பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாற்றுக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வரலாறு

பெரம்பலூர் மாவட்டம் பல காலம் திருச்சி மாவட்டத்துடன் இணைந்திருந்த காரணத்தால், திருச்சி மாவட்டத்தின் வரலாறு பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பொருந்தும். நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

எல்லைகள்

 • வடக்கில் சேலம், கடலூர் மாவட்டங்களையும்,
 • கிழக்கில் கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும்,
 • தெற்கில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களையும்,
 • மேற்கில் கரூர், நாமக்கல் மாவட்டங்களையும்

பெரம்பலூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

பொது விபரங்கள்

வருவாய் நிர்வாகம்

கோட்டங்கள்

 • பெரம்பலூர்
 • அரியலூர்
 • குன்னம்,
 • உடையார்பாளையம்,
 • செந்துறை

வருவாய் கிராமங்கள்

உள்ளாட்சி நிறுவனங்கள்

நகராட்சி-1 (துறையூர்); ஊராட்சி ஒன்றியம்-10 (பெரம்பலூர், வேப்பந்தட்டை, அரியலூர், திருமானுர், வேப்பூர், ஆலத்தூர், ஜெயங்கொண்டம், தா.பளூர், ஆண்டிமடம், செந்துறை); பேரூராட்சி-11.

சட்டசபைத் தொகுதிகள்

6 (பெரம்பலூர், உப்பிலியாபுரம், வரகூர், அரியலூர், ஜெங்கொண்டம், ஆண்டிமடம்)

பாராளுமன்றத் தொகுதி

1 (பெரம்பலூர்)

