பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை - வரைவு

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மாநில சுற்றுச்சூழல் கொள்கை - வரைவு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்ற முக்கியமான அம்சம் மக்களின் சுகாதாரமான வாழ்வினை உறுதி செய்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சனை அதிகரித்துக் கொண்டு வருவதோடு மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் இப்பிரச்சனை மிகவும் பிரதானமான நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், நகரங்களில் குடிபெயர்ந்த மக்களின் நெருக்கத்தால் மின்சாரம், வீட்டுவசதி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, குடிநீர் வசதி, கழிவு நீர் மற்றும் திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் சமுதாயத்தின் பொழுதுபோக்கு ஆகியவற்றின் உள்கட்டமைப்புத் தேவைக்கும், அதனை வழங்குவதற்குமான இடைவெளியை மிகவும் அதிகரித்துள்ளது. அதிகளவில் வெளியேற்றப்படும் கந்தக டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள் மேலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் துகள்கள், வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகையினால் காற்று மாசுபடுவது மேலும் அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அருகிலுள்ள மணலியைச் சுற்றியுள்ள பகுதி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும், அவற்றைச் சுற்றியுமுள்ள சாயப்பட்டறைகள், நெசவுத் தொழிற்சாலைகள், கடலூரிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. அனல் மின் நிலையம், இரசாயனம், பெட்ரோலிய வேதிப்பொருள்கள், மருந்து தயாரித்தல், தோல் பதனிடும் தொழில், உலோகத் தாதுத் தொழில், தான் செய்வதற்குரிய கூழ், தாமிரம், மித மற்றும் கனரகப் பொறியியல், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர், சர்க்கரை ஆலை மற்றும் மதுபான ஆலைகள், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம், போக்குவரத்து, தகவலமைப்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற அனைத்து நடவடிக்கைகளாலும் நாட்டில் மாசுத் தன்மை அதிகரித்து வருகின்றது. தொழில் வளர்ச்சியில் முற்போக்கான பாதையில் உள்ள தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களில் மின்னணுக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகளின் மேலாண்மை முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. அறிவுப் பூர்வமாகவும், அறிவியல் ரீதியாகவும் அனைத்து பயனீட்டாளர்களின் பங்களிப்புடனும், இந்த சட்டம் சமூக, பொருளாதார அதீத சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் தொலைநோக்குத் திட்டம் 2023

 • இந்தியாவிலே மிக வளமான மற்றும் முன்னேற்றமுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதும், மாநில மக்கள் நாகரீகமிக்க சமுதாயத்தின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பெற்று சுற்றுச்சூழலுடனும் உலகின் பிற மக்களுடனும் இணக்கமாக வாழ்வதும் தமிழ்நாட்டின் தொலை நோக்கு திட்டம் 2023-ன் குறிக்கோளாகும். தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் மிகச்சிறந்த நோக்கமாகும்.
 • தமிழ்நாட்டின் தொலைநோக்குத் திட்டம் 2023, சூழ்நிலையியல் மற்றும் புராதனச் சின்னங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் கண்டறிந்து சுற்றுச்சூழலின் தன்மையை பேணிக் காத்து அதன் தரத்தை எந்த இடங்களில் அதிகரிக்க முடியும் என்பதை உறுதி செய்வது மற்றும் பாரம்பரிய புராதனச் சின்னங்களைப் பாதுகாத்தல் ஆகியவை தொலைநோக்குத் திட்டம் 2023-ன் முக்கிய நோக்கங்களாகும்.
 • பெறாத நிறுவனக் குறைபாட்டினால் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுகிறது. ஏனெனில் பொதுமக்களே இச்சீரழிவின் தாக்கத்தைப் பெறுகின்றனர். இதற்கு பொறுப்பேற்பவர்கள் தண்டனை பெறுவதில்லை
 • இயற்கை வளங்களை அதிகமான அளவில் பயன்படுத்தவதை ஊக்கப்படுத்தும் தவறான நிதிக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொள்கைத் தோல்விகள் ஏற்படுதல்
 • உயிர் பன்மயங்களின் இழப்பு, ஓசோன் படலம் சிதைவு, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு உலகளாவிய சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் சவால்கள் ஏற்படுதல்.
 • முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்தல் தலைமுறை சாராத சமநிலை:
 • ஏழைகளின் வாழ்வுக்கு பாதுகாப்பு தலைமுறை சார்ந்த சமநிலை சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுச்சூழல் குறித்த நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் வளங்களைத் திறமையுடன் பயன்படுத்துதல்
 • சுற்றுச்சூழல் ஆளுமை .
 • சுற்றுச்சூழல் வளங்களை அதிகப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின் நோக்கங்கள்

