பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராமங்களில் மின் வசதி

கிராமங்களில் மின் வசதி - தற்போதைய நிலைமை, சவால்கள் மற்றும் செல்ல வேண்டிய பாதை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 80% மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தக் கிராமங்களில் 167.8 மில்லியன் வீடுகள் உள்ளன. இவற்றில் 92808.181 வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு உள்ளது. 839,133 வீடுகளுக்கு மின் இணைப்பு வசதி இல்லை. மீதி உள்ள 74,179,414 வீடுகள் வெளிச்சத்திற்கு மண்ணெண்ணெய் அல்லது வேறு ஏதாவது ஒரு வழியைப் பயன்படுத்துகின்றனர். கிராமங்களுக்கு மின்வசதி செய்து தருதல் என்பதுதான் கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. கிராமத்துக்கு மின் வசதி அளிப்பதில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன

 1. கிராம மின்மயமாக்கலுக்கான உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்
 2. வீடுகளுக்கு மின் இணைப்பு தருதல்
 3. சரியான தரத்தில் மின்சாரத்தை போதுமான அளவில் விநியோகித்தல்
 4. சரியான கட்டண விகிதத்தில் மின் சாரத்தை விநியோகித்தல்
 5. சுற்றுப்புறத்துக்குச் சீர்கேடு விளைவிக்காத நிலைத்த முறையில் திறம்பட மின் சாரத்தை வழங்குதல்

கிராம மின்மயமாக்கலின் தற்போதைய நிலைமை

இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது எரிசக்தி ஆற்றல் கிடைப்பதுதான். மக்கள் குடியிருக்கும் கிராமங்களில் சுமார் 98% கிராமங்களுக்கு இந்திய அரசு மின்கம்பி மின்சார விநியோக அமைப்பை விரிவுபடுத்தி உள்ளது (இந்திய அரசின் ஆற்றல் அமைச்சகத்தின் 2016ஆம் ஆண்டு தகவலின்படி இது எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது). என்றாலும் கடைக்கோடி கிராம வீடுகளுக்கு மின் இணைப்பு தற்போதும் கிடைக்கவில்லை. இந்திய அரசின் அண்மைக் காலத் தகவலின்படி ஏப்ரல் 2016 வரை 58.5 மில்லியன் வீடுகளுக்கு மின்கம்பி விநியோக அமைப்பின் மூலமான மின் இணைப்பு இதுவரை கிடைக்கவில்லை (<http:/qar.gov.in/dashboard> என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்). மேலும் பல வீடுகளுக்குத் தேவையான அளவிற்கு மின்சார சேவை கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்துக்கும் குறைவாகவே மின்சாரம் பெறுகின்ற வீடுகளும் உள்ளன. 2001ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில் 55.8% வீடுகளும் 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில் 67.2% வீடுகளும் மின்வசதி பெற்றுள்ளன. மிகக் குறைவான வேகத்தில் மின்மயமாக்கல் நடப்பதற்கு முக்கிய காரணம் கடந்த காலங்களில் சீரற்ற முறையிலான கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டதுவே ஆகும். மேலும் இந்தியாவில் கிராம மின்மயமாக்கலுக்கு நிறுவன நிலையில் அரசியல் பொருளாதாரம் போன்ற இதர பிரச்னைகளும் தடையாக இருந்தன.

மின் இணைப்பு இல்லாத வீடுகள்

மேலே குறிப்பிட்ட மின் இணைப்பு இல்லாத இத்தகைய அதிக அளவிலான வீடுகள் அமைந்துள்ள இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில் மின்னிணைப்பு வசதி கிடைக்காத மக்கள் தொகையினரைக் கீழ்க்கண்டவாறு மூன்று வகை நுகர்வோர்களாகப் பிரித்துப்பார்க்கலாம்

 1. மத்திய மின்தொகுப்பு கம்பி முறையைத் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விரிவுபடுத்த முடியாத வகையில் அணுகுவதற்குக் கடினமான தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்கள்
 2. மின்தொகுப்பு கம்பி முறை இணைப்பு உள்ள கிராமங்களைச் சேர்ந்த மின்னிணைப்பு பெறாத குக்கிராமங்களில் வசிப்பவர்கள்
 3. மின்தொகுப்பு கம்பி முறை நிறுவப்பட்டுள்ள கிராமங்களில் மின்னிணைப்பு பெறாத வீடுகளில் வசிப்பவர்கள்

