பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வித் திட்டமிடுதலும் நிதியும்

கல்வித் திட்டமிடுதலும் நிதியும் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஒரு நாட்டின் திட்டமிட்ட வளர்ச்சியில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல துறைகளில் உயரிய பண்புகள் உள்ள பணியாளர்களை தேவையான அளவில் கிடைக்குமாறு செய்ய இயலும் வகையில் தகுந்த கல்வி அமைப்பினை தயார் செய்ய வேண்டும். திட்டத்தின் பொதுவான குறிக்கோள்களை அடைவதிலும் கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது. அதுவே பணியாளர்களின் தரத்தையும் சமுதாயத்தின் சமநிலையையும் தீர்மானிக்கின்றது. ஜனநாயக அமைப்பில் கல்வியின் பங்கு மிக முக்கியமானது. நாட்டின் வாழ்வாதாரங்களில் பொது மக்கள் பங்கேற்றால் மட்டுமே அது சிறப்பாக செயல்படமுடியும். கலைகள், இலக்கியங்கள், மற்ற படைப்பு செயல்கள் இவற்றை கூர்ந்து நோக்கி பாராட்டும் திறனை வளர்க்க வேண்டும்.

கல்வித் திட்டமிடுதல்

 • கல்வித் திட்டமிடுதல் என்பது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய தேவையான செயல்களைப்பற்றி முடிவெடுக்கும் வழிமுறையாகும்.
 • கல்வித் திட்டமிடுதல் என்பது முன் தீர்மானிக்கப்பட்ட குறிக்கோள்களை குறைவாக உள்ள வளங்களை சிறப்பாக பயன்படுத்தி அவற்றை அடைவதற்கான எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதற்கான வழிமுறையாகும்.
 • கல்வித் திட்டமிடுதல் என்பது தெளிவான குறிக்கோள்களை தேர்ந்தெடுக்கும் அறிவுப் பூர்வமான செயல் மற்றும் அவற்றை அடைவதற்கான சிறப்பான வழிமுறைகளை தேர்ந்தெடுத்தல், இவற்றைத் தொடர்ந்து நடைமுறை செயல்களை பின்பற்றுதல் ஆகும்.

கல்வித் திட்டமிடுதலின் அவசியம்

 • ஒரு நல்ல கல்வித்திட்டம் நிர்வாக இயந்திரத்தை (அமைப்பை) சீர்திருத்தவும் கல்வி ஸ்தாபனங்களின் வசதிகளை முன்னேற்றம் செய்யவும், ஆசிரியர்களின் திறமையை அதிகரிக்கவும், பொது மக்களை கல்வி வளர்ச்சியில் ஈடுபடுத்தவும் தேவைப்படுகிறது. கல்வியை விரிவு படுத்தவும், நல்ல தரத்தை அடையவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் செய்யப்பட வேண்டும். கிராமத்திலுள்ள ஏழை மக்களிடையேயும் மற்றும் பெண்களிடையேயும் கல்வியைப் பரப்ப சிறப்பான கவனம் கொடுக்கப்பட வேண்டும்.
 • மக்கள்தொகை விரைவாக அதிகரித்ததற்கான தாக்கம், தொழிலாளர்களின் தேவை, சூழ்நிலை, குறைந்துவரும் தேசிய வளங்கள், ஒழுங்கற்ற முறையில் ஏற்படும் அறிவியல் வளர்ச்சி, தனி நபருக்கும் நாட்டிற்கும் உதவியாக இருந்த முன்னேற்றங்களை விரைவாகவும், குறைந்த வகையிலும் முன்னேற்ற வேண்டிய அவசியம் ஆகியவைகளால் கல்வித்திட்டமிடல் தேவையாகிறது.
 • கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் வளங்கள் குறைவாக உள்ளதால், குறிக்கோள்களை குறிப்பிட்ட காலத்தில் அடைய தேவைப்படும் செயல்களை முன்னதாக தீர்மானிக்க வேண்டியுள்ளது.
 • தகுந்த பொதுவான திட்டங்கள், அலுவலர்களின் செயல்களை ஒருங்கிணைத்து அதிகபட்ச திறன் பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கு உதவுகின்றன.
 • திட்டமிடல் நிர்வாக முடிவுகளுக்கு அவசியமாகிறது.
 • திட்டமிடல் ஒரு நாடு குறிக்கோள்கள் பற்றிய தகுந்த தேர்வுகளை செய்ய உதவுகிறது.

கல்வித் திட்டமிடுதலின் முக்கியத்துவம்

 • ஒரு கல்வி நிறுவனத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நிறைந்த வெற்றியாக ஆக்குதல்.
 • செயல்களை செய்வதில் 'முயற்சி மற்றும் பிழை” முறையை தவிர்த்து பிரச்சினைகளைத் தீர்க்க கல்வித் திட்டமிடல் ஒரு சிறந்த முறையாகும்.
 • கிடைக்கும் வளங்களை சிறப்பாக பயன்படுத்த கல்வித் திட்டமிடல் அவசியம் ஆகிறது.
 • வீணாகுவதையும், தோல்வியையும் கட்டுப்படுத்தி, கல்வி முறையின் நிர்வாகத்தை திறமையானதாகவும், எளிதானதாகவும் செய்கிறது.
 • முறையான கல்வித் திட்டமிடல் மூலம் ஒரு தனிநபரின் வாழ்க்கைமுறை, அறிவு, திறன், கலாச்சாரம் இவற்றை பாதுகாத்து வளர்க்க உதவுகிறது.
 • ஒருவருடைய கல்விப்பயணம் குறிக்கோள் உள்ளதாகவும், பயனுள்ளதாகவும் அமைய கல்வித் திட்டமிடல் மிக அவசியமாகிறது.
 • கல்வியின் குறிக்கோள்களை அதிக அளவில் அடைய சிறந்த வழிமுறைகளை அமைக்கிறது.
 • கல்வி நிகழ்ச்சியின் குறிக்கோள்களை அடைவதற்கான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
 • சமூகவியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் போன்ற பல பிரிவைச் சார்ந்த திறனாளிகளின் நோக்கங்களுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கிறது.

கல்வியின் நிதியுதவி

நிதியுதவி என்பது வியாபார செயல்கள், விலைக்கு வாங்குதல், முதல் செய்யுதல் ஆகியவற்றிற்காக முதலை வழங்குதல் என வரையறை செய்யப்படுகிறது. நிதி நிறுவனங்களும் வங்கிகளும் நிதியுதவி தொழிலை செய்கின்றன. அவை வியாபாரம் செய்வோர், நுகர்வோர், முதலீடு செய்வோர் ஆகியோர் தம் குறிக்கோள்களை அடைய உதவும் வகையில் தேவையான மூலதனத்தை அளிக்கின்றன. ஒரு நாடு கல்விக்காக அளிக்கும் மூலதனம், இந்த ஒவ்வொரு மூலத்திலிருந்து வரும் பொருளுதவியின் மொத்த அளவாகும்.

கல்விக்கான பொருளுதவியின் முக்கிய கொள்கைகள்

 • கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி கல்வி செலவு திட்டத்தால் தீர்மானிக்கப்படுகிறது. கல்வித் துறைக்குள் பல பகுதிகளின் முக்கியத்துவம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
 • நாட்டில் உள்ள பொருளாதாரம், மனித வளம் இவற்றிற்கு ஏற்றபடி கல்வி முன்னேற்றம் செய்யப்பட வேண்டும்.
 • எதிர்பார்க்கும் மனிதவள தேவைகளுக்கு ஏற்ப, பொருளாதார மாற்றங்களை கவனமாக ஆய்வு செய்து, முக்கியமான கல்வி வகைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலம் நிறை நிதி பலன்கள் கிடைப்பதுடன், மனித மற்றும் பொருட்கள் சார்ந்த வளங்களை வீணாக்குதல் தவிர்க்கப்படும்.
 • சமுகத்தின் இளைஞர்கள், முதிர்ச்சி பெறாதவர்கள் ஆகியோர் முன்னேற கல்வியை குறைந்த செலவில் அளிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
 • தனி நபரின் வளர்ச்சிக்காக சமமான வாய்ப்புகளை கொடுக்க கல்விக்கு முறையாக பொருளுதவி வழங்க வேண்டும்.
 • இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும்.
 • உடல் திறனை வளர்க்கும் செயல்கள், நூலகங்களில் படிக்கும் அறைகள், மதிய உணவுத்திட்டம் ஆகியவற்றிற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
 • நாட்டிற்கு பல்வேறு துறைகளில் தேவைப்படும் திறன் படைத்த நபர்களின் நிதி ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட வேண்டும்.
 • உயர்ந்த தரம், விற்பனைத்திறன் கொண்ட பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் நம் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும்.
 • குடிசைத்தொழில்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது கல்விக்கு ஆகும் செலவில் சிலவற்றை திரும்ப பெற உதவும்.
 • உபகரணங்களின் செலவை குறைக்க புதிய பொருட்களை உண்டாக்க வேண்டும். இது போல் செய்ய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்.
 • பள்ளிக்கட்டிடம் அமைப்பதில் மிகுந்த நிதி செலவிடப்பட வேண்டும். அது மிக துரிதமாக செயல்படுத்தப்பட வேண்டும். இது கல்வியின் மதிப்பை உயர்த்தும்.

