பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை

தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முகவுரை

சூழல் சுற்றுலா என்பது “சுற்று சூழல் பாதுகாப்பு, நீடித்த நிலைத்த மக்கள் ஆரோக்கியம், விளக்கம் மற்றும் கல்விக்காக பாதுகாக்கப்படுகின்ற இயற்கை பகுதிகளுக்கு மேற்கொள்ளப்படும் பொறுப்பான பயணமாகும்".

சூழல்சுற்றுலாக் கொள்கை, சூழல்சுற்றுலாவினை திட்டமிட்டு, விஞ்ஞான முறையில் மேம்பாடு செய்வதற்கும், வளர்ச்சியடையச் செய்வதற்கும் தேவையான தொலைநோக்குடன் கூடிய வரையறைகளை வழங்குவதால், இக்கொள்கை மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். குறைந்த அளவு தாக்கத்துடன் இயற்கை பகுதிகளில் சென்றுவருவது, சூழல் சுற்றுலா பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவது, மேலும் எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கே உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார சந்தர்ப்பங்கள் வழங்குதல் மற்றும் இதற்கான வழிமுறைகளுக்கு இக் கொள்கை வழிகாட்டுகிறது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி பாதுகாக்கப்பட்ட வனஉயிரினப் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் இச்சூழல் சுற்றுலா அனுமதிக்கப்பட்ட செயல்பாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் இந்த சூழல் சுற்றுலாக் கொள்கை மேற்கூறிய வழிகாட்டுதலின் அடிப்படையில் அதன் சாராம்சங்களை உள்ளடக்கியதாகவுள்ளது.

தமிழகத்தில் சூழல் சுற்றுலா

வனங்கள் மற்றும் வனஉயிரனங்களின் பாதுகாப்பை பராமரிப்பதில் தமிழ்நாடு தொன்றுதொட்டு விளங்கும் பெரும் பாரம்பரியத்தைகொண்டதாகும் பழங்கால தமிழ் இலக்கியமான திருக்குறளில் இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்களை கருணையுடன் போற்றி வளர்ப்பது பற்றிய பல குறள்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் உயிர்கோள புவியியல் வகைப்பாட்டின்படி தக்காணப்பீடபூமியில் தமிழகம் அமைந்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த சிகரங்களையும், பீடபூமியையும் கடற்கரைகளையும் கொண்டது இங்குள்ள நிலப்பரப்பு. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சந்திப்பு, மற்றும் தொடர்ச்சியான சூழல் நிலப்பரப்பு தாவர மற்றும் விலங்குகளின். உயிர் பன்மை வகைகளின் பெட்டகமாகத் திகழும் இந்த மாநிலம் பல்வேறு வன வகைகளான பசுமை மாறாக்காடுகள், ஈர மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள், வறண்ட பசுமைமாறாக்காடுகள், மூங்கில்காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் அலையாத்தி காடுகளைக் கொண்டதாகும். மேலும், இம்மாநிலம் 1000 கி.மீ நீளத்திற்கு மேற்பட்ட கடற்கரையையும், பவளப்பாறைகள், கழிமண்திட்டுகள், அலையாத்தி காடுகள், நீர்பரப்புகள் மற்றும் கடற்கரை போன்ற பல்வேறு வகையான சூழல் அமைப்புகளுக்கு ஆதாரமாக உள்ளது. கடற்கரைகளில் அமைந்துள்ள சிறிய தீவுகளில் அதிக வகைகளான கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இவைமட்டுமன்றி நிலப்பரப்பில் உள்ள ஈரநிலங்களிலும் அதிக பறவை வகைகள் காணப்படுகின்றது, மேலும், அயல்நாட்டிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்லும் புகலிடமாகவும் திகழ்கிறது. தமிழகத்தில் பரந்து விரிந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளான மூன்று உயிர்க்கோள் காப்பகங்கள், நான்கு புலிகள் காப்பகங்கள், ஐந்து தேசிய பூங்காக்கள், பதினைந்து வனஉயிரின சரணாலயங்கள், பதினைந்து பறவைகள் சரணாலயங்கள் மற்றும் இரண்டு பாதுகாப்பு காப்பகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக நில மற்றம் கடல் உயிர்க்கோள் காப்பகங்களான நீலகிரி உயிர்க்கோள் காப்பகம் (1986) மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகம் (1989) அமைத்த பெருமை தமிழகத்தையே சாரும்.

தமிழகம் புவியியல் பரப்பில் 17.59 விழுக்காடு வனப்பகுதிகளாகவும், 30.92 விழுக்காடு பாதுகாக்கப்பட்ட வன உயிரினப் பகுதியாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை உலகளவில் உள்ள 25 உயிர்பன்மைக்கு சிறப்பு பெற்ற பகுதிகளில் ஒன்றாக அங்கீரிக்கப்பட்டுள்ளது, இது மட்டுமன்றி இம்மலைத்தொடர் இந்தியாவில் உள்ள மூன்று மிகப்பெரிய தன்னகத்தன்மை மையங்களில் (எண்டமிசம்) ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டிற்கே உரியதான குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடல்), பாலை (பாலைவனம்) நிலப்பரப்புகள் சிறப்பான சூழல் அமைப்புகளாக திகழ்ந்து சூழல் சுற்றுலாவிற்கு மகத்தான சந்தர்ப்பங்களை அளிக்கிறது. இரம்மியமான காலநிலை, வளமான தாவரம் மற்றும் விலங்கினங்கள் சூழல் சுற்றுலா வளர்ச்சிக்கு மிகச் சிறந்த இடமாக அமைவதோடு மட்டுமன்றி இந்த சூழ்நிலைகள் சூழல் சுற்றுலாப் பயணிகளை தமிழகத்தை நோக்கி கவருவதாகவும் அமைந்துள்ளது.

விஞ்ஞான ரீதியான வன மேலாண்மையில் தமிழகம் முன்னோடியாக திகழ்வது மட்டுமின்றி, இம்மாநிலத்தின் இயற்கை மற்றும் கலாச்சார சின்னமாக விளங்கும் சமூகக்கோயில் காடுகளை பாதுகாப்பதிலும் சிறந்து விளங்குகிறது.

தொலைநோக்கு பார்வை

தமிழகத்தின் வளமான இயற்கை மற்றும் நாகரீக பாரம்பரிய சின்னங்களை பாதுகாத்து மேம்பாடு அடையச் செய்வதற்காக சூழல் சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களை நீடித்து நிலைத்த தன்மையுடன் மேம்பாடு அடையச் செய்வது

நோக்கங்கள்

 • சூழல் சுற்றுலாவிற்கு உகந்ததான இயற்கை பகுதிகளை கண்டறிந்து அவைகளை மேம்பாடு அடையவும், வளர்ச்சி அடையவும் செய்தல்.
 • சூழல் சுற்றுலா தலத்தின் தாங்கும் திறனுக்கு ஏற்ப சூழல் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளல் மற்றும் சூழல் சுற்றுலா தலத்திற்கு பாதுகாப்பு மற்றும் புனிதத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்காதவாறு சூழல் சுற்றுலா பயணிகளின் வருகையை முறைப்படுத்துதல்.
 • வழிகாட்டு நெறி முறைகளுக்கு இணக்கமான, சூழலுக்கு உகந்த கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.
 • எல்லா உரிமையாளர்களின் பங்கேற்புக்கு வழிவகை செய்து சூழல் சுற்றுலாத்தலங்களை மேம்பாடு செய்து பராமரித்தல். பல்வேறு வகையான உரிமையாளர்களின் பங்கேற்புக்கு வழிவகை செய்து சூழல் சுற்றுலா தலங்களை மேம்பாடு மற்றும் பராமரிப்பு மேற்கொள்வது.
 • உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார சந்தர்ப்பங்களை உருவாக்குதல் மற்றும் இம்மக்கள் வனப்பாதுகாப்பிற்கு தரும் ஒத்துழைப்பிற்காக சூழல் சுற்றுலா பயன்களை பங்கீடு செய்தல்.
 • சூழல் சுற்றுலாத் தலங்களின் இயற்கை மற்றும் நாகரிக பண்புகளை விளக்குவதற்கும் சிறந்த விருந்தோம்பலுக்கும், மேலும் சூழல் சுற்றுலா பயணிகளின் மறக்கமுடியாத அனுபவத்திற்காகவும் எல்லா பொறுப்பாளர்களுக்கும் திறன் மேம்பாடு உருவாக்கல்.
 • நீடித்து நிலைத்த சூழல் சுற்றுலாவிற்காக ஒவ்வொரு சூழல் சுற்றுலா தலத்திலும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுத்தல்.
 • கற்றல், விழிப்புணர்வு உருவாக்கல் மற்றும் பார்வையாளர்களின் அனுபவங்களை அதிகரித்தல் மூலம் இயற்கைப் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
 • சூழல் சுற்றுலாவினால் வனம், வனஉயிரினம் மற்றும் சமூகங்களில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் சூழல் சுற்றுலா பயணிகளிடையே எவ்வாறு திருப்தி ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியவும் தேவையான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு தரவரிசைகளை உருவாக்கல்.

