பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மின் விளைவுகள்

மின் விளைவுகள் (ELECTRICAL EFFECTS) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மின்சாரமானது பல வழிகளிலும் நமக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அது பயன்படும் இடங்களைப் பொறுத்து பல்வேறு வகையான மாற்றங்களை அடைகிறது உதாரணமாக எடுத்துக் கொண்டால்

  1. மின் ஆற்றல் ஒளி ஆற்றலாக மாற்றம் அடைந்து பயன்படுகிறது. (எ.கா) லேம்ப், டியூப்லைட்
  2. மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றம் அடைந்து பயன்படுகிறது. (எ.கா) மின்சாரமணி, பஸ்ஸர்
  3. மின்ஆற்றல் காந்த ஆற்றலாக மாற்றம் அடைந்து பயன்படுகிறது (எ.கா) மின்காந்தம்.
  4. மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றம் அடைந்து பயன்படுகிறது. (எ.கா) மின்தேய்ப்பு பெட்டி, ஹீட்டர்.
  5. மின் ஆற்றல் இரசாயன ஆற்றலாக மாற்றம் அடைந்து பயன்படுகிறது. (எ.கா) மின்மூலாம் பூசுதல், பேட்டரி சார்ஜிங்
  6. மின் ஆற்றல் மின்காந்த தூண்டலாக மாற்றம் அடைந்து, இன்டக்ஷன் மோட்டார், மற்றும் மின்மாற்றிகளில் பயன்படுகிறது.

மின்ஆற்றல் ஒளி ஆற்றலாக மாற்றம் அடைகின்றது

(எ.கா) லேம்பு, டியூப்லைட்

வெண்சுடர் விளக்கு

இவ்வகை விளக்குகளில் உள்ள மின் இழை பழுக்க சூடேற்றப்பட்ட வெப்ப நிலைக்கு வெப்பத்தை உண்டுப்பண்ணி ஒளியை தருவதால் இவ்வகை விளக்குகள் வெண்சுடர் விளக்கு என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டு வகைப்படும்.

  • வெற்றிட விளக்கு
  • வாயு நிரப்பட்ட விளக்கு

இவ்வகை விளக்குகளில் ஒரு கோள வடிவ கண்ணாடி வெளிக் கூடு பயன்படுத்தப்படுகிறது. இவ்விளக்குளின் உள்ளே ஒரு கண்ணாடி கட்டை (Stem) பொறுத்தப்பட்டிருக்கும். இக் கண்ணாடி கட்டையில் மின் இழையை தாங்கிப் பிடிக்க கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வகை விளக்குளில் டங்ஸ்டன் மின் இழை பொருத்தப்பட்டுள்ளது. விளக்குகளின் மேல் புறத்தில் மூடப்பட்டு விளக்கை பொருத்துவதற்கு ஏதுவாக கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

வெற்றிட விளக்கு (Vaccum Lamp)

இவ்விளக்கில் காற்று முழுவதும் நீக்கப்பட்டிருக்கும். ஏனெனில் காற்றில் உள்ள ஆக்ஸிஜனால் மின் இழை வெப்பமாகும் பொழுது எரிந்துவிடும். மின் இழைக்கு மின்சாரம் செல்லும் பொழுது மின் இழையில் உள்ள அதிக மின் தடையின் காரணமாக அதன் வழியாக எலக்ட்ரான்கள் ஓடும் பொழுது உராய்வு ஏற்பட்டு வெப்பம் உண்டாகிறது. இவ்வெப்பம் வெண் சுடர் நிலையை அடையும் பொழுது மின் இழையில் இருந்து ஒளி வெளிப்படுகிறது. இவ்வொளி கோல வடிவ கண்ணாடி சுவற்றில் பட்டு பிரதிபலிப்பு அடைந்து பலமடங்காக வெளியாகிறது.

