகிறது. கைத்தறிக்குப் புகழ்பெற்றது.

பெரும்பாலை :

பெண்ணாகரத்திற்குக் கிழக்கில் உள்ளது. இந்த ஊர்க்கோட்டையைச் சுற்றி பாம்பாறு இருக்கிறது. வணிகத்தலம்.

ஆதாரம் : தமிழ்ச்சுரங்கம், http://dharmapuri.tn.nic.in/

3.0701754386
Raja Apr 25, 2018 04:05 PM

அரூர் வட்டம் கீழ்மொரப்பூர் பஞ்சாயத்தில் உள்ள பறையப்பட்டி கிராமத்தில் கூத்தாண்டவர் திருவிழா சிறப்பு வாய்ந்தது 4வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top