பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மின்னியல்

மின்னியல் குறித்த தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகாயம் என்னும் ஐம்பெரும் சக்திகளைக் கொண்ட இப்பிரபஞ்சத்தில் ஆறாவது மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்திருப்பது மின்சாரம் என்றால் அது மிகையில்லை. மனிதனுடைய அன்றாடத் தேவைகளில், மின்சாரம் என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. உணவில்லாமல் கூட மனிதன் வாழ்ந்து விடுவான் போலிருக்கிறது ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பெரும்பாலும் மின் சக்தியைத்தான் நம்பியிருக்கிறோம். மின்சக்தி ஒருவகை ஆற்றலாகும். காந்த ஆற்றலும், மின் ஆற்றலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. உலகில் உள்ள அனைத்து பொருட்களும் எளிதில் பிரிக்க முடியாத சிறு மூலக் கூறுகளாலும், மூலக்கூறுகள் அதை விட சிறிய அணுக்களாலும் ஆனது தற்கால கொள்கைப்படி மின்னோட்டம் என்பது எலக்ட்ரான்களின் ஓட்டம் ஆகும். ஆகவே எலக்ட்ரான்கள் உள்ள அனுப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம் ஆகும்.

அணு அமைப்பு

அணுவின் மையப்பகுதி நியுக்ளியஸ் எனப்படுகிறது. நியுக்ளியஸ் எனப்படும் உட்கருவில் புரோட்டான்களும், நியுட்ரான்களும் உள்ளன. புரோட்டான்கள் நேர்மின்சுமை கொண்டவையாகும். நியுட்ரான்கள் மின் சுமை அற்றவையாகும். உட்கருவைச்சுற்றி நீள்வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள், சுற்றி வருகின்றது. எலக்ட்ரான்கள் எதிர் மின் சுமை கொண்டவை. ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் எண்ணிக்கையும் புரோட்டான்களின் எண்ணிக்கையும் சமம் ஆகும். ஓர் அணுவிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (அல்லது) புரோட்டான்களின் எண்ணிக்கை அவ்வணுவின் அணு எண் எனப்படும். ஓர் அணுவிலுள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் எண்ணிக்கை அவ்வணுவின் அணு எடை எனப்படும். அணு எடையில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை எடை ஒப்பிடுகையில் கணக்கிடுவதில்லை. ஏனெனில் அதன் எடை மிகக்குறைவு ஆகும். ஓர் அணுவில் நேர் மின்சுமை கொண்ட புரோட்டான்களின் எண்ணிக்கையும் எதிர் மின்சுமை கொண்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதால் ஓர் அணு எவ்வித மின் சுமையும் அற்றதாகும்.

மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் முறைகள்

அணுவிலிருந்து சில எலக்ட்ரான்களை பிரித்து எடுப்பதன் மூலம் நாம் மின் உற்பத்தி செய்யலாம் இவ்வாறு எலக்ட்ரான்களை பிரித்தெடுப்பதற்க்கு ஆறு வகையான சக்திகள் பயன்படுத்தப் படுகின்றன.

 1. உராய்தல் (Friction)
 2. ஔி (Light)
 3. வெப்பம் (Heat)
 4. அழுத்தம் (Pressure)
 5. இரசாயண மாற்றம் (Chemical Action)
 6. காந்த சக்தி (Magnetism)

உராய்வினால் (Friction) ஏற்படும் மின் உற்பத்தி

இரண்டு பொருட்களை ஒன்றோடு ஒன்று உராயச்செய்தால் ஒன்றிலிருந்து எலக்ட்ரான்கள் வெளிப்பட்டு மற்றொரு பொருளோடு இணைந்து விடும். எலக்ட்ரான்களை இழந்த பொருள் (பாசிடிவ்) சார்ஜையும், எலக்ட்ரான்களை சேர்த்துக் கொண்ட பொருளானது நெகடிவ் (-) சார்ஜையும் பெறும். இவ்வாறு பெறக்கூடிய மின்சாரத்திற்கு” ஸ்டேட்டிக் எலக்ட்ரிசிட்டி” (Static Electricity) என்று பெயர். உராய்வினால் எலக்ட்ரான்களை வெளிப்படகூடிய பொருட்கள் கண்ணாடி ரப்பர், மெழுகு, சில்க், ரேயான் நைலான் போன்றவையாகும்.

