பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / மேற்படிப்பும், வேலைவாய்ப்புகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மேற்படிப்பும், வேலைவாய்ப்புகளும்

மேற்படிப்பும், வேலைவாய்ப்புகளும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

மே-ஜூன் மாதங்கள் மிக முக்கியமான மாதங்கள். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த இரண்டு மாதங்களில் மேற்கொள்ளவேண்டிய முடிவுகள் பல உள்ளன. சிறு குழந்தைகள் விஷயத்தில் பள்ளிச் சேர்க்கை. எந்தப் பள்ளியில் சேர்ப்பது. நல்ல பள்ளிகள் பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வி வழங்கும் சுயநிதிப் பள்ளிகளாக, கல்விக் கட்டணங்களுடன் இதர மறைமுககட்டணங்களை வசூலிக்கும் பள்ளிகளாக இருப்பதால் எந்தப்பள்ளியில் எவ்வளவு கட்டணம் எனக் கணக்குப் பார்க்க வேண்டிய கட்டாயம். சிபாரிசுகளுக்காக எவரிடம் செல்லுவது என்கிற யோசனை. ஏற்கனவே பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் குழந்தை தேர்ச்சி பெற்ற மேல் வகுப்புக்குச் செல்லுதல், தேர்ச்சி பெறாவிடில் உடனடி மறு தேர்வு எழுதி இழந்த தோல்வியை பெறும் முயற்சிகள், பெற்றோருக்கு இடமாறுதல் போன்ற காரணங்களுக்காக ஒரு பள்ளியை விட்டு வேறு ஊர்களில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்ப்பது போன்ற பிரச்னைகள்.

பள்ளிப் படிப்பின் பல நிலைகளாகக் கருதப்படும் மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, இடைநிலைக் கல்வி, மேல்நிலைக்கல்வி ஆகிய நிலைகளின் இறுதி வகுப்பில் பிள்ளைகள் இருக்கும் போதும் அவற்றை முடித்த நிலையிலும் கவனிக்க வேண்டிய பிரச்னைகள் இரண்டரை முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தையை தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்பத் தயங்கி வீட்டருகே உள்ள மழலையின் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சேர்த்து, பின்னர் இரண்டாண்டுகள் கழித்து இதே பள்ளியா வேறு பள்ளியா எனத் தொடங்கி ஒவ்வொரு நிலை முடியும்போதும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் எழும் பிரச்னைகள் பல. இவற்றில் இடைநிலைக்கல்வி அதாவது 10-வது வகுப்பு முடித்த பின்பும், மேல்நிலைக் கல்வி 12-ஆம் வகுப்பு முடித்த பின்பும் மாணவர்களின் மேற்படிப்பு, தொழிற்ப்படிப்பு, வேலை, அல்லது வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி இவற்றை தேர்ந்தெடுப்பதில் முடிவுகளை எடுக்கவேண்டிய மாதமும் மே மாதமே. மாணவரின் சொந்த எதிர்காலமும், நாட்டின் எதிர்காலமும் இந்த முடிவுகளைப் பொறுத்து அமையும் என்பதால் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எவ்வளவு வலியுறுத்தினாலும் தகும்.

இரண்டு அணுகுமுறைகள்

பத்தாம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் மகன் / மகள் என்ன செய்ய வேண்டும், வேலையா படிப்பா, படிப்பு என்றால் அறிவியல் கலைக் கல்வியா தொழிற்கல்வியா, வேலை என்றால் நேரடியாக வேலைக்கா, பயிற்சி பெற்று அதன் மூலமான வேலையா என்பது போன்ற பல கேள்விகள் குடும்பங்களில் எழுவது இயற்கை. இறுதி முடிவு இந்த நிலைகளில் படிப்பு முடித்த மே மாதம் தான் என்றாலும் இதற்கான சிந்தனைகள், உள்ளக்கிடக்கைகள் எதிர்பார்ப்புகள் குழந்தை பிறந்தது முதலே குடும்பங்களில் பேசப்படுவது வழக்கம். ஒரு வயது இரண்டு வயது மழலைகளைப் பார்த்து 'நீ என்ன ஆகப்போறே?' என்ற  கேள்வியுடன் இந்தச் சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும்  தொடங்குகின்றன. இதுபோன்ற கேள்விகளைக் கேட்கும் பெற்றோர் மற்றும் உறவினர்களே அதற்கு பதிலையும் குழந்தைப் பிராயத்திலிருந்தே ஊட்டி பிள்ளைகளிடையே 'நான் இது வாகத்தான் ஆகப் போகிறேன்' என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். தாங்களும் அத்தகைய பிள்ளையின் எதிர்காலம் பற்றிய ஆசையை ஏற்படுத்தி வளர்த்து நிலைப் படுத்திக் கொள்கின்றனர். இது ஒரு அணுகுமுறை.

