பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொது நூலக இயக்ககம்

பொது நூலக இயக்ககம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

"தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன.

 1. கன்னிமாரா பொது நூலகம் - 1
 2. அண்ணா நூற்றாண்டு நூலகம் - 1
 3. மாவட்ட மைய நூலகங்கள் - 32
 4. கிளை நூலகங்கள் - 1926
 5. நடமாடும் நூலகங்கள் - 14
 6. ஊர்ப்புற நூலகங்கள் - 1914
 7. பகுதி நேர நூலகங்கள் - 715

இவை தவிர, மக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் கடவுச் சீட்டு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

நோக்கம்

தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலகச் சேவையானது பின்வரும் இலக்குகளை உள்ளடக்கிச் செயல்பட்டு வருகிறது.

 • குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்.
 • அனைத்து தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல்.
 • தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
 • குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்.
 • பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள், அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.
 • நடத்து கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.
 • அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல்.

குறிக்கோள்கள்

 • நிறைந்த நூலகப் பணியின் மூலம் அனைத்து தரப்பினரின் தகவல் தேவையினைப் பூர்த்தி செய்தல்.
 • பழைய மற்றும் அரிய நூல்களை மின்மயமாக்கி, பாதுகாத்தல்.
 • 1,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள இடங்களில் நூலகங்களை அமைத்து செயல்படுத்துதல்.
 • நூலகங்களில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கச் செய்தல்.
 • நூலகங்களில் தரமான நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் நூல்களை வாங்கி வழங்குதல்.
 • நூலகங்களில் நவீன தொழில் நுட்பத்தினை புகுத்தி நூலகச் சேவையினை மேம்படுத்துதல்.

புதிய முனைப்புகள்

போட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசகர்களுக்கான பருவஇதழ்கள்

போட்டித் தேர்விற்குத் தயாராகும் அனைத்து பகுதி வாசகர்களுக்கும் ஒரே மாதிரியான முன்னணி ஆங்கில பருவ இதழ்கள் கிடைக்கும் நோக்கத்தோடு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் ரூ.2 கோடி மதிப்பில் 32 மாவட்ட மைய நூலகங்களுக்கு 61 பருவ இதழ்களும், 241 முழுநேர கிளை நூலகங்களுக்கு 34 பருவ இதழ்களும் மற்றும் 320 கிளை நூலகங்களுக்கு 19 பருவ இதழ்களும் வாங்கப்பட்டுள்ளன.

அச்சு மற்றும் இணைய வழி நூல்கள் பருவ இதழ்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் ரூ.1.30 கோடி மதிப்பில் அச்சு மற்றும் இணைய வழியான நூல்கள், தேசிய மற்றும் சர்வதேச பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் வாங்கப்பட்டுள்ளன.

செயல்பாடுகள்

நூலகக் கட்டமைப்பு

தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் 4,603 பொது நூலகங்களில் 1,753 நூலகங்கள் சொந்தக் கட்டடங்களிலும், 2,516 நூலகங்கள் வாடகையில்லா இலவசக் கட்டடங்களிலும், 320 நூலகங்கள் தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருவதோடு, 14 நடமாடும் நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன. துறையின் தொலைநோக்கு பார்வையான, “அனைத்து நூலகங்களும் சொந்தக் கட்டடத்தில் செயல்படுத்துதல்” என்ற இலக்குடன், 2016-17-ஆம் ஆண்டில் ரூ.135.73 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், ரூ.22.21 இலட்சம் மதிப்பில் கட்டடங்கள் பராமரிக்கவும் செலவிடப்பட்டுள்ளது.

கணினிமயமாக்கம்:

மாநில மைய நூலகமான கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் இராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளையின் இணை மானிய நிதியுதவியின் அடிப்படையில் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட வசதிகளுடன் பொது நூலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னிமாரா பொது நூலகத்துடன் மாவட்ட மைய நூலகங்கள் அனைத்தும் இணையதள இணைப்பு வாயிலாக இணைக்கப்பட்டு, அந்நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய தகவல்களை இணையதளம் வாயிலாக பொது மக்கள் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாசகர் வட்டம்:

நூலகச் செயல்பாடுகளில் பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும் வகையில், அனைத்து நூலகங்களிலும் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், நூலக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களைக் கொண்டு “வாசகர் வட்டம்” என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

புதிய நூலகங்கள் உருவாவதற்கும், பொது மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்தி, நூலகத்தை வாசகர்கள் முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், புத்தகங்களுக்கும் வாசகர்களுக்குமான பிணைப்பினை உறுதிப்படுத்துவதற்கும், பொது நூலகத் துறையுடன் கைகோர்த்து துணை நிற்கும் வாசகர் வட்டங்கள் வாயிலாக புதிய நூல்கள் மற்றும் படைப்பாளிகள் அறிமுகம், இலக்கியச் சொற்பொழிவு, புத்தகக் கண்காட்சி, மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கதை சொல்லுதல், வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இன்றியமையாத நிகழ்ச்சிகள் அனைத்து நூலகங்களிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழகத்தில் நூலக இயக்கம் வளர மிகுந்த முனைப்பும், ஈடுபாடும் கொண்ட வாசகர் வட்டத் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2014-15-ஆம் ஆண்டு அரசு அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வாசகர் வட்டத் தலைவர்களுக்கு “நூலக ஆர்வலர்” என்ற விருதானது, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

நூலக உறுப்பினர் மற்றும் புரவலர் சேர்க்கை

மக்களின் தேவைகளை அறிந்து, நூலகச் சேவையினை மென்மேலும் விரிவுபடுத்துவதற்கு, பொது நூலகங்களில் உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கையினை துரிதப்படுத்துவது மிகவும் அத்தியாவசியம் ஆகும்.

ஆதாரம் : பொது நூலக இயக்ககம்

3.22222222222
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top