பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இணையத்தில் தமிழ் தோற்றமும் – வளர்ச்சியும்

இணையத்தில் தமிழ் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அறிவியலின் அதிவேக வளர்ச்சியால் இன்றைய உலகம் கைக்குள் சுருங்கியுள்ளது. அறிவியலின் அதிநவீன வடிவமே கணிப்பொறியாகும். கணினி அறிவியலின் மற்றொரு பரிமாணமே இணையம் (Internet). ஒர் அலுவலகத்துக்குள், ஒரு நகருக்குள், ஒரு நாட்டுக்குள் அடங்கிவிடாமல், உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் உள்ள கணினிகள் தங்களுக்குள் ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள, உலகின் எங்கோ ஓர் இடத்திலுள்ள ஒருவர் தன் வீட்டிலுள்ள கணினிமூலமாகத் தனக்குத் தேவையான விவரங்களைத் தேடிப்பெறும் தகவல் பரிமாற்றமே இணையம் ஆகும்.

இணையம் அறிமுகம்

உலகில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கிறது இணையம். இதன் மூலம் உலகம் முழுவதிலும் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. பல்வேறு கணிப்பொறிகளில் தொகுக்கப்பட்ட தகவல்கள் முதல் கட்டமாக அந்தந்த நாடுகள் அளவிலும், பின்பு கண்டங்கள் அளவிலும், செயற்கைக்கோள்கள் மூலமாக இணைக்கப்படுகின்றன. பின்பு அவ்வாறு இணைக்கப்பட்ட தகவல்களை (data) யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், பார்த்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட அமைப்பே இணையம் ஆகும்.

இணையம் விளக்கம்

‘இணையம்’ என்னும் தமிழ்ச்சொல்லின் மூல ஆங்கிலச்சொல் இன்டர்நெட் (Internet) என்பதாகும். இதன் மூலப்பொருளை உணர இச்சொல்லை இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். ‘இன்டர்’ என்பது முதலாவது பகுதி. ‘நெட்’ என்பது இரண்டாவது விகுதி. இன்டர் என்ற சொல் ஒரே தன்மையுடைய பல பொருள்களின் தொகுதியைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, பல நாடுகளைக் குறிப்பிட ‘இன்டர்நேஷனல்’ (International), பல மாநிலங்களைக் குறிப்பிட ‘இன்டர்ஸ்டேட்’ (Inter-state) மற்றும், ‘இன்டர்காலேஜ்’ (Inter-college), ‘இன்டர்ஸ்கூல்’ (Inter-school) என்று பயன்படுவதைப் போன்று இச்சொல் அமையும்.

‘நெட்’ (Net) என்றால் வலை. இந்த இடத்தில் ‘நெட்வொர்க்’ (Network) (கட்டமைப்பு) என்பதன் சுருக்கம் நெட். ஒரு கட்டமைப்பில் பல கணிப்பொறிகளை ஒன்றாக இணைத்து அவைகளை ஒரு பொது நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதும், அவைகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதுமே கட்டமைப்பு (Network) எனப்படும்.

இப்பொழுது இரண்டு சொற்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும் போது இன்டர்நெட் என்பது கட்டமைப்புகளுக்கான கட்டமைப்பு எனப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கணிப்பொறி சார்ந்த கட்டமைப்பையே இணையம் என்கிறோம். இவற்றில் தனித்தனி கணினிகளையும் இணைத்துப் பயன்பெறலாம்.

கணிப்பொறிகளின் உலகளாவிய வலையமைப்பே இணையம். உலகம் முழுவதிலும் உள்ள பல கோடி கணிப்பொறிகள் இணையத்தில் இணைக்கப்பட்டு, தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

