பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மனிதத் திறன்பாடு

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

மனிதர்கள் உலகில் தோன்றி, காலப்போக்கில் அறிவார்ந்த மனிதர்களாய் மாறி, படிபடியாக நாகரீகத்தில் வளர்ச்சியடைந்த விவரங்கள் அனைத்தும், மனிதப் பரிணாம புதிய ஆராய்ச்சிகளின் விளைவாக தற்போதைய காலத்தில் கிடைத்துள்ளன. மனிதன் முதன் முதல் ஆப்பிரிக்காவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் 4 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரே பிரிவாகத் தோன்றினான் என்ற கருத்து நிலவுகின்றது. இங்கு வாழ்ந்த அறிவார்ந்த மனிதன் கற்களால் ஆன கருவிகளைப் பயன்படுத்தினான் என்றும் தெரிய வந்துள்ளது.

மாறாக, அதே காலக் கட்டத்தில், ஆசியாவில் ஒரு மாறுபட்ட மனித இனத்தவர் வாழ்ந்து வந்தனர் என்பதும் ஆராய்ச்சியின் விளைவாக கிடைத்துள்ள செய்தியாகும். எப்படியெனில், 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே, அறிவார்ந்த மனிதர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தது பல ஆதாரங்கள் வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதலாவது ஆதாரமாக, இந்தோனேஷியாவில் காணப்பட்ட மனிதர்களின் எலும்பு படிமங்கள் ஆகும். இரண்டாவதாக, சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஆசிய இனத்தைச் சார்ந்த மண்டை ஒடு ஆகும். இது மட்டுமல்லாது, இந்த அறிவார்ந்த மனிதர்கள் மூங்கிலாலான கருவிகளைப் பயன்படுத்தினர் என்பதும் தெளிவாகிறது.

எனவே இவ்வினத்தவர்களாகிய ஆப்பிரிக்க, ஆசிய அறிவார்ந்த மனிதர்கள், தங்கள் பூர்வீகப் பிறப்பிடங்களிலிருந்து வெளியேறி போராட்டமான வாழ்க்கையை மேற்கொண்டு, அறிவுத்திறன், தொழில்திறன் கொண்ட இன்றைய மனித இனத்துக்கு முன்னோடியாக விளங்குகின்றனர்.

மனித நாகரீக வளர்ச்சி

வரலாற்று காலத்தினை, நமக்கு கிடைத்துள்ள செய்திகளின் அடிப்படையில் பல்வேறு நிலைகளாகப் பிரிக்கலாம். முதல்நிலையாக, இரண்டு மில்லியன் ஆண்டு காலமாக, மக்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்ததாகக் கணிக்கப்படுகின்றது. அடுத்த கட்டமாக, கடந்த 10,000 ஆண்டு காலமாக நடைப்பெற்றுள்ள பிரமிக்கத்தக்க நாகரீக மாற்றங்கள் என கருதப்படுகிறது. அடுத்து, அதைவிடச் சிறப்பாக போற்றப்படுவது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நாகரீக காலமாகும்.

வேளாண் தொழிலில் விதை விதைக்கக் கற்ற மனிதன், அத்தொழிலுக்காக ஓரிடத்தில் நிலையாகக் குடியமர ஆரம்பித்தான். அப்பொழுதே, ஆற்றங்கரை தொட்டில்களில் நாகரீகத்திற்கான விதைகளை விதைத்து வளர்க்கலாயினான். இதன் பயனாக, ஆற்றுங்கரைச் சமவெளிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் தோன்றின. எடுத்துக்காட்டாக, நாகரீகச் சிகரமான, சிந்து சமவெளியில் காணப்பட்ட மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரட்டை நகரங்களில் 30,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்தனர். காலப்போக்கில் நாகரீகங்கள் வளர்ந்த போது மக்கள் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறி பரந்த இடங்களை நோக்கி பயணித்தனர். அவ்வாறு மத்திய ஆசியாவிலிருந்து வெளியேறிய மக்கள் ரோமானிய மற்றும் சீன நாகரீகத்தை மாற்றியமைத்தனர்.

நாளடைவில் வேளாண் தொழிலினால் கிராமங்கள் சிறப்புற்றன. உற்பத்தி வளர்ச்சி உபரிக்கு வழிகோலியது. உபரியினால் வாணிகமும் பிற தொழில்களும் வளர்ந்தன. மதங்கள் தோன்றின. நகரங்கள் பெரு நகரங்களாயின. அறிவியலும் நுட்பமும் வளர்ச்சியடைந்தன. மக்கள் தொகை பெருகியது. எதிர்மறை நிகழ்ச்சிகளாக, புரட்சிகள் ஏற்பட்டன. அநாகரீக நடத்தைகளும் தலை தூக்கின. அன்பு வாழ்க்கை அவல வாழ்க்கையாக மாறியது. அதிகாரம், அடக்குமுறை வாடிக்கையாயின, பொருளாதார, சமுதாயப் பாகுபாடுகள் பெருகின. பெண் சமுதாயப் பாகுபாடு ஏற்பட்டது. இடைக்காலத்தில் அடிமை வாணிகம், மக்களின் கட்டாய இடமாற்றம், மக்களின் சிதறல் என உலகளவில் நிகழ்ச்சிகள் அதன் தாக்கங்களுடன் ஏற்படலாயின. கிரேக்கர்கள், ரோமர்கள், சீனர்களால் தத்துவமும் அறிவியலும் வளர்ந்தன. வானவியல் அரேபியர்களால் வளர்க்கப்பட்டது. இவ்விதமாக, நாகரீக வாழ்க்கையில் புதுமைகளும், செழுமையும் ஏற்பட்டது.

சுதந்திரப் போராட்டங்கள்

ஐரோப்பியர்கள் கடல் பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள். எனவே பதினாராம், பதினேழாம் நூற்றாண்டுகளில் கொலம்பஸ், வாஸ்கோ-டா-காமா, மெகல்லன் போன்றவர்கள் புதிய கடல் வழிகளைக் கண்டுபிடித்து கடற்பயணங்களை தொடர்ந்தனர். வீரர்கள், வணிகர்கள், குருக்கள், நிர்வாக வல்லுநர்கள் பலரும் இவர்களுடன் கடற்பயணம் மேற்கொண்டனர். இதனால், அறிவுப் புரட்சி ஏற்பட்டது. புவி, கோள வடிவம் கொண்டது என்பது மெய்ப்பிக்கப்பட்டது. நாடுகள் ஆதிக்க நாடுகளாகவும், வல்லரசுகளாகவும் உருவெடுத்தன. பல நாடுகள் அடிமைப்பட்டு சுதந்திரத்தை இழந்து தத்தளித்து கொண்டிருந்தன.

பின்னர் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு சுதந்திர போராட்டம் தொடர்ந்தது. ஆதிக்க நாடுகள் அடக்கு முறையையும் அடிமை நாடுகள் அஹிம்சை போராட்டங்களையும் மேற்கொண்டன. உலகப் போர்களும், சுதந்திரப் போர்களும் நிகழ்ந்தன. இதனால் சமுதாய, கலாச்சார, பொருளாதார சீர்குலைவும் பின்னடைவும் ஏற்பட்டன. எனினும், தென் அமெரிக்க நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக சுதந்திரம் பெற்றன. ஆயினும் காலனி ஆதிக்கங்கள் ஆங்காங்கே இன்றும் நடைபெறுகின்றன. உலகம் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு எனப் பிரிக்கப்பட்டு வேற்றுமைகளுடன் காணப்படுகின்றது. பஞ்சம், வறுமை ஆகியன அரசியல் காரணிகளால் தடுக்க முடியாத ஒன்றாக உள்ளன.

“ஒன்றே உலகம்’, ‘நமது பொதுவான எதிர்காலம்’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு’ என்பன போன்ற கொள்கைகளும், கருத்துகளும் உணரப்படும் போது, மனிதநேயம், சகோதர உணர்ச்சி போன்றவைகள் உலகினை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வனவாகி வெளிப்படுகின்றன. தற்போது ஜெர்மனி இணைதல், சோவியத் யூனியன் விலகுதல் நிகழ்வுகள் இதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நாகரீக முன்னேற்றம் ஒருபுறம் ஏற்பட்டாலும் மறுபுறம் தீவிரவாதம் அல்லது இராணுவவாதம், அடிப்படைவாதம் ஆகிய அநாகரீகமான செயல்களும் பெருகிக் கொண்டே வருகிறது.

பரிணாம மாற்றங்கள், அறிவு வளர்ச்சி மற்றும் கலாச்சார முன்னேற்றம்

இன்றைய மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைவது, பரிணாம மாற்றங்கள், அறிவு வளர்ச்சி மற்றும் கலாச்சார முன்னேற்றம் ஆகியனவாகும். இவை மனிதர்களை "அறிவுச் சான்றோர்களாக" மாற்றியமைத்துள்ளன. கடந்த நூற்றாண்டுகளின் தொழில் மற்றும் அறிவியல் திறன் வளர்ச்சியே மக்கள் பெருக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அண்மைக் காலத்தில் மக்கள் தொகை பெருக்கம் மனித முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய தடையாக உள்ளது. இருபதாம், இருபத்தோறாம் நூற்றாண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி ஒரு பெரும் சிக்கலாக இருந்து வருகின்றது. எனினும், "மனித வளமே வளங்களுக்கெல்லாம் தலையாய வளமாகத் திகழ்கின்றது" என்ற கூற்று இன்றைய காலக் கட்டத்தில் பொருந்துமா? என்பதையும், மக்கள் தொகை வளர்ச்சி, சமுதாய-பொருளாதார முன்னேற்றத்திற்கு எவ்வாறு தடையாக உள்ளது என்பதையும் இனி விவரமாகக் காண்போம்

உலகின் இன்றைய மக்கள் தொகை ஏறத்தாழ 7 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள்தொகைப் பரவலை கூர்ந்து கவனிப்போமேயாகில், பல இடங்களில் அதிகமான மக்கள் தொகையையும், சில இடங்களில் குறைவான மக்கள் தொகையையும் கொண்டுள்ளது தெரியவரும். இவ்வாறு உலகில் மக்கள் தொகை சீரற்று பரவிக் கிடக்க இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. அவையாவன:

 1. நிலத்தோற்றம் மற்றும்
 2. காலநிலை என்பவையாகும்.

தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி விழுக்காடு 13. இது நமது கணிப்புக்கு குறைவாக தென்பட்டாலும் மக்கள் தொகை வெடிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மக்கள் தொகை

கி.பி. முதல் நூற்றாண்டில் உலகின் மக்கள் தொகை 300 மில்லியனுக்கும் குறைவாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் 600 மில்லியனாகப் பெருகியது. 1820 ஆம் ஆண்டில் 1,000 மில்லியனாக வளர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் 2,000 மில்லியனாக அதிகரித்தது. 1960 ஆம் ஆண்டில் 3,000 மில்லியனாக வளர்ந்தது. 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 6,000 மில்லியனுக்கு மேல் உள்ளது.

மேற்கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரத்தில், மக்கள் தொகை எவ்வாறு துரிதமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது எனத் தெளிவாக விளங்குகின்றது. முன்னொரு காலத்தில் 1700 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிய மக்கள் தொகை, தற்பொழுது 30 வருடங்களிலேயே இரட்டிப்பாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனக் கூறினால் மிகையாகாது.

உலகின் தற்போதைய வளர்ச்சி வீதம் சுமார் 1.3 சதவீதம் என்பது 54 ஆண்டுகளில் இரட்டிப்பாவதை குறிக்கின்றது. இவ்வளர்ச்சி வீதம் தொடர்ந்தால், இப்பொழுது சுமார் 6 பில்லியனாக உள்ள உலக மக்கள் தொகை 2054 ஆம் ஆண்டு 12 பில்லியனாக இரட்டிப்பாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 35 வருடங்களின் இரட்டிப்பான உலக வளர்ச்சி வீதம், 1960 இல் 2 சதவீதம் உயர்ந்து சிகரத்தை எட்டியது.

உலகின் தற்போதைய ஆண்டு சராசரி வளர்ச்சி சுமார் 1.3 சதவீதம் ஆகும். இது மிக குறைவாகக் காணப்படினும், உண்மையிலேயே, இது மிக அதிகமான மக்கள் தொகை வளர்ச்சியாகும். உலகம் முழுவதும் இந்த வளர்ச்சி வீதம் சீரற்று காணப்படுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது 1000 மில்லியன் மக்களும், வளரும் நாடுகளில் 4000 மில்லியன் மக்களும் உள்ளனர். இந்த வளர்ச்சி நிலை இவ்வாறாகவே தொடர்ந்தால், வளர்ச்சியடைந்த நாடுகள் 2000 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையையும், வளரும் நாடுகள் 30 ஆண்டுகளில் தற்போதைய மக்கள் தொகையின் இரட்டிப்பையும் எட்டும்.

மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்

கடந்த 400 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சியில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டது. வேளாண் மற்றும் தொழிற்புரட்சி இங்கிலாந்தில் ஏற்பட்டதன் விளைவாக, உலகமெங்கும் பொருளாதார, தொழில் துறை மற்றும் அறிவியல் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. வளர்ச்சியடைந்த பொருளாதார முன்னேற்றம் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஆதரவு அளித்தது. தவிர, மருத்துவத் துறை முன்னேற்றம், நலவாழ்வு, வெள்ளத்தடுப்பு, தீவிபத்து பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகள், மக்கள்தொகையில் இயற்கையாக ஏற்படும் இழப்பினைப் பெருமளவில் தடுத்து நிறுத்த உதவியது. ஆகையால் பிறப்பு வீதம் அதிகரித்து இறப்பு வீதம் குறைந்தது, எனவே மக்கள் தொகை வளர்ச்சி வீதம் உயரலாயிற்று.

மனித பணித்திறன்

மனித வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, மிகப்பெரிய வளமாகிய மனித வளம் மிக மிக அவசியம் என்றாலும், இது கட்டுக்கடங்காமல் பெருகும் பொழுது, வாழ்க்கைத்தரம் உயர வாய்ப்பில்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வில் நலம்பெற பணித்திறன் அவசியம் தேவை. அவ்வாறே எந்த ஒரு நாட்டிலும் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஈடாகப் பணித்திறன் மிகமிக அவசிமான ஒன்றாக உள்ளது. எனவே, இயற்கை வளங்களோடு மனிதப் பணித்திறன் மிக அத்தியாவசியமான ஒரு வளமாகக் கருதப்படுகின்றது. எனினும் இப்பணித்திறனை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவதென்பது ஒரு சுலபமான காரியமல்ல. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு, ஒவ்வொருவரின் தனிபணித்திறனும் தேவையெனினும், இது போதுமானது அல்ல. நாட்டவர் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவதே, மனித அறிவின் விருத்திக்கும். நாட்டின் முன்னேற்ற முயற்சிக்கும் வழிகோலுவதாக அமையும். எடுத்துக்காட்டாக, 15 வயது முதல் 64 வயது வரையுள்ள பணித்திறனுடைய 2.6 மில்லியன் மக்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யும்பொழுது வெளிப்படும் உழைப்புத்திறன், 200 மில்லியன் கிலோ வாட்ஸ் மின்சக்திக்கு நிகரானது என நம்பப்படுகிறது.

இவ்வாறிருக்க, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு, கூட்டு முயற்சியோடு கூட தனி நபரின் முயற்சியும் மிக மிக அவசியமான தொன்றாக இருக்கின்றது. ஆகவே, ஒரு நாட்டின் முழுமையான பணித்திறனை வடித்தெடுக்க, தகுந்த நுட்பத்திறன் தேவைக்குரியதாகும். குறிப்பாக வளரும் நாடுகளில் மனிதவளம் ஏராளமாக இருப்பினும், பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், மனிதத் திறனை முழுமையாக வெளிக் கொணர்ந்து பயன்படுத்த மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. சில சமயங்களில், உலகின் பல நாடுகளில் காணப்படும் சமுதாயப் புறக்கணிப்பு, வன்முறைகள், காழ்ப்புணர்ச்சிகள், பெண்கள் மற்றும் வயது வந்தோர் வேலையின்றி இருக்கும் நிலை போன்றவற்றால் பணித்திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.

ஆகையால், எங்கெல்லாம் மனிதப் பணித்திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்நாடு வாழ்க்கைத்தரத்தில் முன்னேறி, வளர்ச்சியடைந்த நாடுகளோடு கைக்கோர்த்துச் செல்ல இயலும்.

நல்வாழ்வின் அடிப்படைத் தேவைகள்

மனிதர்களின் தரமான வாழ்விற்குச் சத்துணவு, குறைந்த குழந்தை இறப்பு விகிதம், உயர்ந்த ஆரம்பப் பள்ளிச் சேர்க்கை, கல்வி, வீட்டுவசதி, மேம்பாடான சமுதாயப் பாதுகாப்பு, வாழும் உரிமை, அரசியல் சுதந்திரம், வேலைவாய்ப்பு, ஆயுள் நீடிப்பு ஆகியவைகள் தேவைப்படுகின்றன. மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பொழுது, தேவைகளும் அதிகரிக்கின்றன. ஆகையால் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய மனிதர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீன மக்கள், மனிதப் பரிணாம வளர்ச்சி புவியின் மிகச் சிறப்பான நிகழ்ச்சி என்று உறுதிபட எண்ணினாலும் அதற்கு இணையாக சீனர்களின் எண்ணிக்கைப் பெருக்கம், அதிக ஏழைச் சீனர்களை உருவாக்கும் என்பதை புரிந்துக் கொண்டு மக்கள் தொகையைக் குறைக்க பல சரியான வழிமுறைகளைப் பின்பற்றி, மக்கள் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாயினர். இதனால் உலகளவில் பாராட்டும் பெற்றனர். ஒருபுறம் தனிமனிதனின் உரிமை பறிக்கப்பட்டது போலிருந்தாலும் அது தனிமனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு அடிகோலும் என்பதே மறுக்கமுடியாத உண்மை என ஒத்துக்கொள்ளப்பட்டது. இந்தியாவும் மற்ற நாடுகளும் நீண்ட காலமாகவே மக்கள் தொகையை குறைப்பதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன, என்றாலும் வெற்றி முழுமையாகக் கிடைக்கவில்லை.

அமைப்பு, கூட்டமைப்பு மற்றும் மக்கள் தொகை பெருக்கம்

மனித வளமென்பது பணித்திறனுடைய மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். வளமான, தரமான வாழ்க்கைக்கு அதிக எண்ணிக்கையுள்ள மக்களின் பணித்திறன் மிக மிக அவசியமான தொன்றாகும். ஒரு நாட்டின் பணித்திறன் வயது - பாலின பிரமிட்டின் வடிவத்தைக் கொண்டு கணிக்கப்படுகின்றது. மனிதப் பணித்திறனை வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

 1. குழந்தைகள் - பணித்திறனற்ற வயதுப் பிரிவினர் (0-14 வயது)
 2. வயது வந்தோர் - பணித்திறனுடைய பிரிவினர் (15-64 வயது)
 3. முதியவர்கள் - பணித்திறனற்ற பிரிவினர் (65 வயதுக்கு மேல்)

உலகில் இன்று, பல மில்லியன் குழந்தைகள், தொழிலாளர்களாக பலதரப்பட்ட நிறுவனங்களில் பிழைப்புக்காக பணிபுரிகின்றனர். இவர்கள் வருவாய் பெற்றும் பணிபுரியும் சுதந்திர உரிமை இல்லாதவர்கள். அவ்வாறே, வாழ்க்கை வசதிகளை இழந்துள்ள முதியவர்களும், உயிர்வாழ பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். வயது மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தொகையின் பிரமிடுகள் வரையப்பட்டுள்ளன. மக்கள் தொகையின் பாலினப் பரவல் வலது இடது பாதியில் பிரமிட்டில் குறிக்கப்பட்டுள்ளது. பொதுவான வயது - பாலின பிரமிடு கூம்பு வடிவம் கொண்டது. இது அகல அடிப்பகுதியையும், குறுகிய உச்சிப்பகுதியையும் உடையது. இந்தப் பிரமிடு சில குறிப்பிட்ட கருத்துக்களை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

 1. இத்தகைய பிரமிடுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் 0-14 வயதுடைய குழந்தைகள் அதிக எண்ணிக்கையிலும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுவர். ஏனைய பிரிவினருடன் ஒப்பிடும் பொழுது 15-64 வயதுடைய பொருளாதாரத்தில் பங்கு கொள்ளும் மக்கள் தொகை எண்ணிக்கை மிகக் குறைவு.
 2. குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், பொருளாதாரத்தில் பங்கு கொள்ளும் வயதினரைச் சார்ந்து வாழ்பவர்கள். ஏனெனில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்பவர்களாகவும் முதியவர்களில் பெரும்பாலோர் பணித்திறனற்றவர்களாகவும், ஓய்வூதியம் பெறுபவர்களாகவும் இருப்பர். எனவே, இவர்களால் நாட்டு மேம்பாட்டுப் பணிகளில் ஒரளவே பங்கு பெற இயலும். இவர்களில் பெரும்பாலோர் பொருள் ஈட்டும் பணிகளைச் செய்ய இயலாத நிலையிலும் இருப்பர்.
 3. இடைப்பட்ட வயதினரே (15-49) பெரும்பாலும் பொருள் ஈட்டும் செயல்களில் ஈடுபட்டிருப்பர். இப்பிரிவினரிடம் திருமணத்திற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதால் வருங்காலத்தில் இனப் பெருக்கப் பிரிவினராகவும் மாறுகின்றனர். பணித்திறனுக்கும், எண்ணிக்கையை கூட்டுவர். மேலும் 10-14 வயதுடைய குழந்தைகள் 15-30 வயதுக்குச் செல்லும்போது பணிபுரிபவர்களாக மாறுகின்றனர். பொதுவாக, பிரமீடுகளில் 0-15 வயதுடைய குழந்தைகள் எண்ணிக்கையை காட்டும் அடிதளம் அகன்று இருப்பின், எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிக வளர்ச்சியடையக் கூடும் என்பதனைக் குறிக்கும்.

முன்னேறும் வயதுப் பிரமிடு

0-14 குழந்தைகள் - 55 சதவீதம், 15-64 வயது வந்தோர் - 35 சதவீதம், 65-க்கு மேல் - முதியவர் - 10 சதவீதம் இப்பிரமிட்டில் பிறப்பு, இறப்பு மிகுதியாகக் காணப்படும். இத்தோற்றத்தைக் குறிக்கும், பிரமிடுகளைக் கொண்ட நாடுகளில் பணித்திறனற்றவர்களை பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. பணித்திறனற்றவர்களின் அடிப்படைத் தேவைகளை சந்திக்காவிடில் சமுதாயச் சீர்கேடு ஏற்படும். பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் ஏற்பட வாய்ப்புண்டு. உயர்ந்த இறப்பு விகிதம், சமுதாய பாதுகாப்பின்மை காணப்படும். 1-6 வயது கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ வசதி, பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அதிக சிசு இறப்பு ஏற்படும். தவிர அடுத்த மூன்று பிரிவினர், 7-10, 11-14, 15-19 வயதினர். உடல் ஊனத்தாலும், பலவித சுகாதாரக் கேடுகளினாலும் மிக அதிகமாக தாக்கப்படுகின்றனர். மேலும் போதுமான மருத்துவ நலச் சேவகர்கள் இல்லாமை (சுகாதாரமின்மை), தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் பயன்படுத்தாமை ஆகியனவும் குழந்தைகள் இறப்பிற்கு காரணமாகின்றன. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வறுமை, சத்துணவின்மை போன்ற பிரச்சனைகளினால் அல்லலுறுகின்றன.

பின்னடையும் வயது பிரமிடு

0-14 வயது குழந்தைகள் - 30 சதவீதம், 15-64 வயது வந்தோர் - 55 சதவீதம், 65க்கு மேல் முதியோர் - 15 சதவீதம் இவ்வகை பிரமிடுகளில் பிறப்பு, இறப்பு வீதங்கள் குறைவாக இருக்கும். பணித்திறனுடையவர்கள் அதிகமாக இருப்பதால் பொருளாதார ரீதியாக நாடுகள் முன்னேற்றமடைந்திருக்கும். பணித்திறனற்ற குழந்தைகள், முதியோரின் தேவைகள் எளிதாக, சீராக பூர்த்தி செய்யப்படும்.

வளர்ந்து விட்ட நாடுகளில் இவ்வகையான நிலை இருப்பதால் அங்கு இவ்வகை பிரமிடுகளின் தோற்றம் காணப்படுகின்றது. ஆனால் குறைவாக உள்ள குழந்தைகள் வயது வந்தோர் நிலையை எட்டும் பொழுது பொருளாதார நிலையில் தாழ்வு காணப்படும். அதே நேரத்தில் வயது வந்தோர் முதியவராகும் பொழுது அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பினால் நாட்டில் பிரச்சனைகள் உருவாகக் கூடும். எனினும், இங்கு எல்லாப் பிரிவினருக்கும் சத்துணவும், மருத்துவமும் நன்கு கிடைக்கின்றன. கல்வி, சமுதாய விழிப்புணர்ச்சி, உயர்தர வாழ்க்கை இவற்றில் கவனிப்பு அளிக்கப்படுகிறது. பிறப்பு விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் தொழில் வளர்ச்சி துரித வாழ்க்கைக்கு வழி கோலுவதால் முதியோருக்கு தனிக்கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு, பாதுகாப்பு இருந்தாலும் அதிகமான முதியவர்கள் மனநோயாளிகளாகவும், “புதிய இறப்பு’ எனப்படும் புற்று நோய் மற்றும் “இருதய நோய்கள்’ என்னும் நோய்களுக்காளானவர்களாகவும் இருக்கின்றனர்.

இடைப்பட்ட வயது அமைப்பு

இவ்வகை பிரமிடுகள் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் காணக்கிடைக்கின்றன. இங்கு ஒருகால கட்டத்தில் முன்னேறிய அமைப்பு பிரமிடுகள் இருந்து, எதிர்காலத்தில் பின்னடையும் அமைப்பாக மாறும் நிலை ஏற்படலாம். இது வடிவம் மற்றும் பண்புகளில் மாறுபடும் தன்மை கொண்டது.

மேற்கூறிய பிரமிடுகள் பொதுவான விதிகளினடிப்படையில் வரையப்பட்டவை. ஆனால் சில சமயங்களில் நாட்டின், சமுதாய - பொருளாதார நிலைகளுக்கேற்ப பண்புகள் மாறுபடும்.

 1. வளரும் நாடுகளில் ஏறக்குறைய 10 வயதிலேயே குழந்தைகள் பணித்திறன் உடையவர்களாக மாறுகின்றனர். ஆனால் வளர்ந்து விட்ட நாடுகளில் 16 வயது அடைந்தும், பணித்திறன் கொண்டவர்களாக இருப்பதில்லை. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பணித்திறனைப் பெற்றிருப்பினும் பணியில் சேருவதில்லை. ஆனால், இளவயதில் மாணவப் பருவத்தினர் பகுதி நேரப் பணியாளர்களாக இருக்கின்றனர். இதன் வழியாக குறிப்பிட்ட அளவு பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகின்றனர்.
 2. வளர்ந்து விட்ட நாடுகளில் முதியவர்கள், ஒய்வு பெறும் சலுகையினால் திறனற்றவர்களாக மாறுகின்றனர். ஆனால் வளரும் நாடுகளில் இத்தகையச் சலுகைகள் மிகக் குறைவாக இருப்பதினால், 60-க்கும் மேற்பட்ட வயதினரும் பணித்திறன் உடையவர்களாக இருக்கின்றனர். எனவே, பொருளாதார உயர்விற்காக பணி செய்வது வாழ்வில் அவசியமாகின்றது.
 3. இடப் பெயர்வுகள் மற்றும் மனித நகர்வுகள் பிரமிடுகளின் வடிவங்களை மாற்றக்கூடும். இடைப்பட்ட வயதினர் (15-45) பல காரணங்களுக்காக, தாங்கள் பிறந்த அல்லது வாழ்ந்த இடங்களிலிருந்து இடப்பெயர்ச்சி செய்கின்றனர். எனவே, ஒரு நாட்டில் குடிபுகும் மக்களின் எண்ணிக்கை அதிகமிருப்பின், பிரமிடுகளில் இவ்வயது அமைப்பு சிறிது வெளி நோக்கி குவிந்தும், வெளியேறும் எண்ணிக்கை அதிகமிருப்பின் சிறிது உள்நோக்கிக் குவிந்தும் காணப்படும்.
 4. மக்கள் தொகை வளர்ச்சியும் பிரமிடுகளின் வடிவங்களில் மாறுதல்களை உருவாக்கும். சரியும் வளர்ச்சி விகிதம் மூத்த மக்களின் எண்ணிக்கையையும், உயரும் வளர்ச்சி விகிதம் குழந்தைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்கின்றன.

மேற்கூறப்பட்ட பண்புகள் ஒரு நாட்டின் அதிக அல்லது குறைந்த மக்கள் தொகை விகிதத்தை பொறுத்துக் காணப்படும். மக்கள்தொகை வளர்ச்சி வீதம், எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டு, கட்டுப்படுத்தி அவற்றினடிப்படையில் நாட்டினை நலம்பெறச் செய்யும் தகவல்களை அறிந்து கொள்ள பிரமிடுகள் உதவுகின்றன. எனவே, பிரமிடுகளின் வடிவத்தைக் கொண்டு ஒரு நாட்டின் தற்போதைய, எதிர்கால பணித்திறன்களை அறிந்துக் கொள்ளலாம்.

முற்காலத்திலிருந்தே, வரையறுக்கப்பட்ட மக்கள்தொகை அவசியம் எனக் கருதப்பட்டது. எனினும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டன. இச்சூழ்நிலையில் தாமஸ் ராபர்ட் மால்தஸ் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை கோட்பாடு ஒன்று வெளியிடப்பட்டது. இவர் தொழிற் புரட்சிக்குப்பின் மக்கள் தொகை வளர்ச்சியடைந்ததையும், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார, சமுதாய மாற்றங்களையும் கருத்தில் கொண்டு இக்கோட்பாட்டை வெளியிட்டார். இதன்படி, மக்கள்  தொகைப் பெருக்கம் நாட்டின் தலையாய பிரச்சனையாகவும், அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ஏழை - பணக்காரர் என பிரிவினை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது என தெளிவுப்படுத்தினார். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை, உடல் நலக்குறைவு போன்ற பிரச்சனைகள் எழக்கூடும் என வலியுறுத்தினார்.

கோட்பாடுகள்

மனித வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு என்பது இயற்கை நியதி. பிறப்பினை தடுப்பது கடினமான ஒரு செயல். உலகில் மக்கள்தொகை பெருக்கம் எளிதான ஒன்று. ஆனால் மக்களுக்குத் தேவையான உணவுப் பெருக்கம் செய்வது அவ்வளவு இலேசானதல்ல. மக்கள் வளர்ச்சி 1, 4, 8, 16, 32 என்ற ஜியோமிதி விகிதத்திலும், உணவு உற்பத்தி 1, 2, 3, 4, 5 என்ற கணித விகிதத்திலும் உயர்ந்து செல்கின்றன. அதாவது உணவு உற்பத்தி 4 மடங்காக இருந்தால் மக்கள் தொகை வளர்ச்சி 8 மடங்காக இருக்கும்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல் சார்பான தடைகள்

 1. இயற்கைத் தடைகள்
 2. மனிதச் செயல்தடைகள்.

இயற்கைத் தடைகள்

வறட்சி, கொள்ளை நோய்கள் போன்ற இயற்கைத் தடைகளே மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

மனிதச் செயல்தடைகள்

ஏழ்மை, உணவு பற்றாக்குறை, குழந்தை பராமரிப்பின்மை, உலகப்போர்கள் ஆகியவை மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

கீழ்க்காணும் இருமுறைகளின் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தலாம்

 1. இயற்கையில் பிறப்பு விகிதம் குறைய திருமண வயதை அதிகரித்தல்.
 2. மனிதர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தரும் திறனைச் சார்ந்தே குழந்தை பிறப்பினை ஊக்கமளிக்க வேண்டும்.

எனவே சுயக்கட்டுப்பாடு, மற்றும் பிறப்பினை குறைக்க மனித முயற்சி தேவை.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

Filed under:
2.95652173913
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top