অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

காஸ்மடாலஜி துறை

காஸ்மடாலஜி துறை

காஸ்மடாலஜி

இன்றைய நிலையில், பலரும், தான் மற்றவரைவிட, சற்றேனும் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். இதற்காக மெனக்கெடுவது தற்போது அதிகரித்துள்ள நிலையில், அழகூட்டுதல் என்பது ஒரு பெரிய துறையாக, நல்ல வருமானம் தரும் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது.

ஒரு பேஷன் டிசைனர் என்பவர் என்ன செய்கிறாரோ, அதையேதான், ஒருவரை அழகுபடுத்தும் நோக்கத்துடன், காஸ்மடாலஜிஸ்ட் செய்கிறார். டிரென்டுகளை(trend) முடிவு செய்வோராகவும், ஒன்றை கவர்ச்சியாகவும், அழகாகவும் மாற்றுவதற்காக செயல்படுபவராகவும் இருப்பதால், இன்றைய நிலையில், காஸ்மடாலஜிஸ்ட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

முடி அலங்காரம், தோல் அலங்காரம், அழகு சிகிச்சைகள், நகம் தொடர்பான அழகூட்டல்கள் உள்ளிட்ட பல்வேறான அம்சங்களை, காஸ்மடாலஜி என்ற துறை கொண்டுள்ளது.

தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், மிகப் பெருவாரியான மக்களிடத்தில் இருப்பதாலும், இந்தக் கார்ப்பரேட் உலகில் அந்த எண்ணம் அதிகரித்திருப்பதாலும், காஸ்மடாலஜி துறைக்கான கிராக்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆய்வுசெய்து, முடி மற்றும் இதர அழகூட்டல் சிகிச்சைகள் மற்றும் நுட்பங்களை மேற்கொண்டு, ஒரு மனிதரின் தோற்றத்தை சிறப்புற செய்வதே காஸ்மடாலஜி எனப்படும். இன்றைய நிலையில், தோலையும், முடியையும் சிறப்பாக பேண வேண்டும் என்ற அக்கறையும், விழிப்புணர்வும் அதிக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. நுகர்வு கலாச்சாரத்தையும், இதற்கொரு காரணமாக கூறலாம்.

வகைகைள்

 • மருத்துவம் சார்ந்த காஸ்மடாலஜிஸ்ட்(Dermatologists)
 • மருத்துவம் சாராத காஸ்மடாலஜிஸ்ட்(non-medical professionals)

மேற்கண்ட இருவரின் பணித்தன்மையும் ஒன்றுதான் என்றாலும், அவர்கள் கைக்கொள்ளும் சிகிச்சை முறைகள், நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவ வகைகள் ஆகியவற்றில் வேறுபட்டவர்கள்.

ஸ்பெசலைசேஷன்

இத்துறையில் ஏகப்பட்ட ஸ்பெசலைசேஷன்கள் உள்ளன. ஆனால், அவற்றில் முக்கியமானதும், பலரும் அறிந்ததுமான சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

முடி அலங்காரம்

முடி என்பது ஒரு மனிதனுக்கு சாதாரண விஷயமல்ல. சிலர் வேண்டுமானால் அதை அற்பமாக(வெறும் மயிர்தானே என்று) நினைக்கலாம். ஆனால், பலரும், அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். ஒரு மனிதனின் முக அமைப்பை தீர்மானிப்பதோடு, ஒருவரின் தன்னம்பிக்கையையும் தீர்மானிக்கும் அம்சமாக முடி திகழ்கிறது.

முடி வெட்டுதல், ஷாம்பு போடுதல், கலரிங் செய்தல், wig அலங்காரம், perking, நேர்செய்தல், பிணைத்தல், ஆற்றலளிக்கும் சிகிச்சை உள்ளிட்ட பலவற்றையும் உள்ளடக்கியதே முடி அலங்காரம். மேலும், ஒவ்வொரு விதமான முடியையும் பராமரிப்பது குறித்தான அறிவைப் பெற்றிருப்பதோடு, ஒருவரின் முடியின் ஆரோக்கியத்தையும், அதன் சரியான பராமரிப்பையும் உறுதிசெய்ய வேண்டும்.

அழகூட்டல்

Aesthetics என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இத்துறை, பொதுவாக தோல் அழகூட்டலோடு தொடர்புடையது. பேசியல், மசாஜ், மெருகூட்டல், கசடுகளை நீக்கி செழிப்பாக்குதல், நறுமண சிகிச்சை, குளுகுளு ரிசார்ட்டுகளில் மேற்கொள்ளப்படும் நீரூற்று சிகிச்சை மற்றும் அலங்காரம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த வகையில் அடக்கம்.

ஒருவரின் தோல் அம்சம் குறித்து மிகச்சரியாக கணித்து, அதற்கு ஏற்றவகையிலான தோல் பராமரிப்பு பொருட்களை பரிந்துரை செய்வது முக்கியம்.

உங்களுக்கு தேவையான தகுதிகள் இருக்கும்பட்சத்தில், மருத்துவமனைகளில் பணி வாய்ப்புகளைப் பெற்று, அறுவை சிகிச்சைகளுக்குப் பிந்தைய தோல் பராமரிப்பு ஆலோசனைகளை வழங்கலாம்.