ஒளியினால் (Light) ஏற்படும் மின் உற்பத்தி

ஒரு பொருளின் மீது ஒளி (light) பட்டவுடன் அதிலிருந்து எலக்ட்ரான்கள் வெளிப்பட்டு மின்னோட்டத்தை ஏற்படுத்தும் இதற்கு ஃபோட்டோ செல் (Photo Cell) என்ற கருவி துணைபுரிகிறது. அதாவது Photo cell என்பது ஒளியை மின்சாரமாக மாற்றித் தருகிறது. இவ்வாறு ஒளிபட்டவுடன் எலக்ட்ரான்களை வெளியேற்றும் குணமுடைய பொருட்களுக்கு ஃபோட்டோ சென்சிடிவ் (Photo Sensitive) பொருட்கள் என்று பெயர். (எ.கா) சோடியம், பொட்டாசியம், லித்தியம், சீசியம் போன்றவை.

அழுத்தத்தினால் (Pressயre) ஏற்படும் மின் உற்பத்தி

ஓர் அணுவின் வெளிப்புறத்தில் உள்ள எலக்ட்ரான்களை அழுத்தத்தின் மூலம் பிரித்தெடுத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் முறைக்கு ஃபீஸோ எலக்ட்ரிசிட்டி (Piezo Electricity) என்று பெயர். காற்று ஒலி அலைகளானது டெலிபோனில் உள்ள டயாபார்ம் (diapharm) என்ற சாதனத்தை அழுத்துவதால் ஒலி அலைகளுக்குத்தக்கவாறு மின்சார அலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.

வெப்பத்தினால் (heat) ஏற்படும் மின் உற்பத்தி

இரண்டு வெவ்வேறு உலோகக்கம்பிகளை ஒரு முனையில் இணைத்து இணைக்கப்பட்ட பாகத்தை வெப்பப்படுத்துவதன் மூலம் மின்னோட்டத்தை உண்டாக்கலாம். சூடுபடுத்தும் முனைக்கு எதிர்முனையில் ஒரு கால்வனா மீட்டரை இணைத்து, அதில் ஏற்படும் மின்னோட்டத்தை அறியலாம்.

இரண்டு உலோகத் தகடுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து வெப்பப்படுத்துவதன் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தெர்மோகப்ளிங் (Thermocoupling method) முறை என்று பெயர்.

மேற்கூறிய நான்கு வழிகளிலுமே அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலாது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரமும் சக்தி மிக்கதாக அமையாது. ஆகையால் மீதமுள்ள இரு முறைகளின் மூலம் தான் அதிக அளவு சக்தி வாய்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இராசாயன முறையில் (Chemicalaction) ஏற்படும் மின்உற்பத்தி

இராசாயன முறையில் அணுவில் இருந்து எலக்ட்ரான்களை பிரித்து எடுத்து மின் உற்பத்தி செய்வது கெமிக்கல் ஆக்ஷன் (Chemical action) எனப்படுகிறது. பிரைமரி செல் மற்றும் செகன்டரி செல்களில் இம்முறையில்தான் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.

டார்ச் லைட்டில் பயன்படுத்தப்படும் செல்லுக்கு பிரைமரி செல் என்றும், கார், மோட்டர் சைக்கிள் போன்ற வாகனங்களில் பயன்படுத்துவது செகன்டரி செல் எனவும் அழைக்கப்படுகிறது.

காந்த சக்தியினால் (Magnetism) ஏற்படும் மின்உற்பத்தி

இம்முறையில் காந்த சக்தி மூலம் அணுவிலிருந்து எலக்ட்ரான்கள் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு ஜெனரேட்டர் போன்ற பெரிய இயந்திரங்கள் பயன்படுகின்றன. ஜெனரேட்டரில் உள்ள சக்தி வாய்ந்த காந்தங்களாலும், கம்பிகள் சுற்றப்பட்ட ஆர்மச்சூரினாலும் சக்திவாய்ந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்முறையில் தான் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேற்கூறிய அனைத்து முறைகளிலும் மின் சக்தியானது உற்பத்தி செய்யப்பட்டு நம் நாட்டின் மின்சார தேவையானது பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களையும், அவைகளில் மின்சாரம் எம்முறைகளில் தயாரிக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

மின்உற்பத்தி நிலையங்கள் (Power Generating Plants)

