பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி

கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உணவுத் துறையும் மருத்துத் துறையும் ஏராளமான வாய்ப்புகள் நிறைந்த துறையாக வளர்ந்து வருகின்றன.  குறைந்த அளவு உணவில் உடல்நலத்திற்குத் தேவையான மிகுந்த சத்துகள் நிறைந்த உணவாகவும் மனித நலத்திற்கான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அளிக்கின்ற உணவாகவும் இறைச்சியும் இறைச்சிப் பொருள்களும் விளங்குகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் வளரும் நாடுகளின் உணவு முறையானது வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் துரித வேகத்தில் தீவிர மாற்றத்தை அடைந்துள்ளது. இந்நாடுகளைப் பாதித்துக் கொண்டிருக்கும் ஊட்டச்சத்து மாற்றத்தின் குறியீடாக விலங்குப் புரத நுகர்வின் உயர்வைக் குறிப்பிடலாம். மேலும் இது வளர்ந்து வரும் இறைச்சி புரத நுகர்வையும் சார்ந்துள்ளது.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பானது (2014) அடுத்த பத்தாண்டுகளில் சராசரி 1.6 விழுக்காடு அளவில் தனிமனித வருமான உயர்வின் காரணமாக இந்தப் போக்குத் தொடரும் எனக் கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் உலகளாவிய இறைச்சி நுகர்தலானது 1961இல் வருடத்திற்கு ஒரு மனிதனுக்கு 23.1 கிலோவில் துவங்கி  2011 இல் 42.20 கிலோவாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இறைச்சி உற்பத்தியானது பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில் (2006 – 07) 2.3 மில்லியன் டன்னிலிருந்து பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில் (2011-12) 5.5 மில்லியன் டன்களென ஆரோக்கியமான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. மேலும் பன்னிரண்டாவது திட்டத்தின் துவக்கத்தில் 5.9 மில்லியன் டன்னிலிருந்து 6.2 மில்லியன்டன்களாக (2013 – 14) உயர்ந்துள்ளது.

இறைச்சி உற்பத்தியின் இந்த எழுச்சியானது மற்ற வளர்ந்து வரும் நாடுகளைப் போல இந்தியாவிலும் நகரமயமாக்கல் வாழ்க்கைத்தர உயர்வு மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறைகளை முன்னிட்டு இறைச்சியின் தேவையில் சீரான அதிகரிப்பு இருந்தன பொருட்டு வந்ததே எனலாம்.  வளர்ந்து வரும் நாடுகளில் கடந்த 25 ஆண்டுகளுக்குள் (1980  இலிருந்து 2005 ற்குள்) தனி மனித இறைச்சி நுகர்வு இருமடங்காக மாறிய சூழலில் இந்தியாவில் அதே காலகட்டத்தில் வெறும் 35 விழுக்காடு உயர்வுதான் ஏற்பட்டது.  2011 ஆம் ஆண்டின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் புள்ளி விபரக்கள் வரிசையின் படி கோழி இறைச்சி உற்பத்தியில் இந்தியா ஆறாம் இடத்தை பிடித்தது.

கால்நடை வளர்ப்பு பால்பண்ணை மற்றும் மீன்பிடித்துறையின் புள்ளி விபரத்தின் படி தமிழ்நாட்டின் இறைச்சி உற்பத்தியானது 2009 – 10 இல் 501.98 மில்லியன்டன்களும் 2013 – 14 இல் 464.51 மில்லியன்டன்களும் இருந்தன.

தமிழகத்தில் வணிக ரீதியான கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி தாங்களே முட்டையை கோழிளை விற்பனை செய்கிற தொழில் முறைவோராகவும் முற்பட்டதுதான்  அது பெரும் தொழிலாக வெற்றி பெறக்காரணமாக அமைந்தது.

வெற்றிக்கதைகள்

அண்மைக் காலமாக நாட்டுக் கோழி வளர்க்கிறவர்களும் விற்பனையையும் செய்திடப் பல்கலை கழகம் பயிற்சியளித்து வழிகாட்டி வருவதால் பலர் வெற்றியாளர்களாக முன்னேறி வருகிறார்கள்.

அந்த வகையில் கோவை சுப்பிரமணியம் பாளையத்தில் யமுனை நாட்டுக்கோழிப் பண்ணை எனத் திருமதி அம்முக்குட்டி மகாதேவி.சரோஜா காவேரி ரேணுகா மற்றும் செயலட்சுமி நாட்டுக்கோழிகளைக் கொண்ட பண்ணையைத் தொடங்கினார். சொந்த இடம் இல்லை நிலத்தை வாடகைக்கு எடுத்துப் பண்ணை நடத்துகின்றனர். நாட்டுக் கோழி குஞ்சுகளைப் பெங்களுரு, ஈரோடு ஆகிய இடங்களில் குஞ்சுப் பொரிப்பகங்களில் இருந்து வாங்கிக் கொள்கின்றனர்.

கோழிகளை 3 மாதம் வளர்த்தால் அவை 1.5 கிலோ உடல் எடையை அடையும். அவற்றை இடைத்தரகர்கள் மூலமும் நேரடியாக கடைகளுக்கும் விற்பனை செய்தனர். இடைத்தரகர்களும் கடைக்காரர்களும் நியாயமான நிலை கொடுக்காமல் இந்த மகளிரை ஏமாற்றி குறைந்த விலையே கொடுத்ததால் ஆரம்ப காலத்தில் 1.5 இலட்சம் இழப்பு ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகினர்.

