பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / தொிந்து கொள்ள வேண்டியவை / படிம எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

படிம எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள்

படிம எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy] பற்றிய குறிப்புகள்

'நிலக்கரிப் பின்னல்கள் [Coal Synthetics] ஆக்கும் புதிய பொறித்துறையில் எழும் துர்வாயுக்கள் யாவும் நீக்கித் தவிர்க்கப் படும். இன்றேல் அவ்விஷ வாயுக்கள் புதிய எருக்களை உருவாக்க உதவும் வினை ஊக்கிகளைத் [Catalysts] தாக்கி அழித்துவிடும். அமெரிக்காவின் நிலக்கரி எரிசக்தித் தொழிற் சாலைகள் பின்னல் எருவைப் [Synfuels] பயன்படுத்த மாற்றப் பட்டால், சூழ்வெளித் துர்வாயுக்களின் வெளிவீச்சுகள் யாவும் குறைந்துவிடும்

முன்னுரை

தொழிற்புரட்சியால் பாரெங்கும் விளைந்த ஒரு முக்கியச் சீர்கேடு நீரிலும், நிலத்திலும், வாயு மண்டலத்திலும் தொழிற்சாலைகள் மாசுத் துணுக்குகளையும், துர்வாயுக்களையும் [Industrial Pollutants] தூவி மனித இனம், உயிரினம், பயிரினம் ஆகியவற்றுக்குப் பல்லாண்டு காலங்களாய்ப் பாதகம் புரிந்து வருவது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மலர்ந்த தொழிற்துறை யுகம், இருபதாம் நூற்றாண்டில் ஆலமரம் போல் பல கிளைகளும், விழுதுகளும் விட்டுப் பூத வடிவம் பெற்றதால், எங்கும் பெளதிக, இராசயன, உயிரியல் மாசுத் துணுக்குகளும், வாயுக்களும் [Physical, Chemical & Biological Pollutants] கொட்டிக் குவிந்து பெருகிக் கொண்டே வருகின்றன. தொழிற்சாலைகளின் அசுர வாயில்கள் வெளியேற்றும் மாசுகளைக் கட்டுப்படுத்தி, யந்திரச் சாதனங்களால் வடிகட்டிக் குறைக்காவிட்டால், நோய்வாய்ப்பட்டு மனித இனத்தின் ஆயுட்காலம் குன்றிவிடும். உயிரினமும், பயிரினமும் வாடி வதங்கி மாய்ந்துவிடும். மனிதர் ஆரோக்கியம் இவ்வாறு பழுது பட்டால் அவரது கலாச்சாரம், கலையுணர்ச்சி, நாகரீகம், பண்பாடு, கனிவுத் தன்மை யாவும் சிறிது சிறிதாய் மங்கிப்போய்ச் சீர்குலைந்துவிடும்

நிலக்கரி எரி ஆயில் எரிவாயுவின் புதை இருப்புகள்

இருபதாம் நூற்றாண்டு மனித இனத்தார் மட்டும் நிலக்கரி, எரி ஆயில், எரிவாயு போன்ற இயல்வள எருக்களை [Fossil Fuels] எரிசக்திக்கும், போர் வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தொடர்ந்து எரித்த அளவு, பூதளச் சேமிப்பு இருப்பிலே பெரும்பான்மையானது! அதுபோல் அந்தப் பேரளவு எருக்கள் வெளியேற்றிய விஷ வாயுக்களும், நச்சுத் துணுக்குகளும் மனிதரைத் தாக்கிக் கடுமையாகப் பாதித்திருப்பதும் மிகப் பெரும் பரிமாணம் கொண்டது. தோண்டத் தோண்ட அந்த எருக்கள் பூமியில் கிடைத்துக் கொண்டிருந்தாலும், அவற்றைச் சுரக்கும் களஞ்சியங்கள் யாவும் ஒருநாள் வற்றிப்போய் முற்றிலும் வரண்டு விடலாம். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூதள உயிரியல் இயக்கங்களில் [Geological & Biological Reactions] பூமிக்குள் தோன்றி அடைபட்டுள்ள நீரகக்கரி எருக்களின் [Hydrocarbon Fuels] சுரங்கங்கள் வரையறைக்கு உட்பட்டவை. தீர்ந்தபின் இயற்கை அவற்றை மறுபடியும் பூமிக்குள்ளே நிரப்பிடப் போவதில்லை. ஒரு பீப்பாய் எரி ஆயில் கனல்சக்தி ஈன்று தீய்ந்து வாயுவாகிப் போனால் மீண்டும் அது பழைய நிலைக்கு மாறாது. செயற்கை முறையிலும் அவற்றை மீண்டும் மாற்றவும் முடியாது

இப்போது பூமியிலிருந்து இயல்வள எருக்கள் எடுப்பிலும், கொடுப்பிலும் பெரும் முடை ஏற்பட்டு, ஜனத்தொகை பெருகும் உலகில் எரிசக்தி மின்சக்திப் பற்றாக்குறை விரிந்து கொண்டே போகிறது. எரிசக்தி மூல வளங்கள் செழித்த உலக நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, பூமிக்குள்ளே பேரளவு நிலக்கரிப் புதை இருப்பில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. அன்னிய நாடுகளிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி செய்தாலும், அமெரிக்கா உள்நாட்டுப் பெட்ரோலிய உற்பத்தியிலும் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. இயல்வழி எரிவாயுத் [Natural Gas] தேவையில், அமெரிக்கா இருபது ஆண்டுகளுக்கு முன்பு பூர்த்தி நிலையில் இருந்தது. ஆனால் தற்போது சில மாநிலங்களில் எரிவாயுப் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளதாக அறியப் படுகிறது

அணுமின்சக்தி உற்பத்தியிலும், எண்ணிக்கையில் அதிகமான நிலையங்களை இயக்கிக் கொண்டு அமெரிக்கா முன்னணியில் நிற்கிறது. உலகில் எரிசக்தி உற்பத்தியின் விலை ஏறிக் கொண்டே போவதாலும், பூமியில் இயல்வள எருக்களின் மூலக் களஞ்சியங்கள் சிறுத்துக் கொண்டே வருவதாலும், 21 ஆம் நூற்றாண்டில் பரிதிக்கனல் பரிமாறும் மீள்பிறப்பு எரிசக்தி எருக்களைத் [Renewable Energy Sources] தேடிப் போகும் நிலை வந்திருக்கிறது! மேலும் நிலக்கரி, எரி ஆயில், எரிவாயு ஆகியவற்றை எரிசக்திக்குப் பயன்படுத்தும் நிலையங்களின் புகைபோக்கிகள், மனித இனம், விலங்கினம், பயிரினம் ஆகியவற்றை நாசப்படுத்தும் மாசுகள் மிக்க நச்சு வாயுக்களைச் சதா வெளியாக்கிக் கொண்டு வருவதால், பலவித வடிகட்டிச் சாதனங்களைப் புகுத்தி மின்சக்தி நிலையங்களில் வெளிவீச்சுகளைக் குறைக்க வேண்டிய கடமையாகி விட்டது. இல்லாவிட்டால் நாம் வாழும் பூகோளத்தின் வாயுவளம், நீர்வளம், நிலவளம் ஆகிய மூன்றும் பழுதுபட்டு மனித இனம், உயிரினம், பயிரினம் யாவும் நோய்வாய்ப்பட்டுச் சிதைந்துபோக வாய்ப்புள்ளது.

