பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கெளதம் நாராயணன்

கெளதம் நாராயணனின் 4 கின்னஸ் சாதனைகள் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

அறிமுகம்

மருத்துவம் பயிலும் மாணவர்கள் விளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்குகளில் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை. எப்போதுமே படிப்பிலும், மருத்துவப் பயிற்சியிலும் தான் கவனமாக இருப்பார்கள். ஆனால், மருத்துவ மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதோடு மட்டுமின்றி கின்னஸ் சாதனையும் படைக்கலாம் என்பதற்கு உதாரணம், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் கௌதம் நாராயணன். அவர் தனது விடாமுயற்சியால் தொடர்ந்து 4 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார்.

பந்தை கீழே விழாமல் தொடர்ந்து தட்டுவது

கிரிக்கெட் மட்டையால் பந்தைத் தொடர்ந்து தட்டுவது, டென்னிஸ் மட்டையில் பந்தை தொடர்ந்து தட்டுவது, ஒரு விரலில் ஹாக்கி மட்டையை விழாமல் நிறுத்தியது, டென்னிஸ் மட்டையை மேலும், கீழுமாக திருப்பிப் பிடித்து பந்தை தட்டுவது உள்ளிட்ட சாதனைகளைப் படைத்துள்ளார். அவருடைய கின்னஸ் சாதனைகளைக் குறித்து கெளதம் நாராயணனிடம் பேசியபோது...

"சேலம் எனது சொந்த ஊர். பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வம் உண்டு. மருத்துவக் கல்லூரி கிரிக்கெட் அணியிலும் விளையாடி வருகிறேன். விளையாட்டில் வெற்றி பெறுவதை விட சாதனை படைப்பதே நிரந்தரமாக இருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் யாரும் கின்னஸ் சாதனை செய்யவில்லை. எனவே கிரிக்கெட்டில் சாதனை படைக்கலாம் என்று திட்டமிட்டு முயற்சிகளைத் தொடர்ந்தேன். கிரிக்கெட் மட்டையில் பந்தை கீழே விழாமல் தட்டி வந்தேன். முதல் முயற்சியில் ஒரு கையால் கிரிக்கெட் மட்டையின் கைப்பிடி, மற்றொரு கையால் மட்டையைப் பிடித்தபடி பந்தை கீழே விழாமல் 6.14 மணி நேரம் தட்டி சாதனை செய்தேன்.

முதல் கின்னஸ் சாதனை

இந்தச் சாதனை இந்திய சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகம், எலைட் வேர்ல்டு ரெக்கார்ட், அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட், இந்திய அரிய சாதனைகள் புத்தகம் ஆகியவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் கின்னஸ் சாதனை அமைப்பு இதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. மேலும், இரு கைகளாலும் கிரிக்கெட் மட்டையின் கைப்பிடியை பிடித்தபடி பந்தை தட்டினால் மட்டும்தான் சாதனையாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து 6 மாதம் கடுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு 2015 செப்.11-இல் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் கின்னஸ் அமைப்பு கூறியபடி, கிரிக்கெட் மட்டையின் கைப்பிடியை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, பந்தை கீழே விழாமல் 2 மணி நேரம் 16 நிமிடங்கள் தொடர்ந்து தட்டினேன். இதை கின்னஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது.

இரண்டாவது கின்னஸ் சாதனை

2015, அக்.5-ஆம் தேதி இரண்டாவது கின்னஸ் சாதனை முயற்சியாக டென்னிஸ் பந்தை மட்டையின் இரு பக்கங்களையும் மாற்றி மாற்றி ஒரு நிமிடத்தில் 147 முறை தொடர்ந்து தட்டினேன். ஆஸ்திரேலியாவில் அஸ்ரிகா பர்மன் டென்னிஸ் பந்தை மட்டையை மாற்றி மாற்றி நிமிஷத்துக்கு 90 தடவை தட்டியதே சாதனையாக இருந்தது. அதை தற்போது முறியடித்துள்ளேன்.

மூன்றாவது கின்னஸ் சாதனை

மூன்றாவது சாதனையாக 2016 அக்.5-இல் டென்னிஸ் பந்தை 4 மணி 20 நிமிடங்கள் இடைவிடாமல் தட்டிச் சாதனை படைத்துள்ளேன். அமெரிக்காவைச் சேர்ந்தவர் தொடர்ந்து 4 மணிநேரமே தட்டியுள்ளார். நான் 16 நிமிடங்கள் கூடுதலாகத் தட்டிச் சாதனை புரிந்துள்ளேன்.

நான்காவது கின்னஸ் சாதனை

நான்காவது சாதனையாக ஹாக்கி மட்டையை ஒரு விரலில் நீண்ட நேரம் நிறுத்தி கடும் பயிற்சியில் ஈடுபட்டேன். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உருவானதையடுத்து 2017 மார்ச்சில் ஹாக்கி மட்டையை ஒரே விரலில் 1 மணி 11 நிமிடங்கள் நிறுத்தி சாதனை படைத்தேன். இந்த சாதனையையும் கின்னஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது.

சாதனைக்கு தயாராவது எளிதல்ல. இது முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்தது. உடல், மனம், மூளை அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். 4 மணி நேரம் ஒரே இடத்தில் நிற்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும், கால்களில் ரத்த ஓட்டம் ஸ்தம்பிக்கும். மூளை சோர்வாகி விடும். எனவே இதற்காக உணவு முறையை மாற்றி, வியர்வையை வெளிவிடாமல் உடலிலேயே தக்க வைக்கும் சிறப்பு ஆடையை அணிந்தேன். இதில் காற்றின் வேகத்தை கணிப்பது மிகமுக்கியம் என்பதால் இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொண்டேன்.

எனது சாதனை முயற்சிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.மருதுபாண்டியன், விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.தாமோதரன் ஆகியோர் உந்துதலாகவும், ஆதரவாகவும் இருந்தனர். மேலும் சில கின்னஸ் சாதனைகளுக்கும் திட்டமிட்டுள்ளேன்'' என்றார்.

ஆதாரம் - தினமணி

Filed under:
2.96774193548
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top