பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / சூரியமித்ர திறன்வளர்ச்சித் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரியமித்ர திறன்வளர்ச்சித் திட்டம்

சூரியமித்ர திறன்வளர்ச்சித் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான தேசிய சூரியசக்தி நிறுவனம், சூரியசக்தித் துறையின் ஆராய்ச்சி வளர்ச்சிக்கான தலைமை நிறுவனமாகும். இந்த நிறுவனம் மாநிலங்களில் உள்ள தலைமை முகமைகளுடன் இணைந்து, "சூரியமித்ர" என்ற திறன் வளர்ச்சித் திட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்துகிறது.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சூரியசக்தியினால் இயங்கும் மின்சக்தித் திட்டங்களை நிறுவிச் செயல்படுத்திப் பராமரிக்கும் துறையில் உள்ள அபரிமிதமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவியாக இளைஞர்களுக்குத் தேவையான திரன்களைப் பயிற்சிகள் மூலம் அளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மேலும், சூரிய மின்சக்தித் துறையில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதும் இதன் இன்னொரு இலக்காகும்.

பயிற்சி பெறத் தகுதிகள்

பத்தாம் வகுப்பில் ஐடிஐ-ல் எலெக்ட்ரீஷியன், ஒயர்மேன்,  எலக்ட்ரானிக்,  மெக்கானிக், பிட்டர், ஷீட்மெட்டல் ஆகிய துறைகளில் சான்றிதழ் பெற்ற பதினெட்டு வயதுக்குக் குறையாதவர்கள் பயிற்சி பெறலாம். எனினும், எலக்ட்ரிகல்,  மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் பாலிடெக்னிக் டிப்ளமா படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஐடிஐ  எலெக்ட்ரீஷியன் சான்று பெற்று, தொழில் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை உண்டு. ஆனால், பொறியியல் பட்டதாரிகளுக்கும், கூடுதலான உயர் தகுதி பெற்றவர்களுக்கும் இந்தப் பயிற்சியில் சேர வழியில்லை.

சூரியமித்ர பயிற்சியில் சேர்த்துக்கொள்வதற்கான தெரிவின் போது, பின்தங்கிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், வேலையற்ற இளைஞர்கள், பெண்கள், ஆதிதிராவிடர்/பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கால அளவு

சூரியமித்ர பயிற்சி சுமார் 600 மணி நேர வகுப்புரை / செயல்முறைப் பாடத்திட்டமாகும். அதாவது மூன்று மாதங்கள் தங்கிப் பயிலவேண்டிய இந்தப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப் படுபவர்களுக்குத் தங்குமிடமும், உணவும் இலவசம். பயிற்சிகளுக்கும் கட்டணம் கிடையாது.

தற்சமயம் ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் முப்பது பேர் மட்டுமே சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். பயிற்சியின் முடிவில், உரிய தேர்வுகள் மூலம் திறன்கள் பரிசோதிக்கப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சேர்க்கை

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்  துறையினருக்கு மாநிலங்களில் உள்ள தலைமை முகமைகள், நடத்தப்பட இருக்கும் பயிற்சி வகுப்புகள் பற்றி நாளேடுகளிலும் மின்னணு ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்படும்.

மாநிலங்களில் செயல்படும் முகமைகள் விண்ணப்பங்களைப் பெற்றுப் பரிசீலித்துப் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறவர்களைத்  தெரிவு செய்ததும், அந்த விவரங்களை தேசிய சூரிய சக்தி நிறுவனத்திடம் தரவேண்டும்.