வழிபாட்டுத் தலங்கள்

கங்கை கொண்ட சோழபுரம்

 • முதலாம் இராஜேந்திர சோழன் தமிழகத்தின் தலைச்சிறந்த மன்னனாக 11 ஆம் நூற்றாண்டில் விளங்கினான். இவன் கடல் கடந்து கடாரத்தையும், மற்றும் பல தீவுகளையும் வெற்றி கொண்டான். இந்தியாவின் வடக்கே கங்கை நதி வரை இராஜேந்திர சோழனின் வெற்றிக் கொடி பறந்தது. இதனால் இவனுக்குக் கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் வந்தது. இம்மாபெரும் வெற்றிக்கு எடுத்துக் காட்டாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற இந்நகரை நிர்மாணித்து, இங்கே அழியாத கோயில் ஒன்றைத் தோற்றுவித்தான். பிறகு இராஜேந்திர சோழன் தன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். அதன் பிறகு வந்த அனைத்து சோழ மன்னர்களும் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலைநகராய்க் கொண்டிருந்தனர். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சராய்ப் பணிபுரிந்த இடம் கங்கை கொண்ட சோழபுரமாகும்.
 • கங்கை கொண்ட சோழபுரம் கோயில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை விடச் சற்று உயரம் குறைந்தது எனினும் கட்டிட அமைப்பில் நுணுக்கத்தில் மிகச் சிறந்தது. பல்வகை உறுப்புக்களைப் புதுமையாக அமைத்து இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிற்பங்களும் மிகச் சிறப்பாக விளங்குகின்றன. கங்கை கொண்ட சோழபுரத்திலும் விமானமே மிகவுயர்ந்ததாக விளங்குகிறது.
 • இதன் முன்னர் இருந்த மகாமண்டபத்தின் பெரும்பகுதி இழந்து போய், அதன் கற்கள் கீழணை கட்ட எடுத்துச் செல்லப்பட்டன. இப்போதுள்ள மண்டபம் பின்னர் சீர்செய்யப்பட்டது. இக்கோயிலைக் சுற்றி இரண்டு நிலைகளைக் கொண்ட திருச்சுற்று இருந்தது. அதன் ஒரு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. கோயிலுக்கு முன் நின்ற கோபுரத்தின் ஒரு பகுதியே எஞ்சியுள்ளது. இக்கோயில் விமானம் தஞ்சையில் உள்ளதினின்றும் சற்று வேறுபட்ட அமைப்பை உடையது. இதன் கீழ்நிலை சதுரமாகவும், மேல்நிலைகள் எண் பட்டையாகவும், சிகரம் வட்டமாகவும் அமைக்கப் பெற்றுள்ளது. இதன் உயரம் 186 அடி ஆகும்.
 • தஞ்சை விமானத்தின் புறத்தோற்றத்தில் நேர்கோடுகள் அமைய, இதில் வளைகோடுகள் அமைகின்றன. விமானத்தின் மூலைகள் சிறிது உட்குழிவாகவும், பக்கங்கள் சற்று வளைந்து புறக்குழிவாகவும் உள்ளன. இங்குள்ள சிவலிங்கம் மிகவும் பெரியது. பெருவுடையார் என்ற பெயருக்கேற்ப அமைந்துள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் கோயிலிலுள்ள சிற்பங்கள் அழகில் ஒப்பற்றவையாக காணப்படுகின்றன. ஞானத்தின் உருவாய், கலைகளின் இருப்பிடமாய் பத்மாசனமிட்டு வெள்ளைத் தாமரை மீது அமர்ந்திருக்கும் கலைமகள் சிற்பம் மிகவும் அழகியதாய் அமைந்திருக்கிறது.
 • அடியான் சண்டிக்கு முடியிலே மலர்மாலை சூட்டி அருள்பாலிக்கும் சண்டீச்வர பிரசாத தேவராக காட்சியளிக்கும் சிவபிரானின் சிற்பமும் கண்ணைக் கவர்கிறது. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல், முகத்தில் தெய்வீகப் புன்னகையுடன் காலைத் தூக்கி கூத்தாடும் பெருமானின் அற்புதத் திருக்கோலம் அமைந்திருக்கிறது. அந்த அற்புதக் கூத்தனின் காலடியிலே எலும்பின் உருவாய் கையிலே தாளம் கொண்டு அமர்ந்திருக்கும் காரைக்கால் அம்மையார் சிற்பமும் சிறப்பாய் அமைந்திருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சாவூரிலிருந்து 71 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து வடக்கே 35 கி.மீ தொலைவிலும் உள்ளது.

கலியுக வரதராசப் பெருமாள் கோயில்

 • இவ்வைணவக் கோயில் விழுப்புரம்-திருச்சி குறுவழி இரயில் பாதையில் உள்ள அரியலூருக்குக் கிழக்கில் 3 மைல் தூரத்திலிருக்கும் கல்லங்குறிச்சி என்னும் ஊரில் உள்ளது. இதைக் கலியபெருமாள் கோவில் என்றும் சொல்கிறார்கள். சுமார் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தென்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இக்கோயிலுக்கு நான்கு வாயிற்படிகள் அமைந்துள்ளன. 16 1/2 அடி உயரத்தில் சுற்றுமதில் சுவரும் எழுப்பப் பட்டுள்ளது. தலவிருட்சம் மகாலிங்க மரமாகும். கிழக்கு கோபுர வாசலின் கீழ்பால், கருங்கல்லால் ஆன நாற்கால் மண்டபம் உள்ளது. உற்சவ மூர்த்திகள் வெளியில் செல்லும் முன்னும், உள்ளே நுழையும் முன்னும் இம்மண்டபத்தில் ஆராதனை நடத்தப்படுகிறது. கோவிலுக்கு எதிரில் தெப்பக்குளம் உள்ளது. நாளொன்றுக்கு நான்கு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.
 • மக்கள் இதை சக்திவாய்ந்த கடவுளாக நம்புவதால் தினமும் கூட்டம் மிகுந்திருக்கிறது. சொந்தமாக உள்ள இரு தேர்களில் ஒன்றில் பெருமாளும், மற்றொன்றில் அனுமாரும் ஊர்வலம் வருவார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் மக்கள் திரளாக வருவர். தானியங்கள் காணிக்கையாக வழங்கப்படுகின்றன. ஸ்ரீராம நவமியின் போது 11 நாட்கள் விழா நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவுக்கு மறுநாள் நடக்கும் ஏகாந்த சேவை சிறப்பானதாகும். இக்கோவில் ஆதரவில் ஒரு மகளிர் உயர்நிலைப் பள்ளியும், உணவு விடுதி, நூல்நிலையம், சித்த மருத்துவமனை முதலியனவும் செயல்பட்டு வருகின்றன.