அங்கு இவர்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு இலாபகரமான விற்பனை வழிமுறைகள் ஜப்பானியக் காடைவளர்ப்பு வான்கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகளை அளித்து வழிகாட்டினார்.

இதுமட்டுமன்றிக் கோழிகளை அறுத்து சுகாதாரமான முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்வது எப்படி? என்றும் அங்குள்ள இறைச்சி தயாரிப்பு கூடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. எப்படி அதனை விற்பனை செய்வது? போன்ற உத்திகளையும் பயிற்று வித்தனர்.

அதன்பிறகு இடைத்தரகர்களுக்கோ கடைக்காரர்களுக்கோ கோழிகளை விற்பனை செய்யாமல் நுகர்வோருக்கே நேரடியாகக் கோழி இறைச்சியாகவும் கோழியாகவும் நுகர்வோரின் தேவைக்கேற்ப அம்மு குட்டியும் அவர் கூட்டாளிகளும் விற்பனை செய்து வருகின்றனர்.  இதன்மூலம் அவர்கள் தொழில் நட்டத்தைத் தாண்டி இலாபத்தைப் பெற்றனர். நாட்டுக்கோழிகளை உயிர் எடையாக விற்பனை செய்யும் போது ஒரு கோழிக்கு ரூ.10  முதல் ரூ.20 வரை இலாபம் பெறுகிறார்கள். அதையே கோழி இறைச்சியாக ஒரு கிலோ ரூ.300 க்கு விற்பனை செய்யும் போது ரூ.60 முதல் ரூ.100 வரை இலாபம் பெறுகின்றனர்.

பண்ணை நடத்துகிற இடத்திற்கு வாடகையாக ஆண்டுக்கு ரூ.6000 செலுத்துகின்றனர். தண்ணீர் ஒரு வாரத்திற்கு 2000 லிட்டர் தேவைப்படுவதாகவும் அதனை வெளியிலிருந்து ரூ.300 செலுத்தி வாங்கி கொள்கின்றனர்.

பண்ணை மகளிரும் தொழில் முனைவோராகலாம் என்பதற்கும் கோழியாக விற்பதை விட இறைச்சியாக விற்பது இலாபகரமானது என்பதற்கும் எந்த ஒரு தொழிலானாலும் அதன் நுட்பங்களை அறிந்து தெளிந்து ஈடுபாட்டுடன் செய்தால் மேன்மை அடையலாம் என்பதற்கும் யமுனை நாட்டுக்கோழிப் பண்ணையின் திருமதி.அம்முக்குட்டியும் அவர்தம் கூட்டாளிகளும் முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.

அடுத்த கட்டமாக நாட்டுக்கோழி மட்டுமின்றி புதிதாகப் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் காடை வளர்ப்பையும் வான்கோழி வளர்ப்பையும் மேற்கொண்டு கூடுதல் வருவாய் பெற்று வருகின்றனர்.

கடந்த தலைமுறைகளில் உற்பத்தியாளர்களாக மட்டுமே இருந்த கால்நடைப் பண்ணையாளர்கள் இந்தத் தலைமுறையில் தொழில் முனைவோராக மலர்ந்திடவும் வளர்ந்திடவும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.  பண்ணையாளர்களின் இல்லங்கள்தோறும் பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று வேலைவாய்பை தேடிவருகிறார்கள். சுயவேலைவாய்ப்பை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு அரசு நிதி தொழில்நுட்பம் பயிற்சி மற்ற சலுகைகள் என அனைத்து வகையிலும் உதவிடத் தயாராக உள்ளது.

இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்கள் தொடர்பான அனைத்துத் தொழில்நுட்பங்களையும் தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலையும் வழங்கிடத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் தயாராக உள்ளது.

பல்கலைக் கழகத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று இறைச்சி விற்பனையில் வெற்றிகரமாக தொழில் முனைவோராக விளங்கும் சென்னையைச் சேர்ந்த திரு.பாட்சாபாய் ஒரு சான்று.

இவருக்கு 2011 இல் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் இறைச்சித் தொழில்நுட்பத் துறையில் இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்கள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.  அத்தோடு நின்றுவிடாமல் அவருக்குத் திட்ட அறிக்கையும் இறைச்சிக் கடை வடிவமைப்பும் இறைச்சி வாகனம் எப்படி இருக்க வேண்டும் போன்ற ஆலோசனைகளும் தொடர்ந்து ஊக்கமும் அளிக்கப்பட்டது.

இறைச்சிக் கூடங்களிலிருந்து இவர் இறைச்சியை வாங்கி வருகிறார். வாங்குகிற இடத்திலிருந்து கடைக்கும் கடையிலிருந்து தேவையானவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வரை இறைச்சி வாகனத்தில் குளிந்த நிலையில் இறைச்சியைக் கையாள்கிறார்.  வாங்கி வந்த இறைச்சியை விஞ்ஞான முறையில் நேர்த்தியாக இறைச்சித் துண்டுகளாக நறுக்கிக் குளிர்வித்த இறைச்சியைத்தான் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்கிறார்.  தொடக்கத்தில் வாரம் ஒருடன் இறைச்சி விற்பனை செய்தவர் தற்போது வாரத்திற்கு 4 டன் இறைச்சியை விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

இத்தகையவர்களே இன்று நாட்டிற்குத் தேவை இளைஞர்கள் இவரை போல இறைச்சித் தொழில் செய்து வென்றிட முனையவும் முந்தவும் வேண்டும்.

கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, ஓசூர்

வேகமாக வளர்ந்து வரும் கோழிப் பண்ணைத் தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தைக் கொண்டு 2011 ஆம் ஆண்டு ஓசூரில் உலகத்தரம் வாய்ந்த கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் துவக்கம் அறிவிக்கப்பட்டது.

 • கல்லூரி துவக்கப்பட்ட நாள் : 18.07.2011
 • கல்லூரி பாடத்திட்டம்  : கோழியினத் தொழில்நுட்பம்

கல்லூரியின் குறிக்கோள்கள்

 • கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மையில் தரமான உயர்கல்வி அளித்திடல்
 • கோழிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
 • கோழி சார்ந்த தொழில்முனைவோர் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் மற்றும் கோழி வளர்க்கும் விவசாயிகளிடையே தொடர்பினை ஏற்படுத்திக் கோழி வளர்ப்பு சார்ந்த தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு அளித்திடல்.

கல்லூரியின் உள் கட்டமைப்பு வசதிகள்

சிறப்பான வகுப்பறை மற்றும் ஆய்வகங்கள்

 • மாணவ மாணவியர்களுக்கான தனித்தனி விடுதி வசதி
 • கோழி உற்பத்தி தொடர்பான 1300 க்கும் மேலான அனைத்து வகையான உணவியல் தொழில்நுட்பம் இறைச்சியியல் நோய்க்குறியியல் மரபியல் பொறியியல் மற்றும் அடிப்படை அறிவியல்.
 • பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சிப் புத்தகங்கள்
 • கோழியின் உற்பத்தி வளாகத்தில் நவீன முறையில் பண்ணை வளர்ப்பு மற்றும் குஞ்சுப் பொரிப்பு மேலாண்மை கல்வி.
 • நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய தீவன அரைப்புக்கூடம்.

இளநிலைப் பட்டபடிப்புக்கான சேர்க்கைத் தகவல்

 • பாடத் திட்டம் :கோழியினத் தொழில்நுட்பம்
 • கால அளவு: நான்கு வருடங்கள் (8 பருவங்கள்)
 • வருடாந்திர மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை : 20
 • பாடத் தகுதி: கணிதம் வேதியியல் இயற்பியல் உயிரியியல்
 • வயது வரம்பு : 17 வயது முதல்  21 வயது வரை
 • குறைந்த பட்ச மதிப்பெண் தேவை

பாடம் குறைந்தபட்ச மதிப்பெண் (விழுக்காடு)

 

பொது பிரிவு

பி.வபி..(மு)

மி.பி.(சீர்மரபினர்)

எஸ்.சி.எஸ்.டி

கணிதம்

60

60

55

தேர்ச்சி

உயிரியல்

60

60

55

தேர்ச்சி

வேதியியல் மற்றும் இயற்பியல்

60

60

55

தேர்ச்சி

ஆனைத்தும் சேர்ந்து (ஒன்று முதல் மூன்று வரை)

70

65

60

தேர்ச்சி

கல்விக் கட்டண விபரங்கள்

வ.எண்

குறிப்பு

பருவங்கள்

பருவங்கள்

பருவங்கள்

1.

கல்விக்கட்டணம்

4000

4000

4000

2.

தேர்வுக்கட்டணம்

3000

3000

3000

3.

சிறப்பக்கட்டணம்

2970

1320

1470

4.

இதரகட்டணம்

3025

---

700

 

 

12995

8320

9170

கல்வி உதவித்தொகை

 • ஹரிஜன் சேம நலன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உதவித்தொகை மத்திய உதவித்தொகை இதர நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை
 • இக்கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் – திருமதி பூர்ணம் சுந்தர ராஜன் விருது-முதல் மதிப்பெண் பெறும் மாணவ மாணவியர்களுக்கான விருது.
 • பன்னாட்டுத் தொடர்பு – இக்கல்லூரி தீவனப் பன்னாட்டு நிறுவனத்துடன் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவ மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்கின்றது.
 • தென்னாட்டு கல்விச் சுற்றுலா – தென்னிந்திய மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சுற்றுலா செல்லுதல் ( 15 நாட்கள்)

வேலைவாய்ப்பு

இக்கல்லூரியில் பன்னாட்டுக் கோழி உற்பத்தி தீவன உற்பத்தி மற்றும் உபகரணங்கள் செய்யும் நிறுவனங்கள் மூலம் மாணவ மாணவியர்களை வளாகத் தேர்வின் அடிப்படையில் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

விளையாட்டு வசதி வாய்ப்புகள்

உள் அரங்கம் மற்றும் வெளி அரங்க விளையாட்டு வசதிகள் பின்வருவன.

 • கைப்பந்து
 • இறகுப்பந்து
 • கால்பந்து
 • மட்டைப்பந்து
 • கேரம்
 • டேபில்டென்னிஸ்
 • ஏறிபந்து
 • கபாடி
 • உடற்பயிற்சிக் கூடம்

மருத்து வவசதி: மாணவர்களுக்கான மருத்துவ வசதிகள் வாரம் இருமுறை அளிக்கப்படுகிறது.

செயல்படுத்தப்படும் திட்டங்கள்

தீவன உற்பத்தி ஆலை

இத்திட்டமானது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மூலம் சுழல் நிதியாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 27.00 இலட்சம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டக் கால்நடைப் பண்ணை கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் இயங்கும் கோழி குஞ்சு உற்பத்தித் திட்டக் கோழிகளுக்குத் தேவையான தீவனத்தைத் தயார் செய்து தருதல் ஆகும்.  மேலும் அருகில் உள்ள கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, சேலம் மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் தேவைப்கேற்ப தீவனத்தைத் தயார் செய்து அளிக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு பெருமளவு குறைக்கப்படுகிறது.