வழிகாட்டு நெறிமுறைகள்

மாநிலத்தின் சூழல் சுற்றுலா வளர்ச்சிக்கு அடிப்படையான வழிகாட்டு நெறிமுறைகள்.

சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா

உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காகவும் அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும், இவர்களை சிறந்த முறையில் சூழல் சுற்றுலாவில் ஈடுபடுத்த வேண்டும் என சூழல் சுற்றுலாக் கொள்கை வலியுறுத்துகிறது. இயற்கை சார்ந்த பொறுப்புள்ள, பொருளாதார ரீதியாக சாத்தியமான, சூழல் சுற்றுலா தலத்தின் தாங்கும் திறனுக்கேற்ப, சமூகத்தின் பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளக்கூடிய திறமைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் சூழல் சுற்றுலாவில் உள்ளது. தமிழகத்தின் இயற்கை பாரம்பரிய சின்னங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு சூழல் சுற்றுலாவின் பொருளாதார பயன்கள் இத்திட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்கு ஊக்கமாக அமையும்.

சூழல் சுற்றுலாத் தலங்களில் மேலாண்மை அணுகுமுறைகள்

சூழல் சுற்றுலா தலங்களின் சிறப்புத்தன்மை வனங்களின் இருப்பு, பாதிப்படையும் தன்மை, அடிப்படை வசதிகள் போன்ற காரணிகள் மூலம் மதிப்பீடு செய்து சூழல் சுற்றுலா தலங்கள் கண்டறியப்படும். இந்த மதிப்பீடு சூழல் சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சிக்கும், மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியம். சில மாவட்டங்களில் சூழல் சுற்றுலா திறன் குறைந்த அளவில் இருப்பதால் இவ்விடங்களில் உள்ள சூழல் சுற்றுலா தலங்களை மேம்படுத்த உள்ளூர் மக்களின் பங்கேற்போடு சிறப்பு கவனம் செலுத்தி சூழல் சுற்றுலா செயல்பாடுகள் கண்டறியப்படவேண்டும். வனவிரிவாக்க மையங்களின் மூலமாக நகரங்களுக்கு அருகில் சூழல் தலங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு சூழல் சுற்றுலா தலங்களுக்கான செயல்பாடுகள் அங்குள்ள இயற்கை வனங்களின் திறன் மற்றும் இதற்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை வைத்து முடிவு செய்யப்படும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் சுற்றுச் சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய பழக்க வழக்க நாகரீக, கலாச்சாரம் மற்றும் இயற்கை வனபாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் முறையில் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்படும். நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நியமங்களுங்கு ஏற்ப பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு உத்திகள் கடைபிடிக்கப்படும்.

இயற்கை மற்றும் கலாச்சார பன்மை பாதுகாப்பிற்கான சூழல் சுற்றுலா

சூழல் சுற்றுலா, உயிர்பன்மை மற்றும் நிலப்பரப்பின் மதிப்பு தொடர்பானது மட்டுமின்றி ஒவ்வொரு சூழல் தலத்திற்கே உரிய பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களையும் உள்ளடக்கியவையாகும். கலாச்சார பண்பாட்டுடன் ஒருங்கிணைந்த உயிர்பன்மை பாதுகாப்பிற்கு தமிழக சூழல் சுற்றுலா நல்வழி வகுக்கும். இதன்மூலம், வரும் சந்ததியர்களுக்கு உள்ளூர் வளங்கள், பாரம்பரிய அறிவு, நாட்டுப்புற வரலாறு, நாகரீகம் மற்றும் கட்டிடக்கலை பாதுகாக்கப்படும். வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கலாச்சாரத்தை பறை சாற்றும் பகுதிகளுக்கு விழாக்காலங்களில் அதிகமாக வருகை தரும் பார்வையாளர்கள் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு சட்டங்களை பயன்படுத்தி ஒழுங்குபடுத்தப்படுவர்.

சட்ட வரையறைகள்:

வனப்(பாதுகாப்பு) சட்டம் 1980, தமிழ்நாடு வனச்சட்டம் 1882, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 மற்றும் வனஉயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972, மேலும் தேசியப்புலிகள் காப்பக ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் இம்மண்ணின் சட்டங்களுக்கு உகந்தவாறு எல்லா சூழல் சுற்றுலா செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கல்

நீடித்து நிலைத்த சுற்றுலா கோட்பாடே, கட்டமைப்பு உருவாக்குவதற்கும், செயல்பாடுகள் மேம்பாட்டிற்கும் வழிகாட்டுதல் நெறிமுறையாக அமையும். சூழல் சுற்றுலா தலங்களில் உருவாக்கப்பட்டு வளர்ச்சியடையச் செய்யும் நிறுவன மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இயற்கை வளங்களுக்கும், உள்ளூர் கலாச்சாரத்திற்கும் பாதிப்பு இல்லாத வண்ணம் மேற்கொள்வதே முதன்மை ஆகும். பெரிய அளவிலான கான்கிரீட் கொண்ட அமைப்புகள் இல்லாமல் உள்ளூர் பொருட்களை பயன்படுத்தி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அங்குள்ள நிலப்பரப்புடன் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும். பெரும்பாலான சூழல் சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் வனத்திற்கு வெளியேயே அமைக்கப்படவேண்டும், இருப்பினும் சூழல் சுற்றுலா தலங்களில் சூழலுக்கு இணக்கமான கட்டமைப்புகளை உருவாக்கலாம். இம்மாநிலத்தின் சூழல் சுற்றுலா எரிசக்தி ஆற்றலை மேம்படுத்தவும், நிலைத்த சூழலுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் உருவாக்கவும், மேலும் அனைத்து செயல்பாடுகளும் கரியமிலவாயு உமிழ்வினை குறைப்பதற்காகவே மேற்கொள்ளப்படவேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைப்பதற்காக இவ்விடங்களில் உருவாகும் கழிவுகளை பொறுத்தமான முறையில் அப்புறப்படுத்தி மறுசுழற்சிமுறை கடைபிடிக்கப்படவேண்டும்.

கூட்டுப்பங்காண்மை மற்றும் பங்குதாரர்கள்

அரசு நிறுவனங்கள், விருந்தோம்பல் தொழில்முனைவோர்கள், சூழல் சுற்றுலா பயணிகளுக்கு வீட்டில் தங்கும் இடமளிப்பவர்கள், சுற்றுலா முகவர்கள், சுற்றுலா இயக்குபவர்கள், அரசுசாரா நிறுவனங்கள், உள்ளூர் மக்கள், ஆகியோர்களின் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்புடன் சூழல் சுற்றுலா மேம்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப்படும். பல்வேறு வகையான உரிமையாளர்களின் பங்கேற்புடன் சூழல் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நீடித்து நிலைத்த சூழல் சுற்றுலாவிற்காக வாய்ப்பு எங்கெல்லாம் உள்ளதோ அங்கே தனியார் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பங்கேற்புடன் சூழல் பொருட்கள் மற்றும் சேவைகள் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.

கண்டறியப்பட்டுள்ள முக்கியமான பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு:

 • அ. தமிழ்நாடு வனத்துறை
 • ஆ. சுற்றுலாத்துறை
 • இ. இந்து சமய மற்றும் அறநிலையத்துறை
 • ஈ. உள்ளூர் மக்கள்
 • உ. உள்ளூர் அமைப்புகள்
 • ஊ. சுற்றுலா முகவர்கள் மற்றும் இயக்குபவர்கள்.
 • எ. விருந்தோம்பல் தொழில் முனைவோர்.
 • ஏ. அரசு சாரா அமைப்புகள்/ஆர்வலர்கள், சூழல் குழுக்கள் போன்றவை.

தமிழக வனத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு சூழல் சுற்றுலாவின் செயல்பாடு, மற்றும் மேம்பாடு, நீடித்து நிலைத்த சூழல் சுற்றுலாவுக்கும் தேவையானது. மேலும் என்னவெனில்

 1. புலிகள் காப்பகங்கள், வனஉயிரின சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனப்பகுதிகளில் மட்டும் தமிழ்நாடு வனத்துறை சூழல் சுற்றுலாவை அமுல்படுத்தும்.
 2. சுற்றுலாத்துறையால் எங்கெல்லாம் மேலே (1)ல் கூறிய இடங்களில், மையப்பகுதிகளைத் தவிர இதரப் பகுதிகளில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதோ அங்கே அதன் செயல்பாடுகளை செயல்படுத்திட அனுமதிக்கப்படும். வனத்துறையுடன் ஆலோசனை செய்து சுற்றுலாத்துறை மையப்பகுதிகளைத் தவிர இதர பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
 3. மேலே (1)ல் கூறிய பகுதிகளைத் தவிர்த்து இதர பகுதிகளில் வனத்துறை சூழல் சுற்றுலா நடத்துவதிலிருந்து விடுபடும். இது எங்கெல்லாம் கிராம வன குழுக்கள்/ சூழல் மேம்பாட்டு குழுக்கள் பங்கேற்புடன் நடத்தப்படுகிறதோ அவ்விடத்திற்கு பொருந்தாது.
 4. இருப்பினும் சுற்றுலாத்துறை செயல்பாடுகளை இந்த இடங்களில் தொடரலாம்.

நியமங்கள் மற்றும் நெறிமுறைகளின் கட்டமைப்பை உருவாக்குதல்

கண்காணிப்பு மற்றும் மதிப்பிடல்

பொறுப்பான மற்றும் நீடித்து நிலைத்த முறையில் சூழல் சுற்றுலா தலங்களை திட்டமிட்டு மேலாண்மை மேற்கொள்வதற்கு காரணிகள் மற்றும் குறியீடுகள் முக்கியமான கருவிகளாகும். காரணிகள் ஒரு சூழல் சுற்றுலா தலத்தின் நீடித்த தன்மையை மதிப்பீடு செய்ய அத்தியாவசிய கூறுகளை வரையறுக்கின்றன. இவ்வாறு செய்யும்பொழுது அந்த இடத்திற்குரிய இயற்கை மற்றும் கலாச்சார பன்முகத் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும். கண்காணித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகள் காரணிகள் மற்றும் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டதாகும், இவைகளை ஒரு சூழல் தலத்தை மதிப்பீடு செய்ய பயன்படுத்தும் பொழுது சூழல் தலத்தின் நீடித்த தன்மையை நிர்ணயிப்பதற்கும் மற்றும் உரிய தீர்வு நடவடிக்கைகள் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படும். செயல்பாடுகள் மேற்கொள்வதற்கு முன்பாக ஒவ்வொரு தலத்திற்கும் காரணிகள் மற்றும் குறியீடுகள் உருவாக்கப்படவேண்டும். இப்படி சூழல் சுற்றுலா தலங்களை மதிப்பீடு செய்வது, இந்த தலத்தின் நீடித்து நிலைத்த தன்மை மற்றும் பொருளாதார ரீதியாகவும், சூழல் ரீதியாகவும் உகந்ததாக இல்லாத தலங்களில் சுற்றுலா நடவடிக்கை மேற்கொள்வதில் இருந்து கைவிட வழிவகை செய்யும்.

விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் திறன்மேம்பாடு

சூழல் சுற்றுலா மக்களிடையே வனங்களைப்பற்றியும் அதன் பாதுகாப்பிற்கான அவசியத்தைப் பற்றியும் விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டும் கருவியாக அமையும். ஒவ்வொரு சூழல் தலமும் பெரும்பாலான பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் மேம்படுத்தப்படும். நீடித்து நிலைத்த சூழல் பாதுகாப்பிற்கு மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பொறுப்பான மற்றும் நீடித்து நிலைத்த சூழல் சுற்றுலாவிற்காக உள்ளூர் மக்கள் மற்றும் வனப்பணியாளர்களின் திறனை மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொறுப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

உத்திகள்

கீழே குறிப்பிட்டுள்ள உத்திகள் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு இணக்கமாகவும் சூழல் சுற்றுலா குறிக்கோளை எட்டுவதற்கான வழிமுறைகளாகவும் இருக்கும்.

