பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல்

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன

நமது மாநிலத்தின் பல்வேறு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த மூலவளங்களை பாதுகாத்துப் பேணுவதற்காக குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் மனித இனத்தின் நடவடிக்கைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகள் புறக்கணிக்கப்படுகையில், சுற்றுச்சூழலுக்கு அடிக்கடி குறிப்பிடத்தக்க இடர்கள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டங்கள் அடைய விழைகிற சமூக - பொருளாதார இலக்குகளை நீடித்த வகையில் அடைவதற்காகவும் வலுவான சுற்றுச்சூழல் கொள்கைகளை, தமிழ்நாடு அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகளுடன் ஒருங்கிணைப்பது அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்கிறது. தமிழ்நாடு அரசு மேற்கொள்கிற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளின் போது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் நன்கு நீடித்திருப்பது ஒரு முக்கிய அடிப்படை நிபந்தனையாக இருக்கும். கீழ்க்காணும் பிரிவு, முக்கியமான பொருளாதாரத் துறைகளைச் சேர்ந்த சில முக்கியமான தவிர்க்க இயலாத நடவடிக்கைகள், உத்திகள் மற்றும் செயல்களை உள்ளடக்கியுள்ளது.

வேளாண்மை

அண்மையாண்டுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம்பட்ச துறைகளில் அதிகளவு வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும், நமது மாநில மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், முதன்மைத் துறையான வேளாண்மையைச் சார்ந்துள்ளனர். உணவுப் பாதுகாப்பு இலக்குகள் மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்ச துறைகளின் ஆதரவான வளர்ச்சி ஆகியவற்றின் உதவியுடன் இது, மிகவும் உன்னதமான நிலையை அடைந்துள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு, நமது மாநிலத்தில் இரண்டாவது பசுமைப்புரட்சியை உருவாக்கும் என்று முன் அறிவித்த நோக்கத்திற்கேற்ப, வேளாண்மைத் துறைக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது.

உற்பத்தித் திறன் மிக்க வேளாண்மை நிலங்களை, வேளாண்மை அல்லாத பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல், துண்டு துண்டான நில உடைமைகள், நீர் கிடைப்பதில் இடமும் காலமும் சார்ந்த வேறுபாடுகள், சுருங்கி வருகிற நிலத்தடி நீர் ஆதாரங்கள், பண்ணைத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, மேம்படுத்தப்பட்ட பயிர் மேலாண்மை நடைமுறைகளைப் போதுமான அளவு பின்பற்றாமை, அறுவடைக்குப் பிந்தைய மற்றும் சந்தைப்படுத்தும் இணைப்பு நடவடிக்கைகளைப் போதுமான அளவு பின்பற்றாமை உட்பட பல சவால்களை, வேளாண்மைத்துறை எதிர்கொண்டு வருகிறது. உழவர்களின் பொருளதார நிலையை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாட்டில் இரண்டாவது பசுமைப்புரட்சியை, தமிழ்நாடு அரசு முன்னறிவிக்கத் தீர்மானித்துள்ளது. மேற்சொன்ன சவால்களைத் தீர்வு செய்வதற்காக, பல நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்:

1. வேளாண்மைக்கான நீரைப்பாதுகாத்தல் மற்றும் பெருக்குதல்

மறுசெறிவூட்டும் வளவாய்ப்புக்கு மேல் அதிகப்படியாக நிலத்தடி நீரைக் கவர்ந்து கொள்ளாமல், வேளாண்மைக்கு, நீடித்த வகையில் நீர் கிடைக்கச் செய்வதற்காக, உழவர்களுக்கான நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்காக (நடப்பில் உள்ள சாகுபடிப் பரப்பைக் காட்டிலும் மிகையான சாகுபடிப்பரப்பை அதிகரிக்க வகை செய்கிறபோது), விரிவான நீர்வரத்துப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.

அ. தூர்வாரப்படாமை மற்றும் ஏரிப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள், சேதமடைந்த மதகுகள், சிற்றணைகள் மற்றும் கரைகள் ஆகியவற்றால் ஏரிப்பாசனம் மூலம் கிடைக்கும் நீரின் அளவு குறைந்துள்ளது. வேளாண்மை நோக்கத்திற்காக, ஏரியின் வண்டலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதுடன், தூர்வாருதல் மூலம் தற்போதுள்ள நீர்நிலைகளின் நீரை இருப்பு வைக்கும் திறனை அதிகரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், நீர்நிலைகள் நெடுகிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆ குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஏரிகள் இல்லாத இடங்களில் பெரிய தடுப்பணைகள், சிறிய தடுப்பணைகள், கசிவு நீர்க் குட்டைகள் மற்றும் பண்ணைக் குட்டைகள் போன்ற நீர் சேகரிப்பு அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்காக, அதிக எண்ணிக்கையிலான பண்ணைக் குட்டைகளை அமைப்பதற்கு, மாநில அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

2. வேளாண்மையில் நிர் சிக்கனத்தை மேம்படுத்துதல் :