மற்றொன்று பிள்ளை இயல்பாக வளர அனுமதிக்கும் முறை. மழலையாக உள்ளபோதே அது நாடும் பொருள், கருவி, காட்சி, போன்றவற்றுக்குத் தகுந்தவாறு அதன் மன நாட்டத்தைக் கணித்துக் கொண்டு, கவனத்தில் பதித்து வந்து, பின்னர் பள்ளிப் படிப்பில் குழந்தைக்கு எத்தகைய பாடம், திறன் இயல்பாக  எளிதாக வருகிறது, குழந்தையின் ஆர்வங்கள் எதில் செல்லுகின்றன எனப் பட்டியலிட்டு இப்பட்டியலில் பிள்ளைகள் பற்றிய தங்களது எதிர்பார்ப்பு அடங்கியுள்ளதா எனப் பார்த்து தற்காலிகமான முடிவுகள் எடுத்து, குழந்தையின் ஒவ்வொரு கல்வி நிலை (முன்பு குறித்த 5 நிலைகள்) இறுதியிலும் இந்த முடிவினை சரிபார்த்து, பிள்ளையுடன் இது பற்றிப் பேசி இறுதிக்கட்ட முடிவு எடுப்பது மற்றொரு அணுகுமுறை.

இந்த இரண்டில் எது சிறந்தது, எது மாணவர் மன நிலைக்கு உகந்தது, என்பது குறித்து ஆராய்வது, நம் நோக்கமல்ல. இரண்டிலும் நன்மை தீமை உண்டு. எனவே இரண்டு அணுகுமுறைகளின் நல்ல அம்சங்களை ஆராய்ந்து அவற்றை இணைத்து பிள்ளைகளின் எதிர் காலம் பற்றிய முடிவு எடுத்தால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நல்லது.

வேலையா மேற்படிப்பா ?

10-ஆம் வகுப்பு முடிக்கும் போதும் 12-ஆம் வகுப்பு முடிக்கும் போதும் இக்கேள்வி எழுவது இயல்பு. இதே கேள்வி பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, தொழிற்கல்வி பட்ட நிலை பட்ட மேற்படிப்பு நிலை ஆகியவற்றிலும் எழுந்தாலும் முதன்முதலாக நடுத்தர வகுப்பு குடும்பங்களில், சராசரி அல்லது சராசரிக்கும் சற்று கூடுதலான அடைவு நிலை பெற்றுள்ள மாணவர்கள் விஷயத்தில் இந்தக் கேள்வி கட்டாயம் எழும். இப் பிரச்சனைகளில் பல்வேறு காரணம் 'கருதி முடிவுக்கு வந்து விடுதல் சிரமமான செயல் அல்ல. சிரமம் எதில் ஏற்படுகிறது என்றால் எந்த வேலை என்ன மேற்படிப்பு என்ற கேள்விகளுக்கு பதில் காணுவதில் தான்.

சிரமம் ஏற்படக் காரணங்கள் பல. அவற்றில் முக்கியமானது எங்கே எந்த வேலை வாய்ப்புகள் உள்ளன அவை எப்போது உருவாகும் என்பது பற்றியும், எவ்வளவு விதமான மேற்படிப்பு வகைகள் உள்ளன, அவை எங்கே வழங்கப்படுகின்றன, அவற்றால் எதிர் காலத்தில் வேலை வாய்ப்பு  சுயதொழில் வாய்ப்பு ஏற்படுமா போன்றவை பற்றியும் தெளிவாகத் தெரியாதது. இவற்றை தேர்ந்தெடுப்பதில் பொது நாட்டத்தை கண்மூடித்தனமாக கடைப்பிடிப்பது மற்றொரு காரணம். அதாவது பெரும்பாலோர் மேற்கொள்ளும் முடிவுகள் நம்மைப் பாதிக்கின்றன.