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த சில கணக்கெடுப்புகளின்படி மின்னிணைப்பு பெறாத 300 மில்லியன் மக்கள் தொகையில் 10 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையினர் மத்திய மின் தொகுப்பு கம்பிமுறை இணைப்பு இல்லாத கிராமங்களில் வசிக்கின்றனர். மீதி உள்ள 290 மில்லியன் மக்கள் தொகையினர் முன்பே மின்தொகுப்பு கம்பிமுறை இணைப்பைப் பெற்றுள்ள கிராமங்களில் வசிக்கின்றனர். அல்லது மின்தொகுப்பில் இணைக்கப்பட்டுவிட்ட சென்சஸ் கிராமங்களுக்குட்பட்ட குக்கிராமங்களில் வசிக்கின்றனர். இத்தகைய குக்கிராமங்களில் பெரும்பாலானவை அஸ்ஸாம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் உள்ளன.

அதாவது நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில்தான் மின்னிணைப்பு இல்லாத குக்கிராமங்கள் அதிக அளவில் உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2018க்குள் மின்மயமாக்கப்படாத அனைத்து கிராமங்களுக்கும் மின்னிணைப்பு தரப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதில் சவாலான விஷயம் என்னவென்றால் மின்மயமாக்கப்பட்ட சென்சஸ் கிராமங்களுக்குட்பட்ட மின்வசதி செய்யப்படாத குக்கிராமங்களின் வீடுகளுக்கு மின்வசதி இணைப்புத் தருவதே ஆகும்.

கொள்கை, செயல்திட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள்

கிராம மின்மயமாக்கலின் இன்றியமையாமையானது 1950 களிலேயே அங்கீகரிக்கப்பட்டது. முதல் பெரிய அளவிலான தொடக்க நடவடிக்கை என்பது 1969ல் ஊரக மின்கழகம் (ஆர்.இ.சி) நிறுவப்பட்டதே ஆகும். நாடு முழுவதும் கிராம மின்மயமாக்கலை அபிவிருத்தி செய்வதும் நிதி உதவி செய்வதும்தான் இக்கழகத்தின் முதன்மைப் பணியாகும். கிராம மின்மயமாக்கல் நிலைமையை மேம்படுத்த அரசு பல கொள்கைகள்/திட்டங்களை அறிவித்தது. அவற்றில் சிலவற்றை இனி விவாத ரீதியாகப் பார்க்கலாம்.

தேசிய மின்கட்டணக் கொள்கையில் திருத்தங்கள்

அண்மைக்காலத்தில், தேசிய மின்கட்டணக் கொள்கை 2006ல் திருத்தங்கள் செய்யப்பட்டன. தொலைதூரத்தில் உள்ள மின்னிணைப்பு இல்லாத கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்ய மினிகிரிட் (சிறிய அளவிலான மின் கம்பி மூலமான மின்சார விநியோக அமைப்பு) அமைத்தல் என்பதும் இந்தத் திருத்தங்களில் உள்ளடங்கும். இத்தகைய சிறிய அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்ட பிறகு அவற்றுக்குத் தேவையான மின்சாரம் வாங்குவதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மின்கட்டணக் கொள்கை திருத்தம் பிரிவு 8 பின்வருமாறு கூறுகிறது : "மின்கம்பித்தொகுப்பு மின்சார விநியோகம் சென்று சேராத அல்லது இத்தகைய விநியோக அமைப்பில் போதுமான மின்சாரம் கிடைக்காத இடங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமான மின்சாரத்தை விநியோகிக்கும் மைக்ரோ கிரிட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய மைக்ரோகிரிட்டுகள் அமைப்பதற்கான முதலீடு கணிசமானது ஆகும். முதலீடு செய்வதில் உள்ள ஆபத்துக் காரணி எதுவென்றால் செயல்திட்ட நிர்மாணம் நிறைவு பெறுவதற்கு முன்பே மின்கம்பி அந்த இடத்திற்கு சென்றுவிட்டால், அதற்குப் பிறகு மைக்ரோகிரிட்டுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது என்பது செலவு அதிகமானதாகவும் பொருத்தமற்றதாகவும் ஆகிவிடும். அத்தகைய ஆபத்துக் காரணியின் விளைவைக் குறைக்கவும் மைக்ரோகிரிட்டுகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மான்யம் வழங்கவும் நெறிமுறைப்படுத்தும் சட்டக வரைவை உருவாக்குவது அவசியமாகும். அத்தகைய மைக்ரோகிரிட்டுகளில் இருந்து முதன்மை மின்கம்பி தொகுப்பு மின்சாரம் வாங்குவதை கட்டாயமானதாக ஆக்க வேண்டும். சட்டத்தின் 62ஆம் பிரிவின் கீழ் இதற்கான கட்டணங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும். முதலீடுகளின் தேய்மானச் செலவும் தொழில்துறையின் இலக்குகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உரிய ஆணையம் அங்கீகரிக்கும் உச்ச அளவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உரிய ஆணையம் ஆறு மாதங்களுக்குள் தேவையான சீரமைப்பு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும். மின்சாரப் பிரிவுக்கான தேவையான நெறி முறைப்படுத்தும் அமைப்பை உருவாக்கும் போது தனியார் முதலீட்டாளர்களின் பிரச்னை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தம் சொல்கின்றது.