இயல்வள எருக்களின் உலக இருப்பும் உபயோக இழப்பும்

பெட்ரோலியம், இயல்வழி எரிவாயு, நிலக்கரி ஆகிய இயல்வள எருக்கள், நீர்த்துறை, அணுவியல், பூதளக்கனல், பரிதிக்கனல், காற்றாடி ஆகிய ஆற்றல்கள் இயக்கிய எரிசக்தி ஆண்டுக்கு 1.4% வீதம் அதிகரித்து வந்துள்ளதாய் அறியப்படுகிறது. 1990 ஆண்டுகளில் அமெரிக்காவின் மின்சக்திப் பரிமாற்றம் ஆண்டுக்கு 2.3% வீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் மின்சக்தித் தேவை வருடத்திற்குச் சராசரி 1.8% வீதம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1997 இல் பெட்ரோலியம் எரி ஆயிலே [Crude Oil] 39.5% பிரதான எரிசக்தியாய் உலகில் பயன்படுத்தப் பட்டது. அடுத்து நிலக்கரி மூல எருவே எரிசக்தியாய் உலக நாடுகள் 24.2% பங்களவில் பயன்படுத்தி வந்துள்ளன.

இந்த ரீதியில் நிலக்கரி தீய்ந்து போனால் அதன் சுரங்க இருப்பு முழுவதும் கனல்சக்தி அளித்து வற்றிப் போக இன்னும் இரு நூறாண்டுகள் வரை நீடிக்கலாம், ஆனால் எதிர்காலங்களில் புது நிலக்கரிப் புதையல் சுரங்கங்களைக் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

  • இயல்வழி எரிவாயு மூன்றாவது முக்கிய எரிசக்தியாக 22.1% ஒப்பளவில் உபயோகிக்கப் பட்டிருக்கிறது.
  • நீர்த்துறை 6.9%,
  • அணுவியல் 6.3%, மற்றும் பூதளக்கனல், பரிதிக்கனல்,
  • காற்றாடி ஆகிய மூன்றும் 0.5% [Hydroelectric, Nuclear, Geothermal, Solar & Wind Power] வீத அளவில் இயக்கி மின்சக்தி பரிமாறி வந்துள்ளன. சில பூதளவாதிகள் [Geologists] இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப் படப்போகும் எரி ஆயில், எரி வாயு ஆகியவற்றின் தேக்கம், இதுவரை இருந்த இருப்பளவுக்குச் சமமாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.

சுற்றுப்புறத்தை நாசப்படுத்தும் சூழ்வெளித் துர்வாயுக்கள்

பூமண்டலச் சூழ்வெளி வாயுவை நாசம் செய்யும் ஐம்பெரும் மாசு எச்சங்கள்

  1. கார்பன் மொனாக்ஸைடு, கார்பன் டையாக்ஸைடு [Carbon Monoxide, Carbon Dioxide],
  2. ஸல்ஃபர் ஆக்ஸைடுகள் [Sulphur Oxides],
  3. நைட்டிரஜன் ஆக்ஸைடுகள்[Nitrogen Oxides]
  4. ஹைடிரோ கார்பன்கள் [Hydrocarbons],
  5. தூசுத் துணுக்குகள் [Particulates] [ஈயம், பாதரசம்]. பொதுவான மாசுத் துணுக்களையும், நச்சு வாயுக்களையும், அவற்றை உற்பத்தி செய்யும் மூலப் பண்டங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியம்.

ஓஸோன் வாயு [Ozone Gas] பூதளத்திலும், மேல்தள வாயு மண்டலத்திலும் உலவும் ஒரு வாயு, ஓஸோன் வாயு. உயரத்தில் பரிதியின் கடும் கதிர்க்கனலைத் தடுக்கிறது. பூதளத்தில் புகைப்பனியில் [Smog (Smoke+Fog)] பெரும்பான்மைப் பங்கு கொண்டது. ஓஸோன் நேரிடையாக ஆக்கப் படுவதில்லை. இயல்வள எருக்களின் எரிக்கனலில் உண்டாகும் நைட்டிரஜன் ஆக்ஸைடுகள் பரிதியின் வெப்ப ஒளியில், ஆவியான ஆர்கானிக் கூறுகளுடன் [Volatile Organic Compounds] கலக்கும் போது, ஓஸோன் படைக்கப் படுகிறது.

2. கார்பன் மொனாக்ஸைடை நுகர்ச்சியில் அறிய முடியாது. கண்ணால் காண முடியாது. கார்பன் டையாக்ஸைடையும் நுகர்ந்து உணர முடியாது. காணவும் முடியாது. அது நச்சு வாயுவாகக் கருதப் படாவிட்டாலும், மூச்சு முடை தர வல்லது [Non-Toxic but Suffocative Gas].

3. நைட்டிரஜன் டையாக்ஸைடு : இயல்வள எருக்கள் எரிந்து வரும் பழுப்புச் செந்நிற வாயு. மிகையாக எழும் போது, தீவிர நுகர்ச்சி தர வல்லது. தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள் வெளியிடும் வாயுக்களில் ஒன்று.

4. ஸல்ஃபர் டையாக்ஸைடு: சிறிய அளவில் உலவிடும் போது, காண முடியாது; நுகர்ந்து அறியவும் முடியாது. பேரளவில் எழும்போது, கூமுட்டை நாற்றத்தில் உலவுகிறது. நிலக்கரி அல்லது எரி ஆயில் பயன்படும் மின்சக்தி நிலையங்களில் ஸல்ஃபர் டையாக்ஸைடு வாயு வெளியாகிறது.

5. ஈயம், பாதரசம்: மோட்டார் வாகனக் கழிவு வாயுவில் ஈயம் வெளிப்படுகிறது. ஈயமற்ற பெட்ரோல் [Unleaded Gasoline] உபயோகமாகும் வாகனங்களே இந்த நச்சுத் துணுக்கை வெளித் தள்ளுகிறது. நிலக்கரி எரிசக்தியாகப் பயன்படும் மின்சக்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் பாதரச நஞ்சை சூழ்வெளியில் கலக்கின்றன. அமெரிக்கா பிட்ஸ்பர்க் நிலக்கரியில் டிரில்லியன் Btu இல் (0.1-16.3) பவுண்டு பாதரசம் உள்ளது.

6. மாசுத் துணுக்குகள்: காற்றில் கலந்த திரவ, திடவத் தூசிகள் இவை. மோட்டார் வாகனங்கள், நிலக்கரி மின்சக்தி நிலையங்கள் வெளியேற்றும் துணுக்குகள் இவை. இவற்றால் மனிதருக்கு மூச்சடைப்பு, மூச்சிழுப்பு நேருவதுடன், சுவாசிக்கும் புப்புசங்களும் பாதகம் அடைகின்றன.

சூழ்வெளித் துர்வாயுக்களை வெளியேற்றும் தொழில் ஆலைகள்

மோட்டர் வாகனங்களுக்கு அடுத்தபடித் துர்வாயுக்களைத் தொடர்ந்து சூழ்வெளியில் கொட்டிக் குவிப்பவை: மின்சக்தி உற்பத்தி நிலையங்கள், இரும்பு, எஃகுத் தொழிற்சாலைகள், பெயிண்ட், சிமன்ட் தயாரிப்புத் தொழிற்சாலைகள், பெட்ரோலியம் பிரிப்பு மற்ற வேளாண்மை உரத் தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள், காகிதத் தயாரிப்பு, ஆயுதத் தயாரிப்புச் சாலைகள், அணுக்கழிவுச் சுத்தீகரிப்புக் கூடங்கள் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். மோட்டர் வாகனங்களில் உள்ள உட்புற எரித்தணல் எஞ்சின்களே [Internal Combustion Engines] பெரும்பான்மையாக நிறமற்ற, நுகர்ச்சி யற்ற நச்சு வாயுவான கார்பன் மொனாக்ஸைடை இயக்கத்தின் போது வெளியேற்றுகின்றன.

துர்வாயுக்கள் மாசுத் துணுக்குகள் இழைக்கும் இன்னல்கள்

பூமியில் கிடைக்கும் நிலக்கரி கடும் தீங்கு விளைவிக்கச் செய்வது. அனுகூலமற்ற துர்பேறுடைய கந்தகம் [Sulphur], பாதரசம் [Mercury] போன்ற கன உலோகங்கள், நிலக்கரியோடு சேர்ந்துள்ளன. அவற்றைச் சூடாக்கி நிலக்கரியிலிருந்து பிரித்து அகற்றுவது, நிதி கரைக்கும் செலவு ஏற்பாடாகும். கந்தக வெளிவீச்சு மனிதப் புப்புசங்களைப் [Human Lungs] பாதிப்பது. கந்தகம் சூழ்வெளி ஈரத்தில் கலந்து கந்தகாமிலமாகி [Suphuric Acid] ஆறு, ஏரிகளில் வாழும் மீன்களைக் கொல்கிறது. வரலாற்றுச் சின்னங்களையும், வண்ண மாளிகைகளையும் கரைப்படுத்துகிறது

நிலக்கரி, எரி ஆயில், எரி வாயு எரிந்து வெளியேற்றும் கரியமில வாயு [Carbon dioxide] சூழ்வெளியில் குவிந்து கொள்வது, முன்பு கூறிய இன்னலை விடவும் கொடியது. பூகோள வாயு மண்டலத்தில் கலக்கும் கரிமில வாயுப் பரிதியின் வெப்பத்தைக் கவர்ந்துப் பற்றிக் கொண்டு கண்ணாடி மாடம் போல் உட்தளத்தில் கனல் பெருக்கம் [Greenhouse Effect] செய்ய வல்லது. அமெரிக்காவும், பிரிட்டனும் புரிந்த ஆராய்ச்சி விளைவுகள், 21 நூற்றாண்டு மத்திமத்தில் 'கண்ணாடி மாடக் கனல் பெருக்கம் ' பத்தொன்பதாம் நூற்றாண்டு தொழிற் புரட்சி சமயத்தில் இருந்த அளவை விட இரட்டிப்பாகும் என்று எச்சரிக்கை செய்கின்றன. அந்த கனல்பெருக்கம் பூகோளச் சூழ்வெளி வாயு உஷ்ணத்தை 2 டிகிரி சென்டிகிரேட்டும், துருவப் பகுதிகளை ஏழு டிகிரி சென்டிகிரேட்டும் மிகையாக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள். அதனால் மழைப் பொழிவு அரங்கங்கள் மாறுபடலாம். வட பகுதியில் பாலைவனப் பிரதேசங்கள் உருவாகலாம். துருவங்களில் உறைந்து கிடக்கும் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரலாம். மனித இனத்திற்குப் பாதகம் செய்யும், அப்பெரும் துர்பேறுகள் மீளாத முறையில் [Irreversible Process] ஒரே திசையில் செல்லும் நியதியைப் பின்பற்றுபவை

ஓஸோன் வாயு பூதளத்தில் மனிதருக்கு நோய் நொடிகளை உண்டாக்குகிறது. மூச்சுத்தடை [Asthma], இருமல், மூச்சிழுப்பு, தொண்டைக் கரகரப்பு ஆகியவற்றை உண்டாக்க வல்லது, ஓஸோன் வாயு. மேலும் செடிகளுக்கும், தாவரங்களுக்கும் பங்கம் விளைவிப்பது. கண்ணால் காண முடியாத, நுகர்ச்சியில் அறிய முடியாத கார்பன் மொனாக்ஸைடு வாயுவில் மாட்டிக் கொண்டவர் தலைசுற்றி மயக்க முறுவர். நுகரும் பிராண வாயுவின் இடத்தில் நுழைந்து கொண்டு, சுவாசிப்போரின் புப்புசங்களில் நிரம்பி பெரும் இன்னல் தரும். அதைச் சுவாசித்த வயதான இருதய நோயளிகள் இளைஞரை விட அதிகமாக மருத்துவ மனைகளுக்கு அனுப்பப் படுகிறார்கள்.

பேரளவு நைட்டிரஜன் ஆக்ஸைடு வாயுவில் சிக்கிக் கொண்டவருக்கு இருமல் உண்டாகி, மூச்சு முடை ஏற்படும். நீண்ட காலமாய் அதன் நுகர்ச்சியில் ஈடுபட்டவர், மூச்சிழுப்பு நோய்களில் வீழ்ந்திடுவர். அதன் அமில மழை [Acid Rain] ஆறு, ஏரிகளின் மீன்வளங்களைக் கொல்வதோடு, நீச்சலிடுவோரையும் காயப் படுத்துகிறது. ஸல்ஃபர் டையாக்ஸைடு மூச்சுத்தடை, மூச்சிழுப்பு நோய்களைத் தருவதோடு, கண்ணெரிச்சல், மூக்கெரிச்சல், தொண்டை அரிப்பை உண்டாக்க வல்லது.

ஈய விஷம் [Lead Poison] அதிக அளவில் உட்கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு அபாயம் விளைவிக்க வல்லது. குழந்தைகளை ஞான சூனியமாக்கி, அவரது இரத்தச் சுத்தீகரிப்பு செய்யும் கிட்னியில் பிரச்சனைகளை [Lower IQs & Kidney Problems] ஏற்படுத்தும். வாலிபரும், வயதானவரும் ஈயத்தை உட்கொண்டால், மாரடைப்பும், மூளையடைப்பும் [Heart Attack, Stroke] உண்டாகும். நச்சு வாயுத் துணுக்குகள் [Toxic Ait Pollutants], கதிரியக்கத் துணுக்குகள், வாயுக்கள் [Radioactive Particles, Gases] மனிதருக்குப் புற்று நோயைத் தருபவை. பிறக்கும் மதலைகள் உடல் ஒச்சமுடன் பிறக்கும். தோல் எரிச்சல், கண்ணரிப்பை உண்டாக்கும். மூச்சிழுப்பை ஏற்படுத்தும்.

மனித இனம், உயிரினம் பயிரினத்தைப் பாழ்படுத்தும் கதிரியக்கம்

அணுமின்சக்தி நிலையங்கள், அணுவியல் துறைக்கூடங்கள், தீய்ந்த அணுவியல் பிளவு எருக்கள் மீள் சுத்திகரிப்புச் சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிவோர் பயிற்சிக் குறைவாலும், கவனப் பிசகாலும் விபத்துகளை ஏற்படுத்தித் தமக்கும், புறத்தே வாழ்வோருக்கும் பாதகம் இழைக்க வாய்ப்புக்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. கதிரியக்கம் தேய்ந்து குன்றிவரும் தணிவு நிலை, மேல் நிலை அணுக்கரு எருக்கழிவுகள் பல்லாண்டுகளுக்குப் பூமியின் ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப் படவேண்டும்.

துர்வாயுக்கள், மாசுத் துணுக்குகளை வடிகட்டும் சாதனங்கள்

மாற்றுத் தர எருக்கள் மின்சக்திப் படைப்புக்கு இருந்த போதினும் உலகில் நிலக்கரியும், எரிஆயிலும்தான் பிரதான எரிசக்தியாய்ப் பயன்படப் போகின்றன. பூதளவாதிகள் மதிப்பீடுகளின் கருத்துப்படி, நிலக்கரி குறைந்தது இன்னும் 200 ஆண்டுகளுக்கு உலகுக்கு எரிசக்தி அளிக்க நீடிக்கலாம். அடுத்தும் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களும், எரிஆயில் ஊற்றுகளும் கண்டுபிடிக்க ஏதுவாகலாம். ஸல்ஃபர் நீக்கிய நிலக்கரியை நிலையங்களில் உபயோகிக்கலாம். ஆனால் அந்த சுத்தீகரிப்புக்கு நிதிச் செலவு ஏற்பட்டு, யூனிட் மின்சார விலை அதிகமாகும். எரிஆயிலில் உள்ள 2.6% அளவிலிருந்து, அனுமதிக்கப்பட்ட 0.5% ஸல்ஃபர் அளவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், எரிஆயிலின் விலை 35% அதிகமாக ஏறுகிறது

நிலக்கரியுடன் தூளாக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்கள் அல்லது டாலமைட் [Pulverized Lime-stone, Dolomite] கலக்கப்பட்டு, ஸல்ஃபர் ஆக்ஸைடுகள் எழுவது தவிர்க்கப் பட்டது. பிறகு அவை இணைந்து திடமான ஸல்ஃபைட்டாகி, மின்னியல் வடிப்பு முறையில் [Electrostatic Precipitation] நீக்கப் பட்டன. நிலையங்களின் புகைபோக்கி வழியாக வெளியேறும் துணுக்குகள், சாம்பல் துகள்கள் 99% திறமுள்ள மின்னியல் வடிப்பு முறையிலும், யந்திரப் பிடிப்பு [Mechanical Collectors] மூலமும் தடுக்கப் பட்டன. மின்சக்தி நிலையங்களில் இரட்டை அடுக்கு முறையில் எரித்தணல் ஏற்பாடை [Two-Stage Combustion Process] அமைத்து, நைட்டிரஜன் ஆக்ஸைடுகள் உண்டாகும் மிகையான உஷ்ணம் தணிக்கப் பட்டது.

ஈயமற்ற பெட்ரோல் பயன்படுத்தப்பட்டு, ஈயம் உட்கொள்ளும் தீங்கு நீக்கப்பட்டுள்ளது. முன்னேறிய நாடுகளில் மோட்டர் வாகன வெளிவீச்சுப் பாதையில் வெளித்தடைக் கட்டுப்பாடு வடிகட்டுச் சாதனம் [Emission Control Filter] வைக்கப் பட்டுள்ளது. உலகெங்கும் பரவும் துர்வாயுக்கள், மாசுத் துணுக்குகள் போன்ற வெளிவீச்சுகளைத் தொழிற்துறைச் சாலைகளில் குறைக்கவும், வடிகட்டவும் தற்போது இரசாயனப் பொறியியல் நுணுக்கங்கள், மேம்பாடுகள் ஓரளவு கையாளப் பட்டு வருகின்றன. இரும்பு, எஃகுத் தொழிற்சாலைகள், செமென்ட் உற்பத்திச் சாலைகள், பெட்ரோலியம் பிரிப்பு மற்ற இரசாயனத் தொழிற்சாலைகள், காகிதம் தயாரிப்புச் சாலைகள் ஆகியவற்றுக்குத் தேவையான வடிகட்டு நீக்கிகள் பல [Filters, Vapour Collectors, Electrical Precipitators, Centrifugal Separators, Scrubbers, Absorbers, After-Burners, Catalytic Converters] தற்போது பயன்பட்டு வருகின்றன. தொழிற்கூடங்கள், மின்சக்தி நிலையங்கள் தமது நிதி நிலைக்கு ஏற்ப சுத்தீகரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. உலக நாடுகளில் கட்டுப்பாடு ஆணையகங்கள் வாயுத் தூய்மை வரையறை, நீர்வளத் தூய்மை எல்லை அளவு, நிலவளச் செம்மைப்பாடு ஆகியவற்றை நிர்ணயம் செய்து, கண்காணித்து வருகின்றன.

ஆதாரம் : National Coal Association Research

2.98275862069
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top