பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வைஜெயந்திமாலா

வைஜெயந்திமாலா வரலாற்றை பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

அறிமுகம்

தென்னிந்திய நடிகையாக அறிமுகமாகி, பாலிவுட்டில் களமிறங்கிய முதல் தென்னிந்திய நடிகையென்ற பெருமைப்பெற்றவர், வைஜெயந்திமாலா அவர்கள். தமிழ் ரசிகர்களுக்கு இன்றைக்கும் வைஜெயந்திமாலா என்றால், சட்டென்று நினைவுக்கு ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலில் வரும் ‘ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே’ என்ற வரிகள் தான். அவரது அற்புதமான நடன அசைவுகளால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது திரையுலக வாழ்க்கையில், ஹிந்தித் திரையுலகில், நம்பர் ஒன் நடிகை என்று பெயரெடுத்தார். பரதநாட்டியக் கலைஞராக இருந்த அவர், திரையுலகில் கால்பதித்து, கர்நாடக இசைப் பாடகராகவும், நடன வடிவமைப்பாளராகவும் உருவெடுத்து, அரசியல்வாதி எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டார். ‘பத்மஸ்ரீ விருதையும்’, ‘கலைமாமணி விருதையும்’, ‘சங்கீத நாடக அகாடமி விருதையும்’ வென்ற லட்சிய நடிகையான அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலக வாழ்வில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 13 ஆகஸ்ட், 1936

பிறப்பிடம்: திருவல்லிக்கேணி, சென்னை மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா

பணி : நடிகை, பரதக் கலைஞர், கர்நாடக பாடகர், நடன வடிவமைப்பாளர், கோல்ஃப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

அவர், பிரிட்டிஷ் இந்தியாவில், சென்னை மாகாணத்தில் இருக்கும் திருவல்லிக்கேணியில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி, 1932 ஆம் ஆண்டில் ராமன் மற்றும் வசுந்தரா தேவி தம்பதியருக்கு மகளாக ஒரு ஆச்சாரமான தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவரது அன்னை, தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘மங்கம்மா சபதம்’ போன்ற படங்களில் நடித்த முன்னணி நடிகையும், பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

அவர் பிறந்த போது, அவரது தாய் வசுந்தரா தேவிக்குப் பதினாறு வயதே ஆனதாலும், திரையுலகில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாலும், வைஜெயந்திமாலா அவரின் பாட்டி மற்றும் தந்தையின் கண்காணிப்பில் வளர்ந்தார்.

அவர் தனது பள்ளிப்படிப்பை, சென்னையில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளியிலும், ப்ரசென்டேஷன் கான்வென்ட்டிலும், சர்ச் பார்க்கிலும் கற்றார். தனது அன்னை ஒரு பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடிகை என்பதால், பாரம்பரிய சங்கீதம் மற்றும் பரதம், பயிலும் ஆர்வம் அவருக்கு இளம் வயதிலிருந்தே இருந்தது எனலாம். ஆகவே, குரு வழுவூர் இராமைய்யா பிள்ளையிடம் பரதமும், மணக்கள் சிவராஜ ஐயரிடம் கர்நாடக இசையும் கற்றார். மேலும், அவர் தனது 13வது வயதில் அரங்கேற்றம் நிகழ்த்தினார்.

திரையுலகப் பிரவேசம்

சென்னையில் வைஜெயந்திமாலா அவர்களின் பரதக் கச்சேரியைக் கண்ட இயக்குனர் எம். வி. ராமன் அவர்கள், அவரை ஏ.வி.எம்மின் அடுத்த தயாரிப்பான ‘வாழ்க்கை’ (1949) படத்திற்காக ஒப்பந்தம் செய்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றியைத் தழுவவே, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கிலும் பெரும் வெற்றியை கண்ட அப்படத்தை, 1951ல், ஹிந்தியில் ‘பாஹர்’ என்ற பெயரில் ரீமேக் செய்ய ஏ.வி.எம் நிறுவனம் முடிவு செய்து, அவரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது. அவரது நடிப்பும், நாட்டியத் திறமையும் வட இந்தியர்களைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் சாதனையையும் எட்டியது. இதனால், ஏ.வி.எம்மின் அடுத்த இருமொழிப் (தமிழ், ஹிந்தி) படத்திலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார், அவர். இப்படமும் மாபெரும் வெற்றியடைந்தது.

திரையுலக வாழ்க்கை

ஹிந்தித் திரையுலகில் ஆஸ்தான நடிகையென்று, இரு படங்களிலே பெயர்பெற்ற அவர், 1954ல் ‘நாகின்’ என்ற வெற்றிப் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ‘யாஸ்மின்’, ‘பெஹலி ஜலக்’, ‘சித்தாரா’ மற்றும் ‘ஜஷன்’ ஆகிய படங்களில் நடித்தார். பின்னர், ‘தேவதாஸ்’ (1955), ‘நியூ டெல்லி’ (1956), ‘நயா தௌர்’ (1957), ‘கட்புத்லி’ (1957), ‘ஆஷா’ (1957), ‘சாதனா’ (1958), ‘மதுமதி’ (1958), ‘பைகம்’ (1959) போன்ற படங்களில் நடித்தார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களை ஹிந்தித் திரையுலகில் கொடுத்த வைஜெயந்திமாலா அவர்கள், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ (1958) மூலமாக தமிழ்த் திரையுலகில் மீண்டும் வளம் வந்தார். அப்படத்தில் வந்த ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலுக்கு பத்மினியுடன் இணைந்து அவர் ஆடிய போட்டி பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதனால், அவர் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ‘இரும்புத் திரை’, ‘ராஜ பக்தி’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாக்தாத் திருடன்’ போன்ற திரைப்படங்களில் அவர் நடித்துத் தமிழ் திரையுலகிற்கும் பெரும் புகழைத் தேடித் தந்தார்.

