பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் கல்வி

சுற்றுச்சூழல் கல்வி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

காற்று, நிலம், மண், நீர், மரம் தாவரங்கள், உயிரினங்கள் போன்ற உயிருள்ள, உயிரற்ற பொருட்களைப் பற்றி எடுத்துக் கூறுவது சுற்றுச்சூழல் எனப்படும்.

“நாம் நிலத்தை, நம்முடைய பயன்படு பொருளாக நினைத்து தவறாகப் பயன்படுத்தி வருகின்றோம். நிலத்தை நம் சமூகமாகவும், நாம் ஜிவிக்கும் உடல், உயிர் போன்ற பொருளாகவும், கருதினால், அதன் மீது அன்பும், மரியாதையும் செலுத்தத் தொடங்குவோம்’ என்று அல்டோலியோ “பருப்பொருளை அல்லது புலன்களால் உணரப்படும் பொருளை உடனடியாகச் சுற்றியுள்ளவை மற்றும் அதன் மீது நேரடியான விளைவை ஏற்படுத்தும் எதுவும்” சுற்றுச் சூழல் எனப்படும் என்று- பி.கிஸ்பெர்ட் (P.Gisbert) விவரித்துள்ளார்.

சுற்றுச் சூழல் கோட்பாடு, விலங்குகள், செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நிலங்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதையும், அவற்றைச் சீர்கேடு செய்யும் காரணிகளையும், அவற்றிலிருந்து பாதுகாப்பதையையும், உள்ளடக்கியதாகும்.

சுற்றுச் சூழல் உட்கூறுகள் இயற்கை அமைப்புக் கூறுகள் –

 1. நிலம், நீர், காற்று.
 2. உயிரியல் கூறுகள் - தாவரங்கள், விலங்குகள்.
 3. சமூகக் கூறுகள் - மக்கட் தொகை, சமூக முறை, சமூக மாற்றம், நகரமயமாதல்.
 4. பண்பாட்டுக் கூறுகள் - அரசியல், பொருளாதாரம், நீதி, மதிப்புக்கள் (Value) சமயம் போன்றவை.
 5. உளவியல் கூறுகள் - உண்மைகள், தன்கோட்பாடு.
 6. ஆற்றல் கூறுகள் - சூரிய சக்தி, வெப்பசக்தி, அலைசக்தி

உலகச் சுற்றுச் சூழல் நாள்

ஒவ்வொர் ஆண்டும், ஜின் 5 ஆம் நாள் அன்று உலகச் சுற்றுச் சூழல் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. 1972-ல் ஸ்டாக்ஹோமில் (Stockholm) நடைபெற்ற மனிதச் சூழல் மாநாட்டில் இதற்கான தீர்மானம் இயற்றப்பட்டது.

சுற்றுச்சூழல் கல்வி

கல்வியின் வழியாக, "சுற்றுச்சூழல் பற்றி, சுற்றுச் சூழலுக்காக வழங்கப்படும் கல்வி சுற்றுச் சூழல் கல்வி’ எனப்படும்.

“மனிதன், இயற்கையோடும், மனிதனால் உருவாக்கப்பட்ட சூழலோடும் கொண்டுள்ள தொடர்பையும் மக்கட்தொகை, சுற்றுச் சூழல் சீர்கேடு, வளங்கள் ஒதுக்கீடு, பாதுகாத்தல், தொழில் நுட்பம், போன்றவற்றோடு மனிதன் கொள்ளும் முழுமையான தொடர்பையும் உள்ளடக்கிய கல்வி முறையே’ - சுற்றுச் சூழல் கல்வி என்று 1970-ல் ஐக்கிய நாட்டில் இயற்றப்பட்ட சுற்றுச் சூழல் கல்விச் சட்டம் எடுத்துரைத்துள்ளது.