தற்போது நடைமுறையில் ஏழு வகையான மின் உற்பத்தி நிலையங்கள் நம் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சுமார் 7000MW மின்சாரமானது தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையங்களின் வகைகள்

 1. நீர் மின்நிலையம்
 2. அனல் மின்நிலையம்
 3. அணு மின்நிலையம்
 4. வாயு மின்நிலையம்
 5. டீசல் மின்நிலையம்
 6. சூரிய ஒளி மின்நிலையம்
 7. காற்றாலை மின் நிலையம்

அனல் மின்நிலையம்

நிலக்கரி, பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) போன்றவை பாய்லர், பிளான்ட்டில் எரிக்கப்படும் போது பாய்லரில் உள்ள தண்ணீரானது வெப்ப ஆற்றல் மூலம் நீராவியாக மாற்றப்படுகிறது. ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்டீம்டர்பன் வழியாக இந்த நீராவி செலுத்தப்படும் போது, டர்பைன் சுழற்றப்படுவதால் இவ்வெப்ப ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்பட்டு, ஜெனரேட்டரின் உதவியில் மின் ஆற்றலாக கிடைக்கிறது.

இவ்வகை மின் நிலையங்கள் தமிழகத்தில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

நீர் மின்நிலையம்

அணைக்கட்டில் நீரை தேக்கி வைத்து ராட்சத குழாய்களின் மூலம் கொண்டு செல்லப்பட்டு வேகமாக தண்ணீர் டர்பைனில் (Water turbine) செலுத்துவதால், டர்பைன் வேகமாக சுழல்கிறது. நீரின் இயக்க ஆற்றல் டர்பைனில் இயந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது.

இவ்வகையான மின் நிலையங்கள் தமிழகத்தில் மேட்டூர், குந்தா, பைகாரா, சுருளியாறு, காடம்பாறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

அணுமின் நிலையங்கள்

யுரேனியம், தோரியம் போன்ற தனிமங்களின் அணுவைப் பிளப்பதன் மூலம் அளவற்ற வெப்பம் கிடைக்கும். இந்த கொள்கையை பயன்படுத்தித் தான் அணுமின் நிலையம் செயல்படுகிறது. அதை உலைகளில் பிளக்கப்படும் அணுக்கருவினால் கிடைக்கும் அதிகப்படியான வெப்ப ஆற்றலானது நீராவியை உருவாக்குகிறது. இது ஸ்டீம்டர்பைனை சுழற்றப் பயன்படுகிறது. டர்பைனுடன் இணைக்கப்ட்ட ஜெனரேட்டர் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றித் தருகிறது. இவ்வகையான மின் நிலையங்கள் சென்னை அருகே கல்பாக்கம் என்ற இடத்திலும் ராஜஸ்தான் மாநிலத்தில் தாராப்பூர் என்ற இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் நிலையங்களால் அணுக்கசிவு ஏற்பட்டால் மக்களுக்கு தீங்கு ஏற்படவும் வாய்ப்புண்டு.

வாயு மின் நிலையம்

டர்பைனை இயக்குவதற்கு நிலத்தடி வாயுவைப் பயன்படுத்துவதன் மூலம் டர்பைனுடன் இணைக்கப்பட்ட ஜெனரேட்டரில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் ராமநாதபுரம், குத்தாலம் போன்ற இடங்களில் இவ்வகை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

டீசல் மின் நிலையம்

தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கும் பெரும் தொழிற்சாலைகளுக்கும், பதனிடும் பணி தொழிலகங்களுக்கும் தடையற்ற மின்சாரம் தேவை என்பதால் இவ்வகை மின்நிலையங்கள் பயன்படுகின்றன. இத்தேவைகளை பூர்த்தி செய்ய பெரும் டீசல் எஞ்சின்களை அமைத்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.

ஹோட்டல்கள், மருத்துவமனைகள், நகைக் கடைகள், திரையரங்குகள், துறைமுகங்கள் போன்ற இடங்களில் தேவைக்கேற்ப பல்வேறு திறன் கொண்ட சிறிய, பெரிய டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுகின்றன.

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்தல் (Solar Power Plant)

சிறிய அளவில் மின் உற்பத்தி செய்திட தேவையான இடங்களில் சோலார் எனர்ஜி அமைப்புகள் கட்டிடத்தின் கூரைகளில் அமைக்கப்படுகின்றன. சூரியனின் வெப்ப ஆற்றலை பயன்படுத்தி மின் உற்பத்தியானது செய்யப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மேலும் டிராபிக் சிக்னல் லைட் போன்ற இடங்களில் பயன்படுகிறது.

