பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரேம் சந்த் பாண்டே

இந்தியாவின் கடலியல் வல்லுநர் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

இந்தியாவின் கடலியல் வல்லுநர்

வளர்ந்துவரும் அறிவியல் துறைகளுள் கடலியலும் (Oceanography) ஒன்று. காலநிலை மாற்றங்கள், வளிமண்டல பாதிப்புகள், துருவ நிலை மாறுபாடுகள், பேரழிவு நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்களுடன் தொடர்புடையது கடலியல். இத்துறையில் உலக அளவில் வல்லுநராக மதிக்கப்படுபவர் இந்திய விஞ்ஞானி பிரேம் சந்த் பாண்டே.

பிறப்பு: 1945, ஆக. 10

பிறந்த இடம்: உ.பி. மாநிலம்) ஆஸம்கர் மாவட்டத்தில், ராமாபூரில்

நாட்டுரிமை: இந்தியா

முந்தைய ஐக்கிய மாகாணத்தின் (தற்போதைய உ.பி. மாநிலம்) ஆஸம்கர் மாவட்டத்தில், ராமாபூரில் 1945, ஆக. 10-இல் பிறந்தார் பிரேம் சந்த் பாண்டே.

பட்டம்

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டமும் (1963), எம்.எஸ்சி. பட்டமும் (1967), நுண்ணலைகள் ஆய்வுக்காக டி.ஃபில். பட்டமும் (1972) பெற்றார் பாண்டே.

பணி

இதனிடையே 1966-இல் ஆஸம்கர் டி.ஏ.வி. கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிந்தார். 1968 முதல் 1972 வரை, மத்திய அறிவியல், தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். அப்போது, அலகாபாத் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவில், நுண்ணலை (Micro Waves) ஆய்வகத்தில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

படிப்புகளை முடித்த பின், 1973 முதல் 1977 வரை, மகாராஷ்டிரத்தின் கடக்வாஸ்லாவிலுள்ள மத்திய நீர் மற்றும் மின்சக்தி ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி அலுவலராக பாண்டே பணிபுரிந்தார்.

1977-இல், அகமதாபாத்தில் இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்தில் (SAC) விஞ்ஞானியாகச் சேர்ந்த பாண்டே அங்கு 20 ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு கடலியல், கடல் சார்ந்த வானிலையியல், தொலையுணர்தல் பிரிவுகளின் (OSD/ MOG/ RESA) தலைவராகச் செயல்பட்டார்.

இதனிடையே 1987- 1989 ஆண்டுகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸôவின் பாசடேனாவிலுள்ள ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வகத்தில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணிபுரிந்தார். அப்போது, உயர் வளிமண்டல செயற்கைக்கோள், கடலாய்வு செயற்கைக்கோள் (Seasat) திட்டங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இஸ்ரோ பணியை அடுத்து, இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் சிறப்பு ஆராய்ச்சித் திட்டத்தில் பாண்டே பங்கேற்றார். 1999-இல் கோவாவில் அண்டார்டிக் மற்றும் கடலியல் ஆய்வுக்கான தேசிய மையம் (National Centre for Antarctic and Ocean Research -NCAOR) நிறுவப்பட்டபோது, அதன் நிறுவன இயக்குநராகப் பொறுப்பேற்றார். இஸ்ரோவின் விண்வெளிப் பயன்பாட்டு மையத்தின் கடல் அறிவியல் பிரிவையும் பாண்டே நிறுவினார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியின் ஊக்குவிப்பால், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வளிமண்டலவியல் மற்றும் கடலாய்வுக்கான கே.பானர்ஜி மையத்தை 2000-இல் (K.Banerjee Centre of Atmospheric and Ocean Studies -KBCAOS) பாண்டே நிறுவினார்.

கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (IIT- KGP) 2005 முதல் 2007 வரை வருகை பேராசிரியராகவும், 2007 முதல் 2011 வரை மதிப்புறு பேராசிரியராகவும் அவர் பணிபுரிந்தார். அங்கு கடல்கள், ஆறுகள், வளிமண்டலம், மற்றும் புவி அறிவியலுக்கான மையம் (Center for Ocean, River, Atmosphere and Land Sciences -CORAL) நிறுவப்படுவதில் பாண்டே முக்கிய பங்காற்றினார். தவிர, புவி அறிவியல் தொழில்நுட்பத்தில் இரண்டாண்டு எம்.டெக். படிப்பையும் நாட்டிலேயே முதல்முறையாக பாண்டே துவக்கினார்.   மேலும் பல ஆராய்ச்சித் திட்டங்கள் அவரது முயற்சியால் அங்கு துவங்கப்பட்டன.

2011 முதல், புவனேஸ்வர் ஐஐடி-யின் புவி, கடலியல், காலநிலை மாற்றப் பள்ளியில் மதிப்புறு பேராசிரியராக அவர் பணி புரிகிறார்.

பாண்டே தலைமையிலான விஞ்ஞானிகள் குழு அண்டார்டிக் துருவப் பகுதி ஆராய்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. மிகக் குறைந்த வெப்பநிலையால் பனியாக உறைந்துள்ள தென்துருவப் பகுதியில் நிகழும் தட்பவெப்ப மாறுதல்கள் உலக சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சுனாமி பயண நேரத்தை செயற்கை நரம்பணுப் பிணையம் மூலமாக சக விஞ்ஞானிகள் ராகுல் பர்மன், பிரசாத் குமார் பாஸ்கரனுடன் இணைந்து கணித்த பாண்டே, அதற்கு (Tsunami Travel Time Prediction using Neural Networks) காப்புரிமை பெற்றுள்ளார் (2006). விரிவான இந்தியப் பெருங்கடல் வரைபடத்தை 2008-இல் பாண்டே குழுவினர் உருவாக்கினர்.

சர்வதேச அளவிலான அறிவியல் சஞ்சிகைகளில் அவரது 134 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. 4 வரைபட நூல்கள், 10 தொழில்நுட்ப அறிக்கைகள், 7 நூல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தவிர, Marine Geodesy,  Indian Journal of Polar Science, இந்திய வானிலையியல் துறையின்  ‘மௌஸம்’,  ‘வாயு மண்டல்’ போன்ற அறிவியல் ஆராய்ச்சி சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பாண்டே உள்ளார். தேசிய, உலக அளவிலான 40-க்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் குழுக்களிலும் அவர் அங்கம் வகிக்கிறார்.

நாஸா சான்றிதழ் (1985), விக்ரம் சாராபாய் தங்கப் பதக்கம் (1987), மத்திய அறிவியல், தொழிலக ஆய்வு மன்றத்தின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1989), பாரத கௌரவம் விருது (2001), ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாஸின் விருது (2004), இந்திய புவி இயற்பியல் சங்கத்தின் கே.ஆர்.ராமநாதன் விருது (2007),  உள்ளிட்ட பல உயரிய விருதுகள் பாண்டேவை அலங்கரிக்கின்றன.

தற்போதும், இந்திய தேசிய அறிவியல் அகாதெமி, இந்திய அறிவியல் அகாதெமி, இந்திய வானிலையியல் சங்கம், இந்திய புவி அறிவியல் சங்கம், இந்திய புவி இயற்பியல் சங்கம், இந்திய தொலையுணர்தல் சங்கம், இந்திய நிலவியல் சங்கம் ஆகியவற்றின் ஆராய்ச்சி உறுப்பினராக பிரேம் சந்த் பாண்டே உள்ளார். இவற்றின் மூலமாக, தனது 71-வது வயதிலும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னுதாரணமாக வழிகாட்டி வருகிறார் பாண்டே.

ஆசிரியர்- வ.மு.முரளி

ஆதாரம் - வேர்ட்பிரஸ் வலைதளம்

Filed under:
3.10526315789
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top