கோழிக்குஞ்சு உற்பத்தித் திட்டம்

இத்திட்டமானது அகில இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தால் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய்.203.57 இலட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் வனராஜா – முட்டை மற்றும் இறைச்சிக்காகவும் கிராமப் பிரியா முட்டைக்காக வளர்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நாள் ஒரு வார வயதுடைய கோழிக்குஞ்சுகள் மற்றும் இரண்டு வார வயதுடைய கோழிக்குஞ்சுகளும் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் சுமார் 395 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இதன் மூலம் சுமார் 22181 வனராஜா கோழிக்குஞ்சுகளும் 19067 கிராமப் பிரியா கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1000 வனராஜா மற்றும் 1005 கிராமப் பிரியா கருமுட்டைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அனுபவக் கல்வித்திட்டம்

வான்கோழிகளை இறைச்சி உற்பத்தி செய்தல்

இத்திட்டமானது அகில இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தினால் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 50.00 இலட்சம் ஆகும். இதன்மூலம் இளங்கலை பயிலும் மாணவ மாணவியர்களுக்குச் செயல் வழிமுறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தானுவாஸ் தாது உப்புக் கலவை உற்பத்தி செய்தல்

இத்திட்டமானது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் சுழல் நிதியாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 3.00 இலட்சம் ஆகும். இதில் இரண்டு வகை கலவைகள் தயாரிக்கப்படுகின்றன. வகை – 1 மற்றும் வகை – 2 ஆகும். இதுவரை சுமார் 65820 கிலோ தாது உப்புக்கலவை தயார் செய்து ஒரு கிலோ ரூபாய் 45 என்ற வீதம் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

தீவன ஆராயச்சிக் கூடம்

இத்திட்டமானது தேசியக் கால்நடைப் பணி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 27.00 இலட்சம் ஆகும். இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் மூலம் விவசாயிகளின் தீவன மூலப்பொருட்களின் தரம் மற்றும் அதனுடன் ஏதேனும் கலப்பு செய்யப்பட்டுள்ளதா எனவும் மேலும் விவசாயிகளின் மூலப்பொருட்களின் தரத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு தீவனம் தயாரிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாமக்கல் கோழி 1 பிரபலப்படுத்துதல் மூலம் கிராமப்புற மக்களின் கூடுதல் வருவாயினைப் பெருக்குதல்

இத்திட்டமானது தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி விவசாய வங்கி (நபார்டு) மூலம் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 2.99 இலட்சம் ஆகும். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு நாமக்கல் கோழி – 1 என்ற கலப்பின முட்டை கோழிக்குஞ்சுகளை (10 பெட்டை 2 சேவல்) வழங்கி அதனோடு கோழிகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் நோய்ப் பராமரிப்பு முறையினைச் செய்து கூடுதல் வருவாயினைப் பெருக்குதல் ஆகும்.

இறைச்சி தொழில்நுட்பம் ஒரு கண்ணோட்டம்

இந்தியா உலகிலேயே அதிகக் கால்நடைகளைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இந்தியாவில் 2014 – 2015 – இல் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி கீழ்க்கண்ட கால்நடைகள் உள்ளன.

எருமைமாடு  - 10.70 மில்லியன்

பசுமாடு - 190.90 மில்லியன்

செம்மறிஆடு - 65.06 மில்லியன்

வெள்ளாடு - 135.17 மில்லியன்

பன்றி - 10.29 மில்லியன்

கோழி - 729.2 மில்லியன்

இந்தியாவில் கால்நடைத்துறை மொத்த விவசாய உற்பத்தியில் கிட்டத்தட்ட 31.6 விழுக்காடு பங்களிக்கின்றது. உலகின் மொத்த இறைச்சி உற்பத்தி 220 மில்லியன்டன் என்றும் அதில் இந்தியாவின் பங்கு 6.3 மில்லியன்டன் என்றும் தெரியவருகின்றது. உலகின் இறைச்சி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 3 விழுக்காடு மட்டுமே இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இறைச்சி ஏற்றுமதி

இந்தியாவில் 3600 அங்கீகாரம் பெற்ற கால்நடை அறுவைக்கூடங்களும் 10000 த்திற்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத கால்நடை அறுவடைக் கூடங்களும் உள்ளன. தற்போது இந்தியாவில் 56 நவீன இறைச்சிக்கூடங்கள் உள்ளன. இவை முழுவதுமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆரம்பிக்கபட்டவை. இந்தியாவிலிருந்து 60 நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதியாகின்றது. குறிப்பாக ஆட்டுஇறைச்சி 15 விழுக்காடு பன்றிஇறைச்சி 10 விழுக்காடு மற்றும் கோழி இறைச்சி 12 விழுக்காடு என்றளவில் ஏற்றுமதியாகின்றது.  மதிப்பூட்டப்பட்ட இறைச்சிப் பொருட்கள் 2  விழுக்காடு மட்டுமே ஏற்றுமதியாகின்றன. ஆனால் வெளிநாடுகளில் 60 -70 விழுக்காடு மதிப்பூட்டப்பட்ட இறைச்சிப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதிக இலாபம் பெறுகின்றனர்.