இணையத்தின் தோற்றம்

தகவல் தொடர்புக்காக அட்லாண்டிக் கடலில் 1858-ஆம் ஆண்டு ஒரு கேபிள் நிறுவப்பட்டது. சில நாட்கள் மட்டுமே அது செயல்பட்டது. தகவல் தொலைத்தொடர்பு வரலாற்றில் இது வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. பின்னர் 1957-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ‘ஸ்புட்னிக்’ என்னும் செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் ‘ஐசன் ஹோவர்’ ‘அர்ப்பா’ (ARPA) என்னும் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணையிட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்துறையில் கணிப்பொறி பயன்பாட்டை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ‘அர்ப்பா’ இறங்கியது. 1962-இல் தொடங்கிய இந்த ஆராய்ச்சியில் டாக்டர் ஜே. சி. ஆர். லிக்லைடர் (J.C.R. Licklider) தலைமையேற்றார். போர் ஏற்பட்டு, எதிரிகளின் குண்டுவீச்சில் நெட்வொர்க்கின் ஒரு பகுதி சிதைய நேரிட்டாலும் மீதிப்பகுதி எந்தவித சிக்கலுமின்றி செயல்பட வேண்டும் என்பதே ‘அர்ப்பா’வின் நோக்கமாக இருந்தது. இந்த கோட்பாடுகளின் அடிப்படையில் 1968-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் ஆய்வுக்கூடம் முதல் சோதனை நெட்வொர்க்கை நிறுவியது. இதன்படி 1969-இல் ‘அர்ப்பாநெட்’ (ARPANET – The Advanced Research Projects Agency Network) அமைக்கப்பட்டது. பின்னர் அர்ப்பாநெட்டின் சிறப்பால் பல்கலைக்கழகங்கள் இதனோடு இணைந்தது.

1971-இல் முதல் மின்னஞ்சல் (email) அனுப்பப்பட்டது. “First email (electronic mail) transmission in 1971, was send by Ray Tomilinson, of the BBN company.” பின்னர் அர்ப்பாநெட்வாக்கின் மூலம் அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை மற்ற அறிஞர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக தொடர்பு கொள்ளும் ஊடகமாகப் பயன்படுத்தினர்.

இதனால் 1984-இல் அர்ப்பாநெட் இரண்டு நெட்வொர்க்குகளாகப் பிரிந்தது. இவற்றில் ‘மில்நெட்’ என்பது இராணுவத்திற்காகவும், ‘அர்ப்பாநெட்’ என்பது உயர்தர ஆராய்ச்சிக்காகவும் என்று பிரிந்தன. அதன் பின்னர் பல பல்கலைக்கழகங்கள் இந்த அர்ப்பாநெட்டைப் பயன்படுத்தின. இதனால் அர்ப்பாநெட்டின் செயல்பாடுகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

ஆரம்ப காலகட்டத்தில் இணையம் மின்னஞ்சல் அனுப்புவதற்கு மட்டுமே பயன்பட்டது. பின்னர் படிப்படியாக இணையத்தின் வழியாகச் செய்திகளைப் பெறும் ஆற்றல் பெருகத் தொடங்கியது. மேசைக் கணிப்பொறியின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு கணிப்பொறியின் வலையமைப்பு வளரத் தொடங்கியது. “மேசைக் கணிப்பொறிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட வலையமைப்புகள், குறும்பரப்பு வலையமைப்பு (LAN – Local Area Network), நகர்ப்பரப்பு வலையமைப்பு (MAN – Medium Area Network), பெரும்பரப்பு (WAN – Wide Area Network) எனச் செயல்படும் எல்லை வரம்புகளுக்கேற்ப, வெவ்வேறு அமைப்புகளைக் கொண்ட கணிப்பொறி வலையமைப்புகளாக வடிவமைக்கப்பட்டன.”

இணையத்தின் கண்டுபிடிப்பு கணிப்பொறியின் பயன்பாட்டில் மிகப்பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. எனவே இணையத்தின் ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் ‘டிம் நெர்னர்ஸ்-லீ’ (Tim Nerners—Lee) என்பவரால் உலக தழுவிய இணையதளம் ‘www – worldwide web’ அறிமுகப்படுத்தப்பட்டது.

“ஜெனிவாவிலுள்ள CERN எனும் ஆய்வுச் சோதனைக் கூடத்தில் அறிவுரையாளராக (Conssultant) இருந்த ’டிம் நெர்னர்ஸ்-லீ’ எனும் இளம் அறிவியலாளராகிய ஆங்கிலேயர், மீ இணைப்பு (Hyper Link) மூலம், தனது உலகளாவிய வலை அமைப்பு (world wide web) திட்டத்தில், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று கண்டுபிடித்தார். பெர்னர்ஸ்-லீ இதனை, 1991-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.”

இன்று மனித வாழ்வில் தகவல் தொடர்பு கூறுகளில் இணையம் முதன்மையாகத் திகழ்கிறது. மின்னஞ்சல் அனுப்பவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இணையம், இன்று தரவுதளம் (Database Site), இணையவலைதளம் (Web Page), இணைய இதழ் (Internet Journal), இணைய வணிகம் (e-business), இணைய விளையாட்டு, இணைய நூலகம் (Internet Library), இணையவழிக் கல்வி, வலைப்பூக்கள் (Blogs), சமூக வலைத்தளங்கள் (Orkut, Facebook, Twitter) என பலப் பரிமாணங்கள் கண்டு மனித வளர்ச்சியில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன.