முக்கிய ஊர்கள்

பெரம்பலூர்

மாவட்டடத் தலைநகராய் விளங்குகிறது. மக்கள் தொகை மிகுதி. நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம். வேளாண்மை சிறப்பாக நடை பெறுகிறது. இங்குள்ள பெருமாள் கோவில் புகழ் பெற்றது. கண்நோய்க்கு இக்கோயிலில் பூக்கும் நத்தியாவெட்டைப் பூவை கண்களில் ஒற்றிக் கொள்வர். இங்குள்ள வெள்ளந் தாங்கி அம்மன் கோவிலும் மக்களால் பூசிக்கப்படும் பெரிய கோயிலாகும். அரசு அலுவலகங்கள், வங்கிகள், திரைப்பட அரங்குகள், பஸ் வசதி, தந்தி, தபால் வசதி முதலியவற்றால் சிறந்த நகரமாகத் திகழ்கிறது.

அரியலூர்

விஜய நகரச் அரசர்கள் தமிழகத்தை சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். இந்தப் பேரரசில் கி.பி.1490 முதல் ஆட்சி செய்த திம்மராயர் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். இவரே அரியலூர் குறுநில மன்னரை நியமித்த பேரரசர். திம்மராயர் காலத்தில் தென்னாட்டில் மக்களுக்குக் கொடியவர்களாலும், கொடிய மிருகங்களாலும் பெருந்துன்பங்கள் ஏற்பட்டன. இத்துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு இராமநயினார் என்பவரை திம்மராயர் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் தென்னிந்தியாவிற்கு வந்து அக்கொடியவர்களை அடக்கிவிட்டுத் திரும்பும்போது கொள்ளிடத்திற்கு வடபால் பயங்கர காடு ஒன்று இருந்தது. இந்தக் காட்டை திருத்தி நாடாக்க இராமநயினார் விரும்பினார்.

கொள்ளிடத்திற்கு வடக்கிலும், வெள்ளாற்றுக்குத் தெற்கிலும், ஊட்டடத்தூருக்குக் கிழக்கிலும், சிதம்பரத்திற்கு மேற்கிலுமாக கிராம பூமிகளை உண்டாக்கி, அதற்கு அரியலூர் எனப் பெயர் சூட்டினார். பிறகு இராமநயினார் அரியலூர் குறுநில மன்னராக திம்மராயரால் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1491 தொடங்கி 1951 வரை அரியலூரை ஆண்டார். அரியலூர் அரண்மனை முகமது அலியின் படையெடுப்பால் நாசமானதாகத் தெரிகிறது. அரியலூர் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் தலைசிறந்த பேரூராட்சியாகத் திகழ்கிறது. ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராய் விளங்கும் இவ்வூரில் மக்கள்தொகை மிகுதி.

விழுப்புரம்-திருச்சி குறுவழி இரயில் பாதையில் அரியலூர் உள்ளது. புகழ்பெற்ற கலியபெருமாள் கோவிலால் ஊர் சிறப்புறுகிறது. மேலும் இவ்வூரில் காமாட்சியம்மன் கோவில், சஞ்சீவிராயன் கோவில், கைலாசநாதசாமி கோவில், அரியபுத்திரசாமி கோவில் ஆகியன உள்ளன. வீதிக்கு ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. அரசு மேனிலைப்பள்ளி, எஸ்.பி.ஜி. உயர்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேனிலைப்பள்ளி, மாதாக்கோவில் நடுநிலைப்பள்ளி, ஆர்.சி. நடுநிலைப்பள்ளி மற்றும் 1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரியும் இவ்வூரில் உள்ளன. இது சிறந்த வணிகத் தலமாகவும் திகழ்கிறது.