மில்லியன்டன்

ரூபாய் இலட்சத்தில்

 

ஆடு - வெள்ளாட்டு இறைச்சி

18757.42

70963.36

கோழி இறைச்சி மற்றும் கோழி இறைச்சிப் பொருள்கள்

552012.59

70963.36

தற்போது இந்தியாவிலிருந்து கீழ்க்கண்ட அளவிலான இறைச்சி மற்றும் உபபொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இறைச்சி உட்கொள்வோர்

கடந்த பத்து ஆண்டுகளுக்குள் பச்சை வெள்ளை மற்றும் நீலப் புரட்சிகளை இந்தியா கண்டுள்ளது தற்போது இறைச்சி உற்பத்தியில் சிவப்பு இளஞ்சிவப்புப் புரட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் குறிப்பாக கிராமங்களில் கலாச்சாரம் பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் மதக்கோட்டுபாடுகள் ஆகியவை இறைச்சி நுகர்வைப் பாதிக்கின்றன. நகரமயமாக்கலினாலும் பெண்கள் வேலைகளுக்குச் செல்வதன் மூலமும் உயர்தரமயமாக்குதல் தொழில் உற்பத்தித்திறன் தகவல் தொழில்நுட்பத்திறனின் வளர்ச்சி காரணமாகவும் இறைச்சி உட்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இது அதிக இறைச்சி உற்பத்திக்குக் காரணமாக இருக்கக்கூடும்.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஒருதனி நபருக்கு வருடத்திற்கு 11 கிலோ இறைச்சி புரதம் தேவை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 34 கிராம் இறைச்சிதேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.  ஆனால் தற்போது ஒரு நபருக்கு 14 கிராம் இறைச்சிப் புரதம் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றது. எனவே பரிந்துரைக்கப்பட்ட புரதத் தேவையை அடைய வேண்டுமானால் இறைச்சித் தொழிலையும் இறைச்சி உண்பவர்களையும் இன்னும் ஊக்குவித்தல் வேண்டும்.

பாதுகாப்பான இறைச்சி

மேலும் நமது நாட்டுக் கால்நடைகளின் இறைச்சியில் கொழுப்பு குறைவாகக் காணப்படுவதாலும் கொலஸ்டரால் போன்ற கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருப்பதாலும் ஏற்றுமதிக்கு ஏற்றனவாகவும். வெளிநாட்டுச் சந்தையில் வரவேற்பைப் பெற்றதாகவும் உள்ளது. மேலும் இந்தியாவிலுள்ள கால்நடைகளின் இறைச்சியில் கதிர்வீச்சுப் பொருள்களும் இருப்பதில்லை. எனவே உண்பதற்குப் பாதுகாப்பானதாகவும் உள்ளது.

இடர்பாடுகள்

அடுத்து இறைச்சித் தொழிலிலுள்ள இடர்ப்பாடுகளைக் குறித்துப் பார்ப்போம்.

1. இந்தியாவில் உள்ள கால்நடைகளில் இறைச்சியின் தரம் மிகவும் குறைவாக உள்ளது.  இதற்கு பல காரணங்கள் உண்டு.

2. கால்நடைகளை வளர்ப்பதோ அல்லது அவற்றை அறுப்பதற்கான கூடங்களிலோ சுகாதாரமான முறைகள் கையாளப்படுவதில்லை.

3. கால்நடைகளின் அறுவை முன்பரிசோதனை, அறுவைப் பின்பரிசோதனை ஆகியவை கால்நடை மருத்துவர்களால் முழுமையாகச் செய்யப்படுவதில்லை.  இதனால் பல நோய்கள் பரவக்காரணமாக உள்ளது. மேலும் மனிதனிடமிருந்து கால்நடைகளுக்கும் கால்நடைகளிடமிருந்து மனிதனுக்கும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

4. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கால்நடை அறுப்புக்கூடங்கள் தவிர மற்ற கால்நடை அறுப்புக்கூடங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.  அவை ஆங்கிலேயர்களின் காலத்தில் கட்டப்பட்டவை. அவை பராமரிக்கப்படாமல் அடிப்படை வசதிகளான தண்ணீர் வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றன.

5. இறைச்சி அறுவைக் கூடங்கள் தனியாரால் ஏற்படுத்துவதற்கு 10 முதல் 12 துறைகளில் சான்றிதழ்கள் மற்றும் அனுமதிகள் வாங்க வேண்டியுள்ளது.  இவை மிகவும் கடினமானவை.

6. கால்நடைகளில் உபபொருள்களை உபயோகிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை.  இதனால் 51 விழுக்காடு கால்நடைகளின் உபபொருள்கள் வீணாக்கப்படுகின்றன. அவை மதிப்பூட்டப்பட்டால் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதோடு இறைச்சியின் விலையையும் குறைக்கலாம்.

7. இறைச்சி அறுவைக் கூடங்களிலுள்ள கழிவுநீர் வீணாக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுப்படுத்தப்படுகின்றது.  அவை சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காகவும் உயிர் உரமாகவும் உபயோகிக்கப்பட வேண்டும். அதற்கான அரசாங்க வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

8. இறைச்சிக்காகப் பிரத்யேகமாக நல்ல தரமான கால்நடைகளை இனப்பெருக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அவைகளை வியாபாரிகளுக்கு நேரிடையாக வழங்கத்தக்க கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தல் வேண்டும்.  இதனால் இடைத் தரகர்களைத் தவிர்க்கலாம்.

9. இறைச்சிக்கடைகள் அரசாங்க அனுமதியின்றி எல்லா இடங்களிலும் மரத்தின் அடியிலும் கூட வைக்கப்படுகின்றன.  இது தடைச் செய்யப்பட வேண்டும்.