காற்றாலை மின்நிலையங்கள்

வேகமாக வீசும் காற்றின் விசையை பயன்படுத்தி, காற்றாலைகள் சுழற்றப்பட்டு அதன் மூலம் இயக்கப்படும் ஜெனரேட்டரிலிருந்து மின்சாரமானது உற்பத்தி செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம் கயத்தாறு, முப்பந்தல் என்ற இடங்களிலும் கோவை மாவட்டத்தில் பல்லடம் - உடுமலைப்பேட்டை சாலையிலும் காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மின் பாதுகாப்பு வழிமுறைகள் (ELECTRICAL SAFETY AND PRECAUTION)

மின் துறையில் வேலை செய்யும் போது, மின்சாதனங்களுக்கோ பணியாளர்களுக்கோ பாதிப்பு ஏற்பாடாமல் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிக அளவில் சேதத்தை உண்டாக்கும். உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவருக்கு அதில் உள்ள மின்சாதனங்களின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் தவறான முறையில் மின்சாதனத்தை கையாண்டு விபத்துகள் ஏற்பட நேரிட்டால் பொருட்களுக்கும், அதை கையாண்டவர்களுக்கும் ஏற்படும் இழப்பு என்பது ஈடுகட்ட முடியாத ஒன்றாகிவிடும். மின்விபத்து எதிர்பாராமல் ஏற்படக் கூடியது. விபத்துகள் என்பது தானாக ஏற்படுவதில்லை. பெரும்பாலும் கவனக்குறைவால் ஏற்படுகிறது. இவ்வித விபத்துகளால் பணியாளர்களுக்கு காயம் ஏற்படலாம். உடற்குறைபாடு ஏற்படலாம். பொருட்களின் பாதிப்பால் வேலை தடைபட்டு போவதால் நஷ்டமும் ஏற்படலாம். ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் மின்துறையில் வேலை செய்பவர்கள் சில குறிப்பிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

