பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எஸ்.எஸ்.பிள்ளை

இந்தியக் கணித மேதை எஸ்.எஸ்.பிள்ளை வரலாற்றை பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் (5 ஏப்ரல் 1901) பிறந்தார். இவர் ஒருவயது குழந்தையாக இருந்தபோது தாய் காலமானார். இலத்தூரில் தொடக்கக் கல்வி கற்றார். அப்போது, தந்தையும் இறந்ததால் எதிர்காலம் கேள்விக்குறியானது.

* சாஸ்திரியார் என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஊக்கம் தந்ததோடு, தனது சொற்ப வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை இவரது கல்விக்காகவும் வழங்கினார். இதனால் உற்சாகத்துடன் படிப்பைத் தொடர்ந்த பிள்ளை, எம்எஸ்எம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இடைநிலைக் கல்வி கற்றார்.

* திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று, பி.ஏ. வகுப்பில் சேர்ந்து பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர விரும்பினார். பி.ஏ. ஹானர்ஸில் முதல்வகுப்பில் தேறவில்லை என்பதால் இடம் கொடுக்க மறுத்தது நிர்வாகம்.

* இவரது கணிதத் திறன் பற்றி கேள்விப்பட்டிருந்த பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி பிள்ளை, பொது விதிமுறைகளில் இருந்து மேதைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என்று வாதாடி, இவருக்கு அந்த இடத்தைப் பெற்றுத் தந்தார். 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எம்எஸ்சி பட்டம் பெற்றார்.

* அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1929-ல் விரிவுரையாளராகப் பணிபுரியத் தொடங்கினார். அப்போது எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். நாட்டிலேயே முதன்முதலாக கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமையை ஈட்டினார். இவரது எண்கணித ஆராய்ச்சி இவருக்கு உலக அளவில் புகழ் ஈட்டித் தந்தது.

* பல நாடுகளைச் சேர்ந்த கணித மேதைகள் பல ஆண்டுகாலமாக முயன்றும் முழுமையாக வெற்றிகாண முடியாத ‘வாரிங்ஸ் புதிருக்கு’ 5 ஆண்டு காலம் உழைத்து, தன்னந்தனியாக அதற்குரிய வழியையும் விடைகளையும் காணும் வெற்றிப்பாதையில் முன்னேறினார். 1936-ல் அதற்கான விடையைக் கண்டறிந்ததோடு தன் கண்டுபிடிப்பை உறுதிசெய்து ஒரு நூலையும் வெளியிட்டார்.

* இவரது எண்கணிதக் கோட்பாடு, கணிதவியலில் நிரந்தர இடம் பிடித்தது. சுமார் 400 ஆண்டுகளாகக் கணித மேதைகளைத் திணறவைத்த ‘ஃப்யுரியர் சீரிஸ்’ தொடருக்கான விடையையும் கண்டறிந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். பகா எண்கள் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு தீர்வுகளைக் கண்டார்.

* திருவனந்தபுரம், கல்கத்தா, சென்னை பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளார். மொத்தம் 76 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை பெரும்பாலும் எண்கோட்பாடு, டியோஃபாண்டஸின் சமன்பாடுகள் பற்றியே இருந்தன.

* உலகின் பிரபல கணித மேதைகள் பலரும் தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு இவருக்கு அழைப்பு விடுத்தனர். இவரோ, ‘என் ஆராய்ச்சிகளுக்கு இந்தியாவே போதும்’ என்று பணிவுடன் கூறி மறுத்துவிட்டார். சான்பிரான்சிஸ்கோவில் 1950 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த உலகக் கணித மாநாட்டுக்குத் தலைமை ஏற்கவும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் அவர் அமெரிக்கா புறப்பட்டார்.

* அமெரிக்கா செல்லும் வழியிலேயே, கெய்ரோவில் விமானம் விபத்துக்குள்ளாகி கணித மேதை எஸ்.எஸ்.பிள்ளை உட்பட அனைவரும் உயிரிழந்தனர். அப்போது அவருக்கு வயது 49. சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்துகொண்ட கணித மேதைகள் அவருக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர். அவரது உருவப் படம் மாநாட்டில் திறந்துவைக்கப்பட்டது.

ஆதாரம் - தி இந்து

Filed under:
3.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top