உதாரணமாக புதிதாகத் தொடங்கப்படும் படிப்புகள், மருத்துவம், பொறியியல் படிப்புகளில் உள்ள பொது நாட்டத்தை சொல்லலாம். நிரம்பாமல் நின்று விடும் அளவுக்கு பொறியியல் கல்லூரிப் படிப்பு இடங்கள் ஏற்பட்டிருப்பது, குறிப்பிட்ட பாடத்தை (உ-ம்; உடற்பயிற்சி மருத்துவம்) படித்தவர்கள் எண்ணிக்கை பெருகி வேலையின்றித் தவிப்பது போன்றவை இந்த பொது நாட்டத்தின் விளைவு. நம்மிடம் மேற்படிப்பு வேலைவாய்ப்பு குறித்த ஆழ்ந்த அறிவுடன் கூடிய நெடு நோக்கு இல்லாததால் தான் எல்லோருக்கும் எது சிறந்ததோ அதுவே எனக்கும் என்ற, பொது நாட்ட வழியை கண்மூடிக்கடைப்பிடிக்கும் தவறினை நன்கு படித்த பலரும் மேற்கொள்கின்றனர்.

உலகெங்கும் குறிப்பாக நமது நாட்டில் எல்லா படிப்பும் வேலை வாய்ப்பை நோக்கியே மேற் கொள்ளப்படுகிறது . அதாவது யார் எத்தகைய படிப்பை எங்கே படித்தாலும் முடித்த பின் அரசு அல்லது தனியார்துறை வேலை அல்லது சுய வேலைகளில் ஈடுபடுவது தான் அனைத்து படிப்புகளின் இயல்பான இறுதி நோக்கம். மிக உயர்தரம் கொண்ட தேசிய, சர்வ தேச கல்வி, பயிற்சி நிறுவனங்களில் பயின்றோர், மருத்துவப் பட்டம், பட்டமேற்படிப்பு படித்தவர்கள் போன்றோருக்கு இத்தகைய வாய்ப்புகள் நாடி வருகின்றன. அடுத்த நிலையாக தலைசிறந்த தாம் கொண்ட கல்வி, பயிற்சி நிறுவனங்களில் பயின்றோருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பது எளிது. ஆனால் சராசரி நிலை கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்களில் பயில்வோரைப் பொறுத்தவரை, அவர்கள் தேர்வு செய்யும் பாடப் படிப்புக்கும், அதில் அவர்கள் பெற்ற அடைவு நிலைக்கும் தக வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர்.

நேரடி வேலை வாய்ப்புகள்

10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அரசுத் துறைகளில் இவர்கள் எழுத்தர், பொது உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு இந்தத் தகுதி போதுமானது. ஆனால் ஆட் சேர்ப்பு நடைமுறை தேர்வு வாரியங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். போட்டி கடுமையாக இருப்பதால் எழுத்துத் தேர்வு தேவைப்படின் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் இது நடைபெறுகிறது. அரசுத் துறைகளில் ராணுவம், கல்வித்துறை, போன்றவற்றில் 10- (அ) 12-ஆவது முடித்த ஆண்களும் பெண்களும் சேரலாம். இதில் ஆட்சேர்ப்பு முறைகளில் உடல்வாகு, உடற் தகுதி ஆகியன முக்கிய இடம் பெறுகின்றன. எழுத்து, நேர்முகத் தேர்வுகளும் உண்டு. பொதுத் துறை நிறுவனங்களிலும் இத்தகைய எழுத்தர், பொது உதவியாளர், பணி வாய்ப்புகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு நடைமுறைப்படி நடைபெறும். தனியார்துறையிலும் இதே போன்ற வேலை வாய்ப்புகள் உள்ளன. அவை விளம்பரங்கள் மூலமும், நேரடியாகவும் ஆட்சேர்ப்புச் செய்கின்றன.