வாயு நிரப்பப்பட்ட விளக்கு

வெற்றிட விளக்குகளில் உள்ள டங்ஸ்டன் நாளடைவில் கரைந்து கண்ணாடிச் சுவற்றில் உள் பக்கத்தில் படிந்து கருமை நிறத்தை உண்டாக்கும். இக்குறைப்பாட்டை நீக்க மந்த வாயுக்கள் நிரப்பப்பட்ட விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. மந்த வாயுக்கள் நிரப்புவதால் வாயுவானது மின் இழையிலிருந்து வெப்பத்தை கண்ணாடி சுவற்றிற்கு கடத்தும். இதனால் வெப்ப விரையம் ஏற்படும். இவ்வெப்ப விரையத்தை சமன் செய்ய இவ்வகை விளக்குகளின் மின் இழைகள் சுருண்ட சுருள் (Colled Coil) வடிவமாகவும் தயாரிக்கப்படுகிறது. சுருள் வடிவமாக தயாரிக்கப்படுவதால் மின் இழையின் நீளம் அதிகமாகிறது. இதனால் இவ்வகை விளக்குகள் அதிக திறன் கொண்டதாக இருக்கும்.

சூழல் விளக்கு

இவ்விளக்கில் நீண்ட கண்ணாடி குழாய் பயன்படுத்தப்படுகிறது. இக்கண்ணாடி குழாயின் உட்புறச் சுவற்றின் மிளிரக் கூடிய (Fluoresent) பாஸ்பர் பூச்சு பூசப்பட்டுள்ளது. கண்ணாடி குழாயின் இரு முனைகள் மூடப்பட்டு குறைந்த அழுத்தத்தில் மந்த வாயுவும் ஒரு துளி பாதரசமும் நிரப்பப்பட்டுள்ளது. கண்ணாடி குழாயின் இரு முனைகளிலும் எலக்ட்ரான் உமிழும் பூச்சு பூசப்பட்ட டங்ஸ்டன் மின்னிழை பொறுத்தப்பட்டுள்ளது. இம்மின் இழையின் ஒரு முனையுடன் ஒரு சோக் பொறுத்தப்பட்டுள்ளது. சோக்கில் ஒரு உள்ளகத்தில் ஒரு கம்பிச் சுருள் சுற்றப்பட்டிருக்கும். மின் விளக்கின் இருப் பக்கங்களில் உள்ள மின் முனையுடன் ஒரு துவக்கி (Starter) பொருத்தப்பட்டிருக்கும். துவக்கியில் ஒரு கண்ணாடி குமிழ் பொருத்தப்பட்டிருக்கும். இக்குமிழின் உள்ளே ஒரு ஈருலோக பட்டையில் மந்த வாயு நிரம்பப்பட்டிருக்கும்.

வேலை செய்யும் விதம்

இவ்வகை விளக்குகள் ஒரு வாயு ஊடகத்தின் வழியே மின்சாரம் செல்லும் போது ஏற்படும் விலைவால் வேலை செய்கிறது. வாயு ஊடகமானது முதலில் மின்சாரத்திற்கு அதிக மின் தடையை கொடுக்கும். ஒரு முறை மின்னோட்டம் ஊடகத்தின் வழியே ஏற்பட்டால் மின் தடை மிக அதிக அளவில் குறைந்து விடும்.