இந்தியாவில் இணையத்தின் தோற்றம்

உலக நாடுகள் பலவற்றிலும் இணையச் சேவை பரவலாயின. இந்தியாவில் முதன்முதலில் பொது மக்களுக்காக இணையம் 1995-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் ஆறு நகரங்களில் தொடங்கி வைக்கப்பட்டது. ‘விதேஷ் சஞ்சார் நிகம் லிமிடெட்’ (Videsh Sanchar Nigam Limited - VSNL) இந்தியாவின் ஒரே இணைய இணைப்பு வழங்கும் சேவையாளராக இருந்தது. பின்னர் 1998-இல் இருந்து தனியாருக்கும் உரிமம் வழங்கப்பட்டது. 1999-இல் வெப்துனியா (webdunia.com) இந்திய மொழிகளில் முதலில் இந்தி மொழியில் இணையச் சேவையை அறிமுகம் செய்தது. இணையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சிக்காக 2000-இல் இந்தியப் பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்புக்கான வரைமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. முதலாவதாக 4.5 கோடியில் யாகூ (Yahoo) எம்.எஸ்.என் (MSN) நிறுவனம் இணையச் சேவையை விரிவுபடுத்தியது. 2001-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே துறை (Indian Railway Catering and Tourism Centre – IRCTC) இணைய வழி பயணச்சீட்டுப் பதிவினை தொடங்கியது. பின்னர் படிப்படியாக வங்கி, விமானச் சேவைக்காகவும் இணையப் பயன்பாடு விரிவடைந்தன. இன்றைக்கு பல்வேறு நிறுவனங்கள் இணையச் சேவையை வழங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி செல்போன் நிறுவனங்களும் இணையச் சேவையை வழங்கி வருகின்றன. இன்று இந்தியாவில் இணையச் சேவை பெரும்பாலான இந்திய மொழிகள் அனைத்திலும் நடைபெறுகிறது.

இணையச் செயல்பாடு

அறிவியல் புரட்சியின் விளைவால் உலகம் முழுவதையும் இணையம் கைக்குள் அடக்கிவிட்டது. இணையத்தில் இணைப்பினைப் பெறுவதற்கு மூன்று பொருள்கள் இருக்க வேண்டும். அவை,

 1. கணிப்பொறி
 2. தொலைபேசி இணைப்பு
 3. மோடம்

தொலைபேசி இணைப்பு வழியாக நமது கணிப்பொறியை மோடம் துணைகொண்டு தொலைதூரக் கணிப்பொறியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம்.

தொலைபேசி இணைப்பு மின்காந்த அலைகளாக இருக்கும் அனலாக் (Analog) சமிக்ஞைகைகளையே ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு தொலைபேசிமூலம் வரும் தகவல்களை டிஜிட்டலாக (Digital) கணிப்பொறிக்கு அனுப்புவதற்கு மோடம் என்ற கருவி ஒரு மொழிபெயர்ப்பியாகச் செயல்படுகிறது. ஆனால் இன்று தொலைபேசி இணைப்பு மற்றும் மோடம் இல்லாமலே இணையச் சேவையைப் பெறமுடியும். அந்தளவிற்குத் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பல்வேறு நிறுவனங்கள் இணைய இணைப்பிற்கு “Data Card” வழங்குகின்றன. “Data Card” –டை நம் கணிப்பொறியில் இணைத்து நமக்கு வழங்கும் குறியீட்டு எண்களை நம் கணினியில் பதிவு செய்தாலே உடனடி இணைய இணைப்பினை நாம் பெற்றுவிடலாம். பயணத்தின் போதும் மடிக்கணினியில் இணையச்சேவையைப் பெற இத்தகைய தொழில்நுட்ப வசதி பயனுடையதாக உள்ளது. நம் இணையப் பயன்பாட்டினைப் பொறுத்து மாதாமாதம் கட்டணம் செலுத்தி நம் இணைப்பை புதுப்பித்துக் கொள்ளலாம். இது தகவல் தொழில்நுட்பத்தின் மற்றுமொரு புரட்சியாக விளங்குகிறது.

கணிப்பொறியில் தமிழ்

கணிப்பொறி என்றாலே ஆங்கிலத்தில் இயங்கக்கூடியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணங்கள் திரையில் ஆங்கிலத்துக்கான முக்கியத்துவம், கணிப்பொறி பற்றிய வெளிநாட்டுப் புது செய்திகளும், அறிவிப்புகளுமே இப்படியொரு மாயையை மக்கள் மனதில் பதித்துள்ளன. ஆனால் இவையனைத்தும் பொய்யானத் தோற்றமே.

கணிப்பொறியின் செயற்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியினைக் கொண்டு வடிவமைக்கப்படுவதால், கணிப்பொறியின் செயல்பாடுகள், மற்றும் இணையச் செயல்பாடுகள் ஆங்கில மொழியைச் சார்ந்து அமைந்துள்ளன. “பிரெஞ்சு, செருமானிய, சப்பானிய, சீன நாட்டினர் இது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். அவர்களது ஆழ்ந்த தாய்மொழிப் பற்றின் விளைவாகக் கணிப்பொறிப் பயன்பாட்டிலும், இணையத்திலும் இந்த மொழிகள் இடம் பெறத் தொடங்கின.

ஒரு கணிப்பொறி பூஜ்யம், ஒன்று (0,1) எண்கள் அடங்கிய இரும (Binary) எண் குறியீடுகளைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறெந்த மொழியும் தெரியாது. கணிப்பொறியை நாம் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும், அந்தத் துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது தரவுகளை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும். கணிப்பொறியின் செயல்பாட்டுக்குத் தேவையின்படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்களாக மாற்றித்தான் சேமிக்க முடியும்.

“கணிப்பொறி, நாம் கொடுக்கின்ற கட்டளைகளுக்கேற்பச் செயல்படுகின்ற, சிந்திக்கும் திறனற்ற ஒரு பொறியாகும். கணிப்பொறி பல்லாயிரக்கணக்கான மின்சுற்றுகள் இயக்கப்படுவதால் செயல்படும் ஒரு திறன்மிக்க கருவி. இந்த மின்சுற்றுகள் 0.1 என்ற இரும எண் குறியீடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பொறிமொழியின் (Machine Language) கட்டளைகளால் இயக்கப்படுகின்றன.”

ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமானால், அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் குறியீட்டு முறை என்று அழைக்கிறோம். ஒரு மொழியைக் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால், அந்த மொழிக்கு ஒரு குறியீட்டு முறையும் அதற்கு ஏற்ற ஓர் எழுத்துருவும் இருந்தால் போதும். அந்த மொழியைக் கணிப்பொறியில் பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மொழிக்கு கணிதப்பண்பு இருப்பின் எளிதில் கணிப்பொறியில் பயன்படுத்த முடியும்.

“கணிப்பொறியில் ஆங்கிலம் போன்று எந்த மொழியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் கணிப்பொறி கணித அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு கருவியாகும். அவ்வகையில் தமிழ்மொழி கணிதப் பண்புடைய மொழியாகும். எனவே கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்துவது சுலபம்.”

கணிப்பொறியில் தமிழை உருவாக்க உலகம் முழுவதிலும் பரவியுள்ள கணினித் தமிழ் வல்லுனர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் நடைபெற்ற முயற்சியின் விளைவாய் பல்வேறு தமிழ் எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல்வேறு விசைப்பலகை முறைகளும் உருவாக்கம் பெற்றன. இவற்றினை நெறிப்படுத்த பல கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தி கணிப்பொறியில் தமிழை வளர்த்தனர். இத்தகைய ஒருங்கிணைப்புகள் நடந்துகொண்டிருக்கும் போதே தமிழ்த் தரவுகள் கணினியில் ஏற்றம் பெற்றுவந்தன.

இச்சூழ்நிலையில், பலரும் பல விசைப்பலகையைப் பயன்படுத்துவது பெரும் குறையாய் மாறிப்போனது. இக்குறையைப் போக்க கணிப்பொறியில் உலக அளவில் ஒரே விசைப்பலகை முறையைப் பயன்படுத்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி எட்டாம் தேதி சென்னையில் நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விசைப் பலகை முறையைத் தமிழகத்திலுள்ள அனைத்து மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆலோசனையின்படி தமிழக அரசு வடிவமைத்துத் தந்தது.

