பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி திறன் / புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய தகவல்.

Video Image5


புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

உயிரி எரிபொருள்

உயிரி எரிபொருள் (biofuel) என்பது அண்மையில் செத்துப் போன உயிரிப் பொருட்களில் இருந்து (குறிப்பாகப் புதல் அல்லது தாவரம்) உருவாக்கப்படும் எரிபொருளாகும். அது திண்மமாகவோ, திரவமாகவோ, வளிமமாகவோ இருக்கலாம். புதைபடிவ எரிபொருளும் (fossil fuels) இதுபோன்றே உயிரி மற்றும் தாவர மூலங்களில் இருந்து பெறப்பட்டாலும், அந்த உயிரிகள் பல்லாயிரம் காலத்துக்கும் முன்னரே இறந்து போனவை.

பொதுவாக, உயிரி எரிபொருள் என்பது எந்தவொரு கரிம (உயிரி) மூலத்தினின்றும் உருவாக்க இயலும். ஆனால், அவற்றில் பரவலாய்ப் பயன்படுவது சூரிய ஒளியைப் பெற்று ஒளிச்சேர்க்கை செய்யும் தாவர இன வகைகளே. உயிரி எரிபொருள் உருவாக்கப் பல வகையான தாவரங்கள் பயன்படுகின்றன.

உயிரி எரிபொருட்கள் உலகெங்கும் பயன்படுத்தப் படுகின்றன. பெரும்பாலும் வாகன எரிபொருளாக இவை பயன்படுகின்றன.

உயிரி எரிபொருட்களுக்கான தேவை அதிகரிக்க அதிகரிக்க அதனால் சில பிரச்சினைகளும் உண்டாகின்றன. இவற்றிற்கான மூலப்பொருட்களைப் பயிர் செய்ய வேண்டிக் காடுகள் அழிவதும், உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு உண்டாவதும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள். விளைச்சலை அதிகரிக்க வேண்டிப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் முதலியனவற்றால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசடைவதும் உண்டு.

உயிரி எரிபொருள் உற்பத்தியை நுட்பியல் வழியாகப் பார்க்கும் போது குறிப்பாக இரண்டு முறைகளைக் கருதலாம்.

கரும்பு, சர்க்கரைக்கிழங்கு முதலியனவற்றைக் கொண்டு ஈசுட்டு மூலம் நொதிக்க வைத்து எத்தனால் என்னும் எரிநறா தயாரிப்பது இயற்கையாக நெய் உருவாக்கும் தாவரங்களை (எ-டு ஆமணக்கு) வளர்த்து, அவற்றில் இருந்து நெய்யை எடுப்பது. இந்த நெய்களைச் சூடாக்கினால் அவற்றின் பிசுக்குமை குறையும் என்பதால், அவற்றை நேரடியாக டீசல் எந்திரங்களில் எரிக்கலாம். அல்லது, இந்த நெய்களை வேதிச்செலுத்தங்கள் (chemical processes) மூலம் உயிரி டீசல் தயாரிக்க உபயோகிக்கலாம்.

நுண்ணுயிரெரிபொருள்

நுண்ணுயிரெரிப்பொருள் (Microbiofuels) என்பது அடுத்தத்தலைமுறை எரிபொருள் எனலாம். இது நுண்ணுயிர்களான பாக்டீரியா, நீலப்பச்சைப்பாசி, நுண்பாசி, பூஞ்சைகளில் இருந்துப் பெறப்படுகின்றன. இவைகளால் நமக்கு எரிபொருள் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவைகள் தடையின்றியும், மறுசுழற்சி செய்தும் பெறலாம்.

இவை நுண்ணுயிர்களின் அணுவெறிகையால் வெளியிடப்படும் உற்பத்திப்பொருளாகும். இவை தற்பொது பயன்படுத்திக்கொண்டிருக்கும் எரிபொருளான பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதைக் கண்டுபிடித்துவிட்டாலும் பல ஆராய்ச்சிகள் இதில் தொடர்ந்தவண்ணமுள்ளன. இவைகளில் குறிப்பிடத்தக்கனவாக எத்தனால், கொழுப்பமிலம், பியூட்டேன், நீரியம் என்பன உள்ளன.