இவ்வகை விளக்கிற்கு மின்சாரம் செல்லும் போது மின்சுற்றானது சோக், மின் இழை துவக்கி வழியாக பூர்த்தி அடைகிறது. இதனால் துவக்கியின் மின் முனைகளுக்கு இடையே 230V மின்னழுத்தம் செலுத்தப்படுகிறது. இம்மின்னழுத்தத்தால் துவக்கியில் மந்த வாயுக்கள் வழியாக மின் சற்று பூர்த்தியடைகிறது. இந்நிலையில் மந்த வாயுக்கள் வெப்பமடைகிறது. இவ்வெப்பத்தால் துவக்கியின் ஈருலோகப் பட்டை ஒன்றையொன்று வெப்பத்தால் வளைந்து தொடும். இதனால் மந்த வாயுவின் வழியாக செல்லும் மின்சாரம் நிறுத்தப்படுவதுடன் மந்த வாயு குளிரும். வெப்ப நிலை குறைவதால் ஈருலோகப்பட்டை ஒன்றையொன்று விட்டு விலகும். மின்சுற்று துண்டிக்கப்படும். மின்சுற்று துண்டிக்கப்படுவதால் சோக்கில் மின்சாரம் தடைபடும். எனவே, சோக்கில் மின்சாரம் சென்ற போது உண்டான காந்தபுலம் குறைகிறது. குறையும் காந்த புலம் சோக்கின் கம்பிச்சுருளை வெட்டுவதால் சோக்கில் தானே தூண்டும் மின் இயக்கு விசை தூண்டப்படும். இம்மின்னியக்கு விசையானது (1200V) மிக அதிகமாக இருக்கும். இம்மின் அழுத்தம் விளக்கின் இரு முனைக்கு இடையில் செலுத்தப்படும் பொழுது விளக்கின் வாயு ஊடகத்தின் வழியே மின்னோட்டம் ஏற்படுகிறது. இதனால் மின் சுற்று விளக்கின் வழியே பூர்த்தியடையும். விளக்கின் வழியே எலக்ட்ரான்கள் ஓடும் பொழுது மெர்குரி மற்றும் மந்த வாயுக்களின் மூலக் கூறுகளின் மீது மோதிச் செல்கிறது. இம்மோதலால் குறைந்த அலைநீளமுடைய புற ஊதாக் கதிர்கள் உண்டாகும். இக் கதிர்களை நம் கண்ணால் காண இயலாது. இக்கதிர்கள் விளக்கின் மிளிரக் கூடிய பாஸ்பர் பூச்சின் மீது படும்பொழுது அவை பிரதிபலிக்கப்பட்டு அலை நீளம் அதிகமாகி நம் கண்ணுக்கு புலப்படும் ஒளியாக வெளிவருகிறது.

விளக்கு எரிய தொடங்கிய பின் விளக்கு எரிய 110V போதுமானது. மீதமுள்ள மின்னழுத்தம் (120V) சோக்கில் மின்னழுத்த இழப்பு செய்யப்படுகிறது.

மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றம் அடைகிறது

(எ.கா) மின்சாரமணி, பஸ்ஸர்.

மின்சார மணி (Electric Bell)

மின்சார மணி என்பது மின்காந்தத்தின் மூலம் செயல்படக்கூடிய ஒரு சாதனம் ஆகும். படத்தில் M என்ற மின்காந்தத்திலுள்ள கம்பிச்சுருளின் ஒரு முனை T என்ற டெர்மினலுடன் இணைக்கப் பட்டுள்ளது. மறுமுனையானது R என்ற மிருதுவான இரும்புத்துண்டுடன் பொருந்திய "S" என்ற வளைந்த எஃகு ஸ்பிரிங்குடன் இணைக்கப் பட்டுள்ளது. மின் காந்தத்தின் எதிரில் அமைந்துள்ள மிருதுவான இரும்புத் துண்டுடன் H என்ற சிறு சுத்தியல் இணைக்கப்பட்டிருக்கிறது. அது G என்ற கிண்ணத்தில் மோதிசப்தத்தை உண்டாக்கும் வண்ணம் T, டெர்மினலுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மின்சார மணிக்கு மின்சப்ளை கொடுத்தவுடன் மின்சுற்று பூர்த்தியாகி மின் காந்தமானது காந்த தன்மையை அடைகிறது. இவ்வாறு ஏற்படும் காந்தப்புலம் தன் எதிரேயுள்ள இரும்புத்துண்டை கவர்ந்து இழுக்கும். அச்சமயம் இரும்புத்துண்டுடன் இணைக்கப்பட்ட சிறு சுத்தியில் நகர்ந்து G என்ற கிண்ணத்தில் மோதி ஒலியை உண்டாக்கும். இரும்புத்துண்டு நகர்ந்தவுடன் மின்சுற்று துண்டிக்கப்படுகிறது. மின்காந்தமானது காந்தத் தன்மையை இழக்கிறது. இதனால் இரும்புத்துண்டானது ஸ்பிரிங்கின் உதவியுடன் பின்னோக்கி சென்று மீண்டும் மின்சுற்றை பூர்த்தியடையச் செய்கிறது. மீண்டும் மேற்கூறிய நிகழ்வுகள் நடைபெறும். இவ்வாறு தொடர்ந்து நடைபெறுவதால் மின்சாரமணி தொடர்ந்து ஒலியை உண்டாக்கும். அதுவரை சுவிட்ச் ஆன் நிலையில் இருக்க வேண்டும்.