"நிலம், நீர், காற்று ஆகியவற்றை சீரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் உறுதிப்பாடும், ஈடுபாடும், முயற்சிகளும் சுற்றுச்சூழல்கல்வி ஆகும் என்று” இங்கிலாந்து சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழுவின் முதல் அறிக்கை 1971 கூறியுள்ளது.

“இயற்கையான, மனிதன் பண்பாடு மற்றும் ஆன்மீக வளங்களால் உருவாக்கிய சமூக மற்றும் பருப்பொருள் சார்ந்த சுற்றுச் சூழலைப் பற்றிப் புரிந்துக் கொள்ளுதலையும், விழிப்புணர்வு ஏற்படுத்தலையும் மட்டுமின்றி, இவ்வளங்களை பாதுகாப்பதையும், அறிவு பூர்வமாக சிந்தித்துப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியதே” சுற்றுச்சூழல்கல்வி என ஆப்ரிக்கக் கல்வியாளர்களின் மாநாட்டு அறிக்கை (1968) கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி - வழிகாட்டும் கொள்கைகள்

 • இயற்கையான மற்றும் உருவாக்கப்பட்ட, சமூக, பொருளாதார, அரசியல்,பண்பாடு, வரலாறு போன்ற கூறுகளால் அமைக்கப்பட்ட சுற்றுச் சூழலை முழுமையாக, அதன் ஒட்டுமொத்தத் தன்மையையும் ஆழ்ந்து ஆராயச் செய்தல்.
 • குழந்தை முன் பருவக் கல்வியில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் தொடரும் கல்வி இது என்பதை உணர்தல்.
 • அனைவரும் செயல் ஆர்வத்துடனும்,துடிப்புடனும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்க்கப் பங்கேற்றல்.
 • உள்ளூர், தேசிய, வட்டார மற்றும் உலகளாவிய நோக்கில் சுற்றுச் சூழல் இடர்பாடுகளை ஆய்வு செய்வதும், கற்போருக்கு அவற்றைப் பற்றிய நுண்ணறிவுத் திறனை வளர்த்தலும்.
 • உள்ளூர் தேசிய, வட்டார மற்றும் உலகளாவிய அடிப்படையில் இடர்பாடுகளை ஆய்வு செய்து. அதன் அடிப்படையில் விழுமியங்களைக் (Value) குழந்தைகளிடையே வளர்த்தல்.
 • குழந்தைகள் தாம் வாழும் சமுதாயச் சூழலைப்பற்றிய உணர்வைநுட்ப அறிவை, பிரச்சனை தீர்க்கும் முறையை அறியுமாறு செய்தல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986

1972ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல் வடிவம் தரும் வகையில் இந்திய அரசு, பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி, மனித இனத்திற்கும், பிற உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளித்தது. சட்டத்தின் வழியாகப் பின்வரும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

 • தூய்மையான காற்று, நீர்,நிலம் போன்றவை வழங்குதல்.
 • குறிப்பிட்ட அளவில் மாசுபடுதலை மட்டுப்படுத்துதல்.
 • அபாயகரமான பொருட்களைப் பாதுகாப்பான முறையில் கையாளுதல்.
 • அபாயகரமான பொருட்களைப் பல்வேறு பகுதிகளில் கையாளுவதைத் தடை செய்தல்.
 • பல் வேறு பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்குவதைத் தடை செய்தல்.
 • விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தகுந்த வழிமுறைகள் மற்றும் குறைகளைத் தவிர்க்க முயற்சிகள் எடுத்தல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி வழங்குவதில் ஆசிரியர்களின் பங்கு

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51A, பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. “காடு, ஏரி, ஆறு, மிருகங்கள் போன்ற இயற்கைச் சூழல்களை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும், அவைகளிடம் அன்பு பாராட்டுவதும், அவைகளால் ஏற்படும் நன்மைகளை உணர்வதும் கருணை காட்டுவதும், ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்”

ஒவ்வொரு ஆசிரியரும் சமூக மாற்றம் மற்றும் நாட்டைக் கட்டமைப்பு செய்யும் முகவர்களாகச் செயல்பட வேண்டும். துவக்கப்பள்ளியில். குழந்தைகள் தம் ஆசிரியரைப்பார்த்து, அவரைப் போலவே செய்ய விழையும் : ஆகவே ஆசிரியர் இயற்கையைப் பாதுகாக்க, மேம்படுத்த முன்மாதிரிப் பங்கு அளிக்க வேண்டும்.