 • நீடித்து நிலைக்கும் வளர்ச்சியின் மையத்தில் மனித இனம் உள்ளது.
 • வளர்ச்சியினை எதிர்நோக்கும் உரிமை
 • வளர்ச்சிப் பணியில் ஒருங்கிணைந்த அம்சமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளது.
 • விழிப்புடன் கூடிய அணுகுமுறை
 • பொருளாதாரத் திறன்
 • சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது,
 • வனப்பரப்பினை அதிகரித்தல்,
 • நன்செய் நிலங்களைப் பாதுகாத்தல்,
 • நிலத்தடி நீர்,
 • ஆறு மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாத்தல்,
 • வலுவற்ற சூழல் அமைப்பு மற்றும் கடற்கரைப் பகுதியைப் பாதுகாத்தல்,
 • உயிரினம் மற்றும் தாவரங்களின் பல்வேறு வகைகளைப் பாதுகாத்தல்,
 • மக்களின் தவறான நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து மண் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்,
 • சுற்றுச்சூழலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் திடக்கழிவுகளை மறு சுழற்சி செய்தல்,
 • வளிச்சூழல் மண்டலத்தின் மாசினைக் குறைத்தல் மற்றும் பொதுவான வகையில் மாநிலம் முழுவதும் சூழ்நிலையியல் மண்டலத்தின் சமன்பாடு நிலையை சீரான வகையில் பராமரித்தல் உள்ளிட்ட மனித சமுதாயச் செயல்பாடுகளின் சுற்றுச்சூழல் தடங்களில் அடங்கும்.

தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ பிரதிபலிக்கும் விதத்தில் சுற்றுச்சூழலின் நீட்டித்த தன்மையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்க உத்தேசித்துள்ளது.

தமிழ் நாட்டின் சுற்றுச்சூழல் - சவால்கள் மற்றும் தீர்வுகள்

தமிழகத்தின் நிலப் பகுதியானது மூன்று வகையாக அமைந்துள்ளது. கிழக்கு பகுதி கடலுடன் இணைந்த சமவெளி மிக்கதாகவும், மேற்கு பகுதி மலைப் பகுதியாகவும், மீதமுள்ள நடுப்பகுதி நிலமாகவும் உள்ளது. இந்த நிலப்பகுதியானது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதி அளவிற்கும் மேல் உள்ளது. தமிழ் நாட்டில் 21.79 விழுக்காடு வனப் பகுதி மற்றும் மரங்களின் தொகுப்பாக உள்ளது. இது நமது நாட்டின் தேசிய குறியீடான 33 விழுக்காடுகளை விடக் குறைவாக உள்ளது.

வனப்பகுதியை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளன. தமிழ் நாட்டின் கடற்கரை 1076 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. தமிழக கடல் பகுதி அதிக மீன் வளத்தினைக் கொண்டுள்ளது. எனினும் சுற்றுச்சூழல் பாதிப்பு பெரிய சவாலாக உள்ளது.