இச்சமயத்தில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் வின்டோஸில் (Windows) தமிழைப் பயன்படுத்த துவங்கிய பின்பே பல்வேறு தமிழ் மென்பொருள் நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் பெரும் எண்ணிக்கையில் தமிழ் எழுத்து வடிவங்களை கணிப்பொறியில் அளிக்கத் துவங்கினார்கள். கூகுள் (Google) நிறுவனம் அறிமுகப்படுத்திய டிரான்ஸ்லிட்டரேஷன் (Transliteration) முறை தமிழ்ப் பயன்பாட்டை வெகு ஜனத்திற்கு கொண்டு சேர்த்தது.

இணையத்தில் தமிழின் தோற்றம்

சமுதாய வாழ்வில் எந்தவொரு செயலும் நன்முறையில் தொடங்கி சீரிய முறையில் நடைபெற ஒருங்கினைந்த அமைப்பு முறையே பயன்தரும். பண்டைய தமிழ் நாகரிகத்தின் பன்னாட்டுச் செய்திகளாகத் தமிழர்கள் தென்மேற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரசாங்கத் தூதுவர்களாகவும், வணிகர்களாகவும், அந்தந்த நாடுகளில் சில காலம் குடியேறினர். இவ்வாறு குடியேறிய மக்கள் நல்ல நிலையில் வாழ்கின்றனர். ஆயினும் தமிழ் நாட்டிலிருந்து பல்லாண்டுகளுக்கு முன்பு சென்ற தமிழர்களின் வழித்தோன்றல்கள் தன் தாய் நாட்டுடன் நேரடித் தொடர்பு குறைந்ததால் தமது தாய்மொழியான தமிழை மறந்தும், தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பினை உணராமலும் போய்விட்டனர்.

இந்நிலையில் இணையத்தின் வளர்ச்சியால் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ள தமிழை இணையத்தில் தோற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். “உலகெங்கும் பரவிவரும் தமிழர்கள் இணையத்தின் வழியாகத் தமிழில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினர். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றைத் தொடர்ந்து கற்றுத் தெளியவும் தமிழ் இணையதளங்களை உருவாக்க விரும்பினர். உலகின் பல பகுதிகளில் வாழ்ந்துவரும் கணிப்பொறியில் வல்லமைபெற்ற தமிழர்கள், தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர்.”

அம்முயற்சியின் விளைவே இன்று இணையப் பயன்பாட்டில் தமிழ் தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணைய தளங்கள் உருவாக பிறிதொரு காரணமும் முக்கியமாகும். 1983-க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுபோன்று தமிழகத் தமிழர்கள் பணியின் பொருட்டு அயல் நாடுகளுக்கு சென்றனர். இவ்வாறு சென்ற தமிழர்கள் தாய்நாட்டுடன் தொடர்பு கொள்ளவும், பிற நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்தினர். இதில் தங்களை ஒன்றிணைக்க தமிழ் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாய் பல்வேறு சங்கங்கள், அமைப்புகளை இணையத்தில் உருவாக்கினர். உலகம் முழுக்க இத்தகைய பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாய் இணையத்தில் தமிழ் எளிதில் வளர்ந்தது.

“தமிழ் இணையத்தளங்களின் தோற்றம் பற்றித் துல்லியமாகக் குறிப்பிட முடியாதபடி உள்ளது. இதற்கு காரணம் இத்தகைய முயற்சி உலகம் முழுக்க பரவலாக நடந்தமையாகும். ஒவ்வொரு தளத்தினரும் தங்களின் முயற்சியே முதன்மை என்கின்றனர்.

இவ்வாறு குறிப்பிட்டுச்சொல்ல முடியாத அளவிற்கு இணையத்தில் தமிழின் தோற்றம் பரவலாகவும், விரைவாகவும் உருவானது. இத்தகைய முயற்சியும் ஒரு வகையில் இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு பெரும் பங்காய் அமைந்தன.

ணையத்தில் தமிழின் வளர்ச்சி நிலை

உலகின் பழமை வாய்ந்த உயர்தனிச் செம்மொழிகள் எட்டில் (கிரேக்கம், இலத்தீன், அரபி, சீனம், ஹீப்ரு, பாரசீகம், தமிழ், சமஸ்கிருதம்) இன்றளவும் மக்களின் பயன்பாட்டில் உள்ள மொழியாக தமிழும் சீனமும் விளங்குகிறது. இன்றைய உலகமயமாக்கலான காலகட்டத்திலும் வழக்காற்றில் நவீன மொழியாகவும், வரலாற்றில் வளமான மொழியாகவும் வளர்ந்து நிற்கிறது. இன்றைய காலகட்டத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு கணினித்தமிழ் நான்காம் தமிழாய் வளர்ந்து வருகிறது.