சிறப்பியல்புகள்

இவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறையும், குறிப்பாக நுண்பாசிகளில் இருந்து பெறப்படும் உயிரெரியானது நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் நுண்பாசிகள் மற்றும் நீலப்பச்சைப்பாசிகள் சூரிய ஒளியைப்பயன்படுத்துவதால் உற்பத்திக்கான மூலப்பொருள் தேவை குறைகிறது. தற்போது பரவலாகப் பேசப்படும் உயிரெரியான ஆமணக்கு எண்ணெய் உற்பத்தி செய்யத்தேவையான நிலங்களுக்கு பதிலாக நுண்பாசிகளைப் பயன்படுத்தினால் இடப்பொருள் தேவை ஆயிரமடங்கு குறைகிறது.

பயோடீசல்  (உயிரி தீசல்)

பயோடீசல் என்பது நீண்ட சங்கிலி அல்கைல் (மெத்தில், புரோப்பில் அல்லது எத்தில்) எஸ்டர்களைக் கொண்டிருக்கின்ற தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பு அடிப்படையிலான டீசல் எரிபொருளைக் குறிக்கின்றது. பயோடீசலானது கொழுப்பு வகைப் பொருட்களை (உ.ம்., தாவர எண்ணெய், விலங்குக் கொழுப்பு (கொழுப்பு வகை)) ஆல்கஹால் உடன் வேதியியல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றது.

பயோடீசல் தரமான டீசல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் நோக்கினை உடையதாக உள்ளது, எனவே இது தாவர மற்றும் கழிவு எண்ணெய்களில் இருந்து வேறுபடுத்தப்பட்டு எரிபொருள் மாற்றப்பட்ட டீசல் இயந்திரங்களுக்கு பயன்படுகின்றது. பயோடீசலை தனியாக அல்லது பெட்ரோலிய டீசலுடன் கலந்தும் பயன்படுத்த முடியும்.

உயிர்த்திரள்

உயிரிப்பொருள் என்பது உயிர் இருந்த அல்லது இருக்கும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படக்கூடியப் பொருட்களைக் குறிக்கும். விறகு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மரக்கறி, காகிதம், மிருகங்கள் போன்ற உயிரிப்பொருட்களைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

புவிவெப்பச் சக்தி

புவிவெப்ப ஆற்றல் (புவியைக் குறிக்கும் geo , வெப்பத்தைக் குறிக்கும் thermos ஆகிய சொற்கள் கிரேக்க மூலங்களில் இருந்து பெறப்பட்டதாகும்) என்பது புவியில் சேமிக்கப்பட்டுள்ள வெப்பத்தில் இருந்து பெறப்படும் ஆற்றல் ஆகும். கோள் உருவாகும் போதும் தாதுக்களின் கதிரியக்கச் சிதைவில் இருந்தும் புறப்பரப்பில் இருந்து உறிஞ்சப்படும் சூரிய ஆற்றலில் இருந்தும் இந்த புவிவெப்பச் சக்தி தோன்றுகிறது. கற்காலங்கள் முதல் குளிப்பதற்காகவும் பண்டைய ரோமானிய காலங்கள் முதல் வெளிச் சூடாக்கலுக்காகவும் இது பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இது மின்சாரத்தை உருவாக்குவதற்காகவும் மிகவும் பிரபலமாகவுள்ளது. 2007 ஆம் ஆண்டின் கணக்கின்படி உலகில் உள்ள புவிவெப்ப ஆலைகள் சுமார் 10 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன. அவை நடைமுறையில் உலகின் மின்சாரத் தேவையில் 0.3% ஐ வழங்குகின்றன. வட்டார வெப்பமாக்கல், வெளிச் சூடாக்கல், ஸ்பாக்கள், தொழிற்துறை செயல்பாடுகள், உப்பு நீக்கம் மற்றும் வேளாண்மைப் பயன்பாடுகள் போன்ற செயல்பாடுகளுக்காக நேரடி புவிவெப்ப சூடாக்கல் திறனின் 28 கிகாவாட் கூடுதலாக நிறுவப்படுகிறது.