 • காளிதாஸர், வேர்ட்ஸ் ஒர்த் (Words Worth) போன்றவர்கள் இயற்கையைப்பற்றிய வர்ணனை செய்தவைகளை, அறிவியல் அறிஞர்கள் சமூக மற்றும் பருப்பொருள் சூழலைப் பற்றிக் கூறியவைகளை, வகுப்பறையில் மாணவர்களுக்கு எடுத்துக் கூறுதல்.
 • பிறபாடங்களுடன் - மொழி, சமூக அறிவியல், அறிவியல்-இணைத்து மாணவர்களுக்கு நடத்துதல்.
 • நேரிடையான, முதல்தர அனுபவங்கள் வாயிலாக மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் கல்வியை, அவர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்குகள் மேம்பட வழங்குதல்.
 • வகுப்பறையில், நேர்மறையான மனப்பாங்குகள் வளர, குழந்தைமைய அணுகுமுறையைப் பயன்படுத்துதல் வேண்டும்.
 • கூட்டு மனப்பான்மையுடனும் தூய்மையான மனதுடனும் ஆசிரியர் பொறுப்புக்களை ஏற்று, குழந்தைகளுக்குச் சுதந்திரமாகக் கற்க, வேண்டிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.
 • சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் புதிய அணுகுமுறையை, தீவிர சிந்தனைப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தி-மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். கலந்துரையாடச் செய்து முடிவுகளை மதிப்பீடு செய்து மாணவர்களின் விழிப்புணர்வு, மனப்பான்மை மற்றும் திறனை மேம்படுத்த வேண்டும்.
 • சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் முன் மாதிரியாகத் திகழும் மாணவர்களுக்கு பாராட்டுரைத்தல்.
 • சுற்றுச் சூழல் நீதி, நெறிமுறைகள் ஆகியவற்றை வளர்த்தல்.

தொடக்க நிலையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய செயல்கள்

பள்ளியில் செடிகள், மரங்கள் வளரச் செய்தல், வளர்ச்சியை உற்று நோக்கல். மிருகங்கள் மற்றும் அவை வாழும் இடங்களைப் பார்வையிடல், மரங்கள், குகைகள், மலைகள், வீடுகள் படங்கள் வரைதல், தட்ப வெப்பநிலையைப் பதிவு செய்தல், விழாக்கள் கொண்டாடுதல். தேசிய விழாக்கள் கொண்டாடுதல், மிருகங்கள், விலங்குகள் ஆகியவற்றைப் பற்றி படித்தல், கதைகள் எழுதுதல், அருங்காட்சியகம், மிருகக் காட்சியகம், கடற்கரை, ஆற்றங்கரை, தீயணைப்பு நிலையம், தொழிற்சாலைகள் போன்றவற்றைப் பார்வையிடுதல், காற்று, நீர், இரைச்சல் போன்ற மாசுகளைத் தடுத்தல், மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுத்தல், உணவு கெடுதல் போன்றவற்றை உணர்த்துதல் - ஆகிய செயல்களை வழங்கலாம்.

“சுற்றுச் சூழலைப் பற்றிய அறிவை வழங்குவது முக்கியமானதாகும். குழந்தை முதல் சமுதாயத்தினுடைய அனைத்துப் பிரிவினர், அனைத்து வயதினருக்கும் இதனை வழங்கிட வேண்டும். கல்வியினுடைய அனைத்துச் செயல்களோடும் இதனை இணைத்துப்புகட்டவேண்டும் என தேசியக்கல்விக் கொள்கை 1986 சுற்றுச்சூழல் காப்புக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அறிவுறுத்தியுள்ளது.

ஆகவே சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான கல்வியை, மாணவர்களின் அறிவு, மனப்பான்மை, திறன், இயலுமை முதலியவற்றிற்கேற்ப போதிக்க வேண்டும்.

பன்னாட்டு உணர்வை வளர்ப்பதில் கல்வியின் பங்கு

அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, நாடுகளுக்கிடையே இடைவெளி குறைந்து விட்டது. இனி, எந்த நாடும் தனியாகவோ, பிற நாடுகளைப் பற்றி அக்கறை கொள்ளாமலோ இருக்கவியலாது. ஒரு நாட்டில் ஏற்படும் நன்மை, தீமைகள் பிற நாடுகளைப் பாதிக்கும். உற்றுமி உதவியும் உறுபொருள் ஈந்தும் பேரிடர்க்காலங்களில் காப்பது பன்னாட்டு உறவே, என்பது கண்கூடு. குஜராத் பூஜ்நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு உலக நாடுகள் பல இரங்கல் தெரிவித்து, நிவாரணக் கொடைகளை வழங்கின. வங்காளதேசத்தின் விடுதலைப் போரின்போது அந்நாட்டு மக்கள் இந்தியாவில் அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்தபோது பல்லாயிரக்கணக்கான அம்மக்களுக்கு அபயம் வழங்கி ஆதரித்துக் காத்தது.

இடிஅமீன், சதாம் உசேன், பின்லேடன் போன்ற தன்னாதிக்கக், கொடுஞ்செயலர்களும், தீவிரவாதிகளும் தலைதூக்கும் போது உலகமே திரண்டு அவர்களின் வெங்கொடுஞ்செயல்களைக் கண்டித்து முடக்குகிறது. மனித உரிமை, சிறார் உரிமை, பெண்ணுரிமை ஆகியவற்றிற்காகப் பன்னாட்டு உணர்வு திரட்டப்பட்டு முறை மீறல்களைக் கண்டித்துச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. பஞ்சம், வெள்ளம், வறட்சி,போர் போன்ற காலங்களில் உயிரிழப்பிலும், பொருளிழப்பிலும் உற்றுN உதவவும், புரிந்து கொள்ளும் தன்மையும், நட்புணர்வும் தேவைப்படுகின்றன. இதுவே பன்னாட்டு உணர்வு எனப்படுகின்றது.

பன்னாட்டு உணர்வு: பொருள்

“ஒவ்வொரு தனிமனிதனும் தன் நாட்டிற்கான உறுப்பினராக மட்டுமின்றி, உலகத்தின் உறுப்பினராகவும் இருப்பதை உணர்த்தும் உணர்வு” ஆலிவர் கோல்ட்ஸ்மித். “உலக நாடுகளிடையே நட்புணர்வும், இசைவும் ஏற்படுவதையும், தன் தனித்தனிமையையும், இறையாண்மையையும் பாதுகாத்துப் பராமரிப்பதையும், குறிக்கும்”. டாக்டர் ஆத்மானந்த மிஷா. “உலக நாடுகள் கடல்களால், கண்டங்களால் பிரிக்கப்பட்டு இருந்தாலும், அவைகளிடையே இன்னும் புரிந்து கொள்ளாமையும், சந்தேகமும் இருப்பினும், அவைகள் ஒன்றுபட்டுள்ளன. நாம் ஒன்றுபட்டு வாழ்வதும். ஒருவருடைய பயம் மற்றும் கவலைகளைப் புரிந்து கொள்வதும் மிகவும் அத்யாவசியமான ஒன்றாகும். நாம் ஜெர்மானியர்கள், அமெரிக்கர்கள், ரஷ்யர்கள் என இருப்பினும், நாம் மனிதர்கள் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிடக் கூடாது. இந்த எண்ணமே 'பன்னாட்டு உணர்வாகும்’ என டாக்டர் ராதாக் கிருஷ்ணன் கூறுகின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் உலகுதழுவிய கருத்து பன்னாட்டு உணர்வு ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் இதன் முக்கியத்துவம் கூடியது. மற்றொரு உலகப் போரின் விளைவை உணர்ந்தும்,அழிக்கும் சக்தி கொண்ட போர்க்கருவிகளின் ஆபத்தை அறிந்தும்,உலக அமைதியை எற்படுத்தவும் அனைத்து நாடுகளுக்கிடையேயும் இப்பொதுக்கருத்து உருவானது. நிறத்தால், சமயத்தால், சாதிய உணர்வால், மனிதனுக்கு மனிதன் வேறுபடக் கூடாது எனவும் உலகத்தினர் எண்ணினர் அதன் வெளிப்பாடே பன்னாட்டு உணர்வு ஆகும்.