10. இறைச்சி அறுப்பவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்து வபரிசோதனை செய்யப்பட வேண்டும்.  மேலும் அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். அது வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

11. இறைச்சித் தொழில் முன்னேற்றம் அடையாததன் காரணங்களில் ஒன்று மக்களிடையே பரப்பப்படும் இறைச்சி குறித்தான தவறான தகவல்களே.

12. இறைச்சித் தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணியாகத் தொழ்ல்நுட்பம் அமைகிறது.  கால்நடைகளை இனக்கலப்பு செய்தல் பல்வகையான பயிர் மற்றும் கால்நடை விவசாய உத்திகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைக் கூறலாம். ஏனென்றால் விவசாயம் இயந்திரமயமாக்கப்பட்டதால் காளைகளை விவசாயத்திற்குப் பயன்படுத்தபடுவது குறைந்து விட்டது.

13. இந்துக்களுக்கு பசுமாடு புனிதமாகக் கருதப்படுவதால் அநேக மாநிலங்களில் பசுமாடுகளை இறைச்சிக்காக அறுக்கச் செய்வதற்குத் தடை உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு வேண்டிய பசுந்தீவனங்கள் மற்றும் தீவனங்களின் பற்றாக்குறை உபபொருள்களின் விலை உயர்வு ஆகியவை ஒரு பெரிய பாதிப்பாக உள்ளது.

14. கால்நடை வளர்ப்போர் மற்றும் வளர்ப்போர் சங்கங்கள் இணைந்து செயல்படுவது மிகவும்அவசியமானது.

எனவே இறைச்சித் தொழில் முன்னேற்றமடைய பல நவீன அறுவைக்கூடங்களும் அவற்றில் உபபொருள்களை உபயோகிப்பதற்கான வசதிகளும் இறைச்சியிலிருந்து பல மதிப்பூட்டப்பட்ட பொருள்களும் தயாரிக்கப்பட வேண்டும்.  இதன்மூலம் இத்தொழிலில் அதிக இலாபம் பெறலாம். சுகாதாரமான இறைச்சி எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்யலாம். இதன் மூலம் சிவப்பு இளஞ்சிவப்புப் புரட்சியை ஏற்படுத்தலாம்.

இறைச்சி அறுவைக் கூடங்கள்

இறைச்சி அறுவைக்கூடத்தின் அமைப்பானது இடம் உபயோகம் இறைச்சிக்காக வெட்டப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை விற்பனைத் திறன் ஆகியவற்றிற்கேற்ப இருக்கும். இதன் முன்மாதிரி வரைபடத்தைத் தொழில்நுட்ப விநியோகர்களைக் கொண்டு திட்டமிட வேண்டும். நவீன இறைச்சிக் கூடத்தில் இயந்திர மயமாக்கத்தால் விரைவாகவும் சுலபமாகவும் வேலைகளைச் செய்ய முடியும்.  நவீன மின் சாதனங்களைப் பயன்படுத்துவதனால் வெட்டப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருமானம் பெருகுவதோடு சுகாதாரமான முறையில் இறைச்சி உற்பத்தி செய்யலாம். இதனால் ஒருமணி நேரத்திற்கு நாற்பதிலிருந்து நூற்றிருபது மாடுகள் வரை அறுக்க முடியும். நம் நாடு கால்நடை உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும் இறைச்சி அறுவைக்கூடங்கள் நவீனமயமாக்கப்படாததாலும் அவை போதுமான வசதிகள் இல்லாதாலும் தொழில்நுட்பம் கொண்ட பணியாளர்கள் இல்லாததாலும் இறைச்சி உற்பத்தியில் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

இடம் தேர்வு செய்தல்

இறைச்சிக் கூடம் அமைக்கும் இடம் நகர்ப்றத்திலிருந்து சற்றுத் தள்ளி குடியிருப்புகள் மற்ற தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து தூரமாக அமைந்திருக்க வேண்டும். முக்கியமாகத் தண்ணீர் மின்சாரம், போக்குவரத்து தொலைத்தொடர்பு கழிவுநீர் வடிகால் விற்பனை ஆகிய அத்தியாவசிய வசதிகளைக் கொண்டதோடு இறைச்சிக்கூடத்தின் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்வதற்கேற்ற இடமாக இருக்க வேண்டும்.  எதிர்காலத்தில் விரிவுபடுத்த போதிய இடம் (5 – 25) இருக்க வேண்டும். அடித்தளமிட ஏற்ற மண்வகையாகவும் மற்றும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத நிலமாகவும் இருத்தல் வேண்டும்.

தேவையான நிலப்பரப்பளவு

இறைச்சிக்காக வெட்டப்படும் கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே தேவையான இடத்தைக் கணிக்க முடியும். ஒரு வருடத்திற்கு 30000 கால்நடை அலகுகளுக்கு 102 ஏக்கரும் 50000 கால்நடை அலகுகளுக்கு 2-4 ஏக்கரும் 100000 கால்நடை அலகுகளுக்கு  4-6  ஏக்கரும் தேவைப்படும். (ஆடு – 0.2 கால்நடைஅலகு 1 பன்றி – 0.5 கால்நடைஅலகு).