கிராம மின்மயமாக்கல் கொள்கை, 2005

2005ல் முதன்முதலாக கிராம மின்மயமாக்கல் கொள்கை அறிவிக்கப்பட்ட போது இதன் நோக்கம் 2009ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்னிணைப்புத் தர வேண்டும் என்பதாக இருந்தது. அதேபோன்று 2012க்குள் நியாயமான கட்டணத்தில் தரமான நம்பகமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்; 2012க்குள் ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்கு குறைந்தபட்ச மின்நுகர்வு 1 யூனிட்டாக இருக்க வேண்டும் என்பதும் நோக்கங்களாக இருந்தன. ஆனால் கிடைக்கக் கூடிய தரவுகளை வைத்துப் பார்க்கும் போது இந்த இலக்குகள் அடையப்படவில்லை என்பது புலனாகிறது. கிராம மின்மயமாக்கல் கொள்கையின்படி மின்வசதி அளிக்கப்பட்ட கிராமம் என்பதற்கான வரையறையும் மாறி உள்ளது. மேலும் கிராம மின்மயாக்கல் கொள்கையின்படி, கிராம பஞ்சாயத்து வழங்கும் சான்றின் அடிப்படையில்தான் ஒரு கிராமம் மின்மயமாக்கப்பட்ட கிராமமாக வகைப்படுத்தப்படும். விநியோகிப்பதற்கு டிரான்ஸ்ஃபார்மர், விநியோக மின்கம்பிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ளது என்றும் குறைந்த பட்சம் ஒரு தலித் குடியிருப்பாவது இருக்கிறது என்றும் சான்றளிக்கப்பட வேண்டும். மேலும் பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகம், சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், சமுதாய நல மையங்கள் முதலான பொது இடங்களிலும் மின்சாரம் அளிக்கப்படுகின்றது. அந்தக் கிராமத்தில் உள்ள மொத்த வீடுகளில் குறைந்த பட்சம் 10% வீடுகளாவது மின் இணைப்பு பெற்றிருக்கவேண்டும் என்று சான்றளிக்கப்பட வேண்டும்.

2005ஆம் ஆண்டில் இந்த வரையறையானது நடைமுறைப்படுத்தப்பட்டதால், திடீரென மின் இணைப்பு பெறாத கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

திட்டங்கள்

ராஜீவ்காந்தி கிராமீன் வித்யுதிகரன் திட்டம் (RGGVY)

மின்சார சட்டம் (EA) 2003ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு ஏற்றவாறும் கிராம மின்மயமாக்கல் கொள்கை 2005இன் இலக்கின்படியும் 2009ல் அனைத்து வீடுகளுக்கும் மின்னிணைப்பு தரவேண்டும் என்பது நோக்கமாகும். இதனை நிறைவேற்றத்தான் ஏப்ரல் 2005ல் ராஜீவ்காந்தி கிராமீன் வித்யுதிகரன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து மின்மயமாக்கப்படாத கிராமங்கள் / குடியிருப்புகளுக்கு மின்வசதி அளித்தல், மின் மயமாக்கப்படாத மற்றும் மின்மயமாக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து கிராம வீடுகளுக்கும் மின்இணைப்பு தருதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆற்றல் அமைச்சகமானது செயலாக்க ஏஜென்சியாக நியமித்துள்ள ஊரக மின்மயமாக்கல் கழகம்தான் (REC) இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