பயிற்சிப் பாடங்களும் செயல்முறைப் பயிற்சியும்

 • தேசியத் தொழில்பயிற்சிக் கவுன்சில் (NCVT) அங்கீகரித்துள்ள மாடூல் 5ன் படி நிர்ணயிக்கப்பட்டவாறு பாடத்திட்டம் இருக்கும்.
 • தங்கிப்பயிலும் முறையிலான இந்தப் பயிற்சிக்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்ட கால அட்டவணை உண்டு. காலை நேரத்தில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் உடற்பயிற்சி அல்லது யோகா வகுப்புகளும் இருக்கலாம்.
 • முதல் ஒரு மணி நேரத்தில் ஆசிரியர்களின் விளக்கவுரை இடம் பெறும்.
 • செயல் முறைப் பாட வகுப்புகளில் நேரடியாக சூரியசக்தி மின்கருவிகளில் இயக்கம், பழுதுநீக்கல், பராமரிப்பு போன்றவை கற்றுத்தரப்படும். மேலும் வகுப்பறைக்குள்ளேயே செயல் முறை பரிசோதனைகள் நடத்தப்படும். தேவைப்படுகின்ற இடங்களில் சூரியசக்திக் கருவிகளைத் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளுக்கும் மாணவர்கள் களப்பயிற்சிக்கு அழைத்துச்  செல்லப்படுவார்கள். அச்சமயத்தில் வசதிக்கு ஏற்ப மாணவர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து செல்லவேண்டியிருக்கும்.
 • இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுய தொழில் முயற்சி மேற்கொள்வது மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் பாடவகுப்புகள் இருக்கும்.
 • சூரியமித்ர பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஒரு செட் சீருடையும்  இலவசமாகத் தரப்படும். இளம் பழுப்பு வண்ணத்தில் டி.சர்ட்டும், மஞ்சள் வண்ணத்தில் முழுக்கால் சட்டையும் சீருடையாகும். டி.சர்டில் தேசிய சூரிய சக்தி நிறுவனத்தின் இலச்சினை அச்சிடப்பட்டிருக்கும். பயிற்சியின் போது பாதுகாப்புக்கான தலைக்கவசம், உடற்கவசம் போன்றவையும் தரப்படும். பயிற்சியின் முடிவில் அவற்றைத் திருப்பித் தந்துவிடவேண்டும்.
 • பயிற்சி பெறுகிறவர்களுக்கு முறையான உபகரணங்கள் / கருவிகள் (டூல் கிட்) தரப்படும்.
 • பயிற்சி அளிக்கிறவர் அதற்கு வேண்டியவற்றைத் தாமே உகந்த வகையில் ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். எந்த விதமான பயிற்சி முறையை அவர் கைக்கொண்டாலும், பாடத்திட்டத்தில் உள்ளவாறு எல்லாப் பகுதிகளையும் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தாக வேண்டும்.
 • அந்தந்த மாநில மொழிகளிலேயே பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். தேவைப்பட்டால் ஆங்கிலம் அல்லது இந்தியிலும் பயிற்சிகள் தரலாம்.
 • ஒவ்வொரு பாடமும் முடிந்தபிறகு, பயிற்சியாளர்கள் எந்த அளவுக்குப்புரிந்து கொண்டுள்ளனர் என்பதை உறுதி செய்து கொள்ள தேர்வு / வினாவிடை சோதனை போன்றவற்றையும் நடத்தவேண்டும், ஒவ்வொரு நாள் வகுப்புத் தொடக்கத்திலும், முந்தையநாள் கற்றுக்கொண்ட பாடத்தின் சாராம்சத்தை பயிற்சியாளர்கள் மூலம் சொல்லச் செய்வது உகந்தது.
 • வாரத்தின் இறுதி விடுமுறை நாள்களில் பயிற்சியாளர்கள் தாமே செய்து பார்க்கின்ற வகையில் வீட்டுப்பாடங்கள் மற்றும் பயிற்சிகளையும் வழங்கலாம்.

வருகைப்பதிவு

ஒவ்வொரு பயிற்சித் திட்டத்தின் எல்லா வேலை நாள்களுக்கும் கண்டிப்பாக வருகைப்பதிவேடு பராமரிக்க வேண்டும். பயிற்சியாளர்கள் 100 சதவீதம் வகுப்பறைப் பாடங்களுக்கும் செயல்முறை வகுப்புகளுக்கும் வருகை தர வேண்டும். எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் வருகை தர இயலாதவர்களுக்கு, 90 சதவீதம் வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டணம்