புவிவெப்ப ஆற்றலானது விலை பயன்திறன்மிக்கதாகவும், நம்பத்தகுந்ததாகவும், நிலைநிறுத்தத்தக்கதாகவும், சூழ்நிலைக்கு உகந்ததாகவும் உள்ளது. ஆனால் வரலாற்று அடிப்படையில் அது புவிமேலோட்டு தட்டு எல்லைகளுக்கு (tectonic plate boundaries) அருகிலுள்ள பகுதிகளுக்கு உகந்ததாகவே இருந்துள்ளது. வீடு சூடாக்குதல், பரவலான தன்னலப்படுத்தலுக்கான மூல வளங்களை உருவாக்குதல் போன்ற பயன்பாடுகளுக்காகவே சாத்தியமான ஆதாரங்களின் அளவிலும் எல்லையிலும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மேம்பாடுகள் அபரிதமான விரிவாக்கத்தை அடைந்துள்ளன. புவியினுள் ஆழமான பகுதியில் பசுமை இல்ல வாயுக்களை புவிவெப்பக் கிணறுகள் வெளியிடுகின்றன. ஆனால் படிம எரிபொருள்களைக் காட்டிலும் ஒவ்வொரு ஆற்றல் அலகிலும் இந்த உமிழ்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதன் விளைவாக, புவிவெப்ப ஆற்றலானது படிம எரிபொருள்களுக்குப் பதிலாக பரவலாகப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் புவி வெப்பமயமாதலை தணிக்க உதவும் சாத்தியத்தை கொண்டுள்ளது.

சூரிய ஆற்றல்

சூரிய ஓளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar energy) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிரியல் தொகுதி (biomass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.

சூரிய ஓளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic).

சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar Thermal).

அலை ஆற்றல்

அலை ஆற்றல், நீர்ப்பெருக்கு ஆற்றல் சிலநேரங்களில் நீர்ப்பெருக்குத் திறன் என்பது நீராற்றல் வகைகளில் கடல் நீர் வரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி மின்னாற்றல் அல்லது வேறு ஆற்றல்வகையாக மாற்றிக் கிடைத்திடும் ஆற்றலாகும்.

சமகாலத்தில் பரவலாக பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் மின்னாக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கக் கூடியது. காற்றுத் திறன் அல்லது சூரிய ஆற்றலை விட நீர்ப்பெருக்கு ஏற்படும் காலங்களையும் அளவுகளையும் துல்லியமாகக் கணிக்க முடியும். வரலாற்றில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகளிலும் நீர்ப்பெருக்காலைகள் இயங்கி வந்துள்ளதைக் காண முடியும்

ஆற்றலின் வகைகள்

  • நீர்ப்பெருக்கு ஓடை அமைப்புகள் காற்றோலைகள் எவ்வாறு காற்று வீசுவதைக் கொண்டு விசைச்சுழலிகளை இயக்குகின்றனவோ அவ்வாறே இவை ஓடுகின்ற நீரின் இயக்க ஆற்றலைக் கொண்டு விசைச்சுழலிகளை இயக்குகின்றன.இவை குறைந்த மூலதனச் செலவையும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கொண்டிருப்பதால் பரவலாக விரும்பப்படுகிறது.
  • நீர்ப்பெருக்கு தடுப்பணைக் குறித்த ஓர் கலைஞரின் ஆக்கம்: கரைகள், நாவாய் பூட்டு, மதகுகள் மற்றும் இரு விசைச்சுழலிகள்.
  • தடுப்பணைகள் உயர்ந்த மற்றும் குறைந்த நீர்ப்பெருக்கினைடையே உள்ள உயர வேறுபாட்டினால் கிடைக்கும் நிலை ஆற்றலை பயன்படுத்துகின்றன.கயவாயின் முழு அகலத்திலும் ஓர் அணை கட்டப்பட வேண்டியுள்ளதால் பெரும் கட்டமைப்புச் செலவுகளையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் கொண்டுள்ளது. தவிர, வேண்டுமளவு நிலை ஆற்றல் கிடைத்திடும் இடங்கள் உலகில் மிகக் குறைவாக உள்ளது.

நீர்ப்பெருக்கு காயல்கள் தடுப்பணைகளைப் போன்றவையே எனினும் தன்னிறைவாக இவற்றை அமைக்க முடியும். இதனால் குறைந்த கட்டமைப்புச் செலவையும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தவிர இவற்றைத் தொடர்ச்சியாக, தடுப்பணைகளைப் போலன்றி, இயக்க முடியும்.

நவீன விசைச்சழலி நுட்பங்கள் கடலில் இருந்து பெருமளவு மின்னாக்கம் பெற முயல்கின்றன.இவை கடலின் நீர்ப்பெருக்கைத் தவிர வெப்ப ஓடைகளையும் (எடுத்துக்காட்டு: வளைகுடா ஓடை) பயன்படுத்துகின்றன. இயற்கையான நீர்பெருக்கு ஓடைகள் மேற்கு மற்றும் கிழக்கு கனடா கடற்கரைகள், ஜிப்ரால்ட்டர் நீரிணை, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஓடை விசைச்சுழலிகள் அமைக்கப்படலாம்.இத்தகைய ஓடைகள் எங்கெல்லாம் வளைகுடாக்களும் நதிகளும் இணைகின்றனவோ, இரு நிலப்பகுதிகளிடையே நீரோட்டம் அடர்ந்துள்ளதோ அங்கெல்லாம் உள்ளன.