தீனதயாள் உபாத்யாய கிராம் ஜோதி திட்டம்(DDUGJY)

ராஜீவ்காந்தி கிராமீன் வித்யுதிகரனின் நோக்கம் மேலும் கூடுதலாக விரிவுபடுத்தப் பட்டு டிசம்பர் 2014ல் புதியதாக தீனதயாள் உபாத்யாய கிராம் ஜோதி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் முன்னோடி திட்டங்களில் இது ஒரு முக்கிய திட்டமாகும். அனைவருக்கும் 247 என்ற முறையில் மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும். பின் வருவன இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்:

 • விவசாயம் மற்றும் விவாயம் சாராத ஃபீடர்களைப் பிரிப்பதன் மூலம் ஊரகப் பகுதிகளில் விவசாய நுகர்வோர்களுக்கும் மற்றும் விவசாயம் சாராத நுகர்வோர்களுக்கும் நியாயமான சுற்று முறையில் மின்சாரம் விநியோகித்தல்
 • துணைநிலை பரிமாற்றம் மற்றும் விநியோகத்துக்கான வசதிகளை ஊரகப்பகுதிகளில் வலுப்படுத்துதல் மற்றும் விரைவுபடுத்துதல் (ST&D), விநியோக டிரான்ஸ்பார்மர்கள், ஃபீடர்கள் மற்றும் நுகர்வோர் என அனைத்து நிலைகளிலும் மீட்டர் கணக்கிடுதல் என்பதும் இதில் உள்ளடங்கும்.
 • ஆர்.ஜி.ஜி.வி.ஒய் திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள 12ஆம் மற்றும் 13ஆம் ஐந்தாண்டு திட்டங்களுக்கான இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு 1-8-2013 அன்று அளிக்கப்பட்ட சி.சி.இ.ஏவின் அனுமதியின்படி கிராம மின்மயமாக்கல் பணியில் ஆர்.ஜி.ஜி.வி.ஒய் திட்டமானது டி.டி.யு.ஜி.ஜே திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆர்.ஜி.ஜி.வி. ஒய்க்கு அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு டி.டி.யு.ஜி.ஜே.ஒய் திட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.

உஜ்வால் டிஸ்கோம் அஷ்யூரன்ஸ் திட்டம் (உதய்)

மின்சார விநியோகப் பிரிவுக்கு சிறந்த உபகரணங்கள் கிடைக்கவும் திறம்படச் செயல்படவும் இந்திய அரசு உஜ்வால் டிஸ்கோம் அஷ்யூரன்ஸ் திட்டத்தை (உதய்) அறிமுகப்படுத்தி உள்ளது. உதய் இதுவரை இல்லாத அளவில் புதிய சீர்திருத்த முயற்சியாக விளங்குகிறது. மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின்சார விநியோக நிறுவனங்கள் பணிபுரியும் முறையை மறுகட்டமைப்பு செய்வதும் இதன் நோக்கமாகும். தற்போது மாநில மின் விநியோக நிறுவனங்கள் பெருங்கடனில் மூழ்கி உள்ளதோடு ஆண்டுதோறும் நஷ்டத்தை அனுபவித்தும் வருகின்றன. நிதித் திட்டத்துக்குத்தான் கூடுதல் கவனம் தரப்படுகின்றது. மாநில அரசுகள் தங்கள் மின்சார விநியோக நிறுவனங்களின் கடன் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் திட்டமாகும்.

இதன்மூலம் மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் அதிகாரம் பெற்று 23 ஆண்டுகளில் லாபத்தில் செயல்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதற்கு நான்கு வகையான தொடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். அவை:

 1. மின்விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல்.
 2. மின் உற்பத்திக்கான செலவைக் குறைத்தல்
 3. மின் விநியோக நிறுவனங்களுக்கான வட்டிச் செலவைக் குறைத்தல்.
 4. மாநில நிதி ஆதாரங்கள் மூலமாக மின் விநியோக நிறுவனங்களில் நிதி நெறிமுறையை அமலாக்குதல்.

இத்திட்டத்தில், பத்து மாநிலங்கள் இணைந்துள்ளன. மேலும் 8 மாநிலங்களும் 1 யூனியன் பிரதேசமும் உதயில் கையெழுத்திட்டுச் சேர ஒத்துக்கொண்டுள்ளன.