“ஒரு நாட்டின் மொழியை ஏற்றுக்கொள்ளாத கணிப்பொறி அந்நாட்டில் இயங்க முடியாது. கணிப்பொறியை ஏற்றுக்கொள்ளாத ஒரு மொழி வாழ முடியாது என்பது வரலாற்று உண்மையாகிவிட்டது. மேற்கண்ட கூற்று உணமையே. ஏனெனில் இன்றைக்கு கணிப்பொறியை பயன்படுத்தாத துறைகளே இல்லையெனும் அளவிற்கு கணினி வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கணினியில் தமிழ்மொழியின் பயன்பாட்டிற்கு காரணம் நம் மொழியின் சிறப்பே ஆகும். ஏனெனில் தமிழ்மொழியில் எழுத்தமைப்பு, ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கிறது. இத்தனை சிறப்பினை பெற்றிருப்பதால் கணினியில் தமிழ் மிகக் குறுகிய காலத்தில் நுழைந்தது.

இதற்குப் பெருமளவில் துணை நிற்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களேயாவர். நாடு, இனம், மொழி எனக் கடல் கடந்து சென்றாலும் நம் தமிழர்கள் பண்பாடு, மொழி, கலை போன்றவற்றால் தமக்கான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தை விட்டுத் தொழில் காரணமாக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் சந்தித்துக்கொள்ள தமிழில் மின்னஞ்சல்களையும், இணைய இதழ்களையும், இணையத் தளங்களையும் பயன்படுத்தினர்.

இதுபோன்ற ஆரம்பகட்ட முயற்சிகளே இன்று இணையத்தமிழ் என்ற துறையை வளர்த்தெடுத்தன. கணிப்பொறி வரலாற்றில் 1975-இல் தனிமனிதக் கணிப்பொறி (Personal Computer) கண்டுபிடிக்கப்பட்டதும், உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் தத்தமது மொழியைக் கணினியில் காண ஆர்வம் காட்டினர். இது போன்றே கணிப்பொறியில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியினை புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்டனர். “தமிழ் எழுத்துருக் குறியாக்க முயற்சிகள் 1980-இன் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன.”

உலகம் முழுவதிலும் பல்வேறு தமிழறிஞர்கள் 1984 முதல் 1995 வரை அவரவர்க்கென தனிகுறியீட்டு முறையை அமைத்து எழுத்துருக்கள், விசைப்பலகைகள் அமைத்து தமிழைக் கணினியிலும், இணையத்திலும் ஏற்றம் பெறச் செய்தனர். இணையத்தில் முதல் நிலையாகத் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துருக்கள் மூலமாக தமிழில் மின்னஞ்சல் அனுப்பினர். பின்னர் இணைய இதழ்களும், இணையத் தளங்களும் இணையத்தில் உருவாகின.

இத்தகைய குழப்பத்தால் முதல் தமிழ் இணைய இதழ் மற்றும் முதல் இணையத்தளம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.“1995-ஆம் ஆண்டில் நா. கோவிந்தசாமி “கணியன்” என்கிற பெயரில் நடத்தியதுதான் முதல் தமிழ் இணையத்தளம். இவ்விணையத்திற்கான தகவல்கள் சிங்கப்பூர் மற்றும் சென்னையிலிருந்து தொகுக்கப்பட்டன. இத்தளத்தினை படிக்க ‘கணியன்’ என்ற எழுத்துருவை பயன்படுத்த வேண்டும்.

இணையத்தில் முதல் தமிழ் தளம், இணைய இதழ் குழப்பம் நிலவினாலும் இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் தளங்களும், இணைய இதழ்களும் வெளிவருகின்றன. இவற்றில் சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், நூலகம், இணையப் பல்கலைக்கழகம், அகராதிகள், சினிமா போன்ற ஏராளமான தகவல்கள் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்டுள்ளன.

இணையம் தொடர்பான மாநாடுகள்கருத்தரங்குகள்

எந்தவொரு அமைப்பும் தோன்றுவதற்கு முன்னர் மாநாடுகளும், கருத்தரங்கங்களும் அவசியமாகின்றன. தமிழில் இணையத்தளங்கள் செம்மையுற அமைவதற்கு பல கருத்தரங்குகளும், மாநாடுகளும் நடத்தப்பட்டன. இவை அரசாலும், சில தனியார் அமைப்புகளாலும் நடத்தப்பட்டன.