கடல் அலை ஆற்றல்

அலை மின்சாரம் அல்லது கடலலை மின்சாரம் என்பது காற்றினால் நீரில் ஏற்படும் அலைகளில் பொதிந்துள்ள மின்சார ஆற்றலாகும். நீரலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த தொழில்நுட்பம் நவீன கால மின்தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாற்றல் எடுத்துக்காட்டாக மின் உற்பத்தி, உப்பகற்றல், நீர்ப்பாய்ச்சல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடலலை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகையைச் சேர்ந்தது. கடல் அலையின் மூலம் பெறக்கூடிய ஆற்றல் அதன் உயரம், வேகம் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும்.

கடலில் இருந்து பெறப்படும் வற்றுப் பெருக்கு, கடல் ஓட்டம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் ஆற்றல் வகைகள் கடலலை ஆற்றலிருந்து வேறுபட்டவையாகும். கடலலை ஆற்றல் இன்று பெருமளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இப்பன்னை 750 கிலோவட் திறனைக் கொண்டது.

கடல் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலத்தில் வீசும் காற்றினால் கடலில் அலை ஏற்படுத்தப்படுகிறது. கடல் அலைக்கு சற்று மேலாக வீசும் காற்றைவிட கடல் அலை மெதுவாக பயணிக்கும் வரையிலும் காற்றிலிருந்து கடல அலைக்கு ஆற்றல் மாற்றப்படுகிறது.

மின்சாரம் தயாரிக்கும் முறை

வேகமாக கடந்து செல்லும் நீரலைகளால் இழுசக்கரம் சுழற்றப்படுகிறது. இங்கு அலைகளின் இயக்க ஆற்றல் சக்கரங்களைச் சுழற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. சக்கரம் சுழலும்பொழுது அதனுடன் இணைக்கப்பட்ட காந்தங்களும் சுழல்கிறது. சக்கரத்தின் மத்தியில் ஒரு நிலைகாந்தம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இரு காந்தங்களின் சுழற்சியால் காந்த அலை கோடுகள் வெட்டப்பட்டு மின்சாரம் உருவாகிறது.

காற்றுத் திறன்

காற்றுத் திறன் (Wind power) அல்லது காற்று மின்சாரம் (wind electricity) எனப்படுவது காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் பொறிமுறையாகும். பெரிய காற்றாலைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தனித்தனிக் காற்றுச் சுழலிகள் மின் திறன் செலுத்தல் தொகுதிகளில் இணைக்கப்படுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யபபடுகின்றது. புதைபடிவ எரிபொருள் சக்தியின் மாற்றுச்சக்தி முறையொன்றாகக் காற்றுத் திறன் காணப்படுகின்றது.

ஏனைய ஆற்றல் முதல்களுடன் ஒப்பிடும் போது காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் பெறப்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைதல் பெருமளவில் தடுக்கப்படுகின்றது. எனினும், காற்று மின்சாரத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் காற்றுச் சுழலிகளுடன் கூடிய தொகுதிக்கான உற்பத்திச் செலவு அதிகமாகும். 2011 ஆம் ஆண்டளவில் டென்மார்க் தனது மொத்த மின்சார நுகர்வின் கால்பகுதியைக் காற்று மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளது. மேலும், உலகின் 83 நாடுகள் காற்று மின்சாரத்தை வணிக நோக்கு அடிப்படையில் பயன்படுத்துகின்றன. 2010 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த மின்சார நுகர்வின் 2.5 சதவீதம் காற்று மின்சாரத்தின் மூலம் பெறப்பட்டுள்ளதுடன், காற்று மின்சாரத்தை பயன்டுத்தும் அளவு ஆண்டுக்கு 25 சதவீதத்தால் உயர்வடைந்து செல்கின்றது.

ஆதாரம் : காற்றாலை மின் தொழில்நுட்ப மையம், சென்னை

3.13402061856
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
V.vanitha Jul 07, 2019 12:23 PM

வெரி குட்.

shamla Sep 09, 2016 05:44 PM

இன்னும் பல செய்திகள் சேர்க்கலாம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top