பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய அறிவாண்மை ஆணையம்

தேசிய அறிவாண்மை ஆணையம் அளித்த பரிந்துரைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தேசிய அறிவாண்மை ஆணையம் அளித்த பரிந்துரைகள்

கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் கிடைத்தல்

கல்வி பெறும் உரிமை

86வது அரசியல் திருத்தச்சட்டம் கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. எனினும் இந்தியக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அதை நிறைவேற்ற போதிய நிதி உதவியை மத்திய அரசு வழங்கவேண்டும். ஒவ்வொரு மட்டத்திற்கும் குறைந்தபட்ச கல்வித்தரங்கள் நிர்ணயிக்கப்படல் அவசியமானதாகும்.

மொழி

ஆங்கிலம் கற்றலும், அதைத் திறம்படி பயன்படுத்துதலும் உயர் கல்வி பெறுதலை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காரணி ஆகும். எனவே, தாய்மொழியோடு கூட ஆங்கிலத்தையும் முதல் வகுப்பிலிருந்தே கற்பிக்கத் தொடங்கலாம். ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்திட கிடைத்திடும் அனைத்து ஊடகங்களையும் வழக்கமான கற்பித்தல் முறைகளுக்கு வலுவூட்டும் உறுதுணையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மொழிபெயர்ப்பு

பல மொழிகள் பேசப்படும் நம் நாட்டில் அனைத்து மொழிப்பிரிவு மக்களிடமும் அறிவினை கொண்டு சேர்ப்பதில் மொழி பெயர்ப்பு சிறப்பிடம் பெறுகிறது. இதற்கென தேசிய மொழி பெயர்ப்பு பரப்பு இயக்கம் தொடங்கப்படல் வேண்டும். மொழிப் பெயர்ப்பாளர்களுக்கு முறையான பயிற்சியும், தேவைப்படும் வசதிகளும் கருவிகளும் வழங்கப்பட வேண்டும்.

நூலகங்கள்

நூலக மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை சீரமைத்து மேம்படுத்திட தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகங்களைப் பற்றிய விவரங்களை விரிவான சுற்றாய்வு மூலம் சேகரித்தல், அதிக அளவு சமுதாயப் பங்கேற்பை உறுதி செய்தல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பங்களை பல்வகை நூலகப் பணிகளுக்குப் பயன்படுத்தல் போன்ற மேம்பாடு நடவடிக்கைகளை செயற்படுத்தி தொடர்ந்து கண்காணிக்க தேசிய நூலக ஆணையம் தோற்றுவிக்கப்படல் வேண்டும்.

தேசிய அறிவு வலைப்பின்னல்: வெற்றிகரமான ஆய்விற்கு உயிரோட்டமுள்ள கலந்துரையாடல்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் மூலகங்களை பகிர்ந்து கொள்ளல், அனைத்து அறிவு நிலையங்களையும் இணைத்தல் ஆகியவை தேவைப்படுகின்றன. இதற்குத் தேவை மின்னியல் எண் வடிவிலமைந்த அகன்ற வழி வலைத்தடம் ஆகும். இது கிகாபிட்திறன் உடையதாக இருக்க வேண்டும்.

தகவல் தளங்கள்

தேசிய அளவிலான வலை தளங்கள் பின்வரும் முக்கிய துறைகளுக்காக உருவாக்கப்படல் வேண்டும்.

நீர்வளம், ஆற்றல், சுற்றுச்சூழல், ஆசிரியர்கள், வேளாண்மை, உயிரியல் பல்வகைமை, உடல்நலம், வேலைவாய்ப்புகள், குடிமக்களது உரிமைகள் போன்றவை இதில் அடங்கும். ஒவ்வொரு தகவல் தளமும் குறிப்பிட்ட துறை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற்று, தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் வகையில், அதனை நிர்வகிக்க அத்துறையைச் சார்ந்த வல்லுநர்கள், துறைத்தகவல்களைப் பெற்று பயனடையும் அனைத்து பிரிவினரின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். அசிம்பிரேம்ஜி (விப்ரோ) ஆசிரியர்களுக்கான தகவல்தளத்தைத் தொடங்க ஆதரவளித்துள்ளார். தேசிய அறிவாண்மை ஆணையம் மேலும் பல தளங்களைத் தொடங்க ஊக்குவித்துள்ளது. இதன் காரணமாக நீர்வளத்திற்கான தகவல்தளத்தை உருவாக்கிட அர்க்யம் அறக்கட்டளையும், ஆற்றலுக்கான தகவல்தளத்திற்கு ஆற்றல் ஆய்வுக்கழகமும், சுற்றுசூழல் தகவல் தளத்திற்கு அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான ஆய்வு மையமும், உயரியப் பல்வகைக்கான தகவல் தளத்திற்கு அசோகா அறக்கட்டளையும் பொறுப்பேற்க முன்வந்துள்ளன.

உடல்நலக் தகவல் வலைப்பின்னல்

உடல்நலம் பேணும் மையங்கள் அனைத்தும் இணையதள வலைப்பின்னல் மூலம் தொடர்பு படுத்தப்படல் வேண்டும். எல்லா அரசு மற்றும் தனியார் உடல் நலம் பேணும் நிலையங்களும் மின்னியல் முறையில் இணைக்கப்படுதல், மருத்துவப் பதிவுகள், தகவல்கள், புள்ளிவிவரங்கள், தீர்வுகள் பற்றி விரைந்து தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள உதவும்.

கருத்தாக்கங்கள்

கல்வி முறைமை அறிவுசார் கருத்தாக்கங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளவும், பரப்பவும் உதவுகிறது. தனி நபரது வளர்ச்சிக்கும், நாட்டின் சமூக பொருளாதாரம் மேம்படுத்திட கல்வியே திறவுகோலாகும். எனவே தேசிய அறிவாணையம் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி, தொழில் நட்பக் கல்வி என கல்வியின் அனைத்து அம்சங்களுக்கும் புத்துணர்ச்சி ஊட்டுவதில் கவனம் செலுத்துகிறது.

பள்ளிக்கல்வி

தரமான பள்ளிக்கல்வியை அனைவருக்கும் கிட்டச் செய்தல் என்பதை நனவாக்க, தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியில் பேரளவு விரிவாக்கம் செய்ய வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் அதிகாரப்பரவல், பள்ளி நிர்வாகத்தில் தன்னாட்சி, நிதி வழங்கலில் நெகிழ்ச்சித்தன்மை போன்றவை நீண்ட கால மாற்றங்களைத் தரவனவாகும். தரத்தையும், செயல் பொறுப்பையும் மேம்படுத்திட, அடிப்படை வசதிகளைப் பெருக்குதல், பள்ளித் தணிக்கையின் திறனை மேம்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பெற்றோர், மாணாக்கர், நிர்வாகம் ஆகிய அனைத்துக் கூறுகளும் சேர்ந்து செயல்படல் போன்றவை அவசிய மற்றும் அவசரத் தேவையாகும். வசதி உள்ள இடங்களில் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப அறிவு, அனைத்து ஆசிரியர்கள், மாணாக்கர், அலுவலகப் பணியாளர் ஆகியோருக்கு கிட்டச் செய்ய வேண்டும். தேசிய அறிவாண்மை ஆணையம், கலைத்திட்டத்தில் தேவையான சீர்திருத்தங்களைச் செய்தல். குருட்டு மனப்பாட முறையிலிருந்து கருத்துகளைப் புரிந்து கொள்ளும் வகையில் தேர்வுகளை மாற்றி அமைத்தல், ஆசிரியர்களது திறன், மேம்பாடு ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளது.

தொழில்சார் கல்வியும் பயிற்சியும்

பொதுக்கல்விப் பிரிவுடனேயே தொழில்சார் கல்வியும் இணைக்கப்படுதல் கல்வி முறையை நெகிழ்ச்சி உடையதாகவும், மேம்படுத்துவதாகவும் இருக்கும். அரசும் தனியாரும் ஒத்துழைக்கும் படிமம் இதற்கு உறுதுணையாக இருக்கும். தற்சமயம் தொழிலாளர்களில் 7% அளவினரே கட்டமைப்புக் கொண்ட தொழிற்பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். எனவே அமைப்பு சாராதா மற்றும் வழக்கமான தொழில்முறை சாராதா தொழிலாளருக்கு பயிற்சி தருதல் உற்பத்தித் திறனை அதிகரிக்கும். இத்தகையோருக்கான படிப்புகள் மற்றும் பயிற்சி தரும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும், பயிற்சிச் சான்றிதழ் தரவும் வலுவான முறைமை தேவைப்படுகிறது. இது முறைசாரா தொழிலாளர்களும் உயர்கல்வி பெற்றிடும் வாய்ப்பை உருவாக்க வழிவகுப்பதாக இருக்கும்.

உயர்கல்வி

இந்நிலையில் கவனம் பெற வேண்டியவை:

  1. விரிவுபடுத்துதல்,
  2. மேன்மை,
  3. அனைவரையும் ஏற்றல்.

2015க்குள் இந்தியாவில் 1,500 பல்கலைக்கழகங்களை ஏற்படுத்த வேண்டும். சுதந்திரமான உயர் கல்விக்கான ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

உயர்கல்வியின் தரத்தை உயர்த்த தற்போதுள்ள பல்கலைக்கழகங்களில் கலைத்திட்டத்தை அடிக்கடி மாற்றுதல், ஒவ்வொரு பாட உட்பிரிவிற்கும் தர மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துதல், அக மதிப்பீட்டு முறையை மேம்படுத்துதல், ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், கல்வி நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகளை சீர்திருத்துதல் போன்ற நடவடிக்கைகள் தேவை.

தரமான பட்ட முன்வடிப்புக் கல்வியைத் தர, பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளால் முடியவில்லை. இரண்டாண்டு துணை பட்டப்படிப்புகளை வழங்கும் சமுதாயக் கல்லூரிகளின் முன்மாதிரிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். இவை பொதுக்கல்வி, தொழில் சார்புடைய கல்வி ஆகிய இரண்டையும் தரலாம்.

சமூக பொருளாதாரக் காரணிகள் காரணமாக தகுதியுடைய எந்த மாணக்கனுக்கும், உயர் கல்வி கிடைக்காமல் போகக்கூடாது.

கணிதம் அறிவியல் பிரிவில் திறன்மிகு மாணாக்கர் சேர்க்கை

அறிவியல் மற்றும் ஆய்வுக்கு புத்துயிர் ஊட்ட திறன்மிகு மாணக்காரை கணித அறிவியல் பாடப்பிரிவுகள் ஈர்க்க வேண்டும். கட்டமைப்பு, ஆசிரியர் தரம், அறிவியல் முறைகளின் பரப்பு ஆகியவை மேம்படுத்தப்படல் வேண்டும். அனைத்து நிலை ஆசிரியர் பயிற்சிகளும் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.

உயர்தொழில் கல்வி

மருத்துவம், சட்டம், மேலாண்மை, பொறியியல் உட்பட எல்லா உயர் தொழில் கல்விப்பிரிவுகளும், பரிந்துரைக்கப்பட்டுள்ளன சுதந்திரமான உயர் கல்விக்கான ஒழுங்குமுறை ஆட்சி அமைப்பின் கீழ் கொண்டு வரப்படல் வேண்டும். இத்துடன் நம்பகத்தகுந்த தர வரிசை அளித்திட, பல்வேறு தர சான்றளிக்கும் அமைப்புகளும் இயங்கிட வேண்டும். இவை தவிர, நிறுவனங்களுக்கு அதிக அளவு தன்னாட்சி அளித்தல், தற்சமயம், நடைமுறையிலுள்ள தேர்வு முறையைச் சீர்திருத்தம் செய்தல், கலைத்திட்ட மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் ஆகியவையும் தொழில் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் வழிமுறைகளாகும்.

தரமான முனைவர் படிப்புகள்

பி.எச்டி என்னும் ஆய்வு நிறைஞர் பட்டம் உயர்தரமுடையதாக்கப்படல் வேண்டும். பல்வேறு கல்விப் பிரிவுகளுக்கிடையே இடைவினை அதிகரிக்க வேண்டும். கல்வியின் எல்லா நிலைகளுக்கும் ஆராய்ச்சிக்கும் பெருமளவு முதலீடு தேவைப்படும். ஆராய்ச்சிக்கேற்ற இயல்புச் சூழல் ஏற்பட தேசிய ஆராய்ச்சிப் பணி இயக்கம் துவக்கப்படல் வேண்டும்.

திறந்த நிலை, தொலைநிலைக் கல்விகள் மற்றும் திறந்தநிலை கல்வி மூலகங்கள்

உயர் கல்வியில் ஐந்தில் ஒரு பங்கு மாணாக்கர் திறந்த நிலை, மற்றும் தொலைநிலைக் கல்வியில் பயில்கிறார்கள். தொலைநிலைக் கல்வியில், தேசிய தகவல் தொடர்பு தொழில் நுட்ப கட்டமைப்பை ஏற்படுத்துதல், வலைப்பின்னல்கள் வழியே சுலபமான தகவல்களை இலவசமாக பெற வாய்ப்பு ஏற்படுத்ததல், பணி மைய சேவையை பயன்படுத்துதல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். தரமான பாடப்பொருள்களைத் தயாரித்தலும், அனைவருக்கும் பயன்படும் உலகளாவிய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், பருவ இதழ்கள் ஆகியவற்றை நூலகங்களில் இடம் பெறச் செய்தலும் வேண்டும்.

படைப்பு

புதிய அறிவை உருவாக்கலும் ஏற்கனவே உள்ள மூலகங்களைப் பாதுகாத்தலும், உலகளாவிய அறிவுசார் பொருளாதாரத்தில் போட்டியிட எந்தவொரு நாட்டிற்கும் இன்றியமையாததாகின்றன.

அறிவுசார் சொத்துரிமைகள்

உலகத்திற்கே அறிவுத்தலைமை ஏற்க இந்தியா தயாராக வேண்டும். உலகத்தரம் வாய்ந்த அறிவுசார் சொத்துரிமை அமைப்பு தேவை. இத்துறையில் பயிற்சிதர பள்ளிகளும், தனி அலுவலகங்களும் தேவை. இந்திய மரபுவழியான் அறிவுச்செல்வங்களைப் பாதுகாப்பதுடன் புதிய தொழில்நுட்பப் பகுதிகளில் முக்கிய அறிவுச் சொத்துரிமைகளையும் அடையாளம் காண வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கும், படைப்புகளுக்கும் காப்புரிமை பெறுவதால் ஏராளமான வருவாய் கிட்டும்).

பொது நிதி உதவி மூலம் பெறப்பட்ட ஆய்வுகள்

பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் தங்களது ஆராய்ச்சி முடிவுகள் மூலம் பெரும் தொகை ஈட்ட உதவிடும் வகையில், காப்புரிமை பெறுவதற்கான சட்ட அமைப்பு உருவாக வேண்டும். கண்டுபிடித்தவர்களுக்கும், வருவாயில் ஒரு பகுதி கிடைக்க வேண்டும். தேசிய அறிவியல் மற்றும் சமூக அறிவியல் அறநிறுவனம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

புதுமை காணல்: கலைத்திட்டத்தில் புதுமை காணும் திறனை வளர்க்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இவ்வாய்ப்புகள் உருவாக்கபடின் தொழில் நிறுவனங்கள், அரசு, கல்வி அமைப்பு ஆகியவை சீரிய முறையில் இணைந்து செயல்பட முடியும்.

தொழில் முனைப்பு

புதிய தொழில்களைத் தொடங்கி, இயக்கும் ஆற்றலும், துணிவும் வளர்க்கப்பட ஒற்றைச் சாளர முறையின் மூலம் அனுமதியும் வசதிகளையும் பெறச் செய்திட வேண்டும். அனுமதி நடைமுறைகள் எளிமையாக்கப்படல் வேண்டும். தொழில் முனைப்பு பற்றி பள்ளி, கல்லூரிகளில் அறிமுகப்படுத்த வேண்டும்.

மரபுவழி வந்த மருத்துவமுறைகள்

அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனம், இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய அறிவியல் கழகம் போன்றவற்றின் தரத்தை உடைய கல்வி நிறுவனங்கள் மூலம், சான்றுகள் அடிப்படையில் மரபுவழி மருத்துவ முறைகளின் செயல்திறனை மதிப்பிடும் கலைத்திட்ட வடிவமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

வேளாண்மை

வேளாண்மை ஆராய்ச்சி நவீனப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்

கிராம மக்கள் தரம் வாய்ந்த வாழ்வினை நடத்த உதவ வேண்டும். கிராம வேலை வாய்ப்புத் திட்டங்கள், புதிய தொழிற்கருவிகளை வடிவமைத்தல், தொழிலாளரது மதிப்பை உயர்த்துதல், தொழிலாளர்களது உற்பத்தித்திறனை அதிகரித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

பணிகள்

அரசு நேர்முகத் தொடர்பு அதிகரிக்கப்பட, மக்களனைவருக்கும் அறிவுசார் தொண்டுகள் எளிதாக கிட்டச் செய்ய வேண்டும். இதற்கு அரசு செயல்பாடுகளில் மின்னியல் ஆட்சியை செயல்படுத்த வேண்டும்.

மின்னியல் ஆட்சிமை

இது கணினி மயமாக்குதலை மட்டும் குறிக்காது. நாட்டின் குடிமக்களை மையமாகக் கொண்டு அரசின் அனைத்து சேவைகளையும் திறமையாகவும், விரைவாகவும், எளிமையான செயல்கள் வாயிலாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் அளித்திடும் வகையில் அரசின் செயல்பாடுகளை உயர் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றியமைத்தலைக் குறிக்கிறது. தொடக்கத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் 10 அரசு சேவைத் துறைகளை தேர்ந்தெடுத்து மின்னியல் ஆட்சிமையை புகுத்திடலாம். பின்பு படிப்படியாக ஏனைய துறைகளுக்கும் விஸ்தரிக்கலாம்.

தேசிய அறிவாண்மைக் கழகத்தின் பரிந்துரைகள் செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளன. மக்களின் நல்வாழ்வில் ஈடுபாடு கொண்ட டாக்டர் அப்துல்கலாம் அவர்களது கனவான அறிவார்ந்த சமுதாயத்தை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கிவிட்டது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்

3.10526315789
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top