மின் பணியாளர்கள் கவனிக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

 • மின்சாதனங்களை பயன்படுத்தும் முன்பு அதன் செயல்பாட்டினை நன்கு அறிந்து பயன்படுத்த வேண்டும். தவறாக பயன்படுத்த கூடாது. மின்சார இணைப்புக் கம்பிகளை பொருத்தும்போது அதற்குரிய வரையறைகளின்படி சரியாகப் பொருத்துதல் வேண்டும்.
 • மின்சாதனங்களை பழுதுபார்க்கவும், இயக்கவும், ஆய்வு செய்யவும் அதற்கென மின்துறையில் பயிற்சி பெற்ற தகுதியும் திறமையும் வாய்ந்த பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
 • மின்கம்பங்களிலும், டவர் கம்பங்களிலும் ஏறி வேலை செய்யும் பணியாளர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு பெல்ட்டும் (Safety Belt) கையுறையும் அணிந்திருக்க வேண்டும்.
 • ஏணியின் மீது ஏறிநின்று வேலை செய்யும்போது ஏணியைப் பிடித்துக்கொள்ள மற்றொருவரை உடன் வைத்துக்கொள்வது நல்லது. தேவையெனில் கம்பத்தையும், ஏணியையும் நுனியில் கயிற்றால் கட்டிக்கொள்வது பாதுகாப்பானது.
 • ஓவர்ஹெட்லைன் ஒயர்களை டிஸ்சார்ஜ்ராடு (Discharge Rod) கொண்டு எர்த் செய்தபின் கம்பத்தில் ஏறி வேலை செய்ய வேண்டும்.
 • மின்சாரத்தால் இயங்கும் கைக்கருவிகளும், சப்ளை ஒயர்களும் அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்க உதவும் எந்த ஒயரும் நல்ல முறையில் உள்ளனவா என பரிசோதித்தல் வேண்டும்.
 • பிளக் பாயிண்ட் பின்னை சாக்கெட்டிலிருந்து (Socket) வெளியே எடுப்பதற்கு ஒயரைப் பிடித்து இழுக்காமல் உரிய முறையில் எடுக்க வேண்டும்.
 • ஃபியூஸ் ஒயரைப் புதுப்பிக்க வேண்டுமெனில், மெயின் சுவிட்சை OFF செய்துவிட வேண்டும். மேலும் லோடிற்குத் (Load) தேவையான அளவுடைய சரியான ஆம்பியர் ஃபியூஸ் (Fuse) ஒயரை போட வேண்டும்.
 • மின்சார வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் கைக்கருவிகள் அனைத்தும் இன்சுலேசன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 • ஒயரிங் செய்யும்போது, சுவிட்ச் (Switch) எப்போதும் ஃபேஸ் ஒயரில் இணைக்கப்பட வேண்டும்.
 • வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றை முற்றிலுமாக சப்ளையிலிருந்து நீக்கிவிட்டு பின்பு தான் பழுதுபார்க்க வேண்டும். (மின்சாதனத்தில் சுவிட்சை மட்டும் OFF செய்தால் போதாது. (எ.கா) மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி போன்றவை)
 • மின்சுற்றில் உள்ள பாதுகாப்பு சாதனங்களை எக்காரணம் கொண்டும் நீக்கக்கூடாது.
 • எதிர்பாராத காரணங்களினால் மின்சுற்றில் தீ ஏற்பட்டால், உடனே மெயின் சுவிட்சை OFF செய்து விட வேண்டும். தீயை அணைப்பதற்கு மணல், கரியமில வாயு தீயணைப்பான், டிரை பவுடர் தீயணைப்பான் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்.
 • சோடா அமிலத் தீயணைப்பானை பயன்படுத்த கூடாது. மேலும் எக்காரணம் கொண்டும் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயலக்கூடாது. ஏனெனில் தண்ணீர் வழியே மின்சாரம் பாய்ந்து ஆபத்தை விளைவிக்கும்).
 • மின் அதிர்ச்சி (Electric Shock) ஏற்பட்டு மின்னோட்டமுள்ள கம்பியை ஒருவர் தொட்டவாறு இருந்தால் உடனே மின்சப்ளையைத் துண்டித்துவிட வேண்டும். உலர்ந்த கட்டை, உலர்ந்த பலகை, உலர்ந்த துணி ஆகியவற்றின் உதவியுடன் அவரை உடனே மின்கம்பியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
 • மின்கலத்தை மின்னேற்றம் (Battery charging) செய்யும் அறையில் நல்ல காற்றோட்டம் இருப்பது அவசியமானது. எலக்ட்ரோலைட் திரவம் (Electrolyte) தயார் செய்யும் போது அமிலத்தில் தண்ணீரை சேர்க்க கூடாது. தண்ணீரில் தான் அமிலத்தை சொட்டு சொட்டாக சேர்க்க வேண்டும்.
 • ஈரமான கையினால் சுவிட்ச் போடுவதோ, மின் சப்ளையில் வேலை செய்வதோ கூடாது. அடிக்கடி கையில் வியர்வை வருபவராக இருந்தால, கையுறை அணிந்து கொண்டு வேலை செய்வது நல்லது.
 • மெயின் சுவிட்ச் OFF நிலையில் இருந்தால் அதை ON செய்வதற்கு முன்னதாக மின் பணியாளர்கள யாராவது அம்மின்சுற்றில் வேலை செய்து கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

மின் அதிர்ச்சி

மனித உடலானது மின்சாரத்தைக் கடத்தக்கூடிய தன்மை கொண்டது. ஈரத்தன்மை இல்லாதிருக்கும்போது மனித உடலின் மின் தடையானது சுமார் 80,000 ஓம்ஸ் (ohms) ஆகவும் ஈரமான சூழ்நிலையில் மனித உடலின் மின்தடையின் மதிப்பு சுமர் 1000 ஓம்ஸ் எனவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே தான் ஈரமான சூழ்நிலையில் ஏற்படும் மின் அதிர்ச்சியானது மிக பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மின்சாரம் செல்லும் ஒரு கடத்தியை தொட நேரும்போது நம் உடல்வழியே மின்சாரமானது கடத்தப்பட்டு பூமியை அடைந்து மின்சுற்று பூர்த்தி ஆகி நமக்கு மின்னதிர்ச்சி ஏற்படுகிறது. இதன் விளைவாக நரம்பு மண்டலம், இதயம், நுரையீரல், மூளை ஆகியவை பாதிக்கப்படுகின்றன. அதிக மின்னழுத்தமுள்ள மின்சாரம் பாய்வதினால் மரணம் கூட சம்பவிக்கலாம். எனவே மின்சாரம் என்பது நமக்கு எவ்வளவு அத்தியாவசிய தேவை என்ற போதிலும் அதை சரியான முறையில் பயன்படுத்த தவறினால் உயிர் இழப்பும் பொருள் இழப்பும் நிச்சயம் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகையால் இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மின் அதிர்ச்சி ஏற்படாமல் தவிர்க்கும் முறைகளையும், அதையும் மீறி ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து தற்காத்து கொள்ளும் முறைகளையும் அறிந்து கொள்வது அவசியம்.