வேலைகளுக்கான பயிற்சி

10-ஆம் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் குறிப்பிட்ட வேலைகளுக்கான பயிற்சி முடித்த நிலையில் வேலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தட்டச்சு, சுருக்கெழுத்து, ஓட்டுனர் பயிற்சி, நடத்துனர், போன்றவை பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே. கணினித் துறையில், DTP ஆப்ப ரேட்டர், Data Entry ஆப்பரேட்டர், அனிமேட்டர், டிசைன் டெவலப்பர், போன்ற பல வேலைவாய்ப்புகள் சம்பந்தப்பட்ட கணினி பயிற்சிக்கு பிறகு வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகள் அனைத்தும் தனியார் துறையினரால் வழங்கப்படுகின்றன. இதிலும் 10-ஆவது வகுப்பு முடித்தவர்களை விட 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

சுய வேலைவாய்ப்புக்கு வகைசெய்யும் பல பயிற்சிகளை அரசுத் துறையினரும், தனியார் துறையினரும் வழங்குகின்றனர். இதில் உணவு பதனீடு, உணவுப் பொருள் தயாரிப்பு, துணிகளில் Print செய்தல், எம்ராய்டர் செய்தல், ஆடை வடிவமைப்பு, ஸ்கிரீன் பிரிண்டிங், DTP செய்து தருதல், தட்டச்சு மற்றும் கணினி அச்சு தொழில், சிறிய பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு, புகைப்படத் தொழில், அனைத்து விதமான சிறுதொழில் நடத்துதற்கு பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. சிறு தொழில் சேவை நிறுவனம் (SSI) போன்ற அரசு நிறுவனங்களும், பெரும் எண்ணிக்கையிலான அரசு சாரா நிறுவனங்களும், இத்தகைய பயிற்சி வழங்குகின்றன. ஹவுஸ் கீப்பிங், வயரிங், மின்சாதன பராமரிப்பு, மோட்டார் ரிவைண்டிங், ப்ளம்பிங், மர வேலை போன்ற துறைகளில் சுய வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் குறிப்பாக தனியார் துறையில் உள்ளன.

மேற்படிப்பு (இடைநிலை முடித்தோருக்கு)

10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் தொடர்ந்து 12-ஆம் வகுப்புக்குச் செல்லும் போது பொதுக் கல்வி, தொடர்கல்வி என இரு பிரிவுகளில் தாங்கள் விரும்பியவற்றில் சேரலாம். மேல் நிலை தொழில் கல்வியில் ஜெனரல் மெசினிஸ்ட், வீட்டு மின்சாதன பராமரிப்பு, மோட்டார் ரிவைண்டிங், நர்சிங், விவசாயம், அலுவலக செயலர் என பல பிரிவுகள் உள்ளன. எந்தப் பிரிவு எப்பள்ளிகளில் உள்ளது என்பதை கல்வித் துறையின் மாவட்ட அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

இத்தொழில் கல்வி கல்லூரிகளில் மேல்படிப்பு தொடரவும், பொறியியல் கல்லூரிகளில் சேரவும் தகுதியுடையவை. 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் பாலிடெக்னிக்குகளில் சேர்ந்த தொழில்கல்வி பட்டங்களைப் பெறலாம். அரசுத்துறையிலும், பெரும் அளவு தனியார் துறையிலும் பாலிடெக்னிக்குகள், செயல்படுகின்றன. ஒரு சமயம் இடம் கிடைக்காத நிலையிலிருந்த பாலிடெக்னிக்குகள் தற்போது நிறைய தோன்றியிருப்பதால் இவற்றில் இடம் கிடைப்பது பிரச்னை இல்லை. சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் என்ற வளமையான பட்டப் படிப்புகளுடன் தற்போது பாலிடெக்னிக்குகள் கணினி அறிவியல், வர்த்தக வணிகவியல், அச்சுத் தொழில், ஆடை வடிவமைப்பு, தோல் தொழில் என பல்வேறு வகை பட்டப்படிப்புகளை வழங்குகின்றன. இந்தப் பட்டயம் பெற்றவர்கள் வேலைக்குச் சேரலாம், சுய தொழில் தொடங்கலாம், விரும்பினால் பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு வகுப்பின் இரண்டாம் ஆண்டு நிலையில் நேரடியாகச் சேர்ந்து மேலும் 3 ஆண்டுகள் மட்டுமே படித்து பொறியியல் பட்டம் பெறலாம்.