பல நீர்வரத்துப்பகுதி வட்டாரங்களில், நிலத்தடி நீர் பல்லாண்டுகளாக மிகையாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக, நுண்பாசனத்திற்கு முக்கியத்துவம் அளித்து, 'ஒரு பயிருக்கு ஒரு சொட்டு நீர் என்ற முறை மூலம் பல பயிர்களை சாகுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும். மாற்றுப்பயிர், ஊடு பயிர், ஒருங்கிணைந்த சாகுபடி, துணை வடிநிலங்களின் நீரைத் தாங்கி நிற்கும் திறனை அதிகரித்தல், துல்லியப் பண்ணை முறை மேம்பாடு மற்றும் நுண் பாசனம் கசிதல் மற்றும் ஆவியாதல் ஆகியவற்றால் ஏற்படுகிற நீர் இழப்புகளைத் தடுப்பதற்காக, நீரைக் கொண்டு செல்லும் குழாய்களுக்கு எஸ்ஆர்ஐ, எஸ்பிஐ, மற்றும் எஸ்எஸ்ஐ தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதுடன், குறைவான நீர் ஆதாரத்தில் பயிராகும் பருப்பு மற்றும் பயிறு வகைகளின் சாகுபடி அதிகரிக்கப்படும். சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகியவற்றை மேற்பரப்பு பாசனத்துடன் ஒப்பீடு செய்யும்போது படிப்படியான அளவு வீதத்தில் பெரிதாகக் காட்டுவது அவசியமாகும். இந்த முறையில், நீர் சேமிப்பு 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகமாக உள்ளதுடன், விளைச்சலை அதிகரிக்கவும் உதவுகிறது. நுண்பாசனத் திட்டத்தின் கீழ், சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன ஏற்பாட்டு முறைகளை நிறுவுவதற்காக, சிறு மற்றும் குறுநில உழவர்களுக்கு 100 சதவீத மானிய உதவித்தொகையும், பிற உழவர்களுக்கு 75 சதவீத மானிய உதவித்தொகையும் அளிக்கப்படுகிறது.

3. சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் பம்புகள் (நீரேற்று சாதனங்கள்):

சூரிய ஒளி மின் சக்தி பெரிதும் நம்பத்தக்க ஆதாரமாக உள்ளது. மேலும், இதற்கு குறைந்த பராமரிப்பு மட்டுமே தேவைப்படுவதுடன், அவற்றை நிறுவுதல், இயக்குவதும் எளிதாகவும் உள்ளது. இவை, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதுடன், காலத்திற்கு ஒவ்வாத எரிபொருளைச் சார்ந்திருக்கிற அவசியத்தையும் குறைக்கிறது. சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் நீரேற்று சாதனங்கள், வேளாண்மை மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு உகந்தவையாக உள்ளன. மேலும், மரபு சார்ந்த மின்சக்தி பயன்பாட்டுக்கு மிகப்பெரிய மாற்று ஆதாரமாகவும் உள்ளது. எனவே, இது தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

4. மண்ணின் தரத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஊட்டச்சத்தினை மேம்படுத்துதல்

மண்ணைப் பாதுகாத்தல் மற்றும் மண்ணின் ஊட்டச்சத்து குறைதல் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக, தமிழ்நாடு அரசு, கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

அ. உயிரகச்சாகுபடி முறை : மக்களின் உடல் நலனுக்கு அபாயகரமான தீங்கு விளைவிக்கும் இரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து மாறுவதற்காக, வேம்பினை அடிப்படையாகக் கொண்ட இடுபொருட்கள், மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்பர் பாக்டீரியா போன்ற உயிரி உரங்களைப் பயன்படுத்துவதற்கு, உழவர் சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கொள்கையின் அடிப்படையில், உயிரகச் சாகுபடி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பசுமை உரமிடுதல், பசுந்தாள் உரமிடுதல், மண்புழு உரமிடுதல், அஸோலா, நீலப்பச்சை பாசி ஆகியவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வாயிலாக, மண் வளத்தை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி, நமது மாநிலத்தில் உயிரகச் சாகுபடி முறை மேம்படுத்தப்படுகிறது.

ஆ. உரிய நிலவளப் பயன்பாட்டு முறை:

விளைச்சலில் ஏற்படுகிற இடைவெளியைக் குறைத்து, கிடைக்கிற வேளாண் நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் வாயிலாக, பெருகி வரும் மக்கள் தொகையின் நுகர்வுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, நமது நில வளங்களைப் பயன்படுத்தும் பொருட்டு, நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் நீடித்த வகையிலான நிலவளப் பயன்பாட்டு முறையை அறிமுகப்படுத்துதல்.

செம்மையான பயன்பாட்டுக்குத் திட்டமிடுவதற்காக, தற்போதுள்ள தட்ப வெப்ப மண்டலத்தில், நிலத்தின் உற்பத்தி வளம் குறித்த வள ஆய்வின் அடிப்படையில் தற்போதைய நிலவளப் பயன்பாட்டு முறை மதிப்பீடு செய்யப்படும். உழவர்களின் பொருளாதார ரீதியான ஆதாயத் தன்மையை அதிகரிப்பதற்காக, பண்ணை அளவில், பயிரிடுகிற முறை, உரியவாறு நன்கு வரையறுக்கப்படும். இதைக் கருத்திற்கொண்டு நிலத்தின் வளத்தை, அதிக அளவுக்குப் பயன்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பண்ணைப் பயிரிடுகிற முறையை மேம்படுத்துவது குறித்து அரசு கவனம் செலுத்துகிறது.