அதிக அளவில் நகர மயமான மாநிலம் திடக்கழிவுகள், கழிவுநீர் மேலாண்மை மற்றும் வளி மண்டல மாசு பன்மடங்காகப் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாக அமைப்பு

சுற்றுச்சூழல் துறை

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் அது தொடர்பான பணிகளை செவ்வனே மேற்கொள்ள 1965 ஆம் ஆண்டு ஒரு இணைப்புத் துறையாக சுற்றுச்சூழல் துறை உருவாக்கப்பட்டது. இத்துறை கீழ்காணும் பணிகளை பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது. தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாசுத் தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளிலும், சென்னை மாநகர நீர் வழிகளிலும் மாசுத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல்.

• தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஏரிகளில் மாசுத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளல்

தேசிய பசுமைப்படை மூலமாக பள்ளி மாணாக்கர்களுக்காக சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளல்.

கடற்கரை வரன்முறை செய்யப்பட்ட பகுதிகளில் அறிக்கையின் விதிகளை அமலாக்கம் செய்தல். உலக வங்கி நிதியுதவியுடன் சுனாமி மறு சீரமைப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ளல்

• தமிழ் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் அவை தொடர்பான விளைவுகள் பற்றிய தொடர்பான தகவல்களை வலை தளத்தின் மூலமாகச் சேகரித்துச் சுற்றுச்சூழல் தகவல் மையம் வழியாக வழங்குதல்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

நீர் (மாசுத்தடுப்பு) சட்டம் 1974 (மைய சட்டம் 6, 1974) நடைமுறைப்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 1982-ல் துவங்கப்பட்டது. நீர் (மாசுத் தடுப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு) சட்டம் 1974, நீர் (மாசு மற்றும் மாசு தடுப்பு) வரிகள் சட்டம் 1977, வளி மண்டல (மாசுத் தடுப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு சட்டம் 1981 மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள் 1986ல் உருவாக்கப்பட்டது. சென்னை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் இரட்டை அடுக்கு முறையினை கொண்டுள்ளது. 5 தரம் உயர்த்தப்பட்ட ஆய்வகங்கள், 9 மாவட்டச் சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி செப்டம்பர் 2006-ல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அடிப்படையில் முன் அனுமதி வழங்குதல் தொடர்பாக மத்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநிலக் கடற்கரை மேலாண்மை ஆணையம்

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி மைய அரசினால் அறிவிக்கை செய்யப்பட்டது கடற்கரை பகுதிகளில் (கடலோர ஒழுங்குமுறை மண்டலம்) மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை வரன்முறைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல்.

சட்ட மயமாக்கப்பட்ட கடற்கரை வரன்முறைப் படுத்தப்பட்ட அறிவிக்கை 1991 மற்றும் சமீபத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கடற்கரை வரன்முறைப் படுத்தப்பட்ட அறிவிக்கை 2011-ஐ நடைமுறைப்படுத்துதல்.

வழிவகைகள்

கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பு

தமிழ்நாடு காற்று மாசு தடுப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு விதிகள் 1983

 • அபாயகரமான கழிவுகள் (மேலாண்மை , கையாளுதல் மற்றும் கொண்டு செல்லுதல்) விதிகள் 2008. (திருத்தப்பட்டது)
 • அபாயகரமான இரசாயனங்கள் உற்பத்தி, சேகரம் மற்றும் இறக்குமதிதொடர்பாக விதிகள், 1989 (1994, மற்றும் 2000 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது)
 • அபாயகரமான நுண்ணுயிரிகள் / மரபியல் முறைப்படி உருவாக்கப்பட்டஉயிரிகள் உற்பத்தி, பயன்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி, மற்றும் சேகரம் செய்யும் விதிகள் 1989.
 • பொது பொறுப்பு காப்பீடு விதிகள், 1991
 • இரசாயனங்களால் ஏற்படும் விபத்துகள் (அவசர கால திட்டமிடல்,
 • தயார் நிலையில் இருத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை) விதிகள், 1996.
 • தேசியச் சுற்றுச்சூழல் மேல் முறையீட்டு ஆணைய (மேல் முறையீடு) விதிகள் 1997.
 • மருத்துவக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 1998 (2000 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது).
 • நகர்புற திடக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 2000.
 • ஒலி மாசு (வரன்முறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000.
 • ஓசோன் மண்டலத்தினை பாதிக்கும் பொருட்கள் (வரன்முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000.
 • மின்கலங்கள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 2001திருத்தப்பட்டது.
 • பிளாஸ்டிக் பொருட்கள் (உற்பத்தி, பயன்பாடு மற்றும் கழிவுகள் மேலாண்மை ) விதிகள், 2009.
 • தமிழ்நாடு மின்னணுக் கழிவுகள் கொள்கை , 2010
 • தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், 2010.
 • பிளாஸ்டிக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 2011.

மேலும் எளிதில் மக்கிப் போகாத 60 மைக்ரான் அளவு வரையிலான பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்யும் சட்டத்தினை உருவாக்க தமிழ்நாடு உத்தேசித்துள்ளது.

மாநில சுற்றுச்சூழல் கொள்கை உருவாக்கப்படும் போது, வரன்முறை செய்யப்பட்ட கட்டமைப்பு, அதன் போதுமானத் தன்மை, பயனாளர்களிடையே விழிப்புணர்வு நிலைகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சட்ட முன்மொழிவுகள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் / தொழிற்சாலைகளிடையே சுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னோடியாகக் கொள்ள வேண்டும்.

நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துதல்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மாநிலத்தில் ஏற்படும் மாசுகளைக் கட்டுப்படுத்தவும், மாசு அளவினைக் கண்காணிக்கவும் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மாசுக் கட்டுப்பாடு வாரியம், நீர்ச் சட்டம் 1974, திருத்தம் 1978 மற்றும் 1988, காற்றுச் சட்டம் 1981, திருத்தம் 1987, உரிய வழிமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் படி நீர், காற்று மற்றும் நிலம் மாசுபடுதலை நிவர்த்தி செய்தல் மற்றும் மாசுபடுதலுக்கான காரணிகளான தொழிற்சாலை கழிவுகள், தொழிற்சாலைகளில் வெளியிடப்படும் புகை, வேதியியல் பூச்சிக் கொல்லி மருந்துகள், மனிதர்களின் அக்கறையின்மை இவற்றால் ஏற்படும் மாசுகளைக் களைவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

(1) சாயப்பட்டறை தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் நகராட்சிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாகச் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதைக் கண்காணித்தல்.

(2) மாநிலத்திலுள்ள நீர் ஆதாரங்களை அளவாய்வு செய்து அதன் தரத்தை மதிப்பீடு செய்தல். சுற்றுச்சூழல் துறை 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, மாநில மற்றும் மத்திய அரசின் உதவியுடன் மாசு களைவதற்கான திட்டங்களை செயல்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய மூன்று வகையான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாநிலத்தின் பல்வேறு துறைகளிலும் பல்வேறு முகமைகள்/துறைகள், சுற்றுச்சூழல் துறையில் சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளை முழுமையாக ஒருங்கிணைத்து மேம்படுத்தத் தமது பங்களிப்பை அளித்து வருகின்றன.

இந்தச் சுற்றுச்சூழல் கொள்கை மேற்காணும் நிறுவனங்களை மேம்படுத்தவும், அதன் நிலைகளை மறுதீர்மானம் செய்யும் நோக்கத்திலும் குறிப்பான வழிவகைகளை ஏற்படுத்தும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் இயக்குநரகம் மற்றும் அவை சார்ந்த நிறுவனங்களை மறுசீரமைத்து, மறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, தற்போது நடைமுறையில் உள்ள தொழில் நுட்பங்களையும், இதர வசதிகளையும் பயன்படுத்தி அதன் செயல்பாடுகளில் வெளிப்படையான முடிவுகளை மேற்கொள்ளும் விதத்திலும் அண்மைக்காலத் தொழில் நுட்பத்துடன் மேலும் விழிப்புடனும் முன்கூட்டியே செயல்படும் விதித்திலும் உருவாக்கப்பட வேண்டும்.