நீர்த்தேவை

தரமான குடிநீர் மற்றும் கழுவுவதற்கான நீரும் உபயோகத்திற்காக இருக்க வேண்டும். கால்நடைகளின் மூலமாக அழுத்தத்தின் கீழ் இறைச்சிக் கூடத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்பட வேண்டும். 82 செ.வெப்பத்தில் வெந்நீர் உபகரணம் கழுவப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பன்றிக்கு 454 லிட்டர் மாட்டிற்கு  272  லிட்டர் மற்றும் ஆட்டிற்கு 45 லிட்டர் தண்ணீர்; தேவைப்படும். மேலும் 25 விழுக்காடு தண்ணீர் இறைச்சிக் கூடத்தைச் சுத்தம் செய்யவும் பராமரிக்கவும் தேவைப்படும்.

தேவையான ஒளி அளவு

இறைச்சி கூடத்தில் போதுமான அளவு இயற்கை ஒளி அல்லது செயற்கை ஒளி இருக்க வேண்டும். இறைச்சிக் கூடத்தின் ஆய்வுப் பகுதிகளில் 540 லக்ஸ் வேலை அறைகளில் 220 லக்ஸ்; மற்ற இடங்களில் 100 லக்ஸ் ஒளி இருக்க வேண்டும்.

இறைச்சிக் கூடத்தில் இருக்க வேண்டிய பிரிவுகள்

1. வரவேற்புப் பிரிவு (கால்நடைகளைப் பெற்றுக் கொள்ளும் இடம்)

கால்நடைகளை வாகனங்களின் மூலம் கொண்டு வந்து இறக்கி நிற்க வைத்துக் கால்நடை மருத்துவர் ஆய்வு செய்யப்போதுமான இடம் மற்றும் நல்ல மேற்புறக்கூரைகள் இருக்க வேண்டும். வரவேற்புப் பிரிவிலிருந்து கால்நடைகள் ஓய்வு அறைக்கு அனுப்பப்பட வேண்டும்.

2. கால்நடை ஓய்வு அறை

இறைச்சி நல்ல தரமுடன் இருக்க வேண்டுமானால் இறைச்சிக் கூடத்தில் கால்நடைகளை அறுப்பதற்கு முன் அவை சில மணிநேரங்கள் நல்ல காற்றோட்டம் குடிநீர் தேவையான உணவு கொண்ட ஓய்வுக்கூடத்தில் வைக்கப்பட வேண்டும்.  ஓய்வு அறை அறுவைக் கூடத்திலிருந்து தனியே அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வகையான கால்நடைக்கும் தனித்தனியான அறைகள் இருக்க வேண்டும். இவ்விடத்தில் கால்நடை மருத்துவரால் அவை பரிசோதிக்கப்பட்டு நோயுற்றவை மற்றும் வெட்டுவதற்குத் தகாத கால்நடைகள் எனக் கண்டறியப்படும். ஓய்வு அறையானது மூன்று நாள்கள் வெட்டப்படும் மாடுகள் அல்லது இரண்டு நாள்களில் வெட்டப்படும் பன்றிகள் அல்லது ஆடுகளை வைக்கும் அளவில் இருக்க வேண்டும். சிறிய பன்றிக்கு 0.6 சதுர மீட்டர் பெரிய பன்றி மற்றும் ஆட்டுக்கு 0.7 சதுர மீட்டர் இடமும் தேவைப்படும்.

3. அறுவைக் கூடம்

அறுவைக் கூடத்தின் உட்புறச் சுவர்கள் நன்கு கடினமானதாகவும் உறிஞ்சும் தன்மையற்றதாகவும் நன்கு கழுவக்கூடிய வழவழப்பான வெளிப்பரப்பைக் கொண்டதாகவும் தரையிலிருந்து 6 அடி உயரமானதாகவும் இருக்க வேண்டும்.  தரைச்சரிவு ஒவ்வொரு 10 அடிக்கும் 2 அங்குலம் இருக்க வேண்டும். அறுவைக்கூடம் மற்ற அறைகளிலிருந்து தள்ளி அமைந்திருக்க வேண்டும். கால்நடைகளை உணர்விழக்கச் செய்யவும் அறுத்து இரத்தத்தை வடிக்கவும் உடலங்களைச் சீராக்கவும் ஆய்வு செய்யவும் தனித்தனியாக இடங்கள் இருக்க வேண்டும்.

4. ஒதுக்கப்பிரிவு

தனிமைப் பிரிவான இது நான்கு மாடுகளை வைக்கக்கூடிய அளவில் ஓய்வு அறையைக் கொண்ட ஒரு சிறிய இறைச்சிக் கூடமாகும். இவ்வறையைக் கால்நடை உபபொருள்கள் அறைக்கு அருகே அமைத்தல் வேண்டும். நோயற்றதாக சந்தேகிக்கப்படும் கால்நடைகள் இந்த ஒதுக்கப்பிரிவில் வெட்டப்படும்

5. உடல் பரிசோதனைப்பகுதி

வெட்டிச் சீராக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சிக்கூடு மற்றும் இதர உறுப்புகள் கால்நடை மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு அவை உணவாக உட்கொள்ளத் தகுதியானதா எனக் கண்டறிப்படும். நோயுற்றதாகக் கண்டறியப்படுபவை நோயின் தன்மைக்கேற்ப உட்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்புக்கோ உட்படுத்தப்படும்.

6. இறைச்சி நிறுத்தி வைக்கப்படும் அறை

நோயுற்றதாகச் சந்தேகிக்கப்படும் கால்நடைகளிடமிருந்து பெறப்பட்ட இறைச்சியானது விரிவான ஆய்வுக்கூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்காக இந்த அறையில் நிறுத்தி வைக்கப்படும்.

7. புறக்கணிக்கப்பட்ட இறைச்சி அறை

உணவாக உட்கொள்ளத் தகுதியற்ற இறைச்சியானது விற்பனைக்கு அனுப்பப்படாமல் இந்த அறையில் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படும்

8. தோல் சேகரிப்பு அறை

அறுவைக் கூடங்களிலிருந்து பெறப்படும் தோல்கள் குளிரூட்டப்பட்ட அறையில் அடுக்கிவைக்கப்பட வேண்டும். இதே அறையில் குளம் குகளையும் வைக்கலாம். இந்த அறையின் அளவு வெட்டப்படும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கேற்ப போதுமானதாக இருக்க வேண்டும்.

9. குடல் மற்றும் இரைப்பைச் சேகரிப்பு அறை

குடல் மற்றும் இரைப்பை ஆகியவை இந்த அறையில் பிரிக்கப்பட்டுச் சுத்தம் செய்யப்படும். இதற்காக உபயோகப்படுத்தப்படும் மேசை தேவையான உயரத்தில் அமைக்கப்பட்டுச் சுத்தம் செய்வதற்கேற்ப குழாய்கள் மூலம் தண்ணீர் தெளிக்கும் அமைப்பு இருக்க வேண்டும்.

10. உண்ணத் தகாத உடற் பகுதிகள் சேகரிப்பு அறை

உணவாக உட்கொள்ளத் தகுதியற்ற உடற்பகுதிகள் மற்ற உண்ணக்கூடிய பகுதிகளிலிருந்து தனியே வைக்கப்பட்டு கையாளப்பட வேண்டும். இரண்டையும் ஒரே வழியின் மூலமாகக் கொண்டு செல்லக்கூடாது. அவற்றைக் கையாள்பவர்களும் ஒன்றிலிருந்து மற்ற அறைக்கு மாறிச்செல்லக் கூடாது. அவ்வாறு இல்லா விடில் சுகாதாரக்கேடு ஏற்பட ஏதுவாகும்.

11. உண்ணக்கூடிய இறைச்சி உபபொருட்கள் அறை

கல்லீரல் நுரையீரல் சிறுநீரகம் போன்ற இறைச்சி உறுப்புகள் சீராக்கப்பட்டுக் குளிர்பதன அறையில்  3 செ.கி.குளிர் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

12. உண்ணக்கூடிய கொழுப்பு வைக்கும் அறை

இவ்வறையானது குடல் மற்றும் இரைப்பைச் சேகரிப்பு அறைக்கு அருகே அமைக்கப்பட வேண்டும்.

13. இறைச்சி வெட்டப்படும் அறை

இவ்வறையில் 7 செ.கி. குளிர்நிலை மற்றும் சுகாதாரமான முறையில் இறைச்சி வெட்டுவதற்குப் போதுமான நீர்மற்றும் வடிகால் வசதிகள் இருக்க வேண்டும்.

14. உண்ணத்தக்க இறைச்சி அனுப்பும் பகுதி

இவ்விடம் மற்ற அசுத்தமான இடங்களிலிருந்து தள்ளி மேற்கூரையோடு சுகாதாரத்தோடு அமைந்திருக்க வேண்டும் இறைச்சியை வாகனங்களில் ஏற்றுவதற்கு ஏற்றவாறு தரைமட்டம் இருக்க வேண்டும்.

15. குளிர்பான வசதி

வெட்டப்பட்ட கால்நடைகளின் உடல் நுண்ணுயிரிகளால் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் கொழுப்பு உயிர்வளி ஏற்றம் ஆகாமல் இருப்பதற்கும் மற்றும் நிறம் மாறாமல் இருப்பதற்கும் 7 செ.கி. குளிர்நிலையில் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குப் போதிய இடைவெளியுடன் வைக்கப்பட வேண்டும்.

16. வடிகால் வசதி

சுகாதாரக்கேடுகளைத் தவிர்க்க அறைகளின் தரைமட்டம் வடிகால் போக்கை நோக்கிச் சரிவாக நீர்வடிவதற்கு ஏதுவாகவும் மேற்புரம் சிறுகுழிகளின்றிச் சமமாகத் தண்ணீர் தேங்காவண்ணம் இருத்தல் வேண்டும்.

17. கழிவு நீர்ச்சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்றம்

இறைச்சிக் கழிவுநீர் தகுந்த முறையில் சுத்திகரிப்பு செய்யப்படும் சுகாதாரக்கேடு ஏற்படா வண்ணம் வெளியேற்றப்பட வேண்டும். ஒவ்வொரு 1000 கிலோ உயிர் எடைக்கும் 15 கிலோ கழிவு வெளியேற்றப்படும். உயிரியல் உயிர்வளித் தேவை  1500 – 2000 மில்லியனில் ஒரு பங்குக்கு மேல் இருக்கக்கூடாது.

18. கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கூடம்

அனைத்து வகையான உபகரணங்களையும் கொண்ட ஆராயச்சிக்கூடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். “டிரைக்கினெல்லா”என்ற பன்றியின் தசையில் வாழும் ஒட்டுண்ணிப் பரிசோதனை வசதி இருக்க வேண்டும்.

19. கால்நடை மருத்துவ அலுவலகம்

கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்குத் தேவையான வசதிகளான கைகழுவுதல் குளித்தல் துணி துவைத்தல் ஆடைமாற்றும் இடம் மற்றும் காலணி மாற்றும் பகுதி ஆகியவை அமைந்திருக்க வேண்டும்.

ஆதாரம் : கால்நடைக்கதிர்

3.15384615385
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top