உரிய மற்றும் ஆதாயம் அளிக்கத்தக்க பயிரிடுகிற முறை, பிரச்சனையுள்ள மண்ணைச் சீரமைத்தல், தரிசு நிலங்களைக் கண்டறிந்து வேளாண்மைக்கு ஏற்ற வகையில் அவற்றை மாற்றியமைத்தல், மண்ணின் அடுக்குப் படிவங்களை மாதிரி எடுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றின் வாயிலாக, கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் வேளாண்மை நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், உயிரகச் சாகுபடி முறையை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை, பன்முகப்படுத்தப்பட்ட பண்ணை சாகுபடி முறை, வானவாரிப்பகுதி மேம்பாடு மற்றும் உழவர்கள் வேளாண்மையை ஒரு ஆதாயம் அளிக்கிற தொழிலாக மேற்கொள்வற்காக, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், உரிய சந்தை இணைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியவற்றுக்கு பரிந்துரைப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு, முதன்மையான வேளாண்மை நிலங்களைப் பாதுகாத்துப் பேணவும் அவை, வேளாண்மை அல்லாத பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுவதைக் கட்டுப்படுத்தவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இ. ஒருங்கினைந்த பயிர் பூச்சிக்கொல்லி மேலாண்மை மற்றும் பயிர் பூச்சிக்கொல்லி அல்லாத பிற மேலாண்மையைப் பின்பற்றுதல்

செயற்கை பயிர் பூச்சிக்கொல்லிகளின் / களைக் கொல்லிகளின் பயன்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன், பயிரின் உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, செலவுச்சிக்கனம் வாய்ந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சாகுபடி நடைமுறைகளை அதிக அளவில் பின்பற்றுவது குறித்து தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.

திட்டமிடப்பட்டுள்ள உத்திகள் வருமாறு:

  • இரசாயன பயிர் பூச்சிக் கொல்லிகளின் அளவுக்கு மீறிய பயன்பாட்டினால் விளைகிற தீங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • உயிரி பயிர்பூச்சிக்கொல்லிகளின் உள்ளூர் தயாரிப்பு பற்றிய அறிவை மேம்படுத்தல்.
  • பயிர் பூச்சிக்கொல்லி அல்லாத பிற மேலாண்மையை (என்பிஎம்) அடிப்படையாகக் கொண்டு, உழவர்களின் நிலத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும்
  • ஒருங்கிணைந்த பயிர் பூச்சிக்கொல்லி மேலாண்மை மற்றும் பயிர் பூச்சிக்கொல்லி அல்லாத பிற மேலாண்மை நடைமுறைகளின் அங்கமாக உள்ள தொழில்நுட்ப உத்திகளுக்கு (ஐபிஎம் + என்பிஎம்) மானியம் வழங்குதல். காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்காக, பயிர் பூச்சிக்கொல்லி அல்லாத பிற மேலாண்மை நடைமுறைகளை (என்பிஎம்) அரசு ஊக்குவிக்கிறது.

ஈ. துல்லியப் பண்ணை முறை மற்றும் நுண்பாசனத் திட்டங்கள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பல்வேறு பயிர்களுக்காக, நீரில் கரையக் கூடிய உரங்களை / திரவ உயிரி உரங்களை அரசு மேம்படுத்தும். ஏனெனில், இவை உரிய அளவு நீரில் ஊட்டச்சத்துக்கள் சிறந்த சமச்சீரான விகிதாச்சார முறையில், தாவரத்தின் வேர்ப்பகுதிக்கு நேரடியாகச் செல்ல வகை செய்யும்.

உ. மண் பகுப்பாய்வு மற்றும் தரவு தளத்தை உருவாக்குதல்

விரிவான மண் ஆய்வு, மண் மாதிரி சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம் மண்வளம் மற்றும் நலனைப் புதுப்பிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அரசு ஆராய்கிறது. தமிழ்நாடு அரசு, தனிநபர் நிலங்களின் மண் மாதிரிகளின் ஊட்டச்சத்து நிலையை ஆய்வு செய்து, பிரச்சனைக்குரிய மண்ணைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரிந்துரைகள், செம்மையான முறையில் திட்டமிடுவதற்குரிய ஒரு விரிவான பதிவுருவாக அமைகிற, உழவர்களுக்கான ஒருங்கிணைந்த கையேட்டில் பதிவு செய்யப்படும். உழவர்களின் நிலத்தின் மண்ணின் வளநிலை குறித்த தகவலை அளிக்கிற, உழவர்களுக்கான ஒருங்கிணைந்த கையேடு, 67.45 இலட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மண் வள அட்டைத்திட்டத்தின் கீழ் 2015-16 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி, மூன்றாண்டு கால அளவில், 8118 இலட்சம் மண் வள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குடுமியான்மலையில் அமைந்துள்ள மத்திய கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம், தலைமை நிறுவனமாக உள்ளது. இது, ஆய்வுக் கூடப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் வாயிலாக, தொழில் நுட்பத் தகுதியை வழங்குகிறது. ஆய்வுக் கூடங்களில் பகுப்பாய்வின் துல்லியத்தன்மை மற்றும் சரியான முடிவை உறுதி செய்கிறது. பகுப்பாய்வு செய்யப்பட்ட மண் மாதிரிகளின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்காக, நமது மாநிலத்தில் இயங்குகிற முப்பது மண் வள ஆய்வுக் கூடங்களுக்கும் இணையதள வசதிகளுடன் கூடிய கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மை தகவல் சேவை கட்டமைப்பு மூலம் தரவுத் தளம் நிருவகிக்கப்படுகிறது.

5. ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறையை மேம்படுத்துதல்

ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை, பல நடவடிக்கைகளை உழவர்கள் மேற்கொள்ள வகை செய்கிறது. பயிரிடுகிற முறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வேளாண் காடுவளர்ப்பு முதலியவை இதில் அடங்கும். மேலும், இது, உழவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துகிற அதே சமயத்தில், மூலவளங்களை உரிய அளவிலும், நீடித்த வகையிலும் பயன்படுத்த உதவுகிறது. மண்வகை, பாசனம், மழைப் பொழிவு மற்றும் பால் பண்ணை (பால்வளம்), கோழியின வளர்ப்பு முதலிய பிற தொழில்களுடன் ஒருங்கிணைப்பு ஆகியவை தொடர்பாக, நுண் தட்பவெப்ப நிலைமைகள், பயிர் திட்டத்தைத் தயாரித்தல் (வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய இரண்டும் இதில் அடங்கும்) ஆகியவற்றின் அடிப்படையில் கிராமங்களை வகைப்படுத்தி, பண்ணைத் தகவலைச் சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு அரசு இதற்கு உதவிசெய்யும்.

6. சுற்றுச்சூழலுக்கு உகந்த சாகுபடி:

வேளாண்மைக் கழிவுகளை, குறிப்பாக, கரும்புத் தோகைகளை எரிப்பதால் காற்று மாசுபட்டு, மண்ணின் நுண்ணுயிரி செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சனையை சமாளிப்பதற்கு, களை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன், மண்ணை வளப்படுத்துவதற்காக, கரும்புத் தோகைகளை தழைக்கூளமாக்கி, அதனைத் துண்டு துணுக்குகளாகச் சிதைத்து, அந்த இடத்திலேயே இட்டு, உழவுப் பணியை மேற்கொள்கிற வழக்கத்தை பிரபலப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை, படிப்படியாக செயற்படுத்தப்படும். அதைப்போன்றே, வேளாண்மை கழிவுப்பொருட்களை, கலப்பு காம்போஸ்ட் உரமாக மாற்றுவது குறித்து உழவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெருமளவில் அதைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தொழில் மேம்பாடு

தமிழ்நாடு, நாட்டிலேயே மிகவும் தொழில் மயமான மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்தை வகிக்கிறது. எண்ணற்ற தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு பலவகைப்பட்ட தொழிலக அடித்தளத்தைக் கொண்டுள்ளது. மோட்டார் வண்டி, மற்றும் அதன் உதிரிபாகங்கள், இலகு ரகப் பொறியியல், துணித் தொழில், தோல் பொருட்கள், மின்னணு வன்பொருள், மென்பொருள், சிமெண்ட், சர்க்கரை, இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய இரசாயனங்கள் உட்பட பல தயாரிப்புத் துறைகளில் முதன்மை வகிக்கிறது. மாநிலத்தின் தொழிலுக்கு உகந்த கொள்கைகள், ஆக்கபூர்வமான முயற்சிகள் ஆகியவை, தயாரிப்பு மற்றும் தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. நமது மாநிலத்தில், தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை மேலும் விரைவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு, சில கொள்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு உட்பட கணிசமான எண்ணிக்கையில் பெரிய தொழிற்பிரிவுகள் தோன்றியிருப்பதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் (எம் எஸ் எம் இ எஸ்) அதிக எண்ணிக்கையில் உருவாகியிருப்பதன் மூலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 83,348 ஆக பதிவாகியிருந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 2014-15 ஆம் ஆண்டில் 1,43,104 ஆக சீரான முறையில் வளர்ச்சியடைந்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தோன்றியிருப்பது தொழில் முனைவோர் முயற்சிக்கான ஓர் அடித்தளம் என்ற ஓர் நல்ல அறிகுறியைக் காட்டுகிற போதிலும், இந்தியாவில் சுமார் எழுபது சதவீத தொழிலக மாசின் சுமை, இந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் ஏற்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் தொழில் உற்பத்திக்கு சுமார் நாற்பது சதவீதமும், நாட்டின் ஏற்றுமதிகளுக்கு நாற்பத்தைந்து சதவீதமும் பங்களிக்கிற போது, இந்த வகைப்பாட்டைச் சேர்ந்த அமைப்பு சாராத மற்றும் பதிவு செய்யாத தொழிற்பிரிவுகள், சுற்றுச்சூழலின் நீடித்த தன்மைக்காக சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதில் பெரிதும் தோல்வி அடைகின்றன. இதன் காரணமாக தற்போது சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துள்ளது. மேலும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முழுமையற்ற அமைப்பாக உள்ளதால் அவற்றை நன்கு மேற்பார்வை செய்வதிலும், கண்காணிப்பதிலும் சில பிரச்சனைகள் உள்ளன.

மாசினால் ஏற்படுகிற பாதிப்புகள் மற்றும் மூலவளங்கள் மிகையாகப் பயன்படுத்தப்படுதல் ஆகியவற்றின் காரணமாக தொழில் மேம்பாடு அடைகிறபோது, சுற்றுச்சூழலுக்கு (காற்று, நிலம் மற்றும் நீர்) பாதிப்புகள் ஏற்படுகின்றன. 2006ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் கொள்கையில் சுட்டிக்காட்டியவாறு, தொழில் மேம்பாடு, சுற்றுச் சூழலுடன் இரண்டு வகையான தொடர்புகளை ஏற்படுத்துகிறது. ஒருபுறம், தொழில் வளர்ச்சி, மிகையான மூலவளங்களின் பயன்பாடு, மாசு ஏற்படுதல் ஆகியவற்றினால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது. மற்றொருபுறம், சுற்றுச்சூழல் சார்ந்த முதலீடுகளுக்காக மூலவளங்கள் கிடைப்பதற்குரிய வாய்ப்பினையும் உருவாக்குகிறது.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்:

1. தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் புதிய தொழிலகப் பெருவழிகள் மற்றும் மையங்களுக்கான தொழிலகப் பெருந்திட்டங்களைத் தயாரித்தல்

அனைத்துப் புதிய தொழிலகப் பெருவழிகள் மற்றும் மையங்களில் திட்டமிட்ட முறையில், தொழில் மேம்பாட்டுக்கு வழிகாட்டுவதற்காக, தமிழ்நாடு அரசு, விரிவான பெருந்திட்டங்களைத் தயாரிக்கும். இவை, தொழில் வளர்ச்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளையும், மண்டலங்களையும் வெளிப்படையாகக் கண்டறியும். சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக மதிப்பீடு செய்து, அவற்றிற்கு தீர்வு காணவும் செய்யும். நகர்ப்புற சுற்றுச்சூழலின் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்புத்துறை ஆகியவை உருவாக்கிய திட்டத்துடன், இத்திட்டம் ஒருங்கிணைக்கப்படும். இது, நகர்ப்புறப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சார்ந்த நீடித்த வளர்ச்சியின் இணக்கத் தன்மையை உறுதி செய்யும். மேலும், மண் வளம், நீர் சேமிப்பு மற்றும் அவற்றைச்சார்ந்து வாழ்கின்ற சமுதாயத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், மண் வளம், நீர் பாதுகாப்பு உட்பட உயிரின வாழ்க்கைச் சூழலின் ஸ்திரத் தன்மைக்கு இன்றியமையாததாக உள்ள பெருவழிகளில் வனப்பரப்பை நீடித்த வகையில் பேணுவதற்கு உரிய வகையில் திட்டங்கள் தயாரிக்கப்படும்.

2. சுற்றுச்சூழல் சார்ந்த உட்கட்டமைப்பு வசதி மற்றும் கண்காணிப்பில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து, தீர்வுகாண்பதற்காக, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் அடிப்படையான தரங்கள் மீது கவனம் செலுத்துவதுடன், மொத்த மாசு சுமைகள் குறித்த விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில், இத்திட்டங்கள் தயாரிக்கப்படும். நவீன சுற்றுச்சூழல் தரங்கள், வலுவான சுற்றுச்சூழல் கொள்கைகள் ஆகியவற்றின்படி மாசு ஏற்படுவதை சமாளித்தல், கழிவு மேலாண்மைக்காக (அபாயகரமான கழிவுகள் உட்பட) பகிர்ந்து கொள்ளப்படுகிற வசதிகளை உருவாக்குவதற்காக, கழிவு நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் உட்கட்டமைப்பு வசதி போன்ற கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

3. மிகக் கடுமையாக மாசடைந்த தொழிலகப் பகுதிகளில் சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் :

மிகக் கடுமையாக மாசடைந்தவை என்று வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில், கால வரையறை நிர்ணயம் செய்து, முன்னுரிமை அடிப்படையில், அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

4. அனைத்துத் தொழிலகப் பகுதிகளிலும் மாசு மற்றும் புகை வெளியேற்றத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் முறைகளைச் செயற்படுத்துதல்

சிப்காட், டிட்கோ மற்றும் சிட்கோ ஆகியவற்றால் நிருவகிக்கப்படுகிற அனைத்து தொழிலகப் பகுதிகளையும் உள்ளடக்கி, நமது மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிலகப் பகுதிகளிலும் படிப்படியான முறையில் மாசு மற்றும் புகை வெளியேற்றம் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் முறைகளை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விரிவுபடுத்தும்.

5. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான வழிகாட்டிக் குறிப்புகளை கண்டிப்பாகச் செயற்படுத்துதல் மற்றும் அவற்றை பின்பற்றச் செய்தல்

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான வழிகாட்டிக் குறிப்புகளை, தமிழ்நாடு அரசு கண்டிப்பாகச் செயற்படுத்துவதுடன் (பொது மக்களிடம் வெளிப்படையான முறையில் கேட்டறிதல் உட்பட), அவற்றை தொழிலகங்கள் பின்பற்றுவது உறுதி செய்யப்படும்.

6.தூய்மைக் கேட்டின் (மாசு) தரங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்தல்:

தேசிய சட்டம், வழிகாட்டிக் குறிப்புகள் மற்றும் பன்னாட்டு சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், தூய்மைக் கேட்டின் வரையறைகள் மற்றும் தர அளவுகளை தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யும்.

7. வெளிப்படையான அமைப்புகள் மற்றும் ஒப்புதல்கள் வழங்குவதை இணைய வழியில் பின் தொடருதல்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வலைதளம் மூலமாக ஒத்த தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, ஒப்புதல்கள் வழங்குகின்ற நடைமுறையை ஏற்கனவே செயற்படுத்தி வருகிறது. தற்போது இந்த நடைமுறை மூலம் ஒப்புதல் வழங்குவதை அறிய இயலும்.

8. தொழிற்சாலைகளின் அமைவிடங்களுக்கான வழிகாட்டிக் குறிப்புகளை மறு ஆய்வு செய்தல்:

தற்போதைய வழிகாட்டிக் குறிப்புகளில், தொழிற்சாலைகளின் அமைவிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக நிலவும் வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் நீக்குவதற்காக, தமிழ்நாடு அரசு அதனுடைய கொள்கை மற்றும் வழிகாட்டிக் குறிப்புகளை மறு ஆய்வு செய்யும். சுற்றுச்சூழல் மேலாண்மையில், பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளும், செயற்பாட்டிலிருந்து கிடைத்த அனுபவங்களும் சேர்க்கப்படும்.

9. சுற்றுச்சூழல் தணிக்கை:

தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் தணிக்கை ஏற்பாட்டை உருவாக்குவதற்காக, தொழிலகங்களுடன் உடனுழைத்து செயலாற்றுவதுடன், ஒரு தொழிலகம் பயன்படுத்துகிற சுற்றுச்சூழல் ஆதாரம் பற்றி தெரிவிக்கும். நமது மாநிலத்தில், தொழிலகம் பயன்படுத்துகிற சுற்றுச்சூழல் ஆதாரத்தின் ஒரு விரிவான அடிப்படையை உருவாக்குவதும், தொழிலக நடவடிக்கையின் வள ஆதார பயன்பாட்டு முனைப்பைக் குறைப்பதும் இதன் நோக்கமாகும். தொழிற்சாலைக் கழிவுகளை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், சுற்றுச்சூழல் தர அளவீடுகள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும். எனவே, தொழிலகக் கழிவு அறவே உருவாகாமல் இருக்கும்.

10. நீரின் மறுசுழற்சியையும், மறுபயன்பாட்டையும் மேம்படுத்துதல்

கடல்நீரைக் குடிநீராக மாற்றுதல் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகிற கழிவுநீரை மறுசுழற்சி செய்தல் உட்பட, தொழிலகத்திற்கான நீர்ப் பயன்பாட்டிற்கு மாற்று விருப்புரிமைக்கு வகை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிற அதே சமயத்தில், தமிழ்நாடு அரசு, தொழிலகப் பயனுக்காக, நிலத்தடிநீர் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் விரிவான முறையில் மேற்கொள்ளும். தொழிலகங்கள் திரவக் கழிவுநீரை ஒருபோதும் வெளியேற்றாமல் இருக்கும் முறையை செயற்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதோடு, துணிநூல் மற்றும் தோல் பதனிடும் துறைகளில், திரவக் கழிவுநீர் ஒருபோதும் வெளியேற்றப்படாமல் இருக்கும் முறையை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் செயற்படுத்தி வருகிறது. மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள், ஊக்கத்தொகையுடன் ஊக்குவிக்கப்படும். இது, இயற்கை வளங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.

நகர்ப்பகுதிமயமாதல்

இந்தியாவின் நகர்ப்பகுதி மக்கள் தொகையில் நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களுக்கிடையே தமிழ்நாடு முதலாம் இடத்தையும், நாட்டின் ஒட்டுமொத்த நகர்ப்பகுதி மக்கள் தொகையின்படி மூன்றாம் இடத்தையும் வகிக்கிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தற்காலிக மதிப்பீட்டின்படி, தற்காலிக நகர்ப்பகுதியின் மக்கள் தொகையானது 34.9 மில்லியன் ஆகும். இதில், 48.45 சதவீத மக்கள், நகர்ப்பகுதிகளில் வாழ்கின்றனர். அதே கால அளவில், நமது மாநிலத்தில் நகர்ப்பகுதி மக்கள் தொகை வளர்ச்சி (2001-11 வரையிலான கால அளவில் 27 சதவீதம்) ஊரக மக்கள் தொகை (6 சதவீதம்) வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது. நகர்ப்பகுதி மக்கள் தொகையில் சுமார் ஐம்பத்தெட்டு சதவீதத்தினர், தரவரிசையில் முதல் இருபத்தைந்து இடங்களை வகிக்கிற நகர்ப்பகுதி வசிப்பிடங்களில் வாழ்கின்றனர். சென்னை உட்பட இந்த நகர்ப்பகுதி வசிப்பிடங்களின் பல பகுதிகளில், முக்கியமான மாநகருக்கு அப்பாற்பட்ட விரிவாக்கப் பகுதிகள், விரைவான வளர்ச்சியைக் காட்டுகின்றன. இருப்பினும், முக்கியமான மாநகரத்தைச் சேர்ந்த நிகரான பகுதிகளைப் போலன்றி, நகர்ப்புற சேவைகளைப் பெறுவதில் இவை பின்தங்கிய நிலையில் உள்ளன.

அரசு போக்குவரத்து, கட்டுப்படியாகிற விலையிலான வீட்டுவசதி, குழாய் மூலம் குடிநீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை நகர்ப்புற சேவைகள், கணிசமான பகுதியினரான தற்போதைய நகர்ப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவான நகர்ப்பகுதி மக்கள் தொகைப் பெருக்கம், நகர்ப்பகுதிகளில் வசிக்கிற மக்களின் பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்குப் பல வழிகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நகர்ப்பகுதி ஏழைமக்கள் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமையை சரி செய்ய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாடு அங்கீகரிக்கிறது. தமிழ்நாடு தொலைநோக்குத்திட்டம் 2023-ன் கீழ் வகை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற உட்கட்டமைப்பு வசதிக்கான முதலீடுகள் மற்றும் சேவை வழங்குவதற்கான இலக்குகள், நகர்ப்புற சுற்றுச்சூழலின் மீது நேரடி விளைவுகளை ஏற்படுத்தும்.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்

1. நகர்ப்பகுதி மேம்பாட்டுக்கு வழிகாட்டுவதற்காக, தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் பெருந்திட்டங்கள் மற்றும் நிலப் பயன்பாட்டு வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்கி, செயற்படுத்துதல், இந்தப் பெருந்திட்டங்கள், நிலப்பயன்பாட்டை வரையறுத்து, நகர்ப்பகுதி மேம்பாட்டுக்காக மண்டலங்களைத் தெரிவு செய்து, சுற்றுச்சூழல் தொடர்பான அம்சங்களையும் பரிசீலனை செய்யும். குறிப்பாக, பெரிய மாநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வேளாண்மை நோக்கம் அல்லாத பிற பயனுக்காக கூடுதல் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கான திட்டத்தின் அவசியத்தை தமிழ்நாடு அரசும் அதனுடைய முகவரமைப்புகளும் அங்கீகரிக்கின்றன. நிலப்பயன்பாட்டுத் திட்டமிடலுக்காக, தமிழ்நாடு அரசு, கொள்கைகளையும், வழிகாட்டிக் குறிப்புகளையும் சீரமைத்து, நிலங்களை ஒருங்கிணைத்து, அவற்றைத் தொகுத்து, மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள் முதலியவற்றை, நகர்ப்பகுதி மேம்பாட்டுக்காக சரிசமமான முறையிலும், வெளிப்படையாகவும் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்காகப் பயன்படுத்தும்.

சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தினைக் கருத்திற்கொண்டு, வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.

பொருளாதார நிலையில் நலிவடைந்த பிரிவினருக்காக, கட்டுப்படியாகிற விலையிலான வீட்டுவசதித் திட்டத்தை உருவாக்குவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, நகர்ப்பகுதி வசிப்பிடங்களில் (5,00,000க்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டவை) தொடங்கி, கட்டுப்படியாகிற விலையிலான நகர்ப்பகுதி வீட்டுவசதியை விரைந்து உருவாக்கப்படும். இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில், திட்டத்தினை சிறப்புடன் செயற்படுத்தும் வகையில், பகுதிவாரியான திட்டம், பெருந்திட்டம் மற்றும் மண்டலம் சார்ந்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாநிலம் முழுவதிலும், இத்திட்டம் செயற்படுத்தப்படும்.

அனைத்து மாநகரங்களிலும் ஆற்று நீர் மற்றும் நீர் நிலைகளைப் புதுப்பித்து தூய்மைப்படுத்துவதற்கு ஓர் இலக்கு சார்ந்த திட்டங்களைத் தொடங்குதல்:

உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு உகந்த பூங்காக்கள், ஆறுகளின் உயிரின வாழ்க்கைச் சூழலை மீட்டல், உயிரின வாழ்க்கைச் சூழல் சமநிலையைப் பராமரிப்பதற்காக, நீர்நிலைகள் மற்றும் நீர்வழிகளின் உயிரின வாழ்க்கைச் சூழலை மீட்டல், நீர் சேமிப்பு, தூய்மைக் கேட்டினைக் குறைத்தல் மற்றும் தணித்தல், சென்னை மாநகரிலுள்ள ஆறுகளின் நீரை எடுத்துச் செல்லும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றைக் கட்டாயமாகச் செய்ய வேண்டிய நோக்கத்துடன், சென்னை மாநகர ஆறு மீட்பு பொறுப்புறுதி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாநில சதுப்புநில ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இது, நமது மாநிலத்திலுள்ள சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மற்றும் நீடித்த மேலாண்மைக்கான ஒருங்கிணைப்பு முகவரமைப்பாக  உள்ளது.

மழைநீர் சேகரிப்பை மேம்படுத்துவதற்காக, சட்டம் இயற்றுதல் மற்றும் செயற்படுத்துதல்:  நீர் ஆதாரங்கள் என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

6. நகர்ப்பகுதி ஏழை மக்கள் மீது கவனம் செலுத்தி அனைத்து நகர்ப்பகுதிகளிலும் அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிவுநீரகற்றல் மற்றும் துப்புரவு வசதியைச் செய்து கொடுப்பதற்காக, திட்டவாளியான உட்கட்டமைப்பு வசதிக்கு வகை செய்தல் :

தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023-ல் குறிப்பிட்டுள்ளவாறு, தமிழ்நாடு அரசு அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் அனைவருக்கும் குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவு வசதியை வழங்குகிற இலக்கை, 2023 ஆம் ஆண்டுக்குள் அடையும். அனைத்து மாநகரங்களிலும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகிற கழிவுநீரில், முப்பது சதவீத கழிவு நீரையாவது மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்துகிற நோக்கத்தை, 2020 ஆம் ஆண்டுக்குள் அடைகிற இலக்கையும் தமிழ்நாடு அரசு நிர்ணயிக்கும்.

7. பொதுப் போக்குவரத்துக்கான பங்கினை அதிகரித்தல்

காற்று என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

8. திடக்கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் மேலாண்மை செய்வதற்கான செம்மையான அமைப்புகள்:

2020 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நகர்ப்புற மையங்களிலும் திடக்கழிவு மேலாண்மையை (2016 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகள்) செயல்படுத்தும் நோக்கத்தை அடைவதற்கு, தமிழ்நாடு அரசு, உயர் முன்னுரிமை அளிக்கும். நமது மாநிலத்தைச் சேர்ந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறங்களில், நகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்கு, நீடித்த வகையில் தீர்வு காண்பதற்காக, ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும். இது, உயிரிமருத்துவக் கழிவுகள், நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவுகள் மற்றும் மின் கழிவுகள் ஆகியவற்றை மேலாண்மை செய்வதற்கான கொள்கைகளையும், விதிகளையும் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. கட்டுமானப் பணியால் ஏற்படுகிற கழிவுகள், கட்டட சிதைக்கூளங்கள் ஆகியவற்றைக் கையாளுவதற்கான வசதிகள், அனைத்து பெரிய மாநகரங்களிலும் உருவாக்கப்படும்.

9. பசுமை வீடுகளை மேம்படுத்துதல்

அனைத்து மாநகராட்சிகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் கழிவுநீர் மறுசுழற்சி ஆகியவற்றுக்கான வழிவகையைச் செயற்படுத்துதல் உட்பட, நகராட்சி கட்டட துணைவிதிகள் மற்றும் நெறித்தொகுப்பில் பசுமை வீடு வரையறைகளை, தமிழ்நாடு அரசு சேர்க்கும். மேலும், நகர்ப்பகுதிகளில் கட்டுமானத் திட்டங்களுக்காக அண்மையில் உருவாக்கப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளின் விளைவாக மாநில அளவில் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் மறுஆய்வு செய்யப்பட்டு செயற்படுத்தப்படும்.

எரிசக்தி

தமிழ்நாட்டில், எரிசக்தி துறை, கடந்த பத்தாண்டுகளாக மாநிலத்தின் பொருளாதாரத்தை இயக்குகிற மூல உந்துசக்தியாக இருந்து வந்துள்ளது. தயாரிப்புத் துறையின் வளர்ச்சிக்கு, மின் சக்தி போதிய அளவு கிடைப்பது பேருதவி செய்யும். அதே சமயத்தில், தமிழ்நாடு அரசு, அனல் மின்சக்தி உற்பத்தியின் பங்களவை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அறிந்துள்ளது. இவ்வாறு, கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிற மின் திறனுக்காக, காற்றின் தர நிலைகளை செம்மையாகச் செயற்படுத்துவதற்கான அமைப்புகளை அது நடைமுறைப்படுத்தும். மேலும் மாநிலமானது, தற்போதுள்ள மற்றும் புதிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து சிறந்த முறையில் மின்சக்தியை கடத்துவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்:

1. காற்று மாசுறுவதைக் குறைத்தல் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையங்களின் நீர் சிக்கன நடவடிக்கையை மேம்படுத்துதல் : நமது மாநிலத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களிலிருந்தும் வெளியேறும் புகையை தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்புகள் நிறுவப்படும். சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகிற தாக்கத்தைக் குறைப்பதற்கான, திறன்மிகு வெப்பஞ் சார்ந்த தொழில்நுட்ப உத்தி மற்றும் சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மின் உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்தும் நீரை ஆய்வு செய்து, அவற்றின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

2. தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தல்: தூய்மையான எரிசக்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நிலைப்பாட்டில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023, பதினோரு முக்கியமான சிறப்புத் திட்டங்களின் உருவாக்கத்திற்கு வழிவகை செய்யும். இத்திட்டங்களின் கீழ், குறிப்பிடத்தக்க நீண்டகால தொடர் பயன்களை அளிக்கும் தூய்மையான எரிசக்தி திட்டங்கள் குறிப்பாக, சூரிய ஒளி மின்சக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநில அரசுத்துறை முதலீடு வாயிலாக, மொத்தம் 10,000 மெகாவாட் சூரியஒளி மின் உற்பத்தி செய்ய அரசு-தனியார் பங்கேற்பு மற்றும் தனியார் துறை முதலீடுகள் மூலம் செயல்படுத்தப்படும்.

சூரிய சக்தி, ஒரு மாசற்ற, தூய்மையான, நம்பகமான, புதுப்பிக்கத்தக்க மற்றும் ஒரு மாற்று ஆதாரமாக இருப்பதால், சூரியன் இருக்கும் வரையில், காலத்திற்கு ஒவ்வாத பழைய எரிபொருளுக்கு பதிலாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரிய சக்தியை ஓர் ஆதாரமாகப் பயன்படுத்தலாம். மின்சக்திக்கான தேவை குறித்து மேலாண்மை செய்தல் மற்றும் எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் பல்வேறு பொருளதாரத்துறைகளில் எரிசக்தியை சேமிப்பதற்கும், எரிசக்தியின் முனைப்பான பயன்பாட்டைக் குறைப்பதற்கும், தமிழ்நாடு அரசு, எரிசக்தியின் தேவையை மேலாண்மை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் படிப்படியான முறையில் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை அது மேற்கொள்ளும். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், 2023 ஆம் ஆண்டுக்குள் எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துகிற தெருவிளக்குகளை நிறுவுவதற்கான நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

சுரங்கத்தொழில் மற்றும் கனிமம் வெட்டியெடுத்தல்

சுற்றுச்சூழலுக்குக் குறைந்த அளவே சேதங்களை ஏற்படுத்தும் வகையில் சுரங்கத் தொழில் மற்றும் கனிமம் வெட்டியெடுக்கிற பணிகளை நெறிப்படுத்த, மாநில அரசு, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

சுரங்கத்தொழில் மற்றும் கனிமம் வெட்டியெடுக்கிற திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவதற்காக, மத்திய அரசின் உத்தரவின்படி மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் மற்றும் மாவட்ட அளவிலான வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உத்திகள் மற்றும் நடவடிக்கை:

1. சுரங்கத்தொழில் மற்றும் கனிமம் வெட்டியெடுக்கிற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிப்பதற்கு, விரிவான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டு ஆய்வுகள் அடிப்படையாக இருக்கும்.

2. சுரங்கத்தொழில் மற்றும் கனிமம் வெட்டியெடுப்பதற்கான அனைத்து விதி முறைகளையும் செம்மையான முறையில் செயற்படுத்துதல்.

3. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதற்காக, உரிய சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தைச் செயற்படுத்துதல்.

4. கட்டட இடிபாடு பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் மற்றும் ஆற்று மணல் போன்ற இயற்கை ஆதாரத்திற்கு ஏற்படுகிற பாதிப்பைத் தவிர்ப்பதற்காக, மாற்று கட்டுமானப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்தல்.

ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top