செயல்பாடுகள்.

இந்த கொள்கையை அமுல்படுத்துவதன் பொறுப்பு தமிழ்நாடு வனத்துறையை சார்ந்ததாகும். மேலும் இதற்காக மாநில சூழல் சுற்றுலா வாரியம் ஒரு சிறப்பு நோக்க வாகனமுறையில் உருவாக்கப்பட்டு, இது தமிழ்நாடு பதிவுச்சட்டம், 1975ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தக் குழு மாநில அளவில் சூழல் சுற்றுலாக் கொள்கையின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை குறிப்பாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும், இதர வனப்பகுதிகளிலும் நிறைவேற்ற துணைபுரியும்.

மாநில சூழல் சுற்றுலா வாரியம் இயற்கை மற்றும் கலாச்சாரம் சார்ந்த சூழல் சுற்றுலாவை சுற்றுச் சூழல் கண்ணோட்டம் மற்றும் நீடித்து நிலைத்த சமூக நாகரீகத்திற்கும் உகந்தவாறு கொண்டு செல்ல முழுமுயற்சி செய்யும். மேலும் ஒவ்வொரு சூழல் சுற்றுலாத் தலத்தின் தனித்துவத்தை வலியுறுத்தும்படி அந்தந்த தலத்தில் சூழல் சுற்றுலா உருவாக்கி, மேலாண்மை செய்ய இந்த மாநில வாரியம் வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இந்த மாநில வாரியமானது ஒவ்வொரு சூழல் சுற்றுலா தலத்தில் இருக்கும் உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலான சூழல் சுற்றுலா மாதிரிகள் ஏற்படுத்துவதை உறுதி செய்யும். இந்த மாநில சூழல் சுற்றுலா வாரியமானது தமிழ்நாட்டில் சூழல் சுற்றுலாவை வழிகாட்டி முன்நடத்தி செல்வது மட்டுமன்றி, சூழல் சுற்றுலாவை ஊக்குவித்து வளர்ச்சியைடையச் செய்யவும் கொள்கை முடிவுகள் எடுக்கும்.

புலிகள் காப்பகங்களில் மாநில சூழல் சுற்றுலா வாரியம், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பினை மத்திய அரசால் வழங்கப்பட்ட MoEF F.No/ 15-31/2012-NTCA நாள். 15.10.2012. வனஉயிரின (பாதுகாப்புச்) சட்டம் 1972 பிரிவி- 38.O(1) (C)ன்படி அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி ஊக்குவிக்கும். இந்த நெறிமுறைகள் சூழல் சுற்றுலா மேலாண்மைக்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த செயல்முறையைக் கொண்டதாகும்.

சூழல் சுற்றுலா செயல்பாடுகளை அமுல்படுத்துவதற்காக மாநில சூழல் சுற்றுலா வாரியம் கீழ்கண்டவாறு அமைக்கப்படும்.

 1. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் (தலைவர்)
 2. கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனச் செயல் திட்டம்) ஆணையர்/இயக்குநர், சுற்றுலா
 3. சுழற்சியாக இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும்
 4. இணைச்செயலாளர்/துணைச்செயலாளர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை.

மாவட்ட அளவில் சூழல் சுற்றுலா மேலாண்மை அமைப்புகள் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தவும், மேலாண்மை செய்யவும் மற்றும் ஒழுங்குபடுத்தவும் உருவாக்கப்படும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சூழல் சுற்றுலா தலத்தில் கிடைக்கும் வருவாய் மீண்டும் அந்த தல மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். மேலும் அதிக நிதி இருப்பின் அவைகள் மாவட்ட சூழல் மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் மாநில சூழல் சுற்றுலா வாரியத்திற்கு இதர தலத்தை மேம்படுத்துவதற்காகவும், வனப்பாதுகாப்பு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.

தற்போது ஏற்கனவே உள்ள சூழல சுற்றுலா மேலாண்மை குழுக்கள் கோட்ட அளவிலான சூழல் சுற்றுலா கூட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்படும். இந்த கூட்டமைப்பு சூழல் சுற்றுலா வழிகாட்டுதலை அமுல்படுத்துவதை உறுதி செய்யவும், மேலாண்மை திட்டம் தயாரிப்பு, மற்ற பொறுப்பாளர்களை ஒருங்கிணைப்பது, நிதி ஒதுக்கீடு மற்றும் நிதி வருவாயை கண்காணிப்பது போன்ற செயல்கள் மூலம் சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு ஆவண செய்யும்.

உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, சூழல் சுற்றுலா வசதிகள் தகவல் மற்றும் விளக்க மையங்கள் மற்றும் இயற்கை, நாகரீகம் சம்பந்தமான நிகழ்வுகள் நடத்துவதற்காகவும் எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்.

சூழல் சுற்றுலா மேலாண்மை திட்டம்

வனப்பாதுகாப்பிற்கும் சூழல் சுற்றுலாவிற்கும் இடையே நல்ல ஒரு சமநிலையை பராமரிப்பதற்காக ஒவ்வொரு சூழல் சுற்றுலா தலத்திற்கும் விரிவான சுவாட் - (SWOT) பகுப்பாய்விற்கு பிறகு ஒரு மேலாண்மை திட்டம் தயாரிக்கப்படும். இப்படி உருவாக்கப்பட்ட திட்டம் மாநில சூழல் சுற்றுலா வாரியத்தால் ஒப்பளிப்பு வழங்கப்படவேண்டும். மேலும் சூழல் சுற்றுலாத்திட்டம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மேலாண்மை திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கப்படவேண்டும். இதில் ஏதும் முரண்பாடுகள் ஏற்பட்டால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி பாதுகாப்பு, வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு, சூழல் சுற்றுலாவை விட முன்னுரிமை/முக்கியத்துவம் பெறும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியே உள்ள தலங்களுக்கு சூழல் சுற்றுலாத் திட்டம் வனச் செயல் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறே இருக்கவேண்டும்.

சூழல் சுற்றுலா செயல்பாடுகள் - மேம்பாடு, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல்.

தேர்வு செய்து மேம்பாடு அடையச் செய்யும் சூழல் சுற்றுலாத் தலம், இயற்கை எழில், நாகரீக கலாச்சார மற்றும் நிலப்பரப்பு குணாதிசயங்களை பறைசாற்றும் வகையில் மேம்படுத்தப்பட்டு, வருங்காலங்களில் இந்த சூழல் சுற்றுலா தலங்கள் சூழல் சுற்றுலா செயல்பாடுகளை வைத்தே வருங்காலங்களில் அங்கீகாரம் பெறுவதற்கு உதவும் முறையில் இருக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சூழல் சுற்றுலா செயல்பாடுகள் பல்வேறு தரப்பிலான மக்களுக்கு ஏற்றவாறு இருக்கும். அவை மலையேறி இறங்குதல், வன உயிரினம் மற்றும் பறவைகள் காணல், படகு சவாரி, புகைப்படம் எடுத்தல், உள்ளூர்த் திருவிழாக்கள், மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு பகுதிகளை பார்வையிடல், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் துணிகரமான விளையாட்டுக்கள் போன்றவைகளை கொண்டதாக இருக்கும். கடலோர பகுதிகளில் அரிய கடல்வாழ் உயிரினங்களை காண்பதற்காக ஸ்நார்கிளிங், ஆழ்கடல் நீச்சல், கடல்நடை மற்றும் படகுசவாரி ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். விலை நிர்ணயம் செய்தல், செயல்பாடுகளை தொகுத்தல் மற்றும் ஒவ்வொரு சூழல் சுற்றுலா தலத்தையும் அடையாளப்படுத்துவது சூழல் சுற்றுலாவின் வெற்றிக்கு மிக முக்கியமானதாகும். மாநில சூழல் சுற்றுலா வாரியம் இதற்கான உத்திகளை முடிவு செய்யும்.

பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு

உள்ளூர் மக்கள் உட்பட பல்வேறு சூழல் சுற்றுலா பொறுப்பாளர்களுக்கு சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.தொடர்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டினை மாநில சூழல் சுற்றுலா வாரியம் மேற்கொள்ள வேண்டும்.

மறு ஆய்வு

இந்தச் சூழல் சுற்றுலாக் கொள்கை ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு மறு ஆய்வு செய்யப்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு அரசு

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top