தகவல் கல்வி மற்றும் தொடர்பு

இம்மாநிலத்திலும் அதற்கு வெளியிலும் சுற்றுச்சூழல் விளைவுகள் தொடர்பான அறிவு சார்ந்த விவரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இக்கொள்கை உருவாக்கப்படும் பொழுது அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியும், அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒரு திறந்த நிலை வெளிப்பாடு கொண்டதாகவும் இம் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு குடிமகனும் தனது தேவைகளை எளிதில் அணுகும் விதத்தில் மாநில சுற்றுச்சூழல் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

 • கொள்கையாளர்கள் மற்றும் பற்றாளர்கள் ஈடுபாடு
 • பண்னாட்டு ஒத்துழைப்பு
 • கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்
 • செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்தல்

தமிழ்நாடு மாநிலச் சுற்றுச்சூழல் கொள்கை

முக்கியமான பிரச்சனைகள் - பெரிய அளவிலான நடவடிக்கைகள்

அ) காற்றின் தரம் - மிகவும் மாசு அடைந்த இடங்கள் மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் தற்போதைய விவரம்

ஆ) நீரின் தரம் -குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கழிவுகள் மற்றும் அதைத் தடுப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள்

இ) ஆறு, ஏரிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் மாசுபடுதலைத் தடுத்தல்

ஈ) கழிவுகள் மேலாண்மை திடக்கழிவு மேலாண்மை விதி, 2000-ன்படி நகராட்சி எந்தளவில் பின்பற்றியுள்ளது என்பதின் தற்போதைய நிலை ; மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள்.

உ) கடலோரப் பகுதி மேலாண்மை - பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளால் கடற்கரை மேலாண்மை ஒழுங்குபடுத்துதல் மீதான தாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த கடற்கரைப் பகுதி மேலாண்மையால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்.

குறுக்கிடும் பிரச்சனைகள்

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை வகுத்தல்

சுகாதாரத்துடனான தொடர்பு

சுற்றுச்சூழல் தொடர்பான தகவல், கண்காணித்தல் மற்றும் வெளிப்படையான தகவலை வெளியிடும் திறனை உருவாக்குதல்

விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பசுமை முதலீடுகளுக்கு ஊக்கமளித்தல்

திட்டக் கொள்கை புதிய மற்றும் உருவாகும் குறுக்கீடுகள்

அ) சுற்றுச்சூழல் வரியை ஒழுங்குபடுத்துதல் - சந்தை அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தி (உ.ம். சூழல் வரிகள்) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் மேலாண்மையை நோக்கிச் செல்ல உதவுதல்

ஆ) பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வளர்ச்சி – பசுமை பொருளாதாரம் மற்றும் உள்ளீடான வளர்ச்சியை நோக்கிச் செல்ல உதவுவது மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முன்னேற்றத்தை அளவீடு செய்யப் புள்ளியியல் சாதனங்களை உருவாக்குதல்

இ) சுற்றுச்சூழல் துறையில் அரசு மற்றும் தனியாரின் இணைந்த செயல்பாடு

ஈ) சுற்றுச்சூழல் பற்றிய சட்டப் பிரச்சனைகள் சம்பந்தமான விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் இணைந்து செயலாற்றுதல்

முடிவுரை

இந்த சுற்றுச்சூழல் கொள்கை, மாநில மக்களுக்கு தூய காற்று, தரமான நீர், தரமான மண், மேலாண்மையுடன் கூடிய ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், அதே நேரத்தில் தொழில் வளர்ச்சிக்கான மாநிலத்தின் தேவையைச் சமன் செய்யும் விதத்தில் நடவடிக்கையை மேம்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் வரன் முறைப்படுத்தவும் பயன்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை

2.96153846154
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top