பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / நிறுவனத்தின் செயலாளர் பணிக்கான படிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நிறுவனத்தின் செயலாளர் பணிக்கான படிப்பு

நிறுவனத்தின் செயலாளர் பணிக்கான படிப்பு பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கார்பரேட் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும், ஒரு நபர் முக்கியப் பங்காற்றியிருப்பார். ஆனால், அவர் வெளியே தெரியமாட்டார். அவர்தான், நிறுவனத்தின் செயலாளர். ஒரு சிறந்த நிறுவன செயலாளர் என்பவர், சட்டம், மேலாண்மை, பைனான்ஸ் மற்றும் கார்பரேட் நிர்வாகம் ஆகிய பல்துறை அறிவை தன்னகத்தேக் கொண்டு, ஒரு நிறுவனம் - அதன் இயக்குநர்கள் வாரியம் - பங்குதாரர்கள் - அரசாங்கம் - பிற ஏஜென்சிகள் ஆகியவற்றுக்கிடையே ஒரு பாலமாக திகழ்கிறார்.

ஒரு நிறுவனத்தின் செயலாளர் என்பவர், உள்புற சட்ட நிபுணராக இருந்து, நிறுவனத்தின் சட்ட திட்டங்களின் படி செயல்படுபவராக திகழ்கிறார். கார்பரேட் சட்டம், செக்யூரிட்டீஸ் சட்டம், கேபிடல் மார்க்கெட் மற்றும் கார்பரேட் நிர்வாகம் ஆகியவற்றில் நிபுணராக இருக்கும் ஒரு நிறுவனத்தின் செயலாளர், இயக்குநர்களின் வாரியத்திற்கு, முதன்மை ஆலோசகராக இருக்கிறார் மற்றும் நிறுவனத்தின் அனைத்துவிதமான முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகிறார்.

சரியான தகுதியுள்ள ஒரு நிறுவன செயலாளர், ஏதேனுமொரு கார்பரேட் நிறுவனத்திலும் பணிபுரியலாம் அல்லது தனியாகவும் பயிற்சி செய்யலாம். குறைந்தபட்சம் 5 கோடி மற்றும் அதற்கும் மேலான பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள், தமக்கான ஒரு முழுநேர நிறுவன செயலாளரை கட்டாயம் நியமித்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்தப் பணிக்கான தேவைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பைனான்சியல் பிளானிங், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், வெல்த் மேனேஜ்மென்ட், அஸெட் மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், பிரைவேட் ஈக்யூடி பைனான்ஸ் போன்ற வளர்ந்துவரும் பல அம்சங்களும், நிறுவன செயலாளர்களின் தேவைகளை அதிகரிக்கின்றன. இத்துறையில் பயிற்சி கொடுப்பதற்காக இருக்கும் பிரபல கல்வி நிறுவனம் ICSI. இத்துறை சார்ந்த பயிற்சிகளை ஒழுங்குபடுத்தவும், மேம்படுத்தவும், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக இது உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம், தொலைதூரக் கல்வியின் மூலமும் படிப்புகளை வழங்கி, நிறுவன செயலாளர்களை உருவாக்குகிறது. மேலும், விருப்ப வாய்மொழி பயிற்சி வகுப்புகளும் உண்டு.

மூன்று நிலைகள்

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்த ஒரு மாணவர், நிறுவன செயலாளர் படிப்பில் சேரலாம். ஆனால் அவர் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். பவுண்டேஷன் ப்ரோகிராம், எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராம் மற்றும் ப்ரொபஷனல் ப்ரோகிராம் என்பவையே அவை. இதனோடு சேர்த்து, 15 மாதங்கள் பிராக்டிகல் பயிற்சியையும் முடிக்க வேண்டும். இந்த பிராக்டிகல் பயிற்சியை, விரும்பினால், எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராமில் தேறிய பிறகும் மேற்கொள்ளலாம்.

அதேசமயம், பட்டப்படிப்பை முடித்தப்பிறகு, நிறுவன செயலாளர் பணிக்கான படிப்பில் சேர விரும்பினால், எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராம் மற்றும் ப்ரொபஷனல் ப்ரோகிராம் என்ற இரு நிலைகளை முடிக்க வேண்டும். இதனுடன் சேர்த்து, 15 மாத ப்ராக்டிகல் பயிற்சியும் உண்டு. படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர், ICSI -ன் அசோசியேட் உறுப்பினராக நீங்கள் நியமிக்கப்படுவீர்கள் மற்றும் அதன்பிறகு, உங்களின் பெயருக்குப் பின்னால், ACS என்ற எழுத்துக்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். Associate Company Secretary என்பது இதன் அர்த்தம்.

வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விவரம்

நிறுவன செயலாளர் படிப்பிற்கான சேர்க்கை ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை, ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.

இங்கு பயிற்சிபெற்ற கம்பெனி செக்ரெட்டரிகளுக்கு, வெளிநாட்டு பணிவாய்ப்புகள் அதிகம். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல கம்பெனி செக்ரெட்டரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் திறமைகள் மற்றும் சிறப்பான தகுதி நிலைகளுக்கு அங்கு மதிப்பு அதிகம்.

மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், ஆண்டுக்கு, 25 லட்சம் முதல் சுமார் 1 கோடி வரை சம்பளம் கிடைக்கிறது. சம்பள விகிதமானது, ஒருவரின் திறமை மற்றும் பணிபுரியும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. கம்பெனி செக்ரெட்டரிகள், மத்திய மற்றும் மாநில அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள், யூனியன் பிரதேசம் மற்றும் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அரசு அமைப்புகள், அறக்கட்டளை மற்றும் லாப-நோக்கமற்ற நிறுவனங்கள் ஆகியவைகளில் பரவலான பணி வாய்ப்புகளை பெறலாம்.

WTO மற்றும் GATS ஆகியவற்றின் மூலமாக, சேவைகள், உலகமயமாக்கப்பட்டுள்ளதால், இத்துறைக்கான பணிவாய்ப்புகள் பல்வேறான உலக நாடுகளில் அதிகரித்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுடன், இந்திய அரசு இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதால், கம்பெனி செக்ரெட்டரிகளின் உலகம் இன்னும் விரிந்துள்ளது.

மேலும், 2009ம் ஆண்டின் கம்பெனிகள் மசோதா, கம்பெனி செக்ரெட்டரி தகுதி நிலையை, CEO மற்றும் CFO தகுதி நிலைகளுக்கு சமமாக நிறுத்துகிறது. இதன்மூலம், பொறுப்புகளும் அதிகரிக்கிறது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் பொது பயிற்சியில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் கீழ்கண்ட பிரிவுகளில் விரிந்துள்ளன. அவை,

Corporate Restructuring

Cross border insolvencies

Mergers and amalgamations

International tax planning

National Integrated VAT systems(GST)

Competition law and competition economics

Arbitration and dispute resolution

Legal and knowledge process outsourcing

Knowledge management

Indirect taxation

கட்டண விபரங்கள்

பவுண்டேஷன் ப்ரோகிராம் - ரூ.3600

எக்ஸிகியூடிவ் ப்ரோகிராம் - ரூ.7000 (வணிகம் படித்த மாணவர்களுக்கு)

வணிகம் படிக்காத மாணவர்களுக்கு - ரூ.7750

ப்ரொபஷனல் ப்ரோகிராம் - ரூ.7500

தேர்வுக்கட்டணம்

ஆண்டுக்கு இருமுறை, ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பவுண்டேஷன் ப்ரோகிராம் - ரூ.875

எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராம் - ரூ.900(per module)

ப்ரொபஷனல் ப்ரோகிராம் - ரூ.750(per module)

தேர்வெழுத, விண்ணப்பிக்கும் கடைசித் தேதிகள்

மார்ச் 25 (ரூ.100 அபராதத்துடன் ஏப்ரல் 9 வரை கட்டலாம்)

செப்டம்பர் 25 (ரூ.100 அபராதத்துடன் அக்டோபர் 10 வரை கட்டலாம்)

ஆதாரம் : தினமலர் – வெற்றி வழிகாட்டி கையேடு

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top