பன்னாட்டு உணர்வின் தேவை மற்றும் முக்கியத்துவம்

மனிதனுடைய அமைதி நிலைப்பாடு பன்னாட்டு உணர்வை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது. நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த பன்னாட்டுணர்வு புதினமான இணைக்கும் சக்தியாகப் பயன்பட்டு வருகின்றது. பன்னாட்டுச் சமரச ஒத்துழைப்பால் உலகில் பல்வேறு நன்மைகள் மலரக்கூடும்.

 • உலகப் போரைத் தவிர்த்தல்.
 • தன் இறையாண்மையைப் பாதுகாத்தல்.
 • மக்களாட்சிக் கொள்கைகளை உறுதிப்படுத்துதல்.
 • பின் தங்கியுள்ள நாடுகளை வளரச் செய்தல்.
 • பிறநாடுகளுடன் நெருங்கியத் தொடர்பு.
 • மனித நலத்தை மேம்படுத்தல்.
 • பரஸ்பர நல்லிணக்கம்
 • மனித நேயம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நாடுகளிடையேயுள்ள காலம் மற்றும் தூரத்தடைகளை நீங்கிவிட்டதால், உலக நாடுகள் அனைத்தும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. அதிக அளவில் கூட்டுறவாகவும், இணைந்து செயல்படவும் நாடுகள் விரும்புகின்றன. பொருளாதார அடிப்படையில் சார்ந்திருக்க ஒவ்வொரு நாடும் விழைந்து செயல்பட்டு வருகின்றது.

யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ள கொள்கைகள்

பன்னாட்டு உணர்வை வளர்க்க யுனெஸ்கோ பின்வரும் பரிந்துரைகளையும் பின்வரும் கொள்கைகளையும், திட்டங்களையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

 1. உலக சமுதாயத்திற்கான கல்வியை மனித இனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலக சமுதாயத்தை, ஐக்கிய நாடுகள் சபையின் (United Nation) ஒப்பந்தம் வலியுறுத்தியுள்ள எழுச்சியின் அடிப்படையில் தோற்றுவித்தல்.
 2. சமயக் கோட்பாடுகள் மற்றும் வாழ்க்கை, அரசியல் ஆகிய அடிப்படையில் நாடுகள் வேறுபட்டு இருப்பினும், உலக அமைப்புக்களில் ஒன்றுபட்டு செயல்படவும், அதில் அக்கறை காட்டவும், கடமைப்பட்டுள்ளன.
 3. பல நாடுகளின் தோற்றத்தால், உலக நாகரீகம் தழைத்தது என்பதால் எல்லா நாடுகளும் பிறரைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக்குதல்.
 4. கடந்த மற்றும் நிகழ்காலச் சூழல், மரபு, சிறப்புத் தன்மைகள். பிரச்சனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது என்பதையும், அவற்றை செம்மையாக்குவது பற்றியும் தீர்மானித்தல்.
 5. ஒழுக்கம், வயது முதிர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக மனித இனத்திற்கான பொதுவான மரபுகள் அல்லது பிறப்புரிமைகள் தோன்றின. உலக நாடுகள் அரசியல் அக்கறை காரணமாக வேறுபட்டு இருப்பினும், அன்றாடம் மக்கள் ஒருவரை, ஒருவர் சார்ந்திருத்தல் கண்கூடு. அதற்கு உலக அளவில் ஒரு அமைப்பு அவசியம் என்பதை உணர்தல் வேண்டும்.