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தொழிற் பயிற்சி பெற தொழிலியல் பயிற்சி நிறுவனங்கள் (ITI) உள்ளன. இவற்றில் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான தொழில் நுட்பாளர் (Technician) சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ITI-க்களில் மெஷினிஸ்ட், டர்னர், மோல்டர், பிட்டர், கார்பெண்டர், எலக்ட்ரிக்கல், ட்ராப்ஸ்மன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் என பல துறைகளில் பயிற்சி வழங்கப்படுகின்றன. இதில் சான்றிதழ் பெற்றவர்கள் தொழிற்சாலைகளில் பயிற்சிப்பணி (Apprentice ship) முடித்தவுடன் மத்திய பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிப் பணி சான்றிதழுக்கும் தகுதி பெறுகிறார்கள். இந்த ITI சான்றிதழ் பெற்றவர்கள் அரசு, பொதுத்துறை, தனியார் துறை தொழிறச்சாலைகள் நிறுவனங்களில் நுட்பாளர்களாக (Technician) பணிவாய்ப்பு பெறுகிறார்கள். முன்பு அரசு மட்டுமே ITI-களை நடத்தி வந்த நிலை மாறி தற்போது பல தனியார் ITI-கள் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் பெரிய நகரங்களிலும் இயங்குகின்றன.

இன்றைய கால கட்டத்தில் கணினியின் பயன்பாடு

கணினி மயமாக்கல் - அங்கிங்கெணாதபடி எங்கும் நடைபெற்று வருகிறது. நடுத்தர கடைகள், உணவு விடுதிகள் போன்றவற்றில்கூட கணினி மயமாக்கல் நடைபெற்று வருவதால் இத்துறையில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது. 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் கணினி பயிற்சி பெற்று உரிய மென்பொருள் கையாளும் திறன் வளர்த்து உடனடி வேலைகளைப் பெற பல்வேறு கணினி பயிற்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. கணினி பயிற்சித் துறையில் மட்டும் முதலில் தனியார் துறையில் தொடங்கிய பயிற்சிகள் தற்போது அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டிலும் நடைபெறுகின்றன. சிறு தொழில்துறை மகளிர் மேம்பாட்டுத் துறை முறை சாராக் கல்வி துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இத்தகைய பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

மேற்படிப்பு - (மேல்நிலை முடித்தோருக்கு)

12-ஆம் வகுப்பு முடித்தவர்கள்தான் நாட்டை தொழில் வளர்ச்சி அடைந்த நாடாக அனைத்து துறையிலும் ஆற்றல் மிகுந்த நாடாக மாற்றக் கூடிய மூல சக்தி என்றால் அது மிகையில்லை. இவர்களில் ஒரு பிரிவினர்கள் மருத்துவம், பொறியியலின் எண்ணிலடங்கா பிரிவுகள், கல்வி போதனை, நிர்வாகம், நிதி, மனித ஆற்றல் மேம்பாடு, அறிவியல் தொழிலியல் ஆராய்ச்சி, என வளர்ச்சித் துறைகளிலும், இலக்கியம், இசை, நடனம், சினிமா, சின்னத்திரை ஒலிஒளிப்பதிவு அனிமேஷன், வடிவமைப்பு என கலைத் துறையிலும் ஈடுபட்டு நாட்டை ஒளிரச் செய்யும் சக்திகள்.

