பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புவியியல் படிப்பு

புவியியல் படிப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

சுற்றுச்சூழல் சீர்கேடும், அதுதொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்துவரும் நிலையில், புவியியல் தொடர்பான படிப்பும் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

பொதுவாக, நமது பாடத்திட்டத்தில், சமூக அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக, இந்தப் புவியியல் பாடம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தப் பாடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்மை உருவாக்கி, வளர்த்து, வாழ்வளித்துவரும் இந்தப் புவியைப் பற்றிய படிப்பு என்பதால், உலகிலுள்ள மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த படிப்புகளில் இந்தப் படிப்பு தலையாய ஒன்று என்பதை மாணவர்கள் உணர வேண்டும். இப்படிப்பின் மூலமாக கிடைக்கும் பணி வாய்ப்புகள் மிகப்பல.

கல்வித் தகுதிகள்

இத்துறையில் பணிபுரிய விரும்பும் ஒருவர், முறைப்படி, இத்துறை தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். பல கல்வி நிறுவனங்கள், புவியியல் தொடர்பான படிப்புகளை, பி.எஸ்சி., மற்றும் பி.ஏ., நிலைகளில் வழங்குகின்றன.

இதன்மூலம், பள்ளியில், கலை மற்றும் அறிவியல் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் படித்து வெளிவரும் விருப்பமுள்ள மாணவர்கள், இப்படிப்பில் தடையின்றி சேர முடிகிறது. பல கல்வி நிறுவனங்கள், இப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நுழைவுத் தேர்வுகளையும் நடத்துகின்றன. கல்வித் தகுதியுடன், இத்துறைக்கு தேவையான கம்ப்யூட்டிங் அறிவையும், சிறப்பான முறையில் பெற்றுள்ளவருக்கு பணி வாய்ப்புகள் அதிகம்.

முக்கியமான தகுதிகள்

சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளுதல், புதிய விஷயங்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம், கிரகிக்கும் திறன்கள், பொறுமை, மனோதிடம், சிறப்பான கல்வி மற்றும் கம்ப்யூட்டிங் திறமைகள், அறிவியல் ரீதியான அணுகுமறை, எழுத்துத்திறன் மற்றும் கூரிய ஆர்வம் போன்றவை, இத்துறையில் பணிபுரிவதற்கான முக்கியமான தகுதிகள்.

பணி வாய்ப்புகள்

போக்குவரத்து, சுற்றுச்சூழல் அறிவியல், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கான வழிகளைத் திட்டமிடல், சிவில் பணிகள், வரைபடம் தயாரித்தல் (Cartography), செயற்கைக் கோள் தொழில்நுட்பம், மக்கள்தொகை கவுன்சில், வானிலை ஆராய்ச்சித் துறைகள், கல்வி மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறான துறைகளில், பரவலான பணிவாய்ப்புகள், புவியியல் படித்தவர்களுக்கு உண்டு.

பணி நிலைகள் மற்றும் பணித் தன்மைகள் போன்றவை, ஒருவரின் தகுதியைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, எகனாமிகல் ஜியாக்ரபி, கல்சுரல் ஜியாக்ரபி, பொலிடிகல் ஜியாக்ரபி, ஹிஸ்டாரிகல் ஜியாக்ரபி, டூரிஸம் ஜியாக்ரபி, ரீஜினல் ஜியாக்ரபி, கிளைமடாலஜி உள்ளிட்டவை, புவியியல் பட்டதாரிகள் பணி வாய்ப்புகளை பெறும் முக்கியத் துறைகள்.

ஒருவர், தொடர்புடைய துறைகளில் ஸ்பெஷலைஸ் செய்து, புவியியல் வல்லுநர் ஆகலாம். ஒரு புவியியல் வல்லுநர், திட்டமிடல், மேம்பாட்டு கமிஷன்கள், வனம், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அரசுத் துறைகளிலும், டிராவல் ஏஜென்சிகள், உற்பத்தி நிறுவனங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் வரைபட வெளியீட்டு நிறுவனங்கள் மற்றும் மீடியா ஏஜென்சிகள் ஆகிய பல்வேறான துறைகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

இன்றைய நாட்களில், புவியியல் மற்றும் அது தொடர்பான படிப்புகளை முடித்தவர்களுக்கு, ஜி.ஐ.எஸ். மற்றும் ரிமோட் சென்சிங் போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. சுற்றுலா தொடர்பான தொழில்களில், சாலை மற்றும் இதர வழிகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் உதவிகள் தொடர்பான பணிகளுக்கு, புவியியல் படித்தவர்களின் தேவை மிக அதிகளவில் உள்ளது. சுற்றுலா இயக்குநர்கள், வழித்தட திட்டமிடுநர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற பணிநிலைகள் கிடைக்கின்றன.

புவியியல் துறையில் முதுநிலைப் பட்டம் மற்றும் பிஎச்.டி., முடித்தவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளுக்கும் செல்லலாம்.

சுருக்கமாக சொன்னால், புவியியல் என்பது, பரவலான வேலை வாய்ப்புகளை மட்டும் தருவதில்லை. நாம் வாழும் உலகைப் பற்றி ஒரு சிறந்தப் புரிதலை இப்பாடம் நமக்கு வழங்குகிறது. எனவே, உலகை அறிய விரும்பும் மாணவர்களுக்கு, புவியியல் படிப்பு என்பது ஒரு சிறந்த வடிகாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆதாரம் : தினமலர் - வெற்றி வழிகாட்டி கையேடு

3.02631578947
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top