பன்னாட்டு உணர்வை வளர்ப்தற்கான வழி வகைகள்

போர் செய்யும் எண்ணம் மனிதனின் மனதில் எழுவதால், அமைதிக்கான எண்ணத்தையும் அவன் மனதிலேயே அமைக்க வேண்டும்” என்று யுனெஸ்கோ ஆழகாகக் குறிப்பிட்டுள்ளது.

பன்னாட்டு உணர்வை, அரசியல் நோக்கில், கல்வி வளர்க்க இயலாவிடினும், பன்னாட்டு உணர்வு என்ற உணர்ச்சியை, கல்வி என்ற முகவர் மூலமே வளர்க்க இயலும் என்று பெர்ட்ரன் ரசல் (Bertrand Russe) குறிப்பிட்டுள்ளார். ஆகவே கல்வி, பின்வரும் வழிவகைகளின் அடிப்படையில் பன்னாட்டுணர்வை வளர்க்க முயலவேண்டும்.

கலைத்திட்டம் மற்றும் பாடப்புத்தக மறுசீரமைப்பு

உலக அமைதி மற்றும் புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றைக் கலைத் திட்டம் மற்றும் பாடப்புத்தகம் வலியுறுத்தும் வகையில் உருவாக்கவேண்டும். அதற்கு கீழ்க்கண்ட திறன்களை மாணவர்கள் பெறும் வகையில் கலைத்திட்டம் அமைதல் வேண்டும்.

 1. உலக நாட்டின் பிறரைச் சார்ந்துள்ளனர் என்ற உணர்வு.
 2. பல சமயங்களில் ஒத்த சிந்தனைகள், ஒழுங்குக் கொள்கைகள் பற்றிய அறிவு.
 3. உலகத்தில் பின்பற்றப்படும் பல பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய அறிவு.
 4. உலகம், அதன்நாடுகள், மக்கள், வாழ்க்கைக்கான எண்ணங்கள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான அறிவு.
 5. அமைதியை ஏற்படுத்த மனித இனம் நிகழ்த்திய போராட்டங்கள் பற்றிய அறிவு.

பள்ளிகளில் போதிக்கப்பட்டும் வரலாறு, புவியியல், அறிவியல், இலக்கியம் போன்ற பாடங்கள் மாணவர்களுக்கு தாங்கள் உறுப்பினராக உள்ள உலகத்தைப் பற்றி விரிவான, பரந்த எண்ணத்தை உருவாக்க வேண்டும்.

பள்ளி இணைச் செயல்பாடுகள்

வர்த்தமான மகாவீரர், புத்தர், இயேசு, முகமது நபி, குருநானக், பூரீகிருஷ்ணர், இராமகிருஷ்ணர், தாகூர், காந்தி, சிவாஜி போன்ற பன்னாட்டு ஆன்மீகத் தலைவர்களின் விழாக்களைக் கொண்டாடுதல், வீரர்களின் பிறந்தநாள் கொண்டாடுதல் மற்றும் ஐக்கியநாடுகள் சபை, மனித உரிமை மற்றும் உலக சுகாதார தினங்கள் கொண்டாடுதல், பேனா நண்பர்கள் கழகம் தொடங்குதல் போன்றவைகள் மூலம் பன்னாட்டு உணர்வை வளர்க்கலாம்.

பண்பாட்டுப் பரிமாற்றம்

ஆசிரியர்கள், மாணவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் கொண்ட பண்பாட்டுக் குழுவை பள்ளியின் வாயிலாக உலக நாடுகளுக்கு அனுப்பி, உலக மக்களிடையே அன்பும் அரவணைப்பும் ஏற்படச் செய்யலாம் “உலக நாடுகளிடையே மனிதர்களைப் பரிமாற்றம் செய்து, அறிவு, திறன், அவைகளை பகிர்ந்து கொள்வதன் வாயிலாகவும், சுதந்திரமாகவும் மனம் திறந்த கலந்துரையாடல்கள் மூலமாகவும், வேறுபாடுகளைக் களைந்து ஒத்துணர்வை மேம்படுத்தி, ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். கூடி வாழ்தல் நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் செயல் மூலமாக அனைவரும் பயன் பெறச் செய்தல் வேண்டும்” என சி.டி. தேஷ்முக் கூறியுள்ளார்.

ஆசிரியர் பங்கு

ஆசிரியரின் மனப்பான்மையும், பார்வையும், ஈடுபாடும் பன்னாட்டு உணர்வுக் கல்வியை வழங்குவதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உலகப் பார்வையும் விரிந்த மனப்பாங்கும், மனிதநேயமும் உடையவராக ஆசிரியர் இருக்க வேண்டும். பள்ளிச் செயல்களும், கற்பித்தல் முறைகளும், உலகச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு பல்வேறுநாடுகளின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் அறிமுகப்படுத்த வேண்டும்.

“கல்வி, அறிவியல், பண்பாடு ஆகியவற்றின் வாயிலாக நாடுகளுக்கிடையே அமைதியையும், பாதுகாப்பையும் வழங்குவதும், பால், இனம், சமயம் ஆகியவற்றால் வேறுபாடு இன்றி. சமூகநீதி, மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் பன்னாட்டுச் சட்டம் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு மதிக்கச் செய்வதுமே பன்னாட்டுணர்வுக் கல்வியின் தலையாய நோக்கமாகும். மாணவரிடையே

 1. செய்தித் தொடர்பு வழியாக பன்னாட்டு அறிவையும் புரிந்து கொள்ளும் திறனையும், தங்குதடையற்ற கற்பனை மற்றும் கருத்துக்களை வெளிப்படச் செய்தலையும் வளர்த்தல்.
 2. பன்னாட்டுணர்வுக் கலாச்சாரம் பரவ, கல்வியில் புதிய சிந்தனையோட்டத்தைப் பாய்ச்சுதல்.
 3. அறிவைப் பராமரித்தல், உயர்த்துதல், பரப்புதல் போன்றவற்றை வளர்த்தாக்குமாறு யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ளது.

யுனெஸ்கோ பின்வரும் முயற்சிகளின் வாயிலாக இந்தியாவில் பன்னாட்டுணர்வை வளர்த்து வருகிறது.

 1. பண்பாட்டில் வீழ்ந்து வருகின்ற நாடுகளை மறுச் சீரமைப்புச் செய்தல்.
 2. உலக அமைதியை மேம்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
 3. இனத்தொடர்பான தவறான எண்ணங்களை நீக்க ஆசிரியர், மாணவர் கருத்துப் பரிமாற்றம். பல நாடுகளைச் சார்ந்த மாணவர்களையும் சந்திக்கச் செய்து தங்களுடைய எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள முகாம்கள் ஏற்பாடு செய்தல்
 4. கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்தல்
 5. பிற நாடுகளின் தேவைகளைப் புரிந்து கொள்ள கல்வி மையங்களை ஏற்படுத்தல்
 6. நாடுகளின் பொதுவான பிரச்சனைகளை விவாதிக்க உலகப் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தல்.
 7. வானொலி, செய்தித்தாள் போன்றவற்றை உலக நலத்திற்காக மறு அமைப்பு செய்தல்.
 8. பின் தங்கிய நாடுகளின் எழுத்தறிவை மேம்படுத்துதல். vi.கலைக் கண்காட்சியை ஏற்பாடு செய்தல்.
 9. ஆசிரியப் பயிற்சிக் கலைத்திட்டத்தில் செயல்முறை அடிப்படையில் சேர்த்தல்.
 10. நூலகம், அருங்காட்சியகம் ஆகியவற்றை விரிவுபடுத்துதல்.
 11. சிறந்த இலக்கியங்களை மொழி பெயர்த்தல்.