மறுபடியும் அவர் ஹிந்தித் திரையுலகில் ‘கங்கா ஜமுனா’ என்ற படம் மூலமாக 1961ல் நுழைந்தார். அந்தப் படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினையும், பி.ஜே.எஃப்.ஏ விருதினையும் பெற்றுத் தந்ததால், அவர் தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சங்கம்’ (1964), ‘லீடர்’ (1964), ‘அம்ராபலி’ (1966), ‘சூரஜ்’ (1966), ‘ஹாதி பஜாரே’ (1967), ‘ஜூவல் தீஃப்’ (1967), ‘சண்குர்ஷ்’ (1968), ‘பிரின்ஸ்’ (1969) போன்றவற்றில் நடித்தார். வெற்றியும், தோல்வியும் ஒரு கலைஞனுக்கு சகஜம் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, அவர் நடித்த ‘நயா கானூன்’, ‘நாம் இருவர்’, ‘தோ திலோன் கி தாஸ்தான்’, ‘துனியா’, மற்றும் ‘சாத்தி’, போன்ற படங்கள் பெரும் தோல்வியைத் தழுவியதால், அவருக்குத் திரையுலக வாழ்வில் உள்ள பற்றும், ஈடுபாடும் குறைந்தது.

இல்லற வாழ்க்கை

அவர், சமன்லால் பாலி என்பவரை 1968 ஆம் ஆண்டில் மணமுடித்தார். திருமணத்திற்குப் பிறகு, தனது திரையுலக வாழ்க்கையைக் கைவிட்ட அவர், சென்னையில் குடியேறினார். அவருக்கு சுசிந்திரா பாலி என்றொரு மகனும் உள்ளார். அவரது கணவர் 1986 ஆம் ஆண்டில் மறைந்த பிறகு, சென்னையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.

அரசியல் வாழ்க்கை

திரையுலக வாழ்வில் இருந்து வெளிவந்த அவர், 1984ல், தமிழ்நாடு பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக, ஜனதா கட்சியின் தலைவரான இரா. செழியனையும், 1989ல், தி.மு.க வேட்பாளர் ஆலடி அருணாவையும் எதிர்த்துப் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். 1993ல், மாநிலங்களவை உறுப்பினாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ல், ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பின்னர், கட்சிப் பொறுப்பில் இருந்து வெளியேறிய அவர், அதே பாரதிய ஜனதா கட்சியில் செப்டம்பர் மாதம் சேர்ந்தார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

1968 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதைப் வென்றார்.

1979 – தமிழக அரசு அவருக்கு ‘கலைமாமணி விருதை’ வழங்கி கௌரவித்தது.

1982 – பரதநாட்டியத்தில் அவரது பங்களிப்பிற்காக ‘சங்கீத நாடக அகாடமி’ விருதை பெற்றார்.

2௦௦1 – ‘த்யாகராஜ பாகவதர்’ விருது வழங்கப்பட்டது.

2௦௦2 – ‘வாழ்நாள் சாதனையாளர் கலாகார் விருது’ பெற்றார்.

வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை 1998ல் பிரிட்டிஷ் ஏசியன் திரைப்பட விழாவிலும், 2௦௦6ல் புனே சர்வதேச திரை விழாவிலும், 2012ல் பெங்களூர் சர்வதேச திரை விழாவிலும் பெற்றார்.

ஃபிலிம்ஃபேர் விருதினை 1956ல் ‘தேவ்தாஸ்’ படத்திற்காகவும், 1958ல் ‘சாதனா’ மற்றும் ‘மதுமதி’ படத்திற்காகவும், 1961ல் ‘கங்கா ஜமுனா’ மற்றும் ‘சங்கம்’ படத்திற்காகவும், 1996ல் வாழ்நாள் சாதானையாளர் விருதினை பெற்றார்.

2௦௦8 – ‘அகினேனி நாகேஸ்வரராவ் தேசிய விருதை’ வென்றார்.

காலவரிசை

  • 1932: சென்னையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி, 1932 ஆம் ஆண்டில் ஒரு ஆச்சாரமான தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
  • 1949: ஏ.வி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் அறிமுகமானார்.
  • 1951: ஹிந்தியில் அறிமுகமானார்.
  • 1968: சமன்லால் பாலி என்பவரை 1968 ஆம் ஆண்டில் மணமுடித்தார். திருமணத்திற்குப் பிறகு, தனது திரையுலக வாழ்க்கையைக் கைவிட்டு, சென்னையில் குடியேறினார்.
  • 1984: அரசியலில் நுழைந்தார்.
  • 1986: அவரது கணவர் இறந்தார்.
  • 1979: ‘கலைமாமணி விருதை’ வென்றார்.

ஆதாரம் - இட்ஸ்தமிழ் வலைதளம்

2.87096774194
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top