பல சிமெண்டு தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும், மருத்துவமனைகளும், வங்கிகளும் நிறைந்தAriyalurு காணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. முக்கியமாக ஆடு விற்பனை சந்தையில் சிறப்பாக நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் சுமார் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததாக புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் இப்பகுதியில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வூருக்கு வடகிழக்கில் உள்ள கல்லமேடு அருகே 60 அடி நீளம், 18 அடி உயரம் கொண்ட ராட்சதப் பிராணியின் பல் ஒன்று கி.பி.1860 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

அரியலூருக்கு அருகில் மேற்குச் சாத்தனுர் கிராமத்தில் ஒரு பெரிய கல்மரம் விழுந்து கிடக்கிறது. 16 அடி நீளமும், 4 அடி சுற்றளவும் கொண்ட இம்மரம் வேர்களுடனும் கிளைகளுடனும் காணப்படுகிறது. இதைப் பல நாட்டினரும் வந்து பார்த்து ஆய்வு செய்கிறார்கள். 1923 இல் பெங்களூர் மத்திய கல்லூரிப் புவியியல் பேராசிரியர் இராமராவ் என்பவர் ஒரு ராட்சதப் பிராணியின் முதுகெலும்பைக் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்புகள், இப்பகுதியில் பெட்ரோல், நிலக்கரி, தங்கச் சுரங்கம், எண்ணெய் ஊற்று, ஆகியன இருப்பதை உறுதிப் படுத்துகின்றன. இப்பகுதியில் சுண்ணாம்புக் கல், ஜிப்சம், வெள்ளைக் களிமண், அப்ரேகம் முதலிய கனிமப் பொருட்கள் கிடைக்கின்றன.

துறையூர்

துறையூரில் நெசவுத் தொழிலை மேற்கொண்டுள்ள செங்குந்தர் மரபினர் பெருந்தொகையினராக வாழ்கின்றனர். இவர்கள் நெய்யும் உறுதியான வேட்டி சிறப்புடையது. இங்கு நீண்ட கடைவீதி உள்ளது. வாணிகத்திற்குச் சிறந்த இடம். போக்குவரத்து வசதி பெற்றுள்ளது. துறையூருக்கருகில் பச்சை மலைப் பகுதியின் பெரும்பகுதி தென்படுகிறது. இந்த மலையின் உயரம் 2500 அடி. இதன் பரப்பு 15 ச.மைல். இங்கு சுமார் 5000 பேர் வசிக்கின்றனர். நெல், சாமை, கம்பு முதலியன இங்கு முக்கிய விளைபொருட்கள். பலாவும் எலுமிச்சையும் மிகுதியாக விளைகின்றன. பச்சைமலையில் வாழும் மளையாளிகள் உளுந்து, மொச்சை, கொட்டைமுத்து ஆகியவற்றைப் பயிரிடுகின்றன. இவர்கள் வேட்டை நாய்களையும், செந்நாய்களையும் வளர்க்கிறார்கள்.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுக்குத் துறையூரில் ஒரு மடம் இருக்கிறது. இவ்வூர் வைணவச் செல்வாக்குப் பெற்றது. சுற்றியுள்ள பல ஊர்களின் பெயர்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஸ்ரீரங்கத்திறகு முன்னமே ஏற்பட்டதாகக் கருதப்படும் திருவெள்ளறைப் பெருமாள் கோயில் இங்கிருக்கிறது. காசி, கங்காராம் விசுவநாதர் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இவ்வூர் திரெளபதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

அருகிலுள்ள சிங்களாண்டபுரம் என்னும் சிற்றுரை ஒரு காலத்தில் சிங்கள மன்னன் ஒருவன் ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. துறையூரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள மலை மீது பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டிருக்கிறது. மலையின் உயரம் 400 அடி. மலையுச்சியை அடைய வசதியாக படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.