இவர்களுக்குள்ள வாய்ப்புகள் எண்ணிலடங்காதவை. இதில் எதைத் தேர்ந்தெடுக்க என்ற ஒப்பம் ஏற்படுவது இயற்கை என எதிர்பார்க்கும் நிலையில், ஏறத்தாழ 30 சதவீதம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மருத்துவராக வரவேண்டும் என ஒற்றைத் தொழிலை முன்வைத்து முனைந்துவருவதும், மருத்துவக் கல்லூரி இடப்பற்றாக்குறையால் அவர்களில் 99 சத வீதத்தினர் மன மொடிந்து ஏமாற்றமடைவதுமான சூழ்நிலை ஏன் மாறவில்லை என்பது சமூக ஆராய்ச்சிக்கும் உடனடி விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும் உகந்த விஷயம். மாணவரின் மனோநிலை, விருப்பம், இவற்றிற்கு ஏற்ற படிப்புகள் நாட்டில் நிறையவே உள்ளன. இவற்றைக் கண்டு பிடித்து நெறிப்படுத்தி இளைய தலைமுறையை, இந்த அளப்பரிய ஆற்றலை நேர்மறையாக வழிப்படுத்த பயன்படுத்துதல் பெற்றோருக்கும் ஆய்வு, உளவியல், தொழில்துறையாளருக்குப் பெரும் பங்குண்டு.

+ 2 முடித்த மாணவர்களும் பெற்றோரும் மருத்துவம், பொறியியல் இவற்றை மட்டுமே மந்திரமாக ஜபிப்பதை விட்டு விட்டு, இணை மருத்துவத்துறைகள், கல்வி போதனை, பயிற்சி மற்றும் மனித ஆற்றல் மேம்பாடு, விளையாட்டு மற்றும் உடல்நலக்கல்வி, சட்டம், ஆடை அலங்காரக் கலை, வடிவமைப்பு, கட்டிட உள்வடிவமைப்பு (Interior Design) வளாக வடிவமைப்பு (Landscaping) திரைப்படம், நாடகம், இசை, நாட்டியம், விருந்தோம்பல், விமானக் கப்பல் போக்குவரத்து, விற்பனை விநியோகம், ராணுவம் மற்றும் ஆயுதப்படைக் கோவை, காவல் துறைப் பணிகள், பாதுகாவல் (Security) பணிகள், பராமரிப்பு (Maintenance & House Keeping) எனப் பரந்து விரியும் வேலை வாய்ப்புக் காட்சிகளை கண்ணுற்று மனம் எதில் லயிக்கிறதோ அதில் ஈடுபட்டு பயிற்சி மூலம் தகுதியாக்கிக் கொண்டு பயன்பெற வேண்டும்.

உயர் கல்வி நிறுவனங்களும் தற்போது பட்டப் படிப்புகளுக்கு மேலாக வேலைவாய்ப்பு அடிப் படையிலான பல புதிய பிடிப்புகளைத் துவக்கியுள்ளன. பத்திரிகையியல், காட்சியியல், விளம்பரவியல், மக்கள் தொடர்பு, தகவல் சாதன படிப்பியல் என புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பல்கலைக் கழகங்களும், உயர்கல்வி தேசிய, மாநில, தனியார் நிறுவனங்களும், புதிய வகைப் படிப்புகளைத் தொடங்கும் போது மேலை நாடுகளைப் பார்த்து அவை நடத்தும் புதியவற்றை அப்படியே காப்பி அடிப்பதற்கும் மேலாக நமது நாட்டிற்கு உகந்த இத்தகைய படிப்புகள், தேவை என்பதை ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்து அறிமுகப்படுத்த வேண்டியது மிக அவசியம். உதாரணமாக நமது நாட்டை பெரிதும் சார்ந்துவரும் மெடிக்கல் ட்ரான்ஸ் கிரிப்ஷன், கால் சென்டர் ஆபரேஷன் மற்றும் வர்த்தக நடைமுறைச் செயலாக்கம் (Business Processing Operation) ஆகியவற்றில் படிப்பு வகுப்புகள் தொடங்கி பட்டங்களும், பட்டயங்களும் வழங்கினால் தற்போது இந்தியா நாடிவரும் இத்தொழில் வாய்ப்பு நிலைப்படுத்தப்பட்டு விடும். இந்த முயற்சி தொடர்ந்தால் மேலை நாடுகளில் உள்ளது போன்ற 100 சதவீத வேலைவாய்ப்பு நிலை நமது நாட்டிலும் உருவாகும்.

ஆதாரம்: திட்டம் மாத இதழ்

2.27272727273
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top