யுனெஸ்கோ திட்டங்களை நம் நாட்டில் செயல்படுத்த இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் 1969 ஆண்டு யுனெஸ்கோவுடன் கூட்டுச் செயற்பாட்டிற்கான இந்திய தேசியக்குழுவை நிறுவியது.

இக்குழுவின் செயல்பாடுகள்

 • யுனெஸ்கோ மற்றும் பிறநாடுகளின் தகவல்களைப் பரப்புதல்
 • ஐக்கிய நாட்டு சபை நாள், மனித உரிமை நாள், உலக எழுத்தறிவு நாள். போன்றவற்றைக் கொண்டாடுதல். மனிதர்கள் பரிமாற்றம். பிறநாடுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு. பிற தேசிய குழுக்களுடன் உறவு புத்தகங்கள் வெளியீடு பள்ளிச் செயல் திட்டங்கள் தயாரிப்பில் பங்கு கொள்ளல். புத்தகங்கள் இறக்குமதியில் யுனெஸ்கோ வழங்கும் அடையாளச் சீட்டை வழங்குதல்.
 • திறமை வாய்ந்த இந்தியர்களுக்கு யுனெஸ்கோ அமைப்பில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருதல்.
 • யுனெஸ்கோ மன்றங்கள் அமைத்தல்.

பள்ளிச் செயல்திட்ட முறையில் யுனெஸ்கோவில் பங்கு அ) ஐக்கிய நாடுகள் பற்றியும் அதன் சிறப்புத் தன்மை வாய்ந்த பிரதிநிதிகள் (Agencies)

ஆ) மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் பற்றிக் கற்பித்தல்.

இ) பிற நாடுகள் பற்றிக் கற்பித்தல்.

யுனெஸ்கோ மன்றங்கள்

இந்திய தேசியக்குழு, யுனெஸ்கோ மன்றங்களைப் பல்கலைக் கழகங்களில், பொது நூலகங்களில், பிற கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் அமைக்கத்தூண்டியது. இம்மன்றங்கள் யுனெஸ்கோ பற்றியும், அவற்றின் தேவை, பரிமாற்றம் பற்றிய தகவல்களை பரப்பும் பணியை செய்ய அமைக்கப்பட்டன. தற்போது 120 யுனெஸ்கோ மன்றங்கள் இந்தியாவில் பல இடங்களில் பணியாற்றி வருகின்றன.

முடிவுரை

பன்னாட்டு உணர்வு இன்றைய அவசியத் தேவையாகும். கல்வி, பன்னாட்டு உணர்வை வலிமையாக வளர்ப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. மனித சக்தியைத் தகுந்த பாதையில் திசைத் திருப்பி, அமைதியையும் ஒற்றுமையையும் வலுப்படுத்த கல்வி தன்னை முழுமூச்சாக அர்பணித்துக் கொண்டுள்ளது. பன்னாட்டு உணர்வை வளர்க்கும் வழிமுறை மெதுவாக இருப்பினும், அதன் பலன்கள் மிகவும் வலிமையானவை. மனித குலத்தில் வளர்ச்சியும், வலிமையையும் மட்டுமின்றி மனித குலத்தின் நிலைப்பாடு பன்னாட்டு உணர்வின் முன்னேற்றத்தைப் பொருத்தே அமையும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

Filed under:
3.06666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top