முதல் தமிழ்க் கணினி கருத்தரங்கு

‘தமிழும் கணிப்பொறியும்’ என்ற தலைப்பில் முதன் முதலில் கணினித்தமிழ் கருத்தரங்கு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 5, 6 தேதிகளில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித்துறைப் பேராசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தியின் அவர்களின் முன் முயற்சியால் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

தமிழ் எழுத்துருக்கள், சொற் செயலிகள், கணினி கலைச் சொற்கள், மற்றும் விசைப்பலகையைத் தரப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டன. இணையத்தமிழ் வரலாற்றில் இக்கருத்தரங்கம் ஒரு திருப்பமாக அமைந்தது.

முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கை அடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ‘தமிழ் இணையம் 97’ என்னும் பொருளில் முதல் தமிழ் இணைய மாநாடு 1997-ஆம் ஆண்டு மே 17, 18 தேதிகளில் நடைபெற்றது. சிங்கப்பூர் நாங்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் நா. கோவிந்தசாமியின் முன் முயற்சியால் இம்மாநாடு நடத்தப்பட்டது.

இம்மாநாட்டில் தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்புர், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்து தமிழ் மென்பொருள் வல்லுநர்களும், கணினித்தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் இணையத்தளங்களில் தமிழ்ப் பொருண்மைகளை மிகைப்படுத்துதல், விசைப்பலகையைத் தரப்படுத்துதல், தமிழ் எழுத்துருக் குறியீட்டைத் தரப்படுத்துதல், மற்றும் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும், அடுத்த இணைய மாநாடு நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டு முடிவு செய்தனர்.

இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில், நடுவணரசின் அமைச்சராக இருந்த முரசொலி மாறனை வரவேற்புக் குழுத் தலைவராகக் கொண்டு 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8 தேதிகளில் ‘தமிழ் இணையம் 99’ (Tamil Net 99) என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது.

இம்மாநாட்டில் விசைப்பலகைத் தரப்பாடு தொடர்பாகவும், எழுத்துரு தொடர்பாகவும் வழங்கப்பட்ட கருத்தாய்வுகளைத் தொகுத்து ஒருங்கிணைப்பு செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

 1. இம்மாநாட்டின் மூலமாக ஒரே தமிழ் எழுத்துமுறையாக ‘டாம்’ (TAM) வகையும், ஆங்கில தமிழ் கலப்பு எழுத்துரு முறையாக ‘டாப்’ (TAB) வகையும் அறிமுகப்படுத்தப்பட்டன.
 2. தமிழ் மென்பொருள் ஆராய்ச்சி மானியக்குழு ஒன்று அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 3. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்காக இணையம் வாயிலாக உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) ஒன்றை நிருவுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது, இன்று இப்பல்கலைக்கழகம் ‘tamilvu.org’ என்ற பெயரில் பல்வேறு வளர்ச்சி பெற்று இயங்கிவருகிறது.

இம்மாநாடு தமிழ் இணைய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2000

 • மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு இலங்கையைச் சேர்ந்த கொழும்புவில் தோட்டத் தொழிலாளர்களின் அமைச்சர் தொண்டைமான் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. அரசியல் சூழ்நிலை காரணமாக சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்புர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருண் மகிழ்நன் ஒருங்கிணைப்பில் இம்மாநாடு 2000-ஆம் ஆண்டு ஜீலை மாதம் 22, 23, 24-ஆகிய நாட்களில் ‘தமிழ் இணையம் 2000’ எனும் தலைப்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘உத்தமம்’ – உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்று தமிழிலும் INFIT – International Forum for Information Technology in Tamil என்று ஆங்கிலத்திலும் குழுவொன்று உருவாக்கப்பட்டது.
 • உத்தமம் குழு உருவான பின்னர் பல்வேறு ஆய்வுப் பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவை, தமிழ் கலைச்சொல் தொகுப்பு, யூனிகோடு தமிழ் ஆய்வு, இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல், தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு, ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரப்பாடு, தமிழ் எழுத்துரு படித்தறிதல் (Tamil OCR), லினக்ஸில் தமிழ் (Tamil in Linux), தமிழ் அனைத்து எழுத்துரு 16-பிட்டு தரம் போன்ற ஆய்வுகளை நடத்தி வருகின்றன.
 • இக்குழுவில் உலகம் முழுவதிலும் வாழும் பல்வேறு தமிழ் கணினி வல்லுநர்கள் ஒன்றிணைந்தனர். இக்குழு மூலமே இனிவரும் காலங்களில் உலக இணையத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டன.

நான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2001

 • நான்காம் உலகத் தமிழ் இணைய மாநாடு 2001-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இம்மாநாடு ‘வளர்ச்சிக்கான வழிகள்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
 • இம்மாநாட்டில் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ (Tamil Heritage Foundation) என்னும் அமைப்பு ஜெர்மனி பேராசிரியர் நா. கண்ணன் தலைமையில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பிற்கு அந்நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமுவேல் அவர்கள் 10000 அமெரிக்க டாலர் நிதியை வழங்கினார். சர்வதேச அளவில் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் சுமார் ஐம்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு – 2002

 • ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27, 28, 29-ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ‘மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியை குறைத்தல்’ – ‘Bridging the Digital divide’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.
 • இம்மாநாட்டில் தமிழ்த்தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி உள்ளிட்ட பல பணித்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், தமிழ் யூனிகோடு சிக்கல்கள் தொடர்பாக யூனிகோடு குழும உறுப்பினர்களோடு கலந்தாய்வு, உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப் போட்டி ஆகியன இடம் பெற்றன.
 • இம்மாநாட்டில் தான் திரு. மணி மணிவண்ணன் முயற்சியால் ‘உத்தமம்’ அமெரிக்காவில் ஒரு பதிவுபெற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. மேலும் இம்மாநாட்டில் மின்னஞ்சல் இணையத்தளங்கள் வழி தகவல் பரிமாற்றம், பல்லூடக அடிப்படையில் இணையவழிக் கல்வி, இணையவழி நூலகம், மின்-ஆளுமை போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.

ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2003

 • ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22, 23, 24-ஆம் தேதிகளில் ‘தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில்நுட்பம்’ என்னும் தலைப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

ஏழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2004

ஏழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11, 12-ஆம் தேதிகளில் நடைபெற்றது. ‘நாளைய தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் – Tamil IT for Tomorrow’ என்னும் கருப்பொருளில் நடைபெற்றது.

எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு – 2009

 • சிங்கப்பூரில் நடைபெற்ற ஏழாவது இணைய மாநாட்டிற்குப் பிறகு 2005, 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகள் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெறவில்லை. பின்னர் 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாடு ‘கணினிவழிக் காண்போம் தமிழ்’ என்னும் மையப்பொருளில் நடைபெற்றது. இணையவழிக் கல்வி, மொழிப் பகுப்பாய்வு, தமிழ்த்தரவுகள், மின்னகராதிகள் ஆகிய பொருண்மையில் கட்டுரைகள் படிக்கப்பட்டன.

ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2010

 • தமிழ்மொழி செம்மொழியென நடுவணரசால் அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விழாவாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் 2010-ஆம் ஆண்டு ஜீன் மாதம் 23-27 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டோடு இணைந்து ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு ‘இணையம் வளர்க்கும் தமிழ்’ என்னும் கருப்பொருளில் நடத்தப்பட்டது.
 • இம்மாநாட்டில் இணையவழி தமிழ் கற்றல்-கற்பித்தல், கணினிவழி மொழியியல் ஆய்வுகள், சொற்திருத்திகள், பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வுகள், எழுத்து உணரி செயற்பாடுகள், கையடக்க கருவிகளில் தமிழ், தமிழ் ஒருங்குறி போன்ற தலைப்பினை ஒட்டி பல்வேறு கட்டுரைகள் படிக்கப்பட்டன.
 • இம்மாநாட்டில் நடுவணரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சராயிருந்த ஆ. இராசா தமிழ் மென்பொருள்கள் மற்றும் கல்விக்கான குறுந்தகடை வெளியிட்டார். இம்மாநாட்டில் தமிழ் ஒருங்குறி (Unicode)யே இனி அரசின் அதிகாரப்பூர்வமான எழுத்துருவாக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பத்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2011

 • உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. அதற்கு அடுத்து பத்தாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டினை உத்தமம் அமைப்பு 2011 ஜீன் மாதம் 17 முதல் 19-ஆம் தேதிவரை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹெராய்டு ஷிஃப்மேன் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் முன்னின்று நடத்தினர்.

ஆதாரம் : தமிழ் இணைய இணையம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top