உன்னத்ஜோதி அனைவருக்கும் நியாய விலையில் எல்.இ.டி பல்புகள் (உஜாலா)

மின்சார நுகர்வைக் குறைக்கும் வகையிலும் மின்சாரச் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் வீடு மற்றும் தெருவிளக்குகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றக்கூடிய தேசிய செயல்திட்டம் ஒன்றை இந்திய அரசு தொடங்கி உள்ளது. இதேபோன்று மார்ச் 2015ல் இந்திய அரசு நிறுவனமான எனர்ஜி எஃபிசியன்ட் சர்வீசஸ் லிமிடெட் (இ.இ.எஸ். எல்) வீடுகளுக்கு எல்.இ.டி (ஒளி உமிழ் டையோட் பல்ப்) பல்புகளை வீட்டில் திறனுடைய ஒளி வழங்கும் திட்டத்தின் கீழ் (டி.இ.எல்.பி) விநியோகிக்கத் தொடங்கி உள்ளது. உஜாலா (உன்னத்ஜோதி அனைவருக்கும் நியாயவிலையில் எல்.இ.டி பல்புகள்) திட்டத்தில் தேசிய அளவில் எல்.இ.டி பல்புகள் விநியோகிக்கும் அம்சம் மார்ச் 2016 முதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்பது மாநிலங்களில் ஜூன் 28, 2016 அன்றுள்ளபடி சுமார் 123 மில்லியன் எல்.இ.டி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நாளொன்றுக்கு 43 மில்லியன் கிலோவாட் மின்சாரம் சேமிப்புக்கு சமமாகும்.

கிராம மின்மயமாக்கலில் சில சவால்கள் உள்ளன. டி.டி.யு.ஜி.ஜே.ஒய் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் கிராம மின்மயமாக்கலில் மேற்கொள்ளப்படும் மின் கம்பி மின்தொகுப்பு விரிவாக்கம் பல முக்கிய தடைகளை எதிர்கொண்டு வருகின்றது. மின்கம்பி மின்தொகுப்பு விரிவாக்கத்துக்கு ஆகும் அதிகச் செலவு, மின்கட்டணத்துக்குத் தரப்படும் அதிக அளவு மானியத்தால் கடனைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் தாமதம், குறைந்த நிலையில் பெறப்படும் மின்கட்டணத்தால் ஏற்படும் பாதகங்கள், மின்சாரம் போதிய அளவு கிடைக்காததால் ஏற்படும் பங்கீட்டு அளவில் விநியோகித்தல், பராமரிப்புச் செலவுகள் ஆகியன அத்தகைய சவால்கள் ஆகும். நீடித்த முறையில் கிராம மின்மயமாக்கலை நிறைவேற்றுவதற்கு ஊரகப் பொருளாதாரத்திற்கு உயர்வளிக்கும் வகையில் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளை பெருமளவில் உருவாக்கியாக வேண்டும். செல்வ வளத்தை ஈட்டக்கூடிய மின்சார சேவைகளுக்கு கட்டணம் செலுத்துவதற்கான தகுதிநிலையை இது மக்களுக்கு ஏற்படுத்தித் தரும். தேசிய சூரிய மின்சக்தி மிஷன் கிராம மின்மயமாக்கல் மீதான தனது கவனத்தை இழந்துவிடக் கூடாது. அதேபோன்று மரபார்ந்த மின்கம்பி விநியோக அமைப்பில் மினி / மைக்ரோ கிரிடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தையும் இந்த மிஷன் மறந்துவிடக் கூடாது. கிராம மின்மயமாக்கல் செயல் திட்டம் நிலைத்த தன்மையில் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். ஊரகச் சமுதாயத்தினருக்கு பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தித் தருவதும் முக்கிய மானதாகும். எனவே, கிராம மின்மயமாக்கல் திட்டமானது பிற சமூக நல திட்டங்களுடன் இணைத்து பார்க்கப்படவும் செயல்படுத்தப்படவும் வேண்டும். மேலும் ஒட்டுமொத்த ஊரக வளர்ச்சி செயல் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இது இருக்க வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : அனுபமா ஐரி, :மூத்த சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் நிறுவனர் (ஆசிரியர் EnergyInfraPost.Com)

3.13461538462
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top