 • சூரியமித்ர பயிற்சி பெறுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. எனினும் பயிற்சி நடக்கும் இடத்திற்குச் சொந்த ஊரில் இருந்து வந்து போவதற்கான செலவுகளைப் பயிற்சியாளர்களே ஏற்க வேண்டும். அவர்களிடம் இருந்து ஏதேனும் காப்புத் தொகை பெறப்பட்டால், பயிற்சியின்  முடிவில் திருப்பித்தரப்படும்.
 • முப்பது பயிற்சியாளர்களுக்குத் தொண்ணூறு நாள்களுக்கு, நாளொன்றுக்கு முன்னூறு ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் ரூ.8.1௦ லட்சத்தை மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறையின் மூலமாகப் பயிற்சியளிக்கும் நிறுவனத்திற்கு வழங்கப்படும். இத்தொகை மாணவர்களின் தங்குமிடவசதி மற்றும் உணவு வசதிக்கான செலவை ஈடுகட்டுவதற்காகும்.
 • இதுதவிர பயிற்சி அளிக்கும் கட்டணமாக ஒருமணி நேரத்திற்கு ரூ.25 என்ற கணக்கில் 600 மணி நேரத்திற்கு, முப்பது மாணவர்களுக்கு மொத்தமாக ரூ.4.50 லட்சமும் பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படும்.
 • பயிற்சி பெற்ற மாணவர்கள் பெற்றுள்ள திறனை மதிப்பிடுவதற்காக மதிப்பீட்டுக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.800 என்ற கணக்கில் முப்பது பேருக்கும் மொத்தமாக ரூ.24 ஆயிரத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கும்.

திறன் மதிப்பிடல்

மூன்றுமாதப் பயிற்சி நிறைவில் எழுத்துத்தேர்வு, செய்முறைத்தேர்வு ஆகியவை திறன்கவுன்சில் அல்லது, தேசிய தொழிற்பயிற்சிக் கவுன்சில் மூலமாக நடத்தப்பட்டு மாணவர்களின் திறன் மதிப்பிடப்படும்.

தொழிற் சாலை நேர்காணல்

சூரிய மித்ரா பயிற்சி பெறுபவர்களுக்கு முதல் இரண்டு மாதங்களுக்குள் மின்சக்தி எடுத்துச் செல்லுதல், விநியோகித்தல்,  மின் அழுத்தம், மின்கம்பி இணைப்பு வழங்குதல் போன்றவை சம்பந்தப்பட்ட பெரிய தொழிற்சாலை அல்லது நடுத்தரத் தொழிற் சாலைக்கு நேரில் அழைத்துச் சென்று பயிற்சிகள் தரப்பட வேண்டும். மேலும் 33 கி.வோ திறனுள்ள துணை மின் நிலையத்திலும் நேரடிப் பயிற்சி தரவேண்டும்.

வேலைவாய்ப்பு அம்சங்கள்

பயிற்சியின் முடிவில், வேலைவாய்ப்புக்காக வளாகத் தேர்வு நடவடிக்கைகளையும் பயிற்சி அளிக்கும் நிறுவனம் மேற்கொள்ளலாம். சூரிய சக்தி மின் உபகரணத் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றை விநியோகிக்கும் நிறுவனங்கள், ஒப்பந்த நிறுவனங்கள், போன்றவற்றுக்குத் தகவல் அறிவித்துத் தமது பயிற்சியாளர்களுக்கு வேலை கிடைக்க உதவலாம்.

சூரிய மித்ரா கைபேசி செயலி

தேசிய சூரியசக்தி நிறுவனம் ஜிபிஸ் அடிப்படையில் செயல்படும் கைபேசி செயலி (மொபைல் ஆப்) ஒன்றை உருவாக்கியுள்ளது. Suria mitra mobile app என்ற இந்தச் செயலி மூலம், பயிற்சி பெற்றவர்களிடம் இருந்து சேவையைப் பெறுவதற்கான வழி உள்ளது. சூரிய மித்ர பயிற்சி பெற்றவர்களின் விவரங்கள் அதில் இருப்பதால், பரவலாக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

ஆதாரம் : NISE

3.16
ரத்தினம் Aug 15, 2019 10:38 PM

அங்க வயது வரம்பு உள்ளதா? எனக்கு 56 வயது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top