பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அப்துல் கலாம்மின் உரை

இந்தியா 2020ல் வல்லரசாக கனவு கண்ட நாயகன் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

2020ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடுவோம் என்று உறுதி பட சொன்னவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் அப்துல்கலாம் நாட்டுமக்களுக்காக 2007ம் ஆண்டு ஆற்றிய உரை:

நாட்டில் உள்ள 25 வயதுக்குட்பட்ட 54 கோடி பேரையும் ஊக்கப்படுத்தி உத்வேகத்துடன் அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்.

இளைஞர்கள்தான் இந்த உலகின் மாபெரும் சக்தி. வளர்ந்த, வல்லரசு இந்தியாவில் நகர்ப்புற, கிராமப்புற வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும். மின்சாரமும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்கும். விவசாயம், தொழில்துறை, சேவைத் துறை இணைந்து செயல்படும். கல்விக்கு சிறந்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

வாழ்க்கைக்குத் தேவையான கல்வி கற்பிக்க வசதி கிடைக்கும். கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்கும். உலகிலேயே சிறந்த மருத்துவ வசதிகள் வளர்ந்த இந்தியாவில் அபரிமிதமாக இருக்கும்.

அரசு நிர்வாகம் பொறுப்பானதாக, வெளிப்படையானதாக, ஊழலற்றதாக இருக்கும். வறுமை அறவே ஒழிந்திருக்கும். கல்லாமை இல்லை என்ற நிலையில் இருக்கும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அறவே இல்லாதிருக்கும்.

சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும். புறக்கணிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இப்படிப்பட்ட ஒரு வளர்ந்த, வல்லரசு நாடாக இந்தியா நிச்சயம் மாறும். மிகச் சிறந்த திறமை வாய்ந்த அரசு நிர்வாகம் உள்ள நாடாக, அமைதியான நாடாக, அனைவரும் வசிக்க ஆசைப்படும் அழகிய நாடாக நமது இந்தியா நிச்சயம் மாறும்.

நமது நாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும். தங்களது வளமான நிலங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், சக்தியும் கொடுக்க வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளும், விவசாய விஞ்ஞானிகளும், தொழிற்சாலைகளும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நமது விவசாய பொருளாதார வளர்ச்சியை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரிக்க முடியும் என்றார் கலாம்.

இன்றைக்கு அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவர் கண்ட கனவை நனவாக்க இன்றைய இளைய தலைமுறையினர் இணைந்து பாடுபடவேண்டும். இதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

ஆதாரம் - ஒன்இந்தியா

3.02777777778
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top