অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தமிழர் இனம்

தமிழர் இனம்

தமிழர் யார்?

 

கன்னியாகுமரிக்குத் தெற்கே பரவியிருந்த லெமூரியா கண்டத்திலிருந்து வந்தவர் என்பர் ஒரு சாரார். அந்த நிலப்பரப்பை ”நாவலந்தீவு” எனப் பெயரிட்டு அழைத்தனர். கால்டுவெல் முதலானோர் தமிழர்களின் முன்னோர் மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்கலாம் என்பர். கங்கைச் சமவெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்கிறார் வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி. புலுசிஸ்தான் பாகங்களில் இன்றும் திராவிட மொழிகளும் புருஹீ மொழிக்கும் தொடர்புண்டு என்கிறார் ராப்ஸன். எனினும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட யாவரும் தமிழர் எனலாம்.

தமிழரின் தொன்மைச் சிறப்பு

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். இந்த நில உலகு தோன்றிய காலத்திலேயே தமிழ் இனம் தோன்றிவிட்டது. மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ்மொழி என்று தமிழினத் தொன்மைச் சிறப்பை எடுத்துரைக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.

சிந்துவெளித் தமிழர்

மிக வளர்ச்சி அடைந்த இந்த நாகரிகம் கி.மு2700 முற்பட்டதென்று C.L.ஃபாப்ரி (C.L.Fabri) குறிப்பிடுகின்றார். திராவிட மொழியை வழங்கும் மக்களே பலுசிஸ்தானம் முதலிய இடங்களில் வசித்தனர் என்கிறார் S.K.சட்டர்ஜி.

தமிழ் மக்கள்

தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள் என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழக எல்லை

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய “பனம்பாரனார்” என்பவர்  வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்  தமிழ்கூறும் நல்லுலகம் என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம்.

தமிழ்ச் சங்கம்

மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்கும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் வைத்து நடத்தியதாகப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன. அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் இருந்து தமிழ் ஆய்வு செய்ததாகவும், தமிழில் பல்வேறு செய்யுள்களை இயற்றியதாகவும் சங்க இலக்கியங்கள், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களால் அறியலாம்.

தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளை உடையது. இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. மதுரமான மொழி என வால்மீகி இராமாயணம் கூறுகின்றது.

பழந்தமிழ் நாட்டில் தமிழ் மொழியினைப் பேணி வளர்ப்பதற்காகச் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருந்து வந்ததாகத் தெரிய வருகிறது. இச்சங்கத்தைப் பாண்டிய மன்னர்கள் அமைத்திருந்தனர். தமிழ்ப் புலவர்கள் சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்ததுடன் பல நூல்களை இயற்றினர். அதோடு மட்டுமல்லாமல் பிற புலவர்கள் இயற்றிய நூல்களை மதிப்பீடு செய்தும் வந்தனர்.

மணத் துறவிகள் திரமிள சங்கம் (தமிழ சங்கம்) என்ற ஒன்றை உருவாக்கித் தமிழ்ப்பணி ஆற்றினர். இச்சங்கத்தைத் திராவிட சங்கம் என்றும் கூறுவர்.

பழந்தமிழ் இசை

நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், ஆதி சங்கீத மும்மூர்த்திகள் சீர்காழி முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் சேத்ரக்ஞர், சங்கீத மும்மூர்த்திகள் சியாமா சாஸ்திரி, தியாகையர், முத்துசாமி தீட்சிதர், புரந்தர தாசர் அருணகிரிநாதர் என எண்ணிலடங்கா சங்கீத விற்பன்னர்களால் வளர்ந்தது தமிழிசை. பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன.

அகத்திய முனிவரால் எழுதப்பட்ட “அகத்தியம்” சிகண்டி என்னும் முனிவரால் எழுதப்பட்ட “இசை நுணுக்கம்”, யாமளேந்திரர்     என்பவரால் எழுதப்பட்ட “இந்திர காளியம்”, தேவவிருடி நாரதன் எழுதிய “பஞ்சபாரதீயம்”, அறிவனார் இயற்றிய“பஞ்சமரபு” மற்றும் பெருங்குருகு,பெருநாரை,

தாளவகை யோத்து போன்ற பண்டைய நூல்கள் காலத்தால் அழிந்தன. பழந்தமிழ்ப் "பண்", இக்கால இந்திய இசையில் ‘இராகம்’ என்று சொல்லப்படுகிறது.

தமிழர் நாகரிகம்

மிகப்பழமையான நகர நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டு பூம்புகார் ஆகும். 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்பர்.  S.R.ராவ் கி.மு.1500 என்கிறார். மாநகர் கடல்கொள அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும் (மணிமேகலை 28 அடி 80-81) அந்த காலத்திலேயே சுட்ட செங்கற்களை பயன்படுத்தியுள்ளனர். கி.மு. 2 ஆம் நூற்றாண்டினதாக நாள் குறிக்கத்தக்க சாஞ்சிக்கு அருகே உள்ள பார்அட்டு (Barhut) கல்வெட்டு ஒன்றில் இந்நகரத்தின் சோமா என்ற பௌத்தத் துறவாட்டி ஒருத்தி ஒரு குவிமாடத்தின் (stupa) அடைப்பிற்காக பலகக்கல் ஒன்றை நன்கொடையாக ஈந்தாள் என்று சொல்லப்பட்டு உள்ளது. பண்டை நாள்களில் பூம்புகார் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு உள்ளது. அதாவது, புகார், காவிரிப்பூம்பட்டினம், காகந்தி, சம்பாபதி, சோழப்பட்டினம் மற்றும் காவேரிப் பண்டப்பெருநிலையம் (Kaberis Emporium).

தமிழரின் கப்பற்கலை

பண்டைத் தமிழ் மன்னர்கள் பெரும் கப்பல்களைக் கொண்டு கடலாட்சி செய்தனர். மாமல்லபுரத்தில் உள்ல ஒலக்கணேசுவரர் கோயில் முற்காலத்தில் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டதாகவும், திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் திருமணி விளக்கு கலக்கரைவிளக்கம் போல் கருத இடமுண்டு. துறைமுகப்பட்டினம் புகாரில் கலங்கரவிளக்கு உயர்ந்து ஒளிவீசியது என நற்றிணை சொல்கிறது. கப்பல்கள் கட்ட வேண்டிய நேரங்களைப் பற்றி “நீகமசிகாமணி” என்னும் நூல் கப்பற்கலை பற்றி விவரித்துள்ளது. போஜராஜனால் இயற்றப்பட்ட யுக்தி கல்பதரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பல் கட்டும் கலை, தமிழ் அரசர்களிடமிருந்து தான் பெறப்பட்டது.

பாதை, யானம், மதலை, திமில், பாறு, அம்பி, பஃறி, சதா, பாரதி, நவ். போதம், பகடு, பட்டிகை, தெப்பம், மிதவை, புணை, பரிசில், ஓடம், பிளாவு, மச்சுவா, குல்லா, வள்ளம், டிங்கி, தோணி, மசுலா, வத்தை, உரு, மரக்கலம், கப்பல், நாவாய், வங்கம், கலவம், வேடிபடவு என பல வகையான கப்பல்கள் இருந்துள்ளன என சேத்தன் திவாகரம் எனும் நூல் மற்றும் ஹெர்மன் குல்கே குறிப்பிடுகின்றனர், ஏரா, பருமல், தொகுதி, வங்கு, பாய்மரம், பாய் என கப்பலின் எல்லா உறுப்புகளுக்கும் தமிழ்ப் பெயர் இருந்துள்ளது. கப்பல் கட்டும் தொழிலில் தமிழர் சிறந்து விளங்கியதை அறியலாம். “Navy” என்ற வார்த்தை ”நாவாய்” இலிருந்தும் “catamaran” கட்டுமரம் என்ற வார்த்தையிலிருந்துமே உருவானது.

