பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் / இடைக்காலத்தில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இடைக்காலத்தில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை

வரலாற்றின் இடைக் காலத்தில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை (பொ.ஆ. 500 - 1500 வரை) குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அகழாய்வுச் சான்றுகள்

தமிழகத்தில், வரலாற்றின் துவக்கக் காலத்தில் இருந்த அரசியல் நிலை பின்னர் மாற்றம் பெற்று தனி அரசுகளாக உருவெடுத்தன. இவ்வரசுகள் ஒரு குறிப்பிட்ட பகுதியை தன் கீழ் கொண்டுவந்து ஆட்சி புரிந்துள்ளனர். பூலாங்குறிச்சி கல்வெட்டு, வரலாற்றில் பொ.ஆ. 200 முதல் 400 வரை உள்ள காலகட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அங்கு கிடைத்த கல்வெட்டின் காலம் பொ.ஆ. 2-ம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பூலாங்குறிச்சி பகுதியில் இதுவரை அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை.

இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள் காணப்படும் இடங்களைச் சுற்றிலும் பல அகழாய்வுகளை மேற்கொண்டால் நமக்கு உண்மை வரலாற்றை அறிய ஏதுவாக அமையும். ஆனால், களப்பிரர் பற்றிய செய்திகளும் அக்கல்வெட்டோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது. அடுத்து வந்த பேரரசர்கள் பல்லவர், பாண்டியர், சோழர்களைப் பற்றி காண்போம். இவர்கள் காஞ்சி, தஞ்சை, மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடங்களாக கொண்டு ஆட்சிபுரிந்தனர். தற்பொழுது இம்மூன்று நகரங்களும் பெரிதும் வளர்ச்சி அடைந்திருப்பதால், ஊரின் மையப் பகுதிகளிலோ, அன்றி தேவைப்படும் பகுதிகளிலோ, அகழாய்வு மேற்கொள்வது இயலாத ஒன்று. இருப்பினும், இங்கு காணப்படும் கோயில்களும், அவற்றில் காணப்படும் கல்வெட்டுகளும் அக்கால மக்களின் சமூக, பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள உதவுகின்றன.

பல்லவர் கால மக்கள் செங்கற்களைக் கொண்டும், கருங்கற்களைக் கொண்டும் அடுக்கிக் கட்டும் கட்டுமானத்தை (Structural temple) அறிந்திருந்தனர் என்பதற்கு அகழாய்வில் வெளிக்கொணர்ந்த கோயிலின் அடித்தளம் சான்றாக அமைகின்றது. இவர்கள் பௌத்த மதத்தை ஆதரித்துள்ளதையும் உணரமுடிகிறது. கோயில்களின் எண்ணிக்கைகள் அம்மக்களின் தொழில் சிறப்பையும், வாழ்வாதாரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சங்க காலச் சோழர்கள்

சங்க காலச் சோழர்கள் உறையூரை தலைநகராகவும், முற்காலச் சோழர்கள் பழையாறையை தலைமையிடமாகவும் கொண்டனர். அடுத்து தஞ்சையும், கங்கைகொண்ட சோழபுரமும் தலைமையிடமாக அமையப்பெற்றன. ஆனால், கங்கைகொண்ட சோழபுரம் மட்டுமே சுமார் 250 ஆண்டுகள் தலைநகரமாக சிறப்புற்றுத் திகழ்ந்துள்ளது. சோழர்கள் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் சிறப்பானதோர் ஆட்சியைச் செலுத்தியுள்ளனர். சோழ மன்னன் விஜயாலயன் துவக்கிய இப்பேரரசு, தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. சோழர்கள் காலத்தில் கோயில் கட்டடக் கலையும், அரச மரபினர் தங்குமிடங்களும் மிகவும் சிறப்பாகவும், வலிமையாகவும், தொழில்நுட்பத் திறனுடனும் அமைத்துள்ளனர் என்பதை அகழாய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

முற்காலச் சோழர்கள்

முற்காலச் சோழர்கள் பழையாறையில் சிறிது காலம் தங்கி இருந்துள்ளனர். அகழாய்வில் கூறை ஓடுகள், சிறிய அளவிலான சுடுமண் விளக்குகள் தவிர, வேறு குறிப்பிடும்படியான தொல்பொருட்கள் ஏதும் கிடைத்தில்லை. தஞ்சையில் குறும்பன்மேடு அகழ்விலும் கூறை ஓடுகளும், கெண்டிமூக்குப் பகுதிகளும் மட்டுமே காணப்பட்டன. குறிப்பிடும்படியான கட்டடப் பகுதிகளோ அன்றி அரண்மனை இருந்தமைக்கான தடயங்களோ கிடைத்தில. தமிழகத்தில் போசளர்களும், சம்புவராயர்களும் குறுநில மன்னர்களாக ஆட்சிபுரிந்துள்ளனர். இவர்களது தலைநகரங்களாகக் கண்ணனூர், தேவர்குந்தாணி (இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம்) போன்ற இடங்கள் இருந்துள்ளன. தேவர்குந்தாணியில் மேற்பரப்பு ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கண்ணனூர் அகழ்வில் கட்டடப் பகுதி ஏதும் கிடைத்ததில்லை. தமிழகத்திலேயே, முதன்முதலாக மன்னர்கள் அரசு புரிந்து வாழ்ந்த அரண்மனைப் பகுதிகளை ஓர் அகழாய்வு மூலம் வெளிக் கொணர்ந்துள்ளது கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு, சுமார் 600 ச.மீ. அகன்ற பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அகழாய்வு எனலாம். இதன்மூலம் சோழர்களின் கட்டடக் கலை கட்டுமானம், தொழில்நுட்பம் என பல தகவல்கள் நமக்கு தெளிவுபட்டுள்ளது. குலோத்துங்கச் சோழன் உலாவில் விண்ணைத் தொடும் முற்றங்கள் என்ற குறிப்பு காணமுடிகிறது. அதனை உறுதிசெய்யும் வகையில், அகழாய்வில் 1.10 மீட்டர் அகலமுள்ள சுவற்றின் பகுதியும், அதனையொட்டியே இணையாக 1.10 மீட்டர் அகலமுள்ள மற்றும் ஒரு சுவர் 55 செ.மீ. இடைவெளியில் காணப்படுவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த சுவற்றின் அளவு 2.20. மீட்டர் (இடைவெளியையும் சேர்த்து 2.75. மீட்டர் தடிப்பு கொண்டது) என்பதை அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

எனவே, சோழன் மாளிகை மிகவும் உயர்ந்த பல அடுக்குகளைக் கொண்ட அரண்மனை என்பதில் ஐயமில்லை. மேலும், அகழாய்வில் ஏராளமான இரும்பு ஆணிகள் சிறியதும் பெரியதுமாக (சுமார் 3 செ.மீ. முதல் 55 செ.மீ. வரை நீளமுள்ள ஆணிகள்) கிடைத்துள்ளன. எனவே. இங்கு மரங்களை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் அறியமுடிகிறது. அடித்தளத்திலும், இரண்டு சுவர்களுக்கும், இடைப்பட்ட பகுதியிலும் மணலை நிரப்பியுள்ளனர். இவை கட்டடப் பகுதிகள் குளிர்ச்சியாக அமைய இவ்வாறு அடித்தளத்தில் மணலிட்டு நிரப்பியுள்ளனர் என்பதை பொறியியல் வல்லுனர்கள் தெறிவிக்கின்றனர்

சோழர்கள், தூய்மையான களிமண் கொண்டு தயாரித்த சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தியுள்ளதையும், அதனை தலைப் பகுதியையும், உடல் பகுதியையும் மாற்றி மாற்றி அமைத்த (Header and Structure Method of Construction) கட்டுமான முறையைப் பயன்படுத்தியுள்ளதையும் அறியமுடிகிறது. கட்டுமானத்துக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. மேலும், மூலிகைச் சாற்றை பயன்படுத்தியதும் நன்கு தெளிவாக உணர முடிகிறது. ஏனெனில், ஒரு செங்கல்லுக்கும் மற்றொரு செங்கற்கல்லுக்கும் இடைவெளியின்றி கட்டுமானம் அமைந்துள்ளதாலும், மேற்பரப்பில் காணப்படும் பச்சை நிறச் சாந்தும் (pasting meterials) இவற்றை உறுதி செய்கின்றன.

வெளிப்பூச்சில் சுண்ணாம்பு காரை பூசப்பட்டதும், அப்பூச்சில் வண்ணங்கள் கொண்டு அழகு செய்துள்ளதும் அகழாய்வில் கிடைத்த வண்ணக் காரைப்பூச்சுகளைக் கொண்டு உணரலாம். மேலும், இங்கு கிடைத்த அலங்கார வட்டுகள், தந்தத்தால் ஆன அலங்காரப் பொருட்கள், கல்மணிகள், சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் பொருட்கள், கெண்டிமூக்குப் பகுதிகள் போன்ற ஏராளமான தொல்பொருட்கள் சோழர் கால மக்களின் செழிப்பையும், வாழ்க்கை முறையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சோழர்கள், அரண்மனை மட்டுமின்றி அதனைப் பாதுகாக்க அரண்மனையைச் சுற்றி கோட்டை மதில்சுவர்களையும் அமைத்துள்ளதையும், குறுவாலப்பர் கோயிலில் மேற்கொண்ட அகழாய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மேற்கொண்ட சுற்றுப்புற அகழ்விலும் இதேபோன்ற அமைப்புடைய செங்கல் கட்டடங்கள் வெளிக்கொணரப்பட்டன.

இவ்வகழாய்வில், சோழர் மாளிகை பல அடுக்குகளைக் கொண்டு அமைந்த மிக உயரமான மாளிகை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தளத்துக்கும் அடுத்த தளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த தரைத்தளம் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் மேல்தளத்தில் கூறை ஓடுகள் கொண்டு வேயப்பட்ட நிலையிலேயே உடைந்த மேற்கூறைப் பகுதியின் எச்சங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளதால், இக்கருத்தை வலியுறுத்திக் கூறமுடிகிறது. எனவே, கங்கைகொண்டசோழபுரம் பரந்துபட்ட நகரமாகச் செயல்பட்டுள்ளது என்பதையும், இன்றைக்கும் அவ்வூரைச் சுற்றிலும் உட்கோட்டை, ஆயுதக்களம், இடைக்கட்டு, கொல்லாபுரம், வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர், வானவநல்லூர் மற்றும் ஜெயங்கொண்ட நல்லூர் என பல பகுதிகள் பண்டைய சோழநாட்டை நினைவு படுத்துவதாகவே அமைந்துள்ளன.

கோட்டை மதில் சுவர்களை செம்புராங் கற்களைக் (Laterite) கொண்டு எழுப்பியுள்ளனர். அரண்மனை மதில் சுவர்களை நன்கு தடித்த அளவில் செங்கல், சுண்ணாம்பு, மணல், ஜல்லி, கூழாங்கற்கள் ஆகியவற்றைக் கலந்து நன்கு கடினமாக அமைத்துள்ளதை அகழாய்வில் கிடைத்த உடைந்த கட்டடப் பகுதிகள் தெரிவிக்கின்றன. மேல்பகுதியை மூடுவதற்குத் தட்டையாக நீள் செவ்வக வடிவ அமைப்பில் தலைப் பகுதியில் கொக்கி போன்ற வடிவடைய கூறை ஓடுகளைப் பயன்படுத்தியுள்ளனர். அகழாய்வில் கூறை ஓடுகளும் சுண்ணாம்புக்காரையும் கலந்த நிலையிலேயே சேகரிக்கப்பட்டுள்ளது. எனவே, சங்க காலத்தில் தட்டையான  கூறை (Grooved Tiles)  ஓடுகளுக்கு பதிலாக, தட்டையான, நீண்ட, தலைப்பகுதியில் கொக்கி போன்று வளைந்த, நன்கு வார்க்கப்பட்ட ‘ட’ வடிவ ஓடுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்ற ஓடுகள் குறும்பன்மேடு, பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், பெரியபட்டினம், மாங்குடி போன்ற பல அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. இது சோழர்கள் காலத்திய கூறை ஓடுகள் வகையைச் சார்ந்தது எனக் குறிக்கலாம்.

சோழர்கள் காலத்தில்தான் ஏராளமான கற்றளிகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, கோயில்களின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கும், சமய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம். கோயில்கள் அமைப்பது மட்டுமே இல்லாமல், சமயப் பணிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விவசாயத்தை முன்னேற்றுவதற்கும் வழங்கினர். கோயில் கட்டுமானப் பணிகள், மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்வாதாரமாக அமைந்தது எனலாம். பல இடங்களில் ஏரிகள் வெட்டினர். குளங்களை அமைத்தனர். பெரிய ஏரிகளில் (சோழகங்கம் போன்றவற்றில்) மதகுகளை அமைத்து நீர்ப்பாசன வசதியை பெருக்கியமையும், தேவைக்கு ஏற்ப நீரைச் சேமித்து, அவை தேவை ஏற்படும்போது, அதனை மதகுகளைத் திறந்து நீர்ப்பாசனத்தை முறைப்படுத்தியமையும், சோழகங்கம் ஏரியில் மேற்கொண்ட அகழாய்வு தெளிவுபடுத்துகிறது.

சோழகங்கம் ஏரியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மதகு, வேகமாக வரும் நீரைக் கட்டுப்படுத்தி பின்னர் அந்த நீரைத் தேக்கி, அதனை சிறிது சிறிதாக வெளியேற்றம் செய்யும் வகையில் சிறந்த தொழில்நுட்ப அறிவுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, சோழர்கள் விவசாயத்துக்கும் முக்கியத்துவத்தை அளித்து அதற்கேற்ப வசதிகளையும் பெருக்கினர் எனலாம். காட்டுமன்னார்குடியில் அமைந்த வீரநாராயணப்பெருமாள் ஏரி, அதாவது வீராணம் ஏரி போன்ற பல ஏரிகளை அமைத்தமை, ஏரி வாரியம் அமைத்து பராமரித்தது கல்வெட்டில் காணப்படுகிறது. அதற்கேற்ப, அகழாய்வில் குடிநீர்க் குழாய்கள் அமைத்தல், கழிவுநீர்க் குழாய்கள் அமைத்தல் போன்ற பல சிறப்பான அமைப்புகள் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளன. திருக்கோயிலூர்  அகழாய்வில் சுடுமண் குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

படைவீடு, சம்புவராயர்களின் தலைநகரம். இங்கும் அரண்மனையின் பகுதிகள் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது. அவற்றில், நான்குவிதமான குழாய்கள் வெளிக்கொணரப்பட்டது. அவற்றில் ஒன்று கருங்கல்லால் ஆன கால்வாய்ப் பகுதி. இந்தக் கால்வாய் தேவையற்ற கழிவு நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒன்று. ஏனெனில், இது திறந்த நிலையில் கற்பலகையின் மையத்தில் குழி அமைப்பை ஏற்படுத்தி நீர் எளிதில் வெளியேறுவதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு அந்தக் குழாயின் ஒருமுனை நீர்த் தொட்டியில் முடிவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இது, இப்பகுதிகளுக்குத் தேவையான நீரை ஏற்றி தொட்டியில் சேகரித்துவைக்க அமைக்கப்பட்ட ஒன்று எனலாம். மூன்றாவது வகைக் குழாய்கள், குடிமக்கள் அனைவருக்கும் தண்ணீர் சென்று சேர்வதற்கு ஏற்ப அமைந்த ஒன்று. அடுத்து, நான்காவதாக அமைத்த கால்வாய், முதலில் கற்பலகைகளை செவ்வகப் பெட்டிபோல அமைத்து, அதனை வெளிப்புறம் சுண்ணாம்பு ஜல்லி, மணல் இவற்றைக் கொண்டு நன்கு கடினமாக காற்று புகாவண்ணம் அமைத்து, அரண்மனையின் உட்பகுதிக்கு நீரைச் செலுத்தும்படி அமைத்துள்ளனர். இது, குடிநீர்க் குழாயாக இருத்தல் வேண்டும். உயர்குடி மக்கள் பயன்படுத்த அமைத்த ஒன்றாகவும் இருக்கலாம். இதுபோன்ற நான்குவிதமான கால்வாய்கள், படைவீடு அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது

குடிநீர் அமைப்பை சோழர்களும் அமைத்துள்ளனர் என்பதை கல்குளம் பகுதியில் கற்களைக் கொண்டு அடுக்கியே கால்வாய்களை அமைத்ததில் இருந்து அறியமுடிகிறது. கண்ணனூரில் போசளர்கள் அமைத்த கால்வாயும் கருங்கற்களைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து பிரித்து தனியாக ஒரு கால்வாய் அமைத்து, அதிலிருந்து கட்டுத்தொட்டி (Sump) ஒன்றை ஏற்படுத்தி, இடையில் அந்நீரை எடுத்துக்கொள்வதற்கு ஏற்ப அதனை சிறிய கிணறு போன்று அமைத்துள்ளனர். கண்ணனூர் அகழாய்வில் 2.30 மீட்டர் ஆழம் உள்ள (50 செ.மீ. X 50 செ.மீ.) வாய்ப்பகுதி கொண்ட கட்டுத்தொட்டி ஒன்று வெளிக்கொணரப்பட்டது. இது, பொ.ஆ. 13-ம் நூற்றாண்டில் போசளர்களால் அமைத்ததாக இருக்கலாம். நீரைச் சுத்தமாகவும், குளிர்ச்சியாகவும், வைத்திருக்க உதவும் என்ற அடிப்படையில் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர். இம்முறை தொடர்ந்து பொ.ஆ. 13-ம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்துள்ளது என்பதை அகழாய்வுகள் நிரூபித்துள்ளன. சுடுமண் குழாய்களை ஒன்றோடு ஒன்றாக இணைத்து குடிநீர்க் கால்வாய்களை அமைத்துள்ளனர்.

சுடுமண் பொருட்கள், மட்கலன்கள்

சோழர்கள் காலத்தில் சிவப்பு நிற மட்கலன்களே அதிகம். மேலும், சிறிய அளவிலான குடம், தட்டு, வட்டு, கைப்பிடி அகன்று விரிந்தது போலுள்ளது முதல் நன்கு அலங்காரம் செய்த நிலையுள்ளவை வரை மட்கலன்களே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவ்வகழ்வாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதைக் காண்கின்றோம்.

கெண்டி

கெண்டி, அதாவது மூக்கு கொண்ட செம்பு அமைப்பிலான மட்கலன். புதிய கற்காலம் முதல் கெண்டி காணப்பட்டாலும், பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு முதல் கெண்டியின் வரவு அதிகரித்தது. கெண்டிமூக்கு பலவிதமானவை ஆய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் கெண்டியின் வடிவம் பெரிய தொட்டிகளில் பயன்படுத்தப்பட்டன எனலாம். தொட்டியின் விளிம்பில் பெரிய துளையை அமைத்து நீரை அதிலிருந்து வெளியெற்றுவர். பின்னர் மூக்குப் பகுதியை பானையின் தோள்பட்டையில் அமைத்தனர். அடுத்து, மூக்குப் பகுதியை (Knob) தனியாகச் செய்து அதனைத் தோள்பட்டையில் பொருத்தினர். அடுத்து பானை வனைபவர்கள் தங்களது கலைத்திறனால் தேவையான வடிவில் பல்வேறு அலங்காரங்களைப் புகுத்தி, கெண்டியின் மூக்குப் பகுதியில் தனிப்பட்ட முறையில் அனைவரையும் கவரும் விதத்தில் அமைத்து அளித்துள்ளனர். முதலில் ஒன்று வைத்தனர். பிறகு நான்கு வைத்தனர் என்பதையும் அறியமுடிகிறது. சடங்குகள் குறித்த மட்கலன்களுக்குத் தனியாக தயார் செய்து தேவைக்கு ஏற்ப பல மூக்குகளைப் பொருத்திக்கொண்டு பயன்படுத்தத் துவங்கினர். இவ்வாறு சுடுமண் கெண்டி பல்வேறுவிதமான பரிணாம வளர்ச்சியை சோழர் காலத்தில் பெற்றது எனலாம்.

பொ.ஆ. 9 - 14-ம் நூற்றாண்டு வரை மேற்கொண்ட அகழாய்வுகளில், பிற மட்கலன்களுடன் போர்சலைன் மற்றும் செலடைன் வகை மட்கல ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை சீன தேசத்து மட்கலன் வகையைச் சார்ந்தவை. எனவே, சீன நாட்டோடு பொ.ஆ. 12 - 13 நூற்றாண்டில் சோழர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தள்ளனர் என்பது புலனாகிறது. பெரியபட்டினம் அகழாய்வில் சீனக் காசு ஒன்றும் கிடைத்துள்ளது. கங்கைகொண்டசோழபுரம், பெரியபட்டணம், நாகப்பட்டனம் போன்ற அகழாய்வுகளைக் சான்றாகக் குறிப்பிடலாம்.

ராஜராஜ சோழன், முதன்முதலாக சீன நாட்டுக்கு பொ.ஆ.1015-ல் தூதர்களை அனுப்பியுள்ளான். பின்னர் ராசேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்திலும் (பொ.ஆ.1077-ல்) சீன நாட்டுக்கு தூதர்கள் சென்றுள்ளனர். அதன்பின் தமிழகத்துடனான தன் வணிகத் தொடர்பை சீனம் மிக நெருக்கமாக வளர்த்துக்கொண்டது. சோழர்கள் பின்னர் கிழக்கிந்தியத் தீவு நாடுகளுடனும் தங்களது தொடர்பை விரிவுபடுத்திக்கொண்டனர். சோழர்கள் காலத்தில்தான், அரசன் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே அமைச்சர்களுக்கும், தங்களது குடிகளுக்கும் இடம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வில் எங்கு தோண்டினாலும் செங்கற்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதையே சான்றாகக் கொள்ளலாம். உட்கோட்டை, மண்மலை, குறுவாலப்பர்கோயில், சின்ன மாளிகைமேடு போன்ற பல பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வுகளில் சோழர் காலக் கட்டடங்கள் வெளிப்படுத்தப்பட்டதும் கூடுதல் சான்றுகளாகும். அரண்மனையை, தற்போதுள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரத்துக்கு தென்மேற்கே அமைத்துக்கொண்டுள்ளனர்.

இடைக்காலத்தில் சைவ சமயமும், வைணவமும் ஆதரிக்கப்பட்டன. இவற்றுடன் பௌத்தமும் ஆதரிக்கப்பட்டுள்ளது என்பதற்கு தஞ்சை பெரிய கோயில் சிற்பங்களைக் குறிப்பிடலாம். அவற்றோடு பௌத்தத்துக்கு வழங்கிய கொடைகளையும் கருத்தில் கொள்ளலாம். அனைத்து சமயங்களும் போற்றிப் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் இடைக்காலத்தில் வாணிகமும், மக்களின் சமய வாழ்வும் நன்கு செழிப்புடன் காணப்பட்டாலும் உயர்குடி மக்களுக்கென்ற ஓர் அமைப்பும், அடித்தட்டு மக்களுக்கென்ற ஓர் அமைப்பும் அக்காலத்திலும் இருந்தள்ளதையே அகழாய்வுகள் காட்டுகின்றன. வணிகர்களும், அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே செங்கற் கட்டடங்களைக் கட்டி வாழ்ந்துள்ளனர். பிற மக்கள் (கைவினைஞர்கள், தொழில்முனைவோர், ஏனையோர்) அனைவரும் குடிசைப் பகுதிகளிலும், அரண்மனையைச் சுற்றி அமைந்த பகுதிகளிலுமே வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு அண்மைக் கால அகழாய்வுகள் பல வரலாற்றுச் செய்திகளை நமக்கு வழங்கியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு, பண்டைய தொழிற்பட்டறைகள் இருந்த இடங்களில் தொடர் வரலாற்று நிகழ்வுகள் காணப்படுவதால், இதுபோன்ற தொன்மையான ஊர்கள் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளதையும், அங்கு மக்கள் தொடர்ந்து தொழிற்பட்டறை நிறுவி தொழிலை மேம்படுத்தியுள்ளனர் என்பதையும் அகழாய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகழாய்வில் கிடைத்த கடைநிலைப் பழைய கற்காலக் கற்கருவிகள், புதிய கற்காலக் கைக்கோடாரிகள், பெருங் கற்கால மணிகள், மட்கலன்கள் என சங்க கால மக்கள் வாழ்ந்தமைக்கான சிறப்பான தொல்பொருட்கள் பலவும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நறுமணப் புகைக்கலன் ஒன்றும் உறைகிணறும் குறிப்பிடத்தக்கவை. எனவே, இவ்வகழாய்வின் வழியாக சங்க கால வாழ்விடம் ஒன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளதை தெளிவாக உணரமுடிகிறது.

கீழடி அகழாய்வு

இது தமிழகத்தில் பெரிய அளவிளான குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியள்ளது. இவ்வகழாய்வு, மகாபாரதக் கதைகளில் மூலக்கருவாக உள்ள பகடை உருட்டுதல் விளையாட்டைச் சுட்டிகாட்டுகிறது. கீழடி அகழாய்வில்தான், முதன்முதலாக பகடைக்காய் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் சிறப்புக்குரியது. இங்கு பல்வேறு தூரதேசத்து பெரும் வணிகர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்பதும், அவர்கள் தங்களது பொழுதுபோக்குக்காகவும், கேளிக்கை விளையாட்டாகவும் பகடை உருட்டுதல் விளையாட்டை விளையாடி உள்ளனர் என்பதையும் இவ்வகழாய்வு தெளிவுபடுத்தியுள்ளது எனலாம். மேலும், இவ்வகழாய்வில் கட்டடப் பகுதிகள், கால்வாய் அமைப்புகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் மணிகள், சங்கு வளையல்கள், ரோமானியர் வருகை எனப் பல்லாற்றானும் சிறப்புபெற்ற அகழாய்வாகவும் தமிழகத்தின் மிகவும் பழமையான வணிக நகரத்தையும் இவ்வகழாய்வு வெளிப்படுத்தியுள்ளது என்பதே சிறப்புக்கு உரியது.

ஆதாரம் ; திணமனி நாளிதழ்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top