நக தொழில்நுட்பவியலாளர்


கைகள், கால்கள் மற்றும் நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, அழகூட்டல் விஷயத்தில் மிக முக்கியமான அம்சம் என்பதோடு, ஒருவரின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. Nail technician என்பவர், கைகளையும், பாதங்களையும் அழகூட்டுகிறார். இத்துறையில் ஸ்பெஷலைஸ் செய்த ஒருவர், painting, டிசைனிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

மின்னாற்பகுப்பு


இது ஒருவகையான அழகூட்டல் சிகிச்சையாகும். முடியை நீக்கும்போது உண்டாகும் வலியிலிருந்து, இந்த சிகிச்சையானது, நிரந்தர விடுதலையை அளிக்கிறது. முடி நீக்குதலுக்கு ரேடியேஷன் அல்லது லேசர் சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

தகுதிகள்

 • மருத்துவம் சாராத அழகூட்டுதல் துறையில் பணிபுரியும் ஒருவருக்கு, குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. விருப்பம் மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் ஆகியவையே முக்கியம். படைப்புத்திறனும் அவசியம்.
 • இத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், ஏதேனும் ஒரு பிரிவில் ஸ்பெஷலைசேஷன் மேற்கொள்வது முக்கியம். Henna, skin care, tattoos, hair styling, makeup போன்றவை அவற்றுள் முக்கியமானவை. தோலியல் துறை(dermatology) அல்லது மெடிக்கல் காஸ்மடாலஜி ஆகியவற்றில் ஈடுபட, அடிப்படையில் MBBS தகுதி மற்றும் Dermatology -ல் ஒரு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • மேலும், சான்றிதழ் படிப்புகள், டிப்ளமோ மற்றும் அட்வான்ஸ்டு டிப்ளமோ ஆகியவையும் உதவக்கூடியவை.

வருமானம்

 • நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள், உங்களின் தொழில் திறமை, உங்களுக்கு இருக்கும் நற்பெயர் அல்லது உங்களின் சொந்த தொழில் எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை வைத்தே, உங்களின் வருமானம் நிர்ணயிக்கப்படும். அடிப்படையில் பார்க்கும்போது, மாத வருமானம் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை இருக்கலாம்.
 • மேக்-அப் கலைஞர்கள் மற்றும் முடி அலங்கார நிபுணர்கள் ஆகியோர், தங்களின் திறமை மற்றும் நன்மதிப்பைப் பொறுத்து, ஒரு நிகழ்ச்சிக்கு, ரூ.5,000 முதல் ரூ.7,000 வரையிலும் அல்லது அதற்கு மேலும் வசூலிக்கலாம்.
 • இத்துறையைப் பொறுத்தவரை, ஒருவர், ஓரிடத்தில் சம்பளத்திற்கு பணிபுரிவதைவிட, சொந்தமாக தொழில் நடத்தினால் வருமானம் அதிகம். ஆனால், தொழிலில் நல்ல அனுபவமும், திறமையும் பெறாமல் சொந்த தொழில் தொடங்குவது நல்லதல்ல.

காஸ்மடாலஜி துறையின் எதிர்காலம்

 • இக்காலகட்டத்தில், நன்கு வளர்ச்சியடைந்துவரும் துறைகளில் இதுவும் ஒன்று. Kaya Skin Clinic போன்ற பியூட்டி அன்ட் ஸ்கின் கேர் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இதுபோன்ற நிறுவனங்களுக்கு, தங்களின் வாடிக்கையாளர்களை கவர்ந்து, அழகுபடுத்தி, திருப்திபடுத்த நிறைய திறமையான காஸ்மடாலஜிஸ்டுகள் தேவைப்படுகிறார்கள்.
 • இந்தியாவில் பல தொழில்துறைகள், காஸ்மடாலஜி துறையுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன. சினிமாத்துறை, தொலைக்காட்சித் துறை, விளம்பரத்துறை, பேஷன் துறை, திருமண தொழில்துறை போன்ற பல துறைகள் அவற்றுள் அடக்கம். எனவே, காஸ்மடாலஜிஸ்டுகள் தவிர்க்க முடியாதவர்களாகிறார்கள்.

சாதக பாதகங்கள்

 • படைப்புத்திறனை வெளிப்படுத்தும் சுதந்திரம், சவாலான பணி சூழல், அடிக்கடி அல்லது தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் போன்றவை முக்கியமான சாதகங்கள். மேலும், ப்ரீலேன்ஸ் முறையில் பணிபுரியும் காஸ்மடாலஜிஸ்டுகள், தாங்கள் விரும்பும் வகையிலான பணியை தேர்வு செய்யவும், கட்டணத்தை நிர்ணயிக்கவும் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
 • இப்பணியானது, வெறுமனே காலையில் அலுவலகம் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்புவது போன்றதல்ல. ஒரு நாளைக்கு, 12 முதல் 14 மணி நேரம் வரையில்கூட பணிபுரிய வேண்டியிருக்கும். எனவே, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
 • ஒரு நபர், இத்துறையில் பல்லாண்டுகள் பணிபுரிந்து, நல்ல திறமையையும், பொறுமையையும், உழைப்பையும் வெளிப்படுத்தி, தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் சூழல் ஏற்படும்போது, அவரின் வருமானம் உள்ளிட்ட வசதிகள் அதிகரிக்கின்றன.

கல்வி நிறுவனங்கள்

 • Lakme Training Academy
 • Nalini and Yasmin Academy
 • Shahnaz Husain's Women's World International
 • Habibs Hair Academy

ஆதாரம் : தினமலர் கல்விமலர்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate