பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கழிவு தரும் செல்வங்கள்

கழிவு தரும் செல்வங்களைப் பற்றிய குறிப்புகள்

இந்திய மற்றும் தமிழக விவசாயத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. நாட்டில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் அதிக அளவில் இரசாயன உரங்களும், பூச்சி கொல்லிகளும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. விறகிற்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டுள்ளன. இதனால் இன்று விவசாய நிலங்கள் வளமிழந்து விவசாயத்தில் முக்கிய இயற்கை ஆதாரங்களான நீர், மண்வளம், காடுகள்யாவும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பொருளும் தயாரிக்கப்படும்போது அல்லது விளையும் போது இரண்டு வகையான பொருட்கள் கிடைக்கின்றன. ஒன்று அதன் பகுதிப்பொருள். மற்றொன்று அதன் கழிவு. இறுதியில் கிடைக்கும் கழிவுப் பொருட்களையும் நாம் ஏதேனும் ஒரு வகையில் மறு உபயோகப்படுத்தி பிரதான ஆதாரமாக்கிவிடுகிறோம். பாரம்பரிய விவசாயத்தில் புழக்கத்தில் இருந்துவந்த செயல்முறை இடைப்பட்ட காலத்தில் பல்வேறு காரணங்களால் மங்கி மறைந்துவிட்டது. ஆதலால் இப்போது அதனை மீண்டும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.

உலகிலுள்ள மக்கள் அனைவருமே எரிசக்தியின் தேவைக்காக விறகு, நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், மாட்டுச் சாணம், விவசாயக் கழிவுகள் போன்றவைகளையே பெரிதும் நம்பியுள்ளனர். இவையாவுமே இயற்கையாக நமக்குக் கிடைத்து வருகின்றன. மக்கள் தொகை நாளுக்கு நாள் பன்மடங்கு பெருகி வரும்போது இதன் எதிர் விகிதத்தில் இயற்கை ஆதாரங்களான நிலக்கரி, பெட்ரோலியம், விறகு போன்றவைகள் பன்மடங்கு வேகத்தில் குறைந்துகொண்டே செல்கிறது. இத்தகைய இயற்கை ஆதாரங்கள் விரைவில் முற்றிலுமாகத் தீர்ந்துபோய் விடக்கூடிய நிலையில் உள்ளன. வளங்கள் அழிந்துகொண்டே இருப்பதால். சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கறவை மாடு, ஆடு மற்றும் பன்றி வளர்ப்பு, காடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு போன்றவைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இம்மாதிரியான உபதொழில்களினாலும், வேளாண்மை மற்றும் வேளாண்மையைச் சார்ந்த தொழில்களினாலும் நம் நாட்டில் நாள் ஒன்றுக்கு 2.5 கோடி டன் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவைகள் சுற்றுப்புற சூழலுக்கும் கேடு விளைவித்துக் கொண்டு வருகின்றன. ஆனால் அதே சமயத்தில் இந்தக் கழிவுகளை சிறந்த எரிபொருளாகவும், சத்துக்கள் மிகுந்த உரமாகவும் மாற்ற வாய்ப்பு ஒன்று உள்ளது. அந்த வாய்ப்பை சாண எரிவாயு கலன்கள் அமைப்பதின் மூலமாக அடைய முடிவதால், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சாண எரிவாயு உற்பத்தி பெரியதொரு பங்குவகிக்கின்றன.

வேளாண்மையில் நிலந்திருத்தி, நீர் பாய்ச்சி, விதை விதைத்து, நாற்று நட்டு, பயிரைப் பாதுகாத்து, அறுவடை செய்து கதிரடித்துப் பெற்ற விளைச்சலை வீடு சேர்க்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் சக்தி தேவைப்படுகிறது. இந்தச் சக்தி தேவையை ஆரம்பக்காலகட்டத்தில் மனித சக்தியாலும் அதன்பின் விலங்கின் சக்தியாலும் சமாளித்து வந்துள்ளோம். பின்னர் இயந்திரங்கள், பம்புசெட்டுகள் முதலியன பழக்கத்துக்கு வரத் துவங்கின. இவற்றை இயக்க மின்சக்தி மற்றும் பெட்ரோலியம் போன்ற பலவகை எரிபொருட்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். இதற்காக வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதால், நமது நாட்டில் அன்னியச் செலாவணி வீணடிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார நிலையே பாதிக்கக்கூடிய நிலை ஏற்படுகின்றது.

ஒருபுறம் சக்தித் தேவையைச் சமாளிக்க பெட்ரோலிய எரிபொருட்களை இறக்குமதி செய்கிறோம். மறுபுறம் உரத் தேவையைச் சமாளிக்க இரசாயன உரங்களையும் பெருமளவில் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இதனால் வேளாண்மையில் வெளி இடுபொருட்களையே நம்பி விவசாயம் செய்யும் நிலைமை காணப்படுகிறது. ஆனால் சாண எரிவாயு கலன்கள் அமைப்பதின் மூலமாக விவசாயத்திற்குத் தேவையான சக்தியைப் பெறுவது மட்டுமல்லாமல் விவசாயத்திற்குத் தேவைப்படும் சத்துக்கள் மிகுந்த இயற்கை உரத்தையும் பெறமுடிகிறது. வேளாண்மையில் அத்தியாவசியத் தேவையை நாமே பெற்று சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மனிதக்கழிவு, கால்நடைகளின் கழிவு, மீன் கழிவு, காளான் கழிவு மற்றும் பட்டுப்புழு கழிவு ஆகியவற்றை பயன்படுத்தியே சாண எரிவாயுவும், உரமும் தயாரிக்க முடியும். இதன்மூலம் ஒன்றின் கழிவு மற்றதின் இடுபொருளாக பயன்பட்டு சுய சார்பு நிலையை அடைய வழி ஏற்படுகிறது.

குறிப்பாக மனித மற்றும் கால்நடைகளின் கழிவு, கோழி எச்சம் மற்றும் தாவரக் கழிவுகள் சாண எரிவாயு உற்பத்திக்கு சிறந்த இடுபொருளாக பயன்படுகின்றன. இத்துடன் பட்டுப்புழு வளர்ப்பில் ஏற்படும் கழிவுகளையும், கரும்பு ஆலை காய்ச்சுவதில் ஏற்படும் கழிவுகளையும், காளான் வளர்ப்பில் ஏற்படும் கழிவுகளையும், மரவள்ளிக்கிழங்கு கழிவுகளையும் சேர்த்து இடும்பொழுது எரிவாயு உற்பத்தி அதிகரிக்கிறது.

 • சாண எரிவாயு கலனிலிருந்து வெளிவரும் செரித்த சாணக்கரைசலை மீன் வளர்ப்பு தொட்டியிலிடும்பொழுது, மீன் உற்பத்தி அதிகரிக்க வழியேற்படுகிறது. மேலும் மீன் தொட்டியில் பிளாங்டன் என்ற மீன் உணவு அதிக அளவில் வளருவதற்கும் இது உதவுகிறது. செரித்த சாணக் கரைசல் காளான் உற்பத்திக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.
 • பட்டுப்புழு கழிவிலிருந்து உற்பத்தியாகும் எரிவாயுவைக் கொண்டு பட்டுப்புழுவை எளிதில் வேக வைக்க பயன்படுத்தலாம்.
 • காளான் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் எரிவாயுவை காளான் தயாரிப்பதற்கான வெந்நீர் தயாரிப்பதற்கும், காளான் வித்துக்கள் தயார் செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

கரிம எரிவாயு

கரிம எரிவாயு (சாண எரிவாயு) பிராணவாயு இல்லா நிலையில் நடைபெறும் ஒரு மாற்றம். இம்மாற்றம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் சாணத்திலுள்ள கடினமான, சிதைக்க முடியாத பல அங்ககப் பொருட்கள் நுண்கிருமிகளால் சிதைக்கப்பட்டு எரிபொருட்களாக மாற்றம் செய்யப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தில் முதல் கட்டத்தின் இறுதியில் உருவான சிதையும் பொருட்களை அமில உருவாக்கிகள் என்னும் நுண்ணுயிரினங்கள் சிதைக்கின்றன. மூன்றாவது கட்டத்தான் எரிவாயு உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதில்தான் மெதனோபேக்டீரியம் என்னும் நுண்ணுயிரிகள் பல கரிம அமிலங்களைச் சிதைத்து குளுகோஸ் மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்படுத்தி சக்தி மிக்க மீத்தேன் என்னும் எரிவாயுவை வெளிப்படுத்துகின்றன. இந்த முறை உயிரியல் வாயுவாக்கம் எனவும், உயிரியல் செரிப்பு எனவும், பிராணவாயு இல்லா நொதிப்பு என்றும் சொல்லப்படுகிறது.

கணக்குத் தெரியாத நுண்ணுயிர்களால் சாணக்குழம்பு நொதித்தல் அல்லது செரித்தல் நடைபெறுவதால் அந்த நுண்ணுயிர்கள்  உயிர்வாழ்வதற்கு சிறந்ததொரு நிலையை உருவாக்க வேண்டும். சுற்றுப்புற சூழ்நிலையை நன்முறையில் அமைத்தால் வாயு உற்பத்தி அதிகரிக்கும். இல்லையெனில் வாயு உற்பத்தி குறைந்து சில சமயங்களில் வாயு உற்பத்தியே நின்றுவிடும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கரிம எரிவாயு உற்பத்திக்கு உகந்த நிலைகள் காற்றுப் புகமுடியாத இறுக்கம்

நுண்ணுயிரிகள் பல கரிம அமிலங்களைச் சிதைத்து குளுகோஸ் மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்படுத்தி அவற்றை மீத்தேன் வாயுவாகவும், கரியமில வாயுவாகவும் மாற்றுவதற்குள் சாதனத்திலுள்ள பிராணவாயுவை எடுத்துக்கொள்கிறது. ஆனால் வெளிப்புறக் காற்றிலுள்ள பிராணவாயு உள்ளே நுழைந்தால் நுண்ணுயிர்களின் தன்மைகள் பாதிக்கப்படுகின்றன. சில சமயம் உற்பத்தியாகும் மீத்தேன் வாயுவும் காற்றுப்புக வழி இருந்தால் அதன் வழியாக வெளியேறிவிடும். எனவே காற்றோ அல்லது தண்ணீரோ சாதனத்தினுள் உட்புக முடியாதத் தன்மை பராமரிக்கப்படுதல் வாயு உற்பத்திக்கு அவசியமாகும்.

வெப்பநிலை

நுண்ணுயிர்களால் நொதிப்பு நடைபெறுவதற்குத் தகுந்த வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் நொதித்தல் நடைபெறுவதற்கான வெப்பநிலை மீத்தேன் வாயு உற்பத்தியை வெகுவாகப் பாதிக்கிறது. சராசரியாக 30 முதல் 35 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வாயு உற்பத்திக்கு உகந்ததாகும். இது ஒரு வகை வெப்பநிலையைச் சார்ந்த நுண்ணுயிரி ஆகும். மற்றொரு வகை 50 டிகிரி சென்டிகிரேடில் நன்கு செயல்படும். மேலும் அடிக்கடி ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தினாலும் மீத்தேன் வாயு உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. எனவே ஒரே சீரான வெப்பநிலையை பராமரிப்பது அவசியமாகும்.

தேவையான சத்துக்கள்

நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் எளிதில் கிடைக்க வேண்டும். நாம் அன்றாடம் செலுத்தும் சாணக்கரைசலில் கார்பன் நைட்ரஜனைப் போல் 30 முதல் 35 மடங்கு என்ற அளவில் இருக்க வேண்டும்.

சரியான விகிதத்தைப் பராமரிப்பதற்கு நைட்ரஜனின் அளவு குறையும் பொழுது மாட்டு மூத்திரத்தையும், கார்பனின் அளவு குறையும்பொழுது காய்கறி கழிவுப் பொருட்களையும் அதிகரித்துச் செலுத்த வேண்டும்.

நீரின் அளவு

நாம் அன்றாடம் சாணத்துடன் கலக்கும் நீரின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அதிக அளவு நீர் அல்லது மிகக்குறைந்த அளவு நீர் சாணத்துடன் கலந்து செலுத்தப்படும் பொழுது எரிவாயு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. மொத்தச் சாணக்கரைசலில் 90 சதவீதத்திற்கு நீர் இருக்குமாறு சாணத்தையும் நீரையும் கலக்க வேண்டும். அதாவது ஒரு பக்கெட் சாணத்திற்கு ஒரு பக்கெட் தண்ணீர் கலந்தால் இந்த நிலை கிடைக்கும். மேலும் சாணத்துடன் கலக்கும் வேளாண்மைக் கழிவுப் பொருட்களுக்கேற்ப நீரைச் சேர்க்க வேண்டிய விகிதமும் வேறுபடுகிறது.

வெப்பத்திறன்

ஒரு நாளைக்கு ஒரு எருது அல்லது பசு அல்லது காளையின் சராசரி சாண அளவு 10 அல்லது 15 கிலோ கிராமாக உள்ளது. ஒரு கிலோ சாணம் அல்லது மற்ற கழிவுகளிலிருந்து தோராயமாக 0.04 முதல் 0.05 கனமீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உண்டாக்கப்படும் எரிவாயு கனமீட்டருக்கு 3000 முதல் 40000 கிலோ கலோரி ஆற்றல் கொண்டுள்ளது. ஒரு கிலோ கலோரி என்பது 1 கிலோ எடையுள்ள தண்ணீரை 10 சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உயர்த்த தேவைப்படும் வெப்பம் ஆகும். தூய மீத்தேனை எரிப்பதால் உண்டாகும் வெப்பம் 130 கிலோ தண்ணீரை 200 சென்டிகிரேட் வெப்பநிலையில் இருந்து 1000 சென்டிகிரேட் கொதிநிலை வெப்பநிலைக்கு கொண்டுவரும் அளவிற்கு சமமான வெப்பம் அளிக்கும் தன்மை உள்ளது. இந்த வெப்பத்தை உபயோகித்து 60 முதல் 100 வாட் பல்பை ஐந்து முதல் ஆறு மணி நேரங்கள் ஒளிரச் செய்ய முடியும்.

சாண எரிவாயு சாதனங்களின் வகைகள்

நமது நாட்டில் கதர் மற்றும் கிராமியத் தொழில் வாரிய வடிவமைப்பு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புதிய மலிவு விலை சாண எரிவாயு சாதனம் மற்றும் தீனபந்து சாண எரிவாயு சாதனம் ஆகிய மூன்று சாதனங்கள் விவசாயிகளிடம் பிரபலமடைந்துள்ளன.

கதர் மற்றும் கிராமியத் தொழில் வாரிய வடிவமைப்பு

இச்சாதனம் சாணக் கரைசலைக் கொண்டிருக்கும் ஜீரணிப்பான் என்ற தொட்டியையும், இரும்புத் தகட்டினால் செய்யப்பட்ட வாயுவைச் சேகரிக்கும் கொப்பரையையும் கொண்டுள்ளதாக விளங்குகிறது. இவ்வகைச் சாதனங்களை அமைக்க முதலீட்டுச் செலவு சற்று அதிகமாகிறது. மேலும் இரும்புக் கொப்பரையை துருப்பிடிக்காமல் பாதுகாப்பதற்கு வருடாவருடம் வர்ணம் அடித்து பாதுகாத்து வரவேண்டியதும் அவசியமாகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக புதிய மலிவு விலை சாண எரிவாயு சாதனம்

இந்த வகையான எரிவாயு உற்பத்தி செய்யும் சாதனம் மிகவும் சுலபமாக கட்டுவதற்கு ஏதுவாகும். அடிக்கடி பழுது ஏற்படாத இயல்புடையதாகும். கிராமத்திலேயே கிடைக்கக்கூடிய சிமெண்ட், செங்கற்கள், மணல், சல்லிக்கற்கள் மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்களால் கிராமப்புற கொத்தனார்களைக் கொண்டே கட்டக்கூடிய அமைப்பு கொண்டது. இச்சாதனம் மிகக் குறுகிய காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் உட்பட யாவரிடமும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

சாண எரிவாயு சாதனத்தின் சிறப்பியல்புகள்

 1. புதிய வடிவமைப்பு கொண்ட இச்சாதனத்தை குறைந்த செலவில் அமைத்திடலாம்.
 2. கிராமத்திலுள்ள கொத்தனாரைக் கொண்டே இதனைக் கட்டலாம்.
 3. இதில் துருப்பிடிக்கும் பாகங்கள் ஏதும் இல்லை.
 4. வாயுக்கொள்கலனும், செரிப்பானும் ஒரே அமைப்பில் உள்ளதால் நிலையில்லா அழுத்தமும், நிலையான கொள்ளளவும் கொண்ட அமைப்பு முக்கிய அமைப்பாகும்.
 5. பூமிக்கடியில் இச்சாதனம் அமைந்திருப்பதால் எரிவாயு சாதனத்தில் ஏற்படும் அழுத்தத்தை சுற்றியுள்ள மண்சுவர் தாங்கிக் கொள்கிறது.
 6. இதனை வடிவமைக்க பட்டறையோ, கொல்லர்களையோ நாடத்தேவையில்லை.
 7. குளிர்காலத்தில் வாயு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுவதில்லை.
 8. சாணக்கரைசலை ஊற்றுவதும், வெளியேற்றுவதும் சுலபமாக நடைபெறுகிறது.
 9. சாணக்கரைசல் மக்கும்போது துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதால் இதனை வீட்டின் அருகாமையிலேயே அமைக்கலாம்.
 10. எல்லாவற்றிற்கும் மேலாக பராமரிப்புச் செலவே இல்லை.

தீனபந்து சாண எரிவாயு சாதனம்

கலனின் அடிப்பாகம் கால்பந்து வடிவில் கான்கிரீட் கலவையில் போடப்படுகிறது. இதனால் கட்டிடச் செலவு குறைக்கப்படுகிறது. அதாவது கான்கிரீட் குழியாகப் போடப்படுவதால் மேலே கட்டப்பட வேண்டிய கட்டிடத்தின் அளவு (கொள்ளளவு) குறைக்கப்படுகிறது. அதன்பின் கான்கிரீட் மேலே இருந்து அரைப்பந்து வடிவில் முடிந்துவிடுவதால், செலவு குறைக்கப்படுகின்றது. அளவுகளில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை. பொய் தளம் அமைக்கத் தேவையில்லை.

இதன்மேலே வாகனங்கள் சென்றால்கூட எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. சாணம் ஊற்றுவதற்கு 6 அங்குல குழாய் பொருத்தப்பட்டு அதன்மேல் சாணக்கரைசலைத் தயாரிப்பதற்கான சிறிய கரைக்கும் தொட்டியைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால் சாணம் வெளிவரும் தொட்டி பெரிய அளவில் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் எரிவாயு அதிகமாக உற்பத்தியாகும் பொழுது, அதிக அளவில் பொங்கி, கூடாரத் தொட்டியிலிருந்து சாணக் கரைசல் வெளிவரும் தொட்டியில் ஏறி நிற்கும். இவ்வாறு சாணம் வெளிவரும் தொட்டியில் சாணத்தின் மட்டம் எரிவாயுவை எரிக்க ஆரம்பித்தால் வெளிவரும் தொட்டியிலுள்ள சாணக் கரைசல் கீழே இறங்க ஆரம்பிக்கும். இங்கனம் சாணம் வெளிவரும் தொட்டியில் சாண மட்டம் ஏறி இறங்குவதிலிருந்து சாதனம் நன் முறையில் இயங்குவதையும், எவ்வளவு எரிவாயு உற்பத்தியாகின்றது அல்லது இருக்கிறது என்பதையும் உணரலாம்.

தீனபந்து கலனின் சிறப்பியல்புகள்

 1. கிராமத்தில் கிடைக்கக்கூடிய செங்கல், சிமெண்ட், மணல் மற்றும் ஜல்லிக்கற்களால் அடுப்பு கட்டப்படுகிறது.
 2. தரைக்கடியிலேயே கட்டி முடிக்கப்படுகிறது.
 3. நீடித்த உழைப்பு கொண்டது.
 4. பராமரிப்பு செலவே கிடையாது.
 5. பயிற்சி பெற்ற கிராமத்து கொத்தனார்களோ எளிதில் கட்டக்கூடியது.
 6. குளிர்காலத்தில் வாயு உற்பத்தி அதிகமாகக் குறைவதில்லை.
 7. குறைந்த செலவில் கட்டக்கூடியது.

எரிவாயு கலன் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள், சரியான கொள்ளளவு சாதனத்தைத் தேர்வு செய்தல்

சாண எரிவாயு கலன் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் எந்த கொள்ளளவு கலன் அமைக்கப்பட வேண்டும் என தேர்வு செய்தல் முக்கியமானதாகும். ஏனெனில் கட்டப்படும் சாதனத்திற்கு தினசரி தேவைப்படும் சாணத்திற்காக போதுமான கால்நடைகள் இருக்கின்றனவா என்று கவனித்துக் கொள்ள வேண்டியதும்; வெளிவரும் எரிவாயு குடும்பத்திலுள்ள யாவருக்கும் நாள் முழுவதற்கும் சமையல் செய்வதற்கு போதுமானதாக இருக்கிறதா என்று கணக்கிட வேண்டியதும் அவசியமாகும். கொள்ளளவை நிர்மாணிப்பதில் அது இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை போன்றவைகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

கலனை பயன்படுத்தும் முறை

 1. தங்களுக்கு கிடைக்கக் கூடிய சாணத்தின் அளவைப் பொறுத்து சாண எரிவாயு கலனின் அளவை தேர்ந்தெடுங்கள்.
 2. சாணமும் தண்ணீரும் சரியான அளவிலும் விகிதத்திலும் (1:1 என்ற விகிதத்தில்) கலந்து, வைக்கோல் மண் இல்லாத சுத்தமான கரைசலை தினமும் கலனில் விடுங்கள்.
 3. கலனில் உற்பத்தியாகும் வாயுவை தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள்.
 4. சமைக்கும் பொருள் கொதிநிலையை அடைந்ததும், வாயுவின் அளவை குறைத்து எரிய விடுங்கள்.
 5. அடுப்பிற்கு பொருத்தமான பாத்திரத்தில் சமையுங்கள்.
 6. சமையல் முடிந்த பின் மறக்காமல் வாயு கசியாதவாறு அடுப்பின் திருகாணியை மூடிவையுங்கள்.
 7. வாரம் ஒருமுறையாவது தண்ணீர் வடிவதற்கென உள்ள பைப்பை திறந்து நீரை வெளியேற்றுங்கள்.
 8. கலனில் உள்ள சாண கரைசல் ஆடை படியாமல் இருக்க மாதத்திற்கு ஒருமுறையேனும் நீண்ட ஒரு கம்பியின் உதவியால் கிளறிவிடுங்கள்.
 9. குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாயு உற்பத்தி குறைந்தால் தண்ணீரை லேசாக சூடுபடுத்தி சாணியை கரையுங்கள்.
 10. கலன் கட்டும் இடம் சமையல் அறைக்கும், மாட்டுத் தொழுவத்திற்கும் அருகில் இருக்க வேண்டும்.
 11. சாண எரிவாயு கலனின் வெளிப்புறம் மண் கொண்டு நன்றாக மூடப்பட வேண்டும்.
 12. நீலநிற சுடர் அதிக வெப்பத்தை தருமாதலால் காற்று திருகாணியை உபயோகித்து நீலநிற சுடர் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
 13. சாண எரிவாயு கலன் தொட்டியை மரப்பலகையாலோ அல்லது கல்லாலோ, சிமெண்ட் கான்கிரீட் சுவர் கொண்டு மூடி விலங்கினங்கள் அல்லது சிறு குழந்தைகள் தவறி விலாதபடி பாதுகாக்க வேண்டும்.
 14. சாண எரிவாயு கலன் உபயோகப்படுத்தும் முன் போக்கு குழாயிலுள்ள காற்று வெளியே போகும்படி சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும்.
 15. கலன் நன்கு செயல்படத் தவறினால் தாங்களே பழுதுநீக்கம் செய்ய முயற்சிப்பதை தவிர்த்து உங்கள ஒன்றிய ஆணையர் சங்கத்திற்கு உங்கள் முகவரியுடன் அஞ்சல் அட்டை மூலம் தகவல் கொடுக்கவும்.

தவிர்க்க வேண்டியவை

 1. உங்கள் குழந்தைகள் அடுப்பு விளக்கு மற்றும் வாயு செல்லும் குழாய்களில் விளையாட அனுமதிக்காதீர்கள்.
 2. சாணக் கரைசல் உட்புகும், மற்றும் வெளிவரும் தொட்டிகளை திறந்து வைக்காதீர்கள்.
 3. சாணத்தை சோப்பு தண்ணீரிலோ அல்லது கிருமி நாசினிகள் கலந்த நீரிலோ கரைத்துவிடாதீர்கள்.
 4. கிடைக்கக்கூடிய சாணத்தின் அளவுக்கேற்ற சாண எரிவாயு கலனை தேர்ந்தெடுங்கள்.
 5. உரக்கிடங்கு 3.3 அடி ஆழத்திற்று குறையாமல் இருக்க வேண்டும். சாண எரிவாயு கலனை பராமரித்தல்:

கிராமப்புறங்களில் சாண எரிவாயு கலனை உபயோகப்படுத்துவதும், கையாளுவதும், மிகவும் எளிமையானதாகும். கீழ்காணும் வழிமுறைகளின்படி சாண எரிவாயு கலனை பராமரித்தால் சாண எரிவாயு கலன் அதிக நாள் இயங்கும்.

 1. சமையலுக்கான எல்லா ஆயத்தங்களையும் செய்தபிறகே வாயுவைத் திறக்க வேண்டும். இப்படி செய்வதினால் வாயு வீணாவதைத் தடுக்கலாம்.
 2. காற்று உறிஞ்சியை இறுக்கமாக மூடக்கூடாது. காற்று உறிஞ்சியில் ஒரே சீராக காற்று செல்லும்படி சரிசெய்ய வேண்டும்.
 3. சாண எரிவாயு கலனில் சாணக் கரைசல் வெளிவரும் தொட்டியை ஒருபோதும் திறந்து வைக்கக்கூடாது.

தின பராமரிப்பு

 1. சரியான அளவு சாணமும் தண்ணீரும் கலந்த கலவையை உபயோகப்படுத்த வேண்டும்.
 2. கலக்கும் தொட்டியை உபயோகித்தபின் அத்தொட்டியைச் சுத்தப்படுத்த வேண்டும்.

வார பராமரிப்பு

 1. கூடார மாதிரி கலனில் வெளிவரும் தொட்டி வழியாக சாணியும் தண்ணீரும் கலந்த கலவையை கலக்குவதற்கு மூங்கில் குச்சியை பயன்படுத்த வேண்டும்.
 2. அடுப்பு அத்துடன் தொடர்புள்ள இதர உதிரிகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.
 3. சாண எரிவாயு கலனில் இணைக்கப்பட்டுள்ள நீர் நீக்கு குழாயை திறந்து சுத்தப்படுத்த வேண்டும்.
 4. எரிவாயு விளக்கிலுள்ள துவாரத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

மாத பராமரிப்பு

 1. பயன்படுத்தப்பட்டு வெளிவரும் சாணியை பக்கத்திலுள்ள உரக்கிடங்கிற்கு அகற்ற வேண்டும்.
 2. வெளிவரும் தொட்டிக்கு அருகில் உரக்கிடங்கு இருந்தால் அதிக சாணியின் அளவை சரிபார்க்க வேண்டும். அது நிறைந்திருந்தால் சாணியை பக்கத்து உரக்கிடங்கிற்கு செல்லுமாறு மாற்றிவிட வேண்டும்.
 3. வெளி வால்வு, வாயு வெளிவரும் குழாய் மற்றும் இணைப்புகளில் கசிவு இருக்கிறதா என்று சோதித்து அறிய வேண்டும்.
 4. தண்ணீர் அகன்றும் குழாயில் கசிவு இருக்கிறதா என்றும் சோதித்து அறிய வேண்டும்.

வருட பராமரிப்பு

 1. எரிவாயு மற்றும் தண்ணீர் குழாயில் கசிவு இருக்கிறதா என்பதை சோதித்து அறிய வேண்டும்.
 2. பழுதான பாகங்களை சரிசெய்ய வேண்டும். அல்லது மாற்ற வேண்டும்.

ஐந்தாவது வருட பராமரிப்பு

 1. சாண எரிவாயு கலனில் அடியில் படிந்துள்ள கழிவு பொருட்களை தோண்டி எடுத்து சுத்தப்படுத்த வேண்டும்.
 2. வாயு வெளிவரும் குழாள்களில் கசிவு இராதபடி முழுமையாக சோதித்தறிய வேண்டும்.
 3. கலனிலுள்ள சாணியினை முழுவதுமாக மாற்றிவிட்டு கூடார அமைப்பு கலனின் மேல்பாகத்திலும் (கூரையிலும்) வாயு சேமிக்கும் சேம்பரிலும், கருப்புநிற எனாமல் வர்ணத்தை மீண்டும் பூச வேண்டும்.
 4. வர்ணம் பூசிய பின் கலனில் புதிய கலவையை ஊற்ற வேண்டும்.

சாண எரிவாயுவிலிருந்து வெளிவரும் செரித்த சாணக் கரைசலையும், காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்றவற்றின் கழிவுகளையும் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கலாம். அதாவது கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்த பிறகே அவைகள் சிறந்த சத்துக்கள் மிகுந்த உரமாக மாற்றப்படுகின்றன. சாதாரணமாக மாட்டுச் சாணத்தில் 1 சதவீத தழைச்சத்து இருக்கிறது. இது சாண எரிவாயு உற்பத்தி செய்துவிட்டு வெளிவரும் பொழுது 1.6 சதவீதமாக மாற்றப்படுகிறது. இதேபோல் 0.6 சதவீத மணிச்சத்து 1.4 சதவீதமாகவும், 0.8 சதவீத சாம்பல் சத்து 1.2 சதவீதமாகவும் சாண எரிவாயு கலனால் மாற்றப்படுகிறது. இந்த செரித்த சாணக் கரைசலில் களை விதைகளும் முளைப்புத் திறன் இல்லாத வகையில் செரிக்கப்படுவதால் களை எடுக்க ஆகும் செலவும் மீதமாகிறது.

சாண எரிவாயு உற்பத்தி செய்த பிறகு எரிவாயு சாதனத்தில் இருந்து வெளிவரும் சாணக் கரைசல் சத்துக்கள் மிகுந்த இயற்கை உரமாக மாறுகிறது. இதில் 1 முதல் 1.6 சதம் தழைச்சத்தும், 0.6 முதல் 1.4 சதம் மணிச்சத்து மற்றும் 0.8 முதல் 1.2 சதம் சாம்பல் சத்தும் காணப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் உரம் அதிக சத்துக்கள் உள்ளதால் சாணத்தை நேரடியாக உரமாக இடுவதைக் காட்டிலும் மிகுந்த பயன் தருவதாக உள்ளது.

சாண எரிவாயு கழிவை இட்ட நிலங்களில் மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கும் நிலைமை காணப்படுகிறது.

மண்ணின் மிக முக்கியமான அம்சம் அழுகிப்போகும் தாவரப் பொருட்களும், உயிர் பொருட்களும் ஆகும். இதில்தான் மண்ணில் உள்ள பாக்டீரியா, பூசணங்கள், மண்புழுக்கள் போன்றவைகள் உயிர் வாழ்கின்றன. இரசாயன உரங்களும் உயிர்கொல்லி மருந்துகளும் மண்புழுக்களை அழத்துவிடுகின்றன. மண்ணில் வாழும் பயனுள்ள உயிர்களையும், நன்மை தரும் புழுப்பூச்சிகளையும் இரசாயன உரம் கொன்றுவிடுகின்றது. இத்தகைய நுண்ணுயிரிகள் உயிர் வாழ முடியாத மண் வெறும் உயிரற்ற உரத்தன்மையற்ற மண்ணில் விவசாயம் செய்ய வேண்டுமானால் அதற்கு அதிகம் செலவு பிடிக்கும். சக்தியும் அதிகம் செலவழியும். பாக்டீரியா, பூசணங்கள் தாவரங்களின் வேர்களிலிருந்து கசியும் சத்துப்பொருட்கள், மண்புழுக்கள் செரித்த சாண எரிவாயுக் கழிவுகள் போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான தாவரங்களையும் பயிர்களையும் வளர்க்க முடியும். அவற்றுக்கு வேண்டிய சத்துப்பொருட்கள் மண்ணிலிருந்தே கிடைக்கச் செள்யலாம்.

இவ்வாறு சத்துக்கள் மிகுந்த உரத்தை கொடுக்கும் எரிவாயு கலனால் எரிவாயு உற்பத்தி செய்து சமையல் செய்வதற்கும், விளக்கு எரிப்பதற்கும், மற்றும் நீர் இறைப்பான் போன்ற இயந்திரங்களை இயக்குவதற்கும், மின்சாரம் தயார் செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

பல்கலைக்கழகத்தில் சாண எரிவாயுவால் இயங்கும் அவசரகால விளக்கு, பூச்சி கவர் கருவி, சாணக் குருணை உரம் தயாரிக்கும் கருவி போன்றவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் பொறியியல் கல்லூரியில், உயிர்சக்தித் துறையில், சாண எரிவாயு பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த சாண எரிவாயு பயிற்சி மயத்தின் மூலமாக விவசாயிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு சாண எரிவாயு கலனை சிறந்த முறையில் இயக்கிப் பராமரிப்பதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே கலன் அமைத்த விவசாயிகளும், கலன் அமைக்க விரும்பும் விவசாயிகளும், ஒரு குழுவாக சேர்ந்து சாண எரிவாயு பயிற்சி மையத்திற்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு வேண்டிய பயிற்சி மையத்திற்கு அளிக்கப்படும். அனுபவமுள்ள கட்டிட கொத்தனார்களுக்கு சாண எரிவாயு கலன்கள் கட்டுவதற்கான பயிற்சி 10 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. பயிற்சியின் பொழுது கொத்தனார்களுக்கு நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு ரூ.300/-& உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. படித்த வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்களுக்கு சாண எரிவாயு கலன்களை அமைத்துக் கொடுத்து அதன்மூலம் சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் 15 நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறது. பயிற்சியின் பொழுது பட்டதாரி இளைஞர்களுக்கு நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு ரூ.250 உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள் குறிப்பாக பெண்களும், கொத்தனார்களும், பட்டதாரி இளைஞர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே விவசாயிகள் இரசாயன உரம், பூச்சி மருந்து போன்ற மானியம் பெற்று வரும் இடுபொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மானியம் நீங்கியதும் அவற்றின் விலை இரண்டு மடங்காக ஆகிவிடும். அதுபோல் மானியத்திற்காக சாண எரிவாயு கலன்கள் அமைப்பதை தவிர்த்து சிறந்த எரிபொருளை பெற்றிடவும், சத்துக்கள் மிகுந்த உரம் பெற்றிடவும் சாண எரிவாயு கலன் அமைக்க முன்வர வேண்டும்.

குறைந்த இடத்தில் பலவகை உணவு தானியங்கள், தோட்டக்கலைப் பயிர்கள், கால்நடைத் தீவனங்கள், எரிபொருள் சக்திக் காடுகள் அமைத்து கறவை மாடு, ஆடு, பன்றி, கோழி, வாத்து, புறா, வான்கோழி, காடை, மீன், பட்டுப்புழு மற்றும் காளான் வளர்த்து, சாண எரிவாயு கலன்கள் அமைத்து இடுபொருள் செலவு ஏதும் இல்லாமல் சுயதேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலையான வளங்குன்றா வேளாண்மையில் அதிக இலாபம் எடுக்க முயல வேண்டும்.

ஆதாரம் : மலரும் வேளாண்மை

3.11267605634
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top