ஐந்தாண்டுத் திட்டங்கள் - கல்விக்கொள்கைகளை உருவாக்குதல், நிதி ஒதுக்கீடு

முதல் ஐந்தாண்டுத் திட்டம்

தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய்வு செய்ததில் கீழ்கண்ட அம்சங்கள் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.

 • மக்கள் தொகையின் அளவைக் கருதும்போது, கொடுக்கப்பட்டுள்ள கல்வி வசதிகள் போதுமானவை அல்ல. அவை 6-11 வயது குழந்தைகளில் 40 சதவிகிதம் பேருக்கும், 11-17 வயதினருக்கு 10 சதவிகிதமும், 17-23 வயதினருக்கு 0.9 சதவிகிதமும் அளிக்கப்படுகிறது. இலவசக் கட்டாயக்கல்வி எல்லா குழந்தைகளுக்கும் 14 வயது வரை 10 ஆண்டுகளுக்குள் தரப்பட வேண்டும். மேலும் அதிகமான மாணவர்கள் தொடக்கப்பள்ளியை முடித்து வருவதால் உயர் நிலைப்பள்ளிகளில் வசதியை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்குகிறது. நம் மக்களில் 17.2 சதவிகிதத்தினர் மட்டும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்பது சமூகத்தின் கல்வியில் நம்முன் இருக்கும் மிகப்பெரிய பணியைக் காட்டுகிறது. இதை போல் தொழிற்கல்விக்கான வசதிகள் அதிக அளவு விரிவுபடுத்த வேண்டும்.
 • நல்ல முறையான பங்கீட்டு அமைப்பின்படி பார்த்தால் செலவின் மிகுந்த பங்கு தொடக்க நிலைக்கே ஒதுக்கப்பட வேண்டும்.
 • கல்வியில் வெவ்வேறு நிலைகளில் வெவ்வெறு வழிகளில் ஏற்படும் வீணடிப்பு மற்றொரு விரும்பத்தகாத அம்சம் ஆகும். தொடக்க கல்வியில் ஏராளமான மாணவர்கள் எழுதப்படிக்க கற்றுக் கொள்ளும் முன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். அதேபோல் ஒரே வகுப்பில் மாணவர்கள் பல ஆண்டுகள் இருப்பதும் ஒரு பிரச்சினை ஆகும். கற்பித்தலின் தாழ்வான தரம், மற்றும் தவறான கற்பிக்கும் முறை, திட்டமிடப்படாமல் வளரும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மற்றொரு பிரச்சினை ஆகும்.
 • ஆசிரியர்களில் மிகுந்த சதவிகிதத்தினர் பயிற்சி இல்லாதவர்களாக உள்ளனர். கல்வியில் மறுசீரமைப்பதற்காக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
 • கல்வி உதவித்தொகை அளிப்பதன் அளவை அதிகரிக்க வேண்டும். உயர் கல்வி பெற தகுதியுள்ள எவரும் அதிலிருந்து விலக்கப்பட கூடாது என்பது மாநிலத்தின் கொள்கையாக இருக்க வேண்டும். மாநிலத்தின் குறைந்த பொருளாதார வளங்கள் இதற்கு தடையாக இருக்கும் என்பதால், மாணவர்கள் தம் கல்விச் செலவுகளை சமாளிக்க பகுதிநேர பணிவாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
 • ஒரு நாட்டின் கலாச்சார, அரசியல் தனித்தன்மையை வளர்ப்பதற்கு கல்வி அமைப்பு உதவ வேண்டும்.
 • நம் கல்வி நிறுவனங்களிலும், சமூக கல்வி நிகழ்ச்சிகளிலும், திட்டமிட்ட வளர்ச்சியின் பொருள் பற்றியும், ஐந்தாண்டுத் திட்டம் பற்றியும் கற்பிக்க வேண்டும்.

மொத்ததில் இன்றைய சூழ்நிலையின் முக்கிய தேவைகள்

 • கல்வித்திட்டத்தை மாற்றி அமைத்தல் மற்றும் அதன் வெவ்வேறு நிலைகளை ஒருங்கிணைத்தல்.
 • அடிப்படை சமூகக்கல்வி, மாற்றியமைக்கப்பட்ட இடைநிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆகிய அம்சங்களை கொண்டு வருதல்.
 • தற்போதுள்ள இடைநிலைக்கல்வி, பல்கலைக்கழக படிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்தல் மற்றும் கிராமப்பகுதிகளின் தேவைகேற்ற உயர் கல்வி முறையை அமைத்தல்.
 • பெண்களின் கல்விக்கான வசதிகளை, குறிப்பாக கிராமப்பகுதிகளில் விரிவுபடுத்துதல்.
 • பின் தங்கிய மாநிலங்களுக்கு பொருளாதாரம் அளிப்பதில் முன்னுரிமை அளித்தல்.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அடிப்படைக் கல்விக்கு முக்கியத்துவம், தொடக்க கல்வியை விரிவு படுத்தல், இடைநிலைக்கல்வியை பலதரப்பட்டதாக செய்தல், கல்லூரி, பல்கலைக்கழக கல்வியின் தரத்தை முன்னேற்றல், தொழிற்கல்விக்கான வசதிகளை அதிகரித்தல், கல்வி, கலாச்சார திட்டங்களை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றிற்கு வழி செய்கிறது.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்

விரைவான பொருளாதார முன்னேற்றம், தொழில் நுட்ப முன்னேற்றம் அடையவும் சுதந்திரம், சமூகநீதி, சமவாய்ப்புகள் ஆகிய பண்புகளின் அடிப்படையில் அமைந்த சமூக அமைப்பை உருவாக்கவும் உதவ ஒரு முக்கிய அம்சம் கல்வியாகும். கல்வித்திட்டங்கள், குடிமக்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், மக்களின் சக்தியை தூண்டவும், ஒவ்வொரு நாட்டின் இயற்கை மற்றும் மனிதவளம் இவற்றை வளர்க்கவும் கல்வி அவசியமாகிறது. கடந்த ஆண்டுகளின் முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதாக இருந்த போதிலும், முன்னேற்றம் தொடர்ந்து நடைபெற கல்வியில் உள்ள குறைகள் நீக்கப்பட வேண்டும்.

கல்வி துறையில் மூன்றாவது திட்டத்தில் 6-11 வயதுள்ள எல்லா குழந்தைகளுக்கும் கல்வியளிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், இடைநிலைக்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவியல் கற்பித்தலை நீட்டித்தல் மற்றும் முன்னேற்றம் செய்தல், தொழிற்கல்வியை வளர்த்தல், ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான வசதிகளை அதிகரித்தல், கல்வி உதவித்தொகை போன்ற வசதிகளை அதிகரித்தல் ஆகியவை முக்கியமாக அமைக்கப்படுகின்றன. தற்போதுள்ள மாணவர்கள், மாணவிகளுக்கிடையே நிலவும் கல்வி முன்னேற்ற ஏற்றத்தாழ்வுகளை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பல்கலைக்கழக கல்வியை மூன்றாண்டு பட்டப்படிப்பாக மாற்றி அமைத்தல் நிறைவேற்றப்படும். கல்வியின் எல்லா நிலைகளிலும் அடிப்படைத்திறன், தேசிய ஒருமைப்பாட்டு வளர்ச்சி, ஆகியவை முக்கியமாக கருதப்பட வேண்டும்.

நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்

கடந்த எட்டு ஆண்டுகளில், கல்வியின் எல்லா நிலைகளிலும் வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. 1-5ம் வகுப்புகளில் சேருவோரின் எண்ணிக்கை 1960 - 61ல் 35 மில்லியனிலிருந்து 1968-69ல் 55.5 மில்லியனுக்கும், 6-8 வகுப்புகளில் 6.7 மில்லியனிலிருந்து 12.3 மில்லியனுக்கும் பல்கலைக்கழக கல்வியில் 0.74 மில்லியனிலிருந்து 1.69 மில்லியனுக்கும் உயர்ந்துள்ளது. 1964-66 கல்விக்குழுவின் பரிந்துரைகள் தேசிய கல்விக் கொள்கையின் அடித்தளமாக அமைந்து, திட்ட செயல்களை உருவாக்க வழிமுறையை அளிக்கிறது. மத்திய மாநில அரசுகள் பாடத்திட்டத்தை உயர்த்தவும், பாடப்புத்தகங்கள், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும் சில முயற்சிகளை எடுத்துள்ளன. கல்வி, தொழில் பற்றிய வழிகாட்டுதலை அளிக்கவும், அறிவியல் துறை, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி இவற்றிற்கு தேவையான வசதிகளை வளர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வி உதவித்தொகை, இலவச படிப்பு ஆகியவை வெகுவாக அதிகரிக்கப்பட்டு, குறிப்பாக பின் தங்கிய வகுப்பினருக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் ஊதிய நிலைகள், பணி சூழல்கள் ஆகியவற்றில் முன்னேற்றம் செய்யப்பட்டள்ளது.

ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்

ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உணவு மற்றும் சக்தி இவற்றில் ஓரளவு சுய தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்ட செயல் முறைகள் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை உருவாகியது. நாட்டினுள்ளும், உலக அளவிலும் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த முதலிடம் கொடுக்க வேண்டி மற்ற எல்லா குறிக்கோள்களையும் ஒதுக்கி வைக்க வேண்டிய நிலை உருவானது.

1974 - 75க்கு இடைப்பட்ட பகுதியில் நாம் பணவீக்கத்திற்கான திட்டத்தை உருவாக்கலாம். இதன் விளைவாக மத்திய மாநில அரசுகள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பணவீக்க கட்டுப்பாட்டில் நம் வெற்றி உலக கவனத்தை ஈர்த்தது. உணவுப்பொருள்கள் உற்பத்தி எப்போதும் இல்லாத அளவில் 118 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. சமுதாயத்தின் எல்லா பகுதியினருக்கும் நன்மை ஏற்ப்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி, உர உற்பத்தி நிறுவனங்களின் செயல்களிலும் வெகுவான முன்னேற்றம் ஏற்பட்டது. பொருளாதாரத்தின் சில பகுதிகளில் தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டது.

ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்

மக்களின் வாழ்க்கை நிலை, நடத்தை இவற்றை முன்னேற்றவும், தனி நபர்களின் புத்தி கூர்மை, சமுதாய உணர்ச்சிகளின் வளர்ச்சி இவற்றிக்கு உதவவும், அவர்களின் அன்றாட அடிப்படை தேவைகளை எதிர்நோக்கும்படி செய்யவும் கல்வியே ஒரு சிறந்த சாதனம் ஆகும். மனிதவள மேம்பாட்டுத்திட்டங்கள் நான்கு அம்ச குறிக்கோள்களை பெற்றுள்ளன

 • தனிநபர்களை பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க தயார் செய்தல்.
 • அவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், தம் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் வளர்ச்சி முறைகள் இவைகள் பற்றிய உணர்வை ஏற்படுத்துதல்.
 • ஒரு நல்ல நாட்டை உருவாக்கத் தேவையான நன்னடத்தை, சமூக கலாச்சார பண்புகள் பற்றிய உணர்வை ஏற்படுத்துதல்.
 • தேசிய வளர்ச்சிக்கு தேவையான பயனுள்ள திட்டங்களுக்கு உதவ தேவையான திறன்கள், பண்புகள் அறிவு வழங்குதல் ஆகியவை அடைவதற்காக கல்வித்திட்டம் குறிப்பிட்ட குறிக்கோள்களை நோக்கி செயல்பட வேண்டும்.

சமூக நலனின் முன்னேற்றத்திற்கான செயல்களில் அனைவரையும் பங்கு பெறச்செய்தல். மக்களின் உடல், சிந்தனை, கலாச்சார வளர்ச்சிக்கான வாழ்நாள் முழுவதும் தொடரும் கல்வியை அளிக்கவும் சமூக மாற்றங்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை உண்டாக்கவும் முயற்சி எடுத்தல். சமுதாயத்தின் பொருளாதாரம், சமூக குறிக்கோள்களை கருத்தில் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம் இவற்றிற்கிடையே ஒரு பயனுள்ள தொடர்பை ஏற்படுத்துதல். மதசார்பின்மை, ஜனநாயகம், உழைப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல். தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கேற்றலை வளர்த்தல். கலாச்சாரம், கல்வி, தேசிய ஒருமைப்பாடு இவற்றை தாண்டி கலை, இசை, கவிதை, நடனம், நாடகம், நாட்டுப்புறக்கலை இவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல்.

ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம்

எந்த முன்னேற்ற திட்ட அமைப்புகளிலும் மனிதவள மேம்பாடு முக்கிய அங்கமாக கருதப்பட வேண்டும். 1968-ல் தேசிய கல்விக் கொள்கையின் மீது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் கல்வியின் அடிப்படை பங்கை உணர்த்தினர்.

 • கல்வி வாய்ப்புகளை தொடந்து முயலுதல்.
 • எல்லா நிலைகளிலும் கல்வியின் தரத்தை உயர்த்த தீவிரமாக தொடர்ந்து முயற்சித்தல்.
 • கல்வி தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம். எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்  மேலான சமூக பொருளாதார வாய்ப்பு மற்றும் எல்லோருக்கும் பொருத்தமான பயனுள்ள சூழ்நிலையை உருவாக்குகிறது.

நம் நாடு இதுவரை அனைவருக்கும் தொடக்கநிலை கல்வி, எழுத்தறிவில்லாமையை ஒழித்தல், முதியோர் கல்வியில்லாமையை ஒழித்தல் ஆகிய குறிக்கோள்களை அடையாத போதிலும் 1991ம் ஆண்டின் கணக்கெடுப்பு 52 சதவிகிதம் கற்றோரின் அளவையும், பெண்கல்வி விகிதம் அதிகமாக உள்ளதையும் காட்டுகிறது. இது மிகவும் ஊக்குவிப்பதாக உள்ளது. எட்டாவது திட்ட காலத்தால் நாடு தன் நீண்டகால கல்விக் குறிக்கோள்களை அடைவதிலும் உயர்ந்த விகித பொருளாதார வளர்ச்சி முயற்சிகளுக்கு உதவும் வகையிலும் செயல்பட தயாராக உள்ளது.

ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்

மனித வளர்ச்சியில் கல்வியே மிக முக்கிய மூலதனம் ஆகும். மக்களின் வாழ்க்கை தரத்துடன் தொடர்புள்ள ஆரோக்கியம், சுகாதாரம், உற்பத்தி ஆகியவற்றின் முன்னேற்றத்தை கல்வி வெகுவாக தீர்மானிக்கின்றது. பிரதம மந்திரியின் சிறப்பு நடவடிக்கை திட்டம், சமூக வசதிகளை விரிவுபடுத்தும், முன்னேற்றம் செய்தலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. நாட்டின் சட்டத்தில் கூறியபடி 5ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்துதல், நம் குறிக்கோள்கள் பற்றி இறுதிநிலை வரை எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்குதல், தொடக்க கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை எல்லா நிலைகளிலும் கல்வியின் தரத்தை உயர்த்துதல்.

ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கவனிக்கப்படும் பிரச்சினைகள்

 • ஆசிரியர் பயிற்சி, பணிமுன் பயிற்சி, பணியிடைப் பயிற்சி ஆகியவற்றில் தொடக்க நிலையிலேயே கற்பிக்கும் முறைகளை உயர்த்த நினைத்தல்.
 • ECE மையங்களை பார்த்து கொள்ள அப்பகுதி பெண்கள், குழந்தைகளை ஒன்று திரட்டி சேர்த்தல்.
 • NCERT, SCERT இவற்றில் உள்ள ECE குழுக்களை வலுப்படுத்துதல்.

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம்

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளானது உயர் கல்வியில் 18 - 23 வயதுள்ள மாணவர்களின் சேர்க்கையை திட்ட முடிவிற்குள் 6 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்துதல். மாநிலத்திற்கு உகந்த வழிமுறைகளை பின்பற்றுதல், உயர்கல்வி முறையை எளிதாக்குதல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டுள்ளன. தொலைதூரக்கல்வி முறை மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் இவற்றை நிர்வகிப்பதில் தனியாரின் பங்கீட்டை அதிகரித்தல், இந்திய சேவையை உலகமயமாக்குவதில் உள்ள பிரச்சினைகளை சமாளித்தல், கல்வி அறிவு பெற்றோரின் எண்ணிக்கையை உயர்த்துதல்.

பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்

சமூக, பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. விரைவான முன்னேற்றம், எல்லா துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்த ஒரு முழுமையான வழிமுறையை அளிக்கிறது. பாதியில் பள்ளி படிப்பை நிறுத்துபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை அமல்படுத்தப்பட்டது.

ன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்

பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டம், இதற்குமுன் இல்லாத அளவு கல்வியை விரிவுபடுத்தல், விரைவான உள்ளார்ந்த தொடர் வளர்ச்சி, கல்விக்கு அளிக்கப்படும் தரத்தை வெகுவாக முன்னேற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

கல்வியில் நிதி நிலை அமைப்பு

மத்திய அரசு கல்விக்காக செலவழிக்கும் தொகையினை மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் 2. திட்டக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த அளிக்கும் திட்ட மானியம் 3. மத்திய அரசு நேரடியாகத் தாங்கள் நிர்வகிக்கும் கல்வி நிறுவனங்களின் செலவுகள் ஆகியவை ஆகும். மாநிலங்கள் தங்களது வருவாயில் நான்கில் ஒரு பங்கினை கல்வி வளர்ச்சிக்காக செலவழிக்கின்றன. இது கல்வியின் முக்கியத்துவத்தினைப் பறைசாற்றுவதாக உள்ளது.

அரசு தரும் மானியங்கள்

 • பள்ளிப் பராமரிப்பு மானியம்.
 • புத்தகங்களுக்கான மானியம்.
 • கற்பித்தல் துணைக்கருவிகள் வாங்க மானியம்.
 • பள்ளிக் கை வேலைக்கான பொருட்கள் வாங்க மானியம்.
 • பள்ளிக்கான மனை, கட்டிடம், கிணறு, விளையாட்டுத்திடல் ஆகியவற்றுக்கு மானியம்.

மாணவர்களின் கல்விக் கடன் உதவிகள்

கல்விக்குழு (1964-66) கல்வி உதவித் தொகை சலுகையைத் தீவிரமாக்க சில பரிந்துரைகளை வெளியிட்டது. அவைகளாவன:

 • கல்வி உதவித் தொகையை எல்லா நிலைகளிலும் தொடர்ந்து அளித்திட வேண்டும்.
 • எல்லா வகுப்பினருக்கும் சமவாய்ப்பு என்ற அடிப்படையில் உதவித் தொகையை அளிப்பதில் சில நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
 • மீத்திறனுள்ள மாணாக்கர்களுக்கு உகந்த வகையில் சில தரமுள்ள கல்வி நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும்.

நம் நாட்டில் கல்வி உதவித் தொகை இன அடிப்படையிலும் திறமை அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன. சமுதாயத்தில் அடித்தளத்தில் உள்ள பின்தங்கிய, பழங்குடி மக்களுக்குச் சில சலுகைகளும் உதவித் தொகைகளும் தரப்படுகின்றன. இது சமுதாய ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் நோக்கம் உடையது.

இதர உதவிகள்

தனியார் ஏற்படுத்தும் அறக்கொடைகளும், அயல் நாட்டு உதவிகளும் இந்தியக் கல்வி மேம்பாட்டிற்குத் துணை நிற்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் நமது கல்விக்குப் பண உதவி செய்த வண்ணம் இருக்கின்றன. மேலும் ஐக்கிய நாட்டு சபையின் பல அங்கங்கள் மானியங்களையும், நன்கொடையும் தருகின்றன.

முடிவுரை

கடந்த காலத்தில் கல்வித்திட்டமிடல் அதன் அடிப்படை கருத்துகளிலும், நிறைவேற்றும் முறைகளிலும் பலநிலைகளை கடந்து வந்துள்ளது. கல்வித் திட்டமிடல் ஒரு கல்வி நிறுவனம் அல்லது அமைப்பின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தேவையான செயல்திட்டம், அல்லது நடைமுறை திட்டம் இவற்றை தயாரிக்க மிக அவசியமானது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்

2.95652173913
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top