திருச்செந்துறை

எலமனுருக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ள இவ்வூரில் சிவாலயம் சிறந்து காணப்படுகிறது. இக்கோவிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

எலக்குரிச்சி

ஜெயங்கொண்ட சோழபுரத்திற்கு தென்மேற்கில் 25 மைல் தொலைவில் உள்ளது. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தால் ஊர் சிறப்பு அடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இவ்வாலய திருவிழாவிற்கு பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடுவர்.

ஜெயங்கொண்ட சோழபுரம்

வட்டத் தலைநகராய் விளங்குவதால் பல அலுவலகங்கள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் ஜைனமதம் பரவி இருந்ததிற்கான சான்றுகள் பல உள்ளன. இப்பகுதி நெடுஞ்சாலை போக்குவரத்து மிகுந்தது. நெசவுத்தொழில், உலோகப் பாத்திரத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

உடையார்பாளையம்

ஜெயங்கொண்டதிற்கு மேற்கில் 5 மைல் தூரத்தில் இவ்வூர் உள்ளது. வட்டத் தலைநகர். அரசு அலுவலகங்களும், வாணிபச் சிறப்பும், போக்குவரத்தும் இவ்வூரின் வளர்ச்சிக்குத் துணையாகின்றன. இங்குள்ள சிவன் கோவில் பிரபலமானது. தோல் பொருட்களுக்கும், ஜமக்காளத்திற்கும், கைத்தறித் துணிகளுக்கும் இவ்வூர் பெயர் பெற்றது. இவை பல இடங்களுக்கும் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன.

ஊட்டத்தூர்

பெரம்பலூருக்குக் கிழக்கில் 15 மைல் தொலைவில் உள்ளது. இவ்வூரிலும் இதன் சுற்றுபுரங்களிலும் பாஸ்பேட் கிடைக்கிறது. அப்பர் பாடிப் பூசித்த சிவாலயம் இவ்வூர்ச் சிறப்புக்குக் காரணமாக உள்ளது. செல்லியம்மன் கோவிலும் உள்ளது. இங்குப் பிரெஞ்சுக்காரர் களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பல போர்கள் நிகழ்ந்துள்ளன.

குரும்பாலூர்

மரவேலைப்பாட்டிற்கும், பாத்திரம் தயாரிப்பதற்கும் இவ்வூர் பெயர் பெற்றது. இவ்வூர் பெரம்பலூருக்கு மேற்கில் ஐந்து மைல் தொலைவில் உள்ளது.

தொழில்

டால்மியாபுரம் சிமெண்டு தொழிற்சாலை

டால்மியாபுரத்தில் சிமெண்டு தொழிற்சாலை நடைபெறுகிறது. இத்தொழிலகத்திற்காக டால்மியாபுரம் என்னும் இரயில்நிலையம் அமைந்தது. கல்லக்குடி பெயர் மாற்றத்தின் போது மக்கள் மத்தியில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் டன் சிமெண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 2500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

அரியலூர் சிமெண்டு தொழிற்சாலைகள்

அரியலூருக்குக் கிழக்கில் மணலேரி என்னும் ஊருக்கு அருகில் அரசினர் சிமெண்டுத் தொழிற்சாலை ஒன்றும், அரியலூருக்குத் தெற்கில் தனியார் துறையினரால் நடத்தப்படும் சிமெண்டுத் தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வருகின்றன

ஆதாரம் : பெரம்பலூர் மாவட்ட நிர்வாகப் பிரிவு

ஆக்கம் : தமிழ்நாடு எழுதுபொருள் அச்சக்கத்துறை

2.98275862069
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
தொடர்புடைய தகவல்கள்
மேலும்...
Back to top