மின் அதிர்ச்சி ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்

 • மின்சாதனங்களை நன்கு இயக்கும் முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 • பழுதடைந்த மின்சார ஒயர்களை, ஒயரிங் வேலைகளுக்கோ, அல்லது இணைப்புகளுக்கோ பயன்படுத்தக்கூடாது.
 • மின் இணைப்புகளுக்குப் பயன்படும் கருவிகள் (சுவிட்ச், பிளக், புஷ்ஷிங்ஸ் போன்றவை) கீறல் விழாமலும், உடையாமலும் இருக்க வேண்டும். உடைந்து இருப்பின் புதியது மாற்ற வேண்டும்.
 • சரியான கைக்கருவிகளை, சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். கைக்கருவிகள் அனைத்தும் இன்சுலேசன் (Insulation) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 • எர்த்திங் சரியான முறையில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 • சாக்கெட்டிலிருந்து (Socket) மின்சப்ளை எடுக்கும்போது, "பிளக் டாப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒயருடன் குச்சி செருகி வைத்துப் பயன்படுத்தக்கூடாது.
 • பயன்படுத்தப்படும் லோடிற்குத் (Load) தகுந்தவாறு, சரியான ஆம்பியர் அளவுடைய ஃபியூஸ் (Fuse) ஒயர் பயன்படுத்த வேண்டும்.
 • மெயின் சுவிட்சை OFF செய்த பிறகே மின்சாதனங்களைப் பழுதுபார்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பாதுகாப்பு விதிகளை மீறி செயல்படக்கூடாது.
 • மேலே கூறப்பட்ட அனைத்து வழிகளையும் சரியான முறையில் பின்பற்றுவதன் மூலம், மின் அதிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

முதலுதவி

முதலுதவி என்பது எதிர்பாராத காரணங்களால் திடீரென்று விபத்து ஏற்பட்டு விட்டாலோ, மின்னதிர்ச்சி ஏற்பட்டாலோ அதனால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் அவர் உயிரை தக்கவைக்கும் பொருட்டு செய்யப்படும் சிகிச்சையாகும்.

மின்சாரத்தால் தாக்குண்டவரை உடனடியாக மின் தொடர்பிலிருந்து விடுபட வைக்க வேண்டும். இதற்கு மெயின் சுவிட்ச் அருகில் இருந்தால் அதன் மூலம் மின் இணைப்பை துண்டிக்கலாம். இல்லையேல் உலர்ந்த கட்டையையோ அல்லது குச்சியையோ எடுத்து அவர் உடம்பில் நமது பரிசம்படாமல் தள்ளிவிட வேண்டும்.

மரகுச்சி, கட்டை ஏதேனும் கிடைக்கவில்லை என்றால் அவரது ஆடை உலர்ந்திருந்தால் அதை பற்றி இழுத்து அவரை மின்தொடர்பிலிருந்து விடுபட செய்யலாம்.

மின்அதிர்ச்சிக்கு உள்ளானவர் சுய நினைவுடையவராக இருந்தால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது மருத்துவரை விபத்து நடந்த இடத்திற்கு அழைத்துவர வேண்டும்.

மின் அதிர்ச்சிக்கு உள்ளானவர் சுயநினைவை இழந்தவராகவும், ஆனால் தொடர்ந்து சுவாசித்துக் கொண்டும் இருந்தால் மார்பு, கழுத்து, இடுப்பு வரை உள்ள ஆடைகளைத் தளர்த்தி விட்டு, நன்கு மூச்சுவிட உதவி செய்ய வேண்டும். மேலும் அவர் முகத்தில் குளிர்ந்த தண்ணிரை தெளிக்க வேண்டும். உடம்பினை நன்கு சூடேற்றி அதிகமான புதிய காற்றோட்ட வசதியுள்ள இடத்திற்கு கொண்டுபோய் கிடத்த வேண்டும்.

செயற்கை சுவாசம்

அதிர்ச்சிக்குள்ளானவரின் சுவாசம் நின்றிருந்தாலோ, அல்லது விட்டுவிட்டு சுவாசித்தாலோ அல்லது இழுப்புடன் கூடிய சுவாசமாக இருந்தாலோ உடனடியாக சற்றும் தாமதிக்காமல் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். அதிர்ச்சிக்கு உள்ளானவர் பொய்ப்பல் வைத்திருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். பிறகு வாயை சுத்தம் செய்ய வேண்டும். வாயில் நுரை மற்றும் ஏதாவது பொருள்கள் இருந்தால் அவற்றை அகற்றி வாயை சுத்தம் செய்ய வேண்டும். பற்களை இறுக கடித்து கொண்டு இருந்தால் சிறிய உலோக தகடு அல்லது சிறிய மரத்துண்டை பற்களுக்கு இடையில் கொடுத்து வாயை நன்கு திறக்க செய்ய வேண்டும்.

மூன்று முறைகளில் இந்த செயற்கை சுவாசத்தை ஏற்படுத்தலாம்.

ஹோல்ஜர் நெய்ல்சன் முறை

இம்முறையில் பாதிக்கப்பட்ட நபர் குப்புறப்படுக்க வைக்கப்படுகிறார். அவருடைய கைகள் மடித்து தலைக்கு அடியில் வைக்கப்படுகிறது. முதலுதவி செய்யும் நபர் பாதிக்கப்பட்ட நபரின் தலைப்பக்கம் மண்டியிட்டு அமர்ந்து வலது காலை மடக்கியும், இடது காலை நீட்டியும் அமர வேண்டும். கைகளை மடக்காமல் நிதானமாக பாதிக்கப்பட்ட நபரின் முதுகின் மீது பதிக்க வேண்டும். பின்பு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரல் அழுத்தப்படுவதால் பாதிக்கப்பட்ட நபர் செயற்கை சுவாசம் அடைவார். இம்முறையானது இரண்டு நொடிகள் செய்யப்பட வேண்டும்.

வாயிலிருந்து வாய்வழி செயற்கை சுவாசம்

இம்முறையில் பாதிக்கப்பட்ட நபரின் வாய்வழியாக காற்றானது ஊதப்படுகிறது. அதாவது பாதிக்கப்பட்ட நபரின் மூக்கை கைகளால் பிடித்து மூடப்படுகிறது. முதல் உதவி செய்யும் நபர் நன்கு இழுத்து பாதிக்கப்பட்ட நபரின் வாய்வழியாக காற்றை ஊதுவார். இதனால் நேரடியாக காற்றானது நுரையீரலுக்கு செலுத்தப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நபர் செயற்கை சுவாசம் அடைவார்.

 1. பாதிக்கப்பட்டவரை படுக்க வைக்கவும்
 2. வாயில் கைவிட்டு நாக்கு மடிந்து இருந்தால் சரிசெய்யவும்.
 3. நெற்றியை மேற்புறமாகவும், கீழ்தாடையை கீழ்ப்புறமாகவும் இருகைகளால் பிடிக்கவும்.
 4. நீண்ட மூச்சு இழுத்து பாதிக்கப்பட்டவரின் மூக்கை லேசாக பிடித்து வாயின் வழியாக காற்றை ஊதவும்.

மூக்கு மூலம் செயற்கை சுவாசம்

இம்முறையில் பாதிக்கப்பட்ட நபரின் நாக்கு மடிந்து உள்ளதா என்று பார்க்க வேண்டும். பின்பு வாயை ஒரு கையில் மூடப்படுகிறது. முதலுதவி செய்யும் நபர் நன்கு மூச்சை இழுத்து மூக்கின் வழியாக ஊத வேண்டும். நெஞ்சு உயர்வதை கவனித்து ஊதுவதை நிறுத்த வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட நபர் செயற்கை சுவாசம் அடைவார். காற்றை ஊதுவது பெரியவரானால் முழுமையாகவும், குழந்தைகளுக்கு பாதி அளவும் ஊத வேண்டும்

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் ஆராய்ச்சி மையம்

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top