கப்பற்படையில் முன்னோடிகளாக பல்லவர் இருந்தனர் என்றும் கிழக்காசியாவுடன் வாணிபத் தொடர்பு பற்றி சயாமில் (தக்வா-பா) கல்வெட்டு கூறுகிறது. கப்பல் கட்டுவதற்கு வேம்பு, இருப்பை, புன்னை, நாவல், வெண் தேக்கு, தேக்கு முதலியன பயன்படுத்தப்பட்டதாக T.P.பழனியப்ப பிள்ளை கூறுகிறார்.

தமிழனின் இரும்புப் பயன்பாடு

ஆதிச்சநல்லூர் பரம்பின் இந்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கி.மு7-8 நூற்றாண்டிற்குரிய இரும்புக் கொழு கண்டுபிடிக்கப்பட்டதாக கோ.முத்துசாமி கூறுகிறார். வட ஆற்காடு பையம்பள்ளி அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் கி.மு.640-105 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தருமபுரி தொகரப்பள்ளியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரும்புப் பொருட்களில் காலம் கி.மு.290 எனத் தெரிய வருகிறது.

கே.என்.பி.ராவ் தனது அறிக்கையில் கி.மு.3 ஆம் நூற்றாண்டு இறுதியில் ஆப்பிரிக்கா, கிரேக்கம் மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு இரும்பு ஏற்றுமதி செய்ததாகக் கூறுகிறார். இதை பிளினியும் பெரிபுளூஸும் ஒப்புக் கொள்கின்றனர். க.வேலுச்சாமியும், பி.கெ.குருராஜாவும் கி.மு.4 ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படையெடுத்து வந்த அலெக்ஸாண்டருக்கு புருசோத்தமன் சேலம் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட நல்ல ரகமான இரும்பை பரிசளித்ததாக கூறுகின்றனர்.

தமிழரின் வீரம்

இராஜேந்திர சோழன், போரிடுவதிலும், வீரத்திலும் ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமானவர். கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட, சோழ தேசத்தை, கி.பி., 1012 முதல், 1044 வரை ஆண்ட, முதலாம் ராஜேந்திர சோழன், இவனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள், லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள்,50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன. கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையில் இருந்தது 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே  கி.பி., 1019ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கை நீரை சுமந்து வந்து, கங்கை கொண்ட சோழபுரத்தின், பிரகதீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்தான். அதற்கு முன், கங்கை நீரை, திருலோக்கி கைலாசநாதர் கோவிலில் வைத்து வணங்கியதற்கான கல்வெட்டு சான்றுகள், அக்கோவிலில் உள்ளன. அந்த கல்வெட்டை, 2015ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, அறநிலையத் துறையினர், வண்ணம் பூசி சிதைத்து விட்டனர். பல்லாயிரம் வீரத்தமிழரில் ராஜேந்திரன் ஒரு உதாரணமே.

கடல் வாணிபம்

பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்கள் வாணிகத்தின் பொருட்டுக் கடலில் மரக்கலம் செலுத்திய பெருமை கொண்டவர்கள். மேலும், சோழர்கள் கடலில் கலம் செலுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று, போர் வென்று, கடாரம் கொண்டும், ஈழநாடு கொண்டும் பெயர் பெற்ற ஆற்றல் மிக்கவர்கள். யவன நாட்டினரும் பிறரும் தமிழ் நாடடிற்கும் பண்டமாற்றும், வாணிகமுங்குறித்து மரக் கலங்களில் வந்துள்ளனர். எனவே, இரவில் மரக்கலங்களைச் செலுத்தி வருகையில் கரைதெரியும் வண்ணம் கலங்கரைவிளக்கம் தமிழர்களால் அமைக்கப்பட்டது. பூம்புகார்க் கடற்கரையில், இரவில் ஆழமான கடலில் செல்லும் கப்பல்களுக்கு ஒளிகாட்டி உதவிய கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில், "இரவில் மாட்டிய விளங்குசுடர் நெகிழி உரவிநீ ரழுவத் தோடுகலங் கரையும்  துறைபிறக் கொழியப் போகி" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழரின் மதம்

பண்டைத் தமிழ் மக்கள், தாம் வாழ்ந்த நிலப்பரப்பையும், வாழ்க்கைச் சூழலையும், தங்கள் பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டே இறைவழிபாட்டையும் பின்பற்றினர். மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தையும், காடு சார்ந்த முல்லை நிலத்தையும், வயல் பகுதியாகிய மருத நிலத்தையும், கடலைஒட்டிய மணல் சார்ந்த நெய்தல் நிலத்தையும், வறட்சியின் காரணமாக மாறி அமைந்த பாலை நிலத்தையும் பின்புலமாகவும், சூழலாகவும் கொண்டு வாழ்ந்தனர். வாழ்ந்த நிலத்திற்கு ஏற்பவே, தாம் வழிபடும் இறைவனையும் அமைத்துக் கொண்டனர்.

முருகன் வழிபாடு

தமிழில் ‘முருகு’ என்றால் அழகு என்று பொருள். அழகான இயற்கைக் காட்சி நிறைந்த பகுதி மலையும் மலைச்சாரலும் ஆகும். அந்த அழகை வழிபடும் நிலையில் அந்நிலப்பகுதியின் இறைவனுக்கு ‘முருகன்’ என்று பெயரிட்டு வழிபட்டனர்.

பிற இறை வழிபாடு

முல்லை நிலத்தினர் திருமாலையும், மருத நிலத்தினர் இந்திரனையும், நெய்தல் நிலத்தினர் வருணனையும், பாலை நிலத்தினர் கொற்றவை என்னும் பெண் தெய்வத்தையும் வழிபட்டு வந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தின் மூலம் அறிய முடிகிறது.

கொற்றவை வழிபாடு

வீரத்தினால் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதற்குத் துடிநிலை என்று பெயர். அந்த வெற்றிக்குத் துணை செய்த தெய்வம் கொற்றவை. அந்தத் தெய்வத்தைப் புகழ்ந்து வாழ்த்திட வணங்கும் விழாவுக்குக் கொற்றவை நிலை என்று பெயர். மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து எவை தெரிகின்றன? பண்டைத் தமிழர்களிடையே இறை நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதுவும், பயன் கருதியும் பாதுகாப்புக் கருதியும் இறைவனை வழிபட்டனர் என்பதுவும் தெரிகின்றன.

பல சமயங்கள்

இன்று தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வருகின்றனர். சைவம், வைணவம், பௌத்தம், சமணம், இசுலாம், கிறித்துவம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்க சமயங்களாகும். சங்க காலத்தில், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகியவை மட்டுமே இருந்தன. இவற்றுள் பொதுமையைக் காணும் நோக்கில்,இசுலாமும் கிறித்துவமும் இந்திய மண்ணில் காலூன்றுவதற்கு முன்னரே ஆறாம் நூற்றாண்டில், திருமூலர், என்ற தத்துவத்தை வெளியிட்டார். திருமூலர்க்கு முந்தைய திருவள்ளுவரிடமும் இந்தப் பொதுமைத் தன்மையைக் காண முடிகிறது. இதைத் திருக்குறளின் ‘கடவுள் வாழ்த்து’ எனும் அதிகாரத்தில் காணமுடியும். அதில் எந்த ஒரு தனி சமயத்தின் பெயரையோ, தனி ஒரு கடவுளின் பெயரையோ குறிக்கவில்லை. இந்த நிலையைத் திருவள்ளுவர், திருக்குறளின் இறுதிவரையிலும் பின்பற்றியுள்ளார்.

பழந்தமிழர்களின் பெருமைகளையும் அறிவுத்திறனையும் இன்றைய தமிழர்கள் அறிவார்களா என்பதே சந்தேகத்துக்குரிய ஒன்றாக உள்ளது.

ஆதாரம் : C.P.சரவணன், வழக்கறிஞர்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate