பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பெற்றோருக்கான யோசனைகள் / சுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்

இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறையை பற்றிய தகவல்.

கட்டை வண்டி பிடித்து நடை பழகிய, மணலில் எழுதி எழுத்துப் பழகிய, விடுகதை புதிர்கள் போட்டு விளையாடி அறிவு வளர்த்த நிகழ்வுகள் எல்லாம் நம் கண் முன்னே மெதுவாக மறைந்து கொண்டிருக்கிறது.

நகரமயமாக்கலும், தொழில்நுட்பங்களின் உதவியும், பொருளாதாரமே நோக்கம் என அமைத்துக் கொண்ட வாழ்க்கையும் வருங்கால சந்ததியினரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைக்கு தாய் அன்பையும், தந்தை அறிவையும் ஊட்டி வளர்ப்பர் என்ற நிலையும் நகர வாழ்வில் இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.

வேலைப் பழு, பயண நேரம், நெருக்கடி போன்றவற்றால் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகின்றனர். இதில் குழப்பத்திற்குரிய விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்காகத்தான் பெற்றோர் இத்தகைய நிலையில் சிக்கி தவிக்கின்றனர் என்பதுதான்.

இப்படியான மாறுபட்ட சூழ்நிலையில், குழந்தையானது பிறந்தது முதல் சந்திக்கும் அல்லது அறியும் தகவல்கள் அனைத்தும் நாம் நம்முடைய இள வயதில் அறிந்திராதவைகளாக இருக்கிறது. காரணம் விளையாட மண் இல்லை, நீந்துவதற்கு நீராதாரங்கள் இல்லை, நல்லொழுக்கக் கதைகள் கற்றுத் தருவதற்கு தாத்தா, பாட்டிகள் இல்லை, தென்றலை உணர்வதற்கும், வான் நிலவின் அழகை காண்பதற்கும் இட வசதிகள் இல்லை.

கற்றுத் தரும் இயற்கையை இல்லாததாக்கி வருவதால், கற்றுக் கொள்வதற்கும், பொழுதினை போக்குவதற்கும் செயற்கையை நம்ப வேண்டியதாகிவிட்டது.

தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளை கண்டு உலகைத் தெரிந்துகொள்வதற்கும், சி.டி.க்களின் மூலம் மழலைப் பாடல்களை அறிந்துகொள்வதற்கும், வீடியோ கேம்களின் மூலம் விளையாட்டு ஆசைகளை நிவர்த்தி செய்து வந்துகொண்டிருக்கிறோம். தற்போது இதில் புதிதாக "டேப்ளட்" என்று சொல்லக்கூடிய மேகக் கணினிகளும் இடம் பிடித்துள்ளன.

குழந்தைகளுக்கு ஏ, பி, சி, டி, கற்றுத்தருவதற்கும், மழலைப் பாடங்களைக் கற்றுத் தருவதற்கும் தனித்தனியாக அப்ளிகேஷன்ஸ் இணையத்தில் கிடைக்கிறது. இலவசமாகவும், பணம் செலுத்தியும் பெறக்கூடிய வகையில் இருக்கும் இது போன்ற "அப்ளிகேஷன்"களை நவீன, நாகரீக பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு அளிக்கின்றனர்.

4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை தங்கள் நேரத்தை வீடியோ விளையாட்டுக்களிலும், இணையதளங்களிலும் செலவிடுகின்றனர். "வெளியில் சென்றால் எங்கே போகிறான் என்றே தெரியாது, அதற்கு பதில் வீட்டிற்குள்ளேயே இருப்பது பிரச்சனையில்லை" என்று ஆறுதல்படும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் இணையத்தின் ஊடாக எங்கே எல்லாம் செல்கிறார்கள் என கவனிப்பதில்லை.

ஒரு தொழில்நுட்பத்தை குழந்தைகள் பயன் படுத்தும்பொழுது, அந்த தொழில்நுட்பம் குறித்து தங்கள் குழந்தைகளை விட பெற்றோருக்கு அதிக அறிவு இருப்பது அவசியம். ஏனெனில் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தால் வரும் பாதிப்புகள், குழந்தையை ஒரு கட்டத்திற்குள்ளாக செயல்பட வைக்கும் அல்லது கண்காணிக்கும் திறன் இருப்பது அவசியம்.

தங்களிடம் அதற்கான தெளிவு இல்லாதபோது குழந்தைகளை இணையத்திலும், வீடியோ கேம்களிலும், முழுக்க நேரத்தை செலவிட வைப்பது பாதுகாப்பில்லாதது ஆகும். புதியவற்றை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும்பொழுது நன்மைகளை மட்டும் காணாது தீமைகளையும் ஆராய்வது அவசியம்.

இன்றைக்கு பல பெற்றோருக்கு குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற மனநிலையே அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்தான் பிற்காலத்தில் தங்கள் குழந்தைகள் குறித்து அதிகம் கவலை கொள்ளுபவர்களாகிறார்கள்.

வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்கள் ஒரே நேர்கோட்டிலான சிந்தனைகளை தரக்கூடிய சூழ்நிலைகளையே உருவாக்கித் தருகிறது. ஆனால் திறந்த வெளியில் விளையாடும் விளையாட்டுக்கள், பரந்த அறிவினை தரக்கூடியதாக இருக்கிறது.

ஏனெனில் விளையாட்டு மைதானம் விளையாட்டோடு நண்பர்களை தருகிறது, காலநிலை மாற்றத்தையும் கற்றுத்தருகிறது. நீச்சல் குளம் பாதுகாப்பான நீச்சலை மட்டுமே கற்றுத் தருகிறது. ஆனால் ஆறானது நீச்சலோடு திரண்டு வரும் நீரோட்டத்தை எதிர்கொள்வதன் மூலம் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ளும் திறனையும் அளிக்கிறது.

வாழ்க்கையின் வசந்தம் திறந்த வெளியில் தான் இருக்கிறது. அதனை பெற்றுக்கொள்ள நம் குழந்தைகளை வெளியே அழைத்து வருவோம். அதற்கேற்ற முறையில் நம் சுற்றுப்புறத்தையும் கட்டமைக்கும் பணியும் நமக்கு உள்ளது.

ஆதாரம் : தினமலர்

3.0119047619
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top