பஸ்ஸர் (Buzzer)

இதுவும் ஒரு வகை மின்சார மணி தான். ஆனால் அடிவிழும் உலோக மணிக்கூடும் அதில் அடிக்கும் சிறு சுத்தியல் போன்ற கம்பியும் இதில் கிடையாது. இதில் அனுநாதம் செய்யாத உலோகம் உள்ளது. அதற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள உலோக ஆர்மச்சூர் ஒன்று அதிரும்போது அனுநாதம் செய்யாத உலோகமானது இனிய ஒலியை கொடுக்கிறது.

மின் ஆற்றல் மின் காந்த ஆற்றலாக மாற்றம் அடைகின்றது

(எ.கா) மின்சுற்று துண்டிப்பான், தந்திக்கருவி.

காந்த அடிப்படையில் மின்சுற்று துண்டிப்பான் (Magnetic Circuit Breaker)

படத்தில் "D" என்ற மின் கருவிக்கு மின்கலத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. A என்ற மின்கடத்தியானது "S" என்ற ஸ்பிரிங் மூலம் P என்ற முனையை எப்போதும் தொட்டுக்கொண்டிருப்பதால் மின்சுற்று பூர்த்தியாகி மின்னோட்டம் பாயும், E என்ற மின்காந்தத்தில் மின்னோட்டம் குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமாகும்போது அதன் இழுவிசை அதிகமாகி A என்ற கடத்தியை தன்னோக்கி இழுக்கும். அப்போது P என்ற முனையில் மின்சுற்று துண்டிக்கப்பட்டுவிடுவதால் மின் கருவிக்கு மின்சப்ளை இருக்காது. மின்காந்தத்தில் பாயும் மின்னோட்டம் குறைந்தால் அதன் இழுவிசை குறைந்து A என்ற கடத்தி தன் பழைய இடத்தை அடைந்து மின்சப்ளைத் தரும்.

தந்திக்கருவி

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவில் செய்தியை அனுப்பும் தந்தி முறை முதன்முதலில் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்டது. செய்தி அனுப்பும் கருவிக்கு மோர்ஸ் கீ என்றும், செய்தியை வாங்கும் கருவிக்கு மோர்ஸ் ஒலிப்பான் என்றும் பெயர்.

மின்கலத்திலிருந்து மின்சுற்று K என்ற மோர்ஸ் கீ, M என்ற மின்காந்தம் ஆகியவற்றின் வழியாகச் சென்று பூர்த்தியடைகிறது. மின்காந்தத்தின் மேலே "A" என்ற நெம்புகோல் உள்ளது. அது S என்ற ஸ்பிரிங் காரணமாக Y என்ற ஆணியைத் தொட்டுக்கொண்டிருக்கும். மோர்ஸ் கீயை அழுத்தும்போது மின்சுற்று பூர்த்தியாகி மின்காந்தமானது நெம்புகோலைத் தன் பக்கம் இழுக்கிறது. எனவே, அதன் முனை X என்ற ஆணியில் கட் என்ற ஒலியை உண்டாக்கும். மோர்ஸ் கீயை அழுத்துவதை விட்டுவிட்டால் மின்காந்தம் A என்ற நெம்புகோலை இழுத்துபிடிக்காமல் விட்டுவிடும். எனவே அதன் முனை Y என்ற ஆணியில் கடா என்ற ஒலியை உண்டாக்கும். மோர்ஸ் கீ உள்ள இடமும், மோர்ஸ் ஒலிப்பான் உள்ள இடமும் வெவ்வேறு என்பதால் மின்சுற்றில் ஒரு முனை நில இணைப்பு (Earthing) செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். மின்கடத்தியாக பூமி பயன்படுகிறது. மோர்ஸ் கீயை விட்டுவிட்டு அழுத்துவதால் கட், கடா என்ற ஒலிகளை செய்தியை பெறும் இடத்தில் ஏற்படுத்தலாம். இவ்வொலிகளை கொண்டுதான் செய்திகள் அனுப்பப்படுகின்றன.

வெப்பமூட்டும் மின்சாதனம் (Electric Heater)

மின்சாரம் பாய்வதனால் வெண்சுடர் நிலைக்கு வெப்பமடைந்து, வெப்பத்தை வெளியிடும்படி அமைக்கப்பட்ட மின்கடத்திக்கு வெப்பமூட்டும் பகுதி எனப் பெயர். குரோமியம் பூசப்பட்ட சுருள் வடிவ குழாயினுள் ஹீட்டிங் எலிமெண்ட் வைக்கப்பட்டு அதன் இரு முனைகளுக்கும் மின் சப்ளை தரப்பட்டுள்ளது. ஹீட்டிங் எலிமெண்ட் என்பதன் வழியாய் மின்சாரம் பாய்வதால் அது வெளிக்குழாயை தொட்டுவிடாதபடி காப்பிடப்பட்டு இருக்கும். இந்த மின்சாதனத்தை தண்ணீரினுள் மூழ்கி இருக்கும்படி வைத்து மின் சப்ளை கொடுத்தால் தண்ணீர் வெப்பமடைகிறது. இவ்வகை சாதனத்திற்கு 'இம்மர்சன் வாட்டர் ஹீட்டர்’ எனப் பெயர்.

மின் தேய்ப்பு பெட்டி

மின்தேய்ப்பு பெட்டியில் மின்சக்தியானது வெப்ப சக்தியாக மாற்றி மின்தேய்ப்பு பெட்டியின் அடியில் உள்ள உலோக பாகத்தை சூடாக்க பயன்படுத்தப்படுகிறது. மின்தேய்ப்பு பெட்டியின் அடிபாகமானது கடினமாகவும், அதே சமயம் விலை மலிவான உலோகமாகவும் இருக்க வேண்டும்.

அடித்தட்டு அல்லது தேய்ப்புத் தட்டு (Sole Plate)

கனமான தேனிரும்பால் ஆன அடித்தட்டுதான் துணி மீது வைத்து அழுத்தப்படுகிறது. தேய்ப்புப் பெட்டியின் உட்பக்கமாக வைக்கப்பட்டுள்ள மின் வெப்ப இழையானது சூடாகி, அதன் சூடானது இரும்புத் தேய்ப்புத் தகட்டிற்கு மாற்றப்படுகிறது. இவ்வாறாக தேய்ப்புத் தட்டு வெப்ப மூட்டப்படுகிறது. இது மற்ற பாகங்களையும் தாங்குகிறது. இதில் மின்சாரம் பாய்வதில்லை. இதற்கு ஆங்கிலத்தில் சோல் பிளேட் (Soleplate) என்ற பெயருண்டு. மற்ற பாகங்களை இறுக்கிப் பிடிக்க ஏதுவாக மரையாணி ஒன்று மையத்தில் செங்குத்தாக நிற்கும்படி வைத்து பற்ற வைப்பு (Welding) செய்யப்பட்டிருக்கும். அதே போல் மேலிருந்து திருகப்படும். மரையாணி நுழைந்து இறுகி பிடிக்க மரைகொண்ட துளை ஒன்று அல்லது இரண்டு இருக்கும். இந்த அடித்தகடு கனமாக இருந்தால் தான் நல்லது. அடிப்பாகம் சீராக ஒரே மட்டமாகவும், சுத்தமாகவும் இருத்தல் வேண்டும். எனவே அரைப்புச் செயல் (சர்பேஸ் கிரைண்டிங்) செய்யப்பட்டு குரோமிய முலாம் பூசப்பட்டிருக்கும். இது அரிக்கப்படாத குணமும் இருப்பதால் எளிதில் சேதமடையாத குணமும் உண்டு.

மைக்கா அட்டை மற்றும் கல்நார் அட்டை

சூடேற்றும் மின்வெப்ப இழையானது (Heating Element) மைக்கா அட்டையினுள் பதிக்கப்பட்டிருக்கும். அந்த அட்டையின் மேலும் கீழும் மற்றொரு மைக்கா மற்றும் கல்நார் அட்டை வைக்கப்பட்டிருக்கும். மைக்கா மின்கடத்தாப் பொருள். அத்துடன் அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடியது. கல்நார் அட்டை மின்சாரம் கடத்தாப்பொருள் மற்றும் வெப்பம் கடத்தாப் பொருள். எனவே கல்நார் அட்டை அழுத்தத்தட்டு மற்றும் மேலே உள்ள பகுதிக்கு வெப்பம் பரவுவதை தடுக்கிறது.

மின்வெப்ப இழை

நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த நைக்ரோம் என்ற கலப்பு உலோகத்தாலான மெல்லிய மின்தடைப்பட்டைக் கம்பியை மைக்கா அட்டையில் பதித்து வைக்கப்பட்டு அதன் இரு முனைகளும் மின் இணைப்பு செய்வதற்கு ஏற்ப பொருத்தப்பட்டிருக்கும். இது தான் வெப்பம் கொடுக்கும் பகுதியாகும். இதன் வழியே மின்சாரம் பாயும்போது அதிக மின்தடையின் காரணமாக வெப்பத்தைக் கொடுக்கும். அந்த வெப்பம்தான் அடிப்பாகமாகிய தேய்ப்புத்தட்டை (Sole Plate) சூடாக்குகிறது. நைக்ரோம் என்ற கலப்பு உலோகக் கம்பியானது. அதிக மின்தடையைக் கொண்டது. இது வெப்பமூட்டும் குணமும், நீடித்து உழைக்கும் குணமும் கொண்டது. நீளம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அலைவடிவத்தில் சுற்றப்பட்டிருக்கும்.

அழுத்தத் தகடு

மேல் மைக்கா அட்டை மற்றும் கல்நார் அட்டைக்கும் மேலாக வைக்கப்படுகின்ற தேனிருப்பு தகட்டை இது குறிக்கும். இது துணிகளை அழுத்தி தேய்ப்பதற்கு தேவையான பளுவையும், ஒன்று அல்லது இரண்டு திருகி மூலம் அடித்தகட்டுடன் கெட்டியாகப் பொருத்தப்பட்டிருக்கும். இது இடையில் உள்ள மைக்கா அட்டை, கல்நார் அட்டை, வெப்ப மின்இழையை நகராமலும், வெப்பத்தால் மின்இழை துண்டிக்காமலும் இருக்கும்படி செய்கிறது.

மேல்முடி

இது அடித்தட்டு மற்றும் அதன்மேல் வைக்கப்பட்ட பாகங்கள் அனைத்தையும் மூடிப்பாதுகாக்கும் தொப்பி போன்ற பாகமாகும். இதன் உச்சியில் கைப்பிடி, மின் இணைப்பு சாக்கெட் போன்றவை இருக்கும். பொதுவாக பேக்லைட் பொருளால் கைப்பிடி செய்யப்பட்டிருக்கும் மேல் மூடியில் உள்ள வழியின் மூலம்தான் மின்கடத்திகள் மூன்றும் (பேஸ், நியூட்ரல் எர்த்) உள்ளே மின் முனைகளில் இணைக்கப்பட்டிருக்கும்.

கைப்பிடி

கைப்பிடியை பிடித்து தான் தேய்ப்பு பெட்டியை துணியின் மேல் தேய்க்க வேண்டும். எனவே மின் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க அதிக மின்தடையை உடையதும், அதிக வெப்பத்தை தாங்க கூடியதுமான பேக்லைட் அல்லது எபொனைட் என்ற பொருளால் செய்யப்பட்டிருக்கும். மேல்மூடியுடன் திருகு மூலம் இணைக்கப்பட்டிருக்கும். மின்சார கடத்தி நுழைவதற்கான துளையும் இதில் இருக்கும்.

தானே இயங்காத மின்தேய்ப்பு பெட்டி (Non Automatic ironBox)

இவ்வகை தேய்ப்பு பெட்டிக்கு மின் இணைப்பு கொடுத்தவுடன், தேய்ப்பு பெட்டியிலுள்ள வெப்ப மூட்டும் மின் வெப்ப இழை (Heating Element) வழியே மின்னோட்டம் பாய்ந்து, அது வெப்பம் உண்டாகி தன் அடியே உள்ள தேய்ப்புத் தகட்டை சூடேற்றும். நேரம் ஆகஆக சூடு அதிகமாகி கொண்டே இருக்கும். எனவே போதிய அளவு வெப்பமடைந்து விட்டது என்றால், அதற்கு மேல் வெப்பம் தேவையில்லை என நாம் உணரும்போது நிறுத்தி இணைப்பியை பயன்படுத்தி மின் சுற்று துண்டிக்கப்படுகிறது. வெப்பம் தணிய ஆரம்பிக்கும். சூடு போதிய அளவு ஏறிவிட்டதா என்பதை தேய்ப்பு பெட்டியிலிருந்து வரும் அனல் காற்று மூலமோ, தேய்ப்பு செய்யப்பட்ட இடத்தை தொட்டுப் பார்த்து உணர்வதன் மூலமோ அறியலாம்.

இணைப்பி மூலம் கட்டுப்படுத்தினால் வெப்பம் குறைந்து கொண்டே போகும். வெப்பம் குறிப்பிட்ட அளவிற்கு கீழே குறைந்து போனால் தேய்ப்பு சரியாக ஏற்படாது. அதை உணரும் போது இணைப்பியின் மூலம் மின் இணைப்பு கொடுத்து சூடேற்ற வேண்டும். இவ்வாறாக மின்தேய்ப்புப் பெட்டியில் மின்சாரம் பாய்வதை இணைப்பி மூலம் கட்டுப்படுத்தி வெப்பமானது குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும்படி செய்திடலாம். இதன் மூலம் மின் ஆற்றல் இரசாயன ஆற்றலாக மாற்றம் அடைகின்றது. (எ.கா) மின்முலாம் பூசுதல், பேட்டரி சார்ஜிங்

நேர்திசை இயங்கிகள் மின் சக்தியினை இயந்திர சக்தியாக மாற்றுகிறது. இவை நேர் திசை மின்சாரத்தில் (DC) செயல்படுகின்றன. இதன் அமைப்பு நேர்திசை மின்னாக்கியைப் போல் அமைந்துள்ளது. நேர் திசை இயங்கிகள் பாரடேயின் மின்காந்த தூண்டல் விதிப்படி வேலை செய்கின்றன. பொதுவாக இயங்கிகளின் சுழலும் திசையானது பிளமிங்கின் இடக்கை விதிப